வெள்ளி, 8 ஜூன், 2012

‘தேவன்’: மாலதி -2

மாலதி -2
‘தேவன்’




முந்தைய அத்தியாயங்கள்:

தேவன் : மாலதி -1

அத்தியாயம் 8

துரைசாமி என்கிற ஒரு பேர் வழி இந்த அத்தியாயத்தில் தோன்றி, இதிலேயே விடைபெற்றுக்கொள்கிறான். அவன் தொழிலுக்குக் கூட்டங்கள்தான் வசதியாக இருக்கும். சட்டைப் பைக்குள் கைவிட்டு, உள்ளே இருப்பதை எடுக்க நெருக்கடிதானே வேணும்? இன்று அவன் பங்களூர் ரயில்வே பிளாட்பாரத்தில், எங்கேயோ பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்த கோவிந்தன் பையில் கைகளைப் போட்டான். கோவிந்தன் அதைக் கவனிக்கவில்லை; துரைசாமி தன் வெகுநாள்பட்ட அனுபவத்தின் பேரில், பரம லகுவாக அவன் பையிலிருந்த ஒரு சிறு நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு நழுவினான்.

ஆனால், இப்போதுதான் அவன் துரதிருஷ்டம் சந்துருவின் மூலம் காத்திருந்தது. கோவிந்தனையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த சந்துரு இப்போது தன் காரியம் துரைசாமி மூலம் சுளுவாக நடைபெறுவதை உணர்ந்துகொண்டு, அடுத்த நிமிஷம் அவனைப் பின்பற்றலானான்.

தன் காரியம் முடிந்த பின்னர் அந்த ஸ்தலத்திலிருந்து சற்று வேகமாகவே வெளியேறிவிடுவது துரைசாமியின் வழக்கம். ஆகவே, அவன் ஸ்டேஷன் மாடிப் படியைத் தாண்டிச் சென்ற பின்னரே சந்துருவால் பிடிக்க முடிந்தது. கழுத்தில் ஒரு கையைக் கொடுத்துக் கீழே தள்ளி, கையை ஒரு முறுக்கு முறுக்கி, ''அடே! நீ இப்போ எடுத்ததைக் கொடுக்கிறாயா என்ன?'' என்று உறுமினான் சந்துரு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் துரைசாமி தனக்கு ஒன்றும் தெரியாதென்று சாதித்து விட்டு நழுவிவிடுவான். இன்று காலையிலிருந்து ஆகாரம் செய்யாததும், சந்துரு முறுக்கியதனால் ஏற்பட்ட வலியும் அவனைக் கோழையாக்கிவிட்டன.


''அட பாவி!'' என்று மனதில் நினைத்துக்கொண்டு, துரைசாமி தான் களவாடியதைச் சந்துருவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டுத் துரிதமாக வெளியேறினான்.

இத்தனை நிகழ்ச்சிகளையும் கண்கொட்டாமல் சற்றுத் தூரத்திலிருந்து கவனித்து வந்த தோட்டக்கார கண்ணுசாமி, ''ஐயா! ஐயா!'' என்று சந்துருவை நோக்கி வர ஆரம்பித்தான். ஆனால் கண்ணுசாமி சந்துருவை நெருங்குவதற்கு முன் ஒரு டிக்கெட் பரிசோதகர் அவனை வழிமறித்து நிறுத்திவிட்டார். இதையொன்றும் அறியாத சந்துரு வீட்டை நோக்கி வேகமாக நடந்தான்.

அத்தியாயம் 9

''வெட்டிக்கொண்டு வா'' என்றால் கட்டிக்கொண்டு வந்ததாக மாலதியிடம் காண்பித்துக்கொள்ள வேண்டும் என்பது சந்துருவின் விருப்பம். மேலும், நகையை அதன் இருப்பிடத்தில் சேர்ப்பதனால், தான் ஒரு பெரிய நல்ல காரியம் செய்யப்போவதாகவும் அவனுக்குத் தோன்றிற்று. ஆகவே, வீட்டிற்குத் திரும்பியதும், நேரடியாக மாலதியைக்கூடப் பாராமல், காமேசுவரய்யரின் ஆபீஸ் அறைக்குள் நுழைந்து, கம்மல்களை எங்கே வைத்தால் உடனே அவர் கண்ணில் படும் என்று கவனிக்கத் தொடங்கினான். அவன் முடிவிற்கு வருவதற்குள்ளாக அறைக்குச் சமீபத்தில் பேச்சுக் குரல் கேட்டது. திடுக்கிட்ட சந்துரு ஜன்னலுக்கும் பீரோவுக்கும் இடையில் ஒளிந்துகொண்டான்.

அடுத்த கணம், அறைக்குள் காமேசுவரய்யர் நுழைந்தார். அவருடன் நுழைந்த கோவிந்தனைக் கண்டு சந்துரு ஸ்தம்பித்துப் போனான்.

''நீங்கள் அந்த மருங்காபுரம் மைனரிடம் அன்று ஆயிரம் ரூபாய் கிளப்பினீர்களே, சரியான வேலை! அந்த மடையனுக்கு நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்று கொஞ்சமாவது சந்தேகம் இருக்கவேண்டுமே!'' என்று கூறி, கோவிந்தன் வாய் விட்டுச் சிரித்தான். காமேசுவரய்யரின் சம்பாத்திய முறைகள் மாலதியின் சகோதரனுக்குப் பிடிக்காமல் இருந்த காரணம் சந்துருவுக்கு இப்போதுதான் புரிந்தது.
 
கோவிந்தன் நான்கு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத் துக் காமேசுவரய்யரிடம் கொடுக்க, அவர் இரும்புப் பெட்டியிலிருந்து ஒரு பதக்கத்தை எடுத்து அவனிடம் தந்தார். தரும்போதே, ''நல்ல வேளை, மிஸ்டர் கோவிந்தன்! உங்கள் பதக்கம் பிழைத்தது. நேற்று நம்ம வீட்டில் ஒரு களவு நடந்தது. மிஸ்டர் சேகரன் வந்திருக்கிறதனால் இன்னும் நான் அதைப் போலீஸிலே தெரிவிக்கவில்லை. சேகரனை உங்களுக்குத் தெரியுமோல்லியோ?'' என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த சேகரன், ''திருட்டைப் பற்றித் தானே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? அதை எடுத்த ஆசாமியை வெளிப்படுத்தத்தான் நானே இப்போது இங்கே வந்தேன். அவனிடமே கேட்டு உங்கள் பண்டத்தை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறி, பீரோவின் பின்னால் கம்மல்களைக் கையில் வைத்தபடி ஒளிந்திருந்த சந்துருவை வெளியே இழுத்தார்.

அத்தியாயம்: 10

எதிர்பாராதவிதமாக அம்பலத்தில் இழுத்து நிறுத்தப்பட்ட சந்துரு திகைத்துப் போனான். கையில் இருந்ததோ களவு போன பொருள்; அவன் இருந்த இடமோ, களவு நடந்த இடம். இந்த நிலைமையில் சமாளித்துக்கொள்ள வழி ஒன்றும் இருப்பதாகவே அவனுக்குப் புலப்படவில்லை.

கோவிந்தன் அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''அட, சந்துருவா! நீ எதற்கடா இப்படி ஆரம்பித்தாய்? நல்ல பையனாக இருந்தாயே?'' என்றான் ஏளனமாக.

சந்துருவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. காமேசுவரய்யர் பக்கம் உக்ரமாகத் திரும்பி, ''ஸார்! உங்களுக்கு உண்மையில் யார் திருடன் என்று தெரியவேண்டுமென்றால், இவனைக் கேளுங்கள்!'' என்று கோவிந்தனைச் சுட்டிக்காட்டினான்.

''ஓகோ! பேஷாப் போச்சு நாடகம்! நன்றாய் நடிக்கிறான், ஸார்!'' என்றான் கோவிந்தன்.

''நான் சொல்லுகிறேன்... இன்று காலையில் இந்த நகை இவன் சட்டைப் பையில் இருந்தது. இது உண்மை!''

''சரி, மிஸ்டர் அரிச்சந்திரரே! அது அங்கே இருந்தது உமக்கெப்படித் தெரியும்?'' என்று சேகரன் உத்தியோக தோரணையில் குறுக்கிட்டார்.

பளிச்சென்று பதில் சொல்ல யத்தனித்தான் சந்துரு. ஆனால், கலங்கிப் பயம் தோன்றும் முகத்துடன் நிற்கும் மாலதியை அவன் கண்டான். தான் பதில் சொல்வதானால், மாலதியின் பெயரையும் சம்பந்தப்படுத்த வேண்டியிருக்கும் என்பது நினைவுக்கு வந்தது.

சந்துருவின் தயக்கத்தைக் கண்ணுற்ற கோவிந்தன், ''அப்படிக் கேளுங்கள், ஸார்! அதைச் சொல்லட்டும்!'' என்று கொம்மாளம் அடித்தான். பிறகு, ''நான் வருகிறேன், ஸார்! காலம்பற நல்ல தமாஷ்!'' என்று வாசற்பக்கம் திரும்பினான்.

சந்துரு ஓர் உறுமலுடன் கோவிந்தன் மீது பாயத் தயாரானான். ''மரியாதையாக உன் திருட்டை ஒப்புக்கொண்டு விடு! நழுவப் பார்க்காதே!'' என்று அவனைச் சேகரன் பிடித்து நிறுத்திக்கொண்டார்.

மாலதி நரக வேதனைப் பட்டுக்கொண்டிருந்தாள். நழுவிக் கொண்டிருக்கும் கோவிந்தனைத் தடுப்பதா..? காமேசுவரய்யரிடம் சந்துரு நிரபராதி என்று சொல்வதா..? கைகளைப் பிசைந்து உள்ளேயும் வெளியேயும் பார்த்துக்கொண்டு ஒன்றும் தோன்றாமல் துடியாய்த் துடித்தாள்.

அத்தியாயம் 11

டிக்கெட் பரிசோதகரால் ஸ்டேஷனில் தடுத்து நிறுத்தப்பட்ட கண்ணுசாமி முன்னும் போக முடியாமல் பின்னும் போக மாட்டாமல் அவதிப்பட்டான். ''என்னப்பா சேதி? டிக்கெட் இருக்குதா?'' என்றார் பரிசோதகர்.

''அது இருந்தா, நீ இத்தினி நாளி என்னைப் பிடிச்சிருக்க முடியுமா?''

''ஓஹோ! உன் மாமன் ஊட்டு ரயிலோ! எப்படி நீ நுழைஞ்சே? நான் பார்க்கவே இல்லையே?''

''அதனாலேதான் நுளைஞ்சேன்!''

பரிசோதகருக்குக் கோபம் வந்துவிட்டது. கண்ணுசாமியைக் 'கல்தா' கொடுத்து ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குத் தள்ளிக் கொண்டு போனார். ஸ்டேஷன் மாஸ்டர் நிமிர்ந்து பார்த்து, ''யாரப்பா நீ?'' என்றார்.

''இருங்க, சொல்றேன். கையிலே வலி!'' என்றான் கண்ணுசாமி.

''ஏன் அப்படி?'' - ஸ்டேஷன் மாஸ்டருக்கு இவன் வேடிக்கை ஆசாமி, 'கோட்டா' பண்ணலாம் என்று தோன்றியது. பரிசோதகரைப் பேச வேண்டாமென்று சமிக்ஞை செய்தார்.

''உங்க கையை இந்த முரடன் முறுக்கின மாதிரி முறுக்கினா, வலிக்காம என்ன செய்யும்?''

''சரி, ரயில்வே கம்பெனிக் காரங்களைவிட்டு உன்னிடம் மன்னிப்புக் கேக்கச் சொல்றேன். நீ எங்கே வந்தே?''

''வண்டியிலே தாயாரு வர்ராங்க. அதுக்காக..!''

''எங்கேருந்து வர்ராங்க?''

''இந்த ரயிலு எங்கேருந்து வருதோ, அங்கேருந்து!''

''இவன் பெரிய போக்கிரி; உதைக்கணும், ஸார்!'' என்றார் பரிசோதகர்.

''டிக்கெட் இல்லாமல் உள்ளே வரக்கூடாதென்று உனக்குத் தெரியாதாடா?''

''சரிதானுங்க, இப்போ வந்துட்டேன்! என்னைத் தூக்கிலே போடுங்க!''

''அப்புறம்..?''

''அப்புறம் கழுவிலே ஏத்துங்க! சும்மா கேள்வி கேக்காதீங்க!''

சுமார் அரை மணிக்கெல்லாம் இடுப்பில் ஓர் உதையுடன் வெளியேறிய கண்ணுசாமி, பங்களாவை அணுகியபோது, எதிரில் கோவிந்தன் வருவதைக் கண்டான். அவனுக்கு ஏற்பட்ட ஆனந்தத்தில், கோவிந்தனின் கையைப் பற்றிக் கொண்டு இழுத்துப்போய் பங்களாவுக்குள் திரும்பவும் கொண்டு சேர்த்தான்.

அத்தியாயம்-12

தர்ம சங்கடமான நிலைமையில் காமேசுவரய்யர், உத்யோக தோரணையில் சேகரன், கோபத்தில் துடிக்கும் சந்துரு, மனோவேதனை தாங்கமுடியாமல் தவிக்கும் மாலதி - இவர்கள் முன்னிலையில்தான் மீண்டும் ஒரு முறை கோவிந்தன் வந்து நின்றான்; அல்லது, நிறுத்தப்பட் டான். கண்ணுசாமிக்கு உற்சாகம் கரை புரண்டு போயிருந்தது. அவன் சந்துருவைப் பார்த்து, ''சாமி... சாமி! நீங்க திருடன் கையிலிருந்து பிடுங்கின நகை இவருதுங்க! கொடுத்துட்டீங்களா?'' என்றான். அப்புறம்தான் அவன் ஒவ்வொருவர் முகத்தையும் கவனிக்கலானான். ஏதோ விபரீதமாக நடந்திருக்க வேண்டுமென்று அவன் கட்டை மூளையில்கூட அப்போது உதயமாகியிருக்கவேண்டும். மாலதிக்குப் பளிச்சென்று உண்மை விளங்கி விட்டது. சந்துருவை விடுவிக்க இதோ ஒரு சந்தர்ப்பம் வந்துவிட்டது என்பதை அவள் உணர்ந்து, ''கண்ணு சாமி! நடந்த விஷயத்தை விளக்க மாகச் சொல்!'' என்றாள்.

கண்ணுசாமி விஸ்தாரமாகவும் ஆதியோடந்தமாகவும் விவரங்களை வெளியிட்டு வந்தபோது, கோவிந்தன் முகத்தில் களை மாறிக்கொண்டே வந்தது; சேகரன் பிடி மெள்ள மெள்ளச் சந்துருவிடமிருந்து நழுவத் தொடங்கியது. இப்போது கோவிந்தன் காமேசுவரய்யர் பக்கம் நகர்ந்து, ''மருங்காபுரம் மைனர் விஷயம் ஞாபகமிருக்கட்டும். என்னைச் சீக்கிரம் அனுப்புங்கள்'' என்று எச்சரித்ததும், அவர் முகத்தில் கவலை படர்ந்ததும் யாருக்கும் தெரியாது.

கோவிந்தனை நோக்கி நகர்ந்த சேகரனைச் சட்டென்று காமேசுவரய்யர் எதிர்பாராதவிதமாக நிறுத்தி, ''வேண்டாம், சேகர்! அவனை ஒன்றும் செய்யவேண்டாம். நான் பேசிக் கொள்கிறேன் அவனிடம்!'' என்றார் பரபரப்புடன். உடனேயே காமேசுவரய்யரும் கோவிந்தனைப் பின்தொடர்ந்து வேகமாக வெளியே சென்றார். சேகரன் ஒன்றும் விளங்காதவராகக் கண்ணுசாமியை மறுபடி விசாரணை செய்ய வெளியே அழைத்துச் சென்றார்.

அறையில் மாலதியும் சந்துருவும் தனியே இருந்தபோது, ஒரு புது ஆசாமி அங்கே வந்து சேர்ந்துகொண் டான். அவனைப் பார்த்தவுடனேயே சந்துருவுக்கு அடையாளம் புரிந்து விட்டது. முதல் நாள் இரவு சந்துரு விடமிருந்து தப்பித்துச் சென்ற மாலதியின் சகோதரன், கிருஷ்ணனே தான் அவன்!

அத்தியாயம்-13

சந்துருவுக்கு விஷயங்கள் விளங்க அதிக நேரம் பிடிக்க வில்லை. கிருஷ்ணனும் மாலதியும் வெளியிட்ட விவரங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி, அவன் இதுவரை புரிந்துகொள்ளாத மர்மங்களை விளங்கவைத்தபோது அவன் பிரமித்தே போனான்.

காமேசுவர அய்யருடைய பங்களாவில் நடந்த சம்பவங்களுக்கு ஆதி காரணமானவள் லக்ஷ்மி என்ற பெண்மணி; அதை நடத்தி வைத்தவள் மாலதி. மாலதியின் மீது சந்துரு எவ்வளவு பாசம் கொண்டுவிட்டானோ, அவ்வளவு அந்த லக்ஷ்மியின் மீது கிருஷ்ணன் பிரேமை வைத்திருந்தான். கிருஷ்ணனுடைய விசாலமான நெற்றியையும் கூர்மையான கண்களையும் கவனித்த சந்துரு, அவன் வைத்த அன்புக்கு லக்ஷ்மி நிச்சயம் பாத்திரமுள்ளவளாக இருக்கவேண்டும் என்று ஊகித்தான்.

அந்த லக்ஷ்மியின் சகோதரன் தான் கோவிந்தன் - சந்துருவின் பள்ளித் தோழன். கோவிந்தனுடைய கெட்ட பழக்கங்கள் காலேஜ் நாட்களையும் தாண்டித் தொடர்ந்தன. சூதாட்டத்தில் தோற்று, கடன் அடைக்க வழியின்றி, தற்கால சாந்தியாக லக்ஷ்மியின் வைரப் பதக்கத்தில் அவன் கை வைத்துவிட்டான்.

இதைப் பின்னர் தெரிந்துகொண்ட லக்ஷ்மி, தன் சகோதரனைக் கேட்டதுமன்றி, கிருஷ்ணனுக்கும் கடிதம் போட்டு, அதைத் திரும்பப் பெற ஏற்பாடு செய்தாள். மேற்படி நகையை கோவிந்தன் காமேசுவரய்யரிடம் அடகு வைத்திருந்த செய்தியை அறிந்துகொண்ட கிருஷ்ணன் தன் தங்கை மாலதியை, உடனே 400 ரூபாயுடன் பங்களூருக்கு வரும்படி எழுதியிருந் தான். அவள் வரும்போதுதான் சந்துரு அவளை ரயிலில் சந்தித்தது. அந்தப் பணத்தைக் கோவிந்தனிடம் கொடுத்து, நகையை நேர் வழியில் மீட்டுக் கொள்ளலாம் என்பது அவன் கருத்து. ஆனால், கோவிந்தன் வேறு லகுவான வழியைக் கைப்பற்றினான்; மூன்று நான்கு நாளாக, காமேசுவரய்யர் இரும்புப் பெட்டியைத் திறக்கப் பிரயத்தனம் செய்து வந்தான். கலவரம் அடைந்த காமேசுவரய்யர், சேகரனைத் துணைக்கு அழைத்தார். பங்களூருக்கு மாலதி வந்தவுடன், கிருஷ்ணன் அவளை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது சந்துரு வந்துவிடவே, கிருஷ்ணன் அவளை மறுபடி இரவில் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறி வேகமாக வெளியேறினான்; இதுவே சந்துருவின் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கி, பங்களாவுக்கு வருமாறு தூண்டிற்று.

அன்று இரவில், மாலதி கிருஷ்ணனிடம் 400 ரூபாயைக் கொடுக்கச் சென்றபோதுதான், சந்துரு பின்னால் வந்து ஒளிந்துகொண்டான். திறந்த கதவை உபயோகித்துக்கொண்டு, கோவிந்தன் பங்களாவில் நுழைந்து, அவசரத்தில் தான் எடுக்க வந்ததற்கு மாறாக வேறு ஒன்றைக் கொண்டு போய்விட்டான். அதையும் ஸ்டேஷனில் திருடன் எடுக்க, சந்துரு அதைக் கைப்பற்றிக் கொண்டான்.

இதெல்லாம் அறியாத கிருஷ்ணன், தனது 400 ரூபாயைக் கோவிந்தனிடம் கொடுக்க, அவன் அதைக் கொண்டு தனது சகோதரியின் நகையைக் காமேசுவரய்யரிடமிருந்து மீட்டுக் கொண்டு திரும்பினான். ஆனால், அவன் எதிர்பாராத விதமாகக் கண்ணுசாமி முளைத்து, காரியத்தைக் கெடுத்துவிட்டான்.

இவ்வளவு விவரங்களையும் சந்துரு, மாலதியிடமிருந்தும் கிருஷ்ணனிடமிருந்தும் தெரிந்து கொண்டான்.

அத்தியாயம்-14


மனோகரமான மாலை வேளை. பங்களாவுக்கு வெளியில் நந்தவனத்திலிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சந்துருவும் மாலதியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"பெரிய பெரிய உண்மைகள் ஒரே விநாடியில் வெளிப்பட்டுவிடு கின்றன" என்றான் சந்துரு திடுதிப்பென்று.

"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே?"

"மூன்று நாளைக்கு முன், நாம் உலகத்தில் இருப்பதாகக்கூட ஒருவருக்கொருவர் தெரியாது. இன்று உங்களை 23 வருஷமாகத் தெரிந்து கொண்டாற்போல் எனக்குத் தோன்றுகிறது!"

"அப்...பா...டா! நீங்கள் பெரிய கதையாக ஏதோ சொல்லப்போகிறீர்கள் என்று நினைத்து பயந்து விட்டேன்!" என்றாள் மாலதி. அவளுடைய வெண்கலச் சிரிப்பைச் சந்துரு ஆனந்தமாக அனுபவித்தான்.

"கதைதானே! அதுவும் ஒன்று சொல்லுகிறேன். ஆனால், அது நிஜமாக நடக்கும் கதையாக இருக்கும். என் சிநேகிதன் ஒருவன் இருக்கிறான். நல்ல யுவன். அவன் ரொம்ப அழகுமில்லை; பணக்காரனுமில்லை. சுமாராக கெட்டிக்காரன். ஆனால், ரொம்ப நல்ல மாதிரி. இவன் ஒரு பெண் ணைப் போய்ப் பார்த்தான்..."

"ஐயய்யோ! அப்புறம் அவருக்கு என்ன ஆச்சு..?"

"பயப்படாதீர்கள்! அந்தப் பெண் எப்பேர்ப்பட்டவள் தெரியுமா..? அழகில் ரதி; குணத்தில் தங்கம்; கல்வியில் சாக்ஷ£த் சரஸ்வதி. இவர்கள் இருவரையும் கடவுள் இரண்டு நாள் சேர்த்து வைத்தார். அந்த இரண்டு நாளும் அந்த யுவனுக்குத் தலை-கால் புரியவில்லை. இப்போது சொல்லுங்கள், அவன் என்ன செய்ய வேண்டும்?"

"எனக்கு விளங்கச் சொல்லுங்கள். அவன் என்ன செய்ய விரும்புகிறான்? அது தெரிந்தால் தானே..."

"வந்துவிட்டேன்... அந்த யுவதி அவனைவிட எல்லா விதத்திலும் மேலானவள். அவளுடைய காரியார்த்தமாக அவனுடன் அவள் இரண்டு நாள் பழகினாள்; அதோடு நிறுத்திக்கொண்டாள். அவனுக்கு மேலும் அவளுடன் பழக வேண்டும், கூடவே இருக்க வேண்டும் என்று ஆசை பிறந்து விட்டது. யுவனை யுவதி கல்யாணம் பண்ணிக்கொண்டால், அதனால் யுவதிக்குத்தான் சற்றுக் குறைவு. அவள் அந்தக் குறைவுக்கு மனதார உட்படுவாளா?"

"இவ்வளவுதானா? அதற்காகத்தான் அவள் காத்துக்கிடக்கிறாள் என்பது அந்த அசட்டு யுவனுக்குத் தெரியவில்லையே!" என்றாள் மாலதி பளிச்சென்று.

இருவருடைய சிரிப்பும் கலந்து எழுந்ததை, வெகு தூரத்திலிருந்து கிருஷ்ணன் புன்னகையுடன் கவனித்தான்.

-(முற்றிற்று)

[நன்றி: விகடன், சித்திரம்: ரவி ]

பி.கு.
இத்தொடரின் முதல் படத்தையும் கடைசிப் படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!  

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன்: படைப்புகள்

துப்பறியும் சாம்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக