புதன், 13 ஜூன், 2012

’தேவன்’: துப்பறியும் சாம்பு - 3

நான் அறிந்த தேவன்
'சாம்பு' என்.எஸ். நடராஜன்



ஐம்பது சிறுகதைகளின் தொகுப்பான ‘துப்பறியும் சாம்பு’ வை  ஒரு சுவையான நாடகமாக்க முடியுமா? நியாயமான கேள்வி தான்.

 ‘சாம்பு’ நாடகம் பிறந்த பின்புலத்தை விவரிக்கிறார் ‘சாம்பு’ என்.எஸ். நடராஜன். அவர் 1972-இல் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

==========


திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் கிளப் மிகச் சிறந்த முறையில்  நாடகங்கள் நடத்திப் பேரும், புகழும் அடைந்ததற்கு முக்கிய காரணம் திரு.தேவன் எழுதிக் கொடுத்த ‘மைதிலி’, ‘கோமதியின் காதலன்’, மிஸ் ஜானகி’, ‘துப்பறியும் சாம்பு’, ‘கல்யாணி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘பார்வதியின் சங்கல்பம்’ நாடகங்கள் தாம். இந்த நாடகங்கள் சுமார் 500 தடவைகள் நடிக்கப்பட்டு ரசிகர்களால்  வெகுவாகப் பாராட்டப்பட்டவை.

  அவர் எழுதிய உன்னதப் படைப்பான ‘துப்பறியும் சாம்பு’ தொடர்கதையை நாடகமாக்க முடியுமா என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டு அவர் என்னிடம் யோசனை கேட்டார். நாங்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அதை நாடகமாக்க முடியும் என்று முடிவெடுத்தோம். ஆனால் அவர் எனக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, ‘சாம்பு’ பாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டுமென்பதுதான் . அதற்கு முதலில் நான் சம்மதிக்கவில்லை. காரணம், அந்த நாடகத்தை நல்ல முறையில் அரங்கேற்ற வேண்டுமானால், பயிற்சியாளன் என்ற முறையில் நான் அவர் எழுத்தோவியத்திற்கு உயிர் ஊட்டவேண்டும். அப்படியிருக்க, நானே பயிற்சியாளனாகவும், கதாநாயகனாகவும் பணியாற்ற முடியுமா என்று திகைத்தேன் ஆனால் அவர் என்னை ஊக்குவித்து அவர் விருப்பத்தைச் சாதித்துக் கொண்டார். எனக்குச் ‘சாம்பு’ என்ற பட்டமும் பெறக் காரணமாக இருந்து, நான் ‘சாம்பு’ நடராஜன் ஆனேன்.
======


தேவன் தன் கைப்பட ஒவ்வொரு காட்சியும் எழுதிய ‘துப்பறியும் சாம்பு’ வின் நாடக வடிவம் இப்போது நூல் வடிவில் ‘அல்லயன்ஸ்’ பதிப்பகத்தில் கிடைக்கிறது. 

( ‘தேவன்’  எழுதிய மற்ற நாடக வடிவ நூல்கள்  நமக்கு எப்போது கிடைக்கும்?  மேலும், தேவன் ‘ஸிம்ஹம்’ என்ற பெயரில் சில அழகான ரேடியோ நாடகங்களை இயற்றியிருக்கிறார் என்றும் தெரிகிறது. இவையும் விரைவில் நமக்குக் கிடைக்கும் என்று நம்புவோமாக! )


‘தேவன்’ எழுதிய நாடகக் கதைச் சுருக்கத்தை இப்போது பார்க்கலாமா?

 துப்பறியும் சாம்பு

கதைச் சுருக்கம்

தேவன்

[ நன்றி: அல்லயன்ஸ் ]

அதிர்ஷ்ட தேவதையின் கண்காணிப்பில் வந்து விட்டவர்களுக்கு ஏற்படும் அமோகமான செல்வாக்கைத் துப்பறியும் சாம்பு அடைகிறான். பாங்கி குமாஸ்தாவாக வாழ்க்கையை ஆரம்பித்த சாம்பு தினம் “முட்டாள்” “முட்டாள்” என்ற அர்ச்சனைகளைத் தவிர வேறெதையும் கேட்டறியான். திடீரென்று ஒருநாள் காலை அவன்மீது லக்ஷ்மி கடாக்ஷம் விழுந்துவிட அடுத்த கணம் அவன் உத்தியோகம் அவனிடமிருந்து கழன்று கொண்டது. எந்த அசட்டு குணங்களை உலகம் வெறுத்ததோ, கேலி செய்ததோ, இகழ்ச்சி செய்ததோ --அதே குணங்களை இன்று அதே உலகம் மனதாரப் புகழ்ந்தது. பெருமையுடன் காப்பியடிக்கவும் கிளம்பிவிட்டது!

இன்ஸ்பெக்டர் கோபாலன் நேர்மைக்கும் உழைப்புக்கும் துணிவுக்கும் பெயர் போன உத்தமமான ஆபீஸர். அவருடைய திருஷ்டி சாம்புவின் மீது விழுகிறது. அவன் பெரிய நிலையை எட்டக் கூடியவன் என்று அவரது அந்தராத்மா சொல்ல, வற்புறுத்தியே  அவனுக்குப் பல சந்தர்ப்பங்களை அளிக்கிறார். பெரிய கேஸ்கள் தொடர்ந்து அவனிடம் வருகின்றன. சாம்புவின் அசட்டுத்தனம் அப்படியேதான் இருக்கிறது. எனினும் அசட்டுத்தனம் ஒன்றினாலேயே வெளிக்கொண்டு வரவேண்டிய வகையில் சந்தர்ப்பங்கள் துணை புரிகின்றன.சாம்பு பல திருடர்களைக் கண்டு பயந்து நடுங்கும்போதே, அதையறியாது அவர்கள் வெகுண்டு தாங்களாகவே சிக்கிக் கொள்கிறார்கள். அவனிடம் சென்ற கேஸ்களெல்லாம் வெற்றி ஒன்றையே காண்கின்றன.

சில ஜமீன்தாரர்கள்  அந்தரங்கமான தொல்லைகளுக்கு சாம்புவை எதிர்பார்த்துப் பலனடைகிறார்கள். பெரிய பெரிய திருட்டுகளைச் ‘சுண்டைக்காய் கேஸ்’ என்று சாம்பு தீர்த்து விடுகிறான். அவனையே மடக்க வேண்டும், அமுக்க வேண்டும் என்று முயன்றவர்கள் எய்த பாணம் தங்கள் மீது திரும்புவதைக் கண்டு மண்ணைக் கவ்வுகிறார்கள். சாம்புவின் வாழ்க்கை மேலும் ருசிக்க வேம்புவும், அவன் குலம் தழைக்க மகன் சுந்துவும் தோன்றுகிறார்கள். இவர்கள் வருகையால் மேலும் சிறப்பாகிறது சாம்புவின் பெயர். இந்தியா எங்கும் ஜெயக்கொடி நாட்டி ‘ கம்பீர சாகரம்’ என்ற பட்டமும் பெற்றுக் கொண்ட சாம்பு, இங்கிலாந்தின் பெயர்போன துப்பறியும் ஸ்தாபனமான ‘ ஸ்காட்லண்ட் யார்டு’க்கு அவர்கள் பிரத்யேக அழைப்பின் மீது ஸ்பெஷல் பிளேனில் புறப்படுகிறான்.

சுபம்.

‘தேவன்’ இந்த நாடக வடிவிற்கு ஆங்கிலத்திலும்  ஒரு  சுருக்கம்( Synopsis)  எழுதி இருக்கிறார். 27-காட்சிகளைக் கொண்ட நாடகம்


1. Sambu stumbles upon the thread of a planned swindle in a Bank in which he is a clerk. He reports it all right, but at the wrong end and as a result loses his job right away.

என்ற முதல் காட்சியில் தொடங்கி

27. Honours due are paid. Fitting title is added and a cable from the U.K. is waiting. Scotland Yard prepares itself to meet Sambu.

என்ற 27-ஆம் காட்சியில் முடிகிறது.

தேவனின் ரசிகர்கள் ‘சாம்பு’ தொடர்கதையையும், ‘சாம்பு’ நாடக வடிவையும் ஒப்பிட்டு எங்கெல்லாம் நாடகம் மூலக் கதையிலிருந்து வேறுபடுகிறது என்று ஆய்வு செய்து மகிழ்வுறலாம்.

உதாரணம் :

நாடகத்தில், வங்கி வேலை போன சாம்புவிடம் இன்ஸ்பெக்டர் கோபாலன் தன்னிடம் துப்பறியும் நிபுணனாக  வேலைக்கு வரச் சொல்கிறார் : (2-ஆம் காட்சி )

“ நான் உமக்கு Training கொடுக்கிறேன்.  C.I.D சந்துருவிடம் உம்மைச் சேர்த்து விடுகிறேன். நாலு மாசத்தில் பழகலாம். ’

இது மூலக் கதைத் தொடரில் உண்டா ? சொல்லுங்கள்!

[ நன்றி: தேவன் அறக்கட்டளை ]


==========

சாம்பு  தொலைக்காட்சித்     தொடராகவும் வந்தது. கிருஷ்ணஸ்வாமி அசோஸியேட்ஸ்  தயாரித்த தொடரில்  ஒய்.ஜி.மகேந்திரன் சாம்புவாய் நடித்தார். இது நான்கு டி.வி.டி -களாய் வெளிவந்தது.







தொடர்புள்ள பதிவுகள் :

தேவன் நினைவு நாள், 2010

தேவன்’: துப்பறியும் சாம்பு

தேவன் படைப்புகள்

3 கருத்துகள்:

  1. துப்பறியும் சாம்பு நான் முதன்முதலில் ஆனந்த விகடனில் சித்திரத் தொடர்கதையாகத் தான் படித்தேன். நாடக வடிவை நான் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  2. நானும் சித்திரங்குளுடன் தான் படித்த நினைவு. சிம்பிள். நான் 1942இல் பிறந்திருக்கவே இல்லை!

    பதிலளிநீக்கு
  3. இடுகைக்கு மிக்க நன்றி.
    நான் சிறு வயதில் சாம்பு நடராஜன் (மாமா) அவர்களை சந்தித்திருக்கிறேன். அவரது ஆசியினால் பலர் புகழ் அடைந்திருகிறார்கள். திரு ஜெயசங்கர் மற்றும் சோ அவர்களை ஊக்குவித்திருக்கிறார் சாம்பு நடராஜன் அவர்கள்.
    அவரது சகோதரியின் புதல்வர் என் .பாலகிருஷ்ணன். பிரபல ஒளிப் பதிவாளர் . முதலில் ஜெமினியில் வேலை செய்து பிறகு இயக்குனர் ஸ்ரீதரிடம் சேர்ந்து சிவந்த மண் போன்ற பல படங்களுக்கு ஒளிப் பதிவு செய்தவர். சாம்பு நடராஜன் அவர்கள் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் இருந்ததாக நினைவு .

    பதிலளிநீக்கு