புதன், 27 ஜூன், 2012

’தேவன்’ - 3 : நாகப்பன்

நாகப்பன்    

தேவன்       
           

நாகப்பனுடைய தொழில் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளக்
கூடியதுமல்ல; நாலு பேர் அறியச் செய்யக் கூடியதுமல்ல, அவன் செய்தது திருட்டுத் தொழில். அவனுடைய ஆயுளில் எத்தனையோ பொருள்களை எவ்வளவோ சிரமப்பட்டுக் களவாடியிருக்கிறான்; ஆனால் அவனுடைய மனைவியின் இதயத்தைக் கொள்ளை கொள்வது மட்டும் அவனுக்கு அசாத்தியமாகவே இருந்து வந்தது.

அவளுடைய வசவுகளுக்கும் பிரசங்கங்களுக்கும் எல்லையே இல்லாமல் இருந்தது. பேசும்போதே அவளுக்கு ஒரு கால் மூச்சு நின்றுவிடுமோ என்று அவன் வியந்தது உண்டு.

அன்று அவன் சோறு தின்ன உட்கார்ந்த பொழுதே ஒரு பெரிய வசைமாரி காத்திருக்கிறதென்று ஊகித்துக் கொண்டான். அவன் சாப்பிடும் பீங்கான் தட்டு தடாரென்று வீசியெறியப்பட்டது. உடனே அவளுடைய 'அகராதி'யும் வேகமாகப் படிக்கப்பட்டது. அவன் பாட்டனார் குடும்பத்தில் பூர்வோத்தரங்களை ஓர் அலசு அலசிக்கொண்டு , அவன் தாயார் தகப்பனாரைப் பற்றியும் காரமாகச் சொல்லி, கடைசியாக அவனையும் அவன் சோம்பேறித் தனத்தையும் சவிஸ்தாரமாக ஆராய்ந்தாள். அவன் கிஷ்கிந்தை வாசிகளின் வம்சத்தைச் சேர்ந்தவன் என்றும், அவனால் அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் என்னவெல்லாம் சங்கடங்கள் நேர்ந்தனவென்றும் விவரமாகக் கூறி முடித்த பிறகே, சற்று ஓய்ந்தாள்.

நாகப்பன் அதற்கெல்லாம் பதிலே சொல்லவில்லை. அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அவள் ஆத்திரத்துடன் மேலும் ஆரம்பித்து விட்டாள் :-

"நீ பாட்டுக்குத் தினம் சோற்றுக்குத் தவறாமல் உக்கார்ந்தா எங்கிருந்து வந்து விழும்னு நினைச்சிக்கிட்டிருக்கே? மூணு வாரமா ஊட்டுக்குக் காலணா காசு கொண்டார்லே. உனக்குக் கண் இல்லையா? ஊரிலே ஒருத்தொருத்தனும் பெண்டாட்டியை இப்படியா துன்பப்படுத்தறான்?... மாரியைப் பாரு! அவன் ஊட்டிலே ஒரு குறைச்சல் இருக்கா? நீயும் மனுஷன், அவனும் மனுஷன் அவன் அல்ல ஆண்பிள்ளை?... அவன் பொஞ்சாதி என்னைப் பார்த்துச் சிரிக்கிறா.

ஏன் சிரிக்க மாட்டா? உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு ஒரு களுதைகூட
என்னைப் பார்த்துச் சிரிக்கும்..."

நாகப்பனுக்கு ரொம்ப ரோஸம் வந்துவிட்டது. "இன்று இரவு எங்கேயாவது போய், எதையாவது எப்படியாவது திருடிக் கொண்டு வருவேன்" என்று முடிவு செய்தான்.

சென்னைக் கார்ப்பரேஷன் கடியாரத்தில் அன்றிரவு இரண்டு முள்ளும் நெட்டுக் குத்தலாக ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு நின்றன. உடனே டணார் டணார் என்று பன்னிரண்டு மணி அடித்துத் தீர்ந்தது. அப்போது நாகப்பன் இருட்டில் பல தெருக்களைக் கடந்து ஒரு மெத்தை வீட்டு வாசலில் வந்து நின்றான். எங்கும் நிசப்தம் நிலவியது.

வீடு சிறிய வீடுதான்; அதிகம் அகப்படும் என்று தோன்றவில்லை. ஆனாலும், "இனியும் பெண்டாட்டியின் வார்த்தைகளைச் சகிப்பது முடியாது. ஏதாவது, ஐந்து பத்து பெறுமானதாக இருந்தாலும் எடுத்துக்கொண்டு போகலாம்" என்ற முடிவுக்கு வந்தான். அடுத்த நிமிஷம் ஒரு நீர்க்குழாயைப் பிடித்துக்கொண்டு மாடியில் ஏறி விட்டான்.

ஒரு வராந்தாவைக் கடந்து, மாடிப்படிகளை ஒட்டினாற்போலிருந்த ஓர் அறைக்குள் நுழைந்தான். ஒரு கட்டிலும் இரண்டு பீரோக்களும் அந்த அறையில் காணப்பட்டன. அந்த அறை வீட்டுக்காரருடைய சயன அறையாக இருக்க வேண்டும் என்று நாகப்பன் ஊகித்தான். "அவர்கள் இப்போது எங்கே? ஒரு கால் இன்னும் வரவில்லையோ? அல்லது ஊரிலேயே இல்லையோ?"

இப்படி அவன் நினைத்துக் கொண்டிருந்தபோதே அந்த வீட்டு வாசலில் ஒரு ஜட்கா வந்து நின்ற சப்தம் கேட்டது. நாகப்பன் திடுக்கிட்டான். அப்போதே ஜட்காவிலிருந்து இறங்கிய ஒருவர் மாடிப்படி ஏறி வந்தது கேட்டது. இனி அறையை விட்டு அவன் வெளியேறுவது இயலாத காரியம்; வெளியே வந்தால், மாடிப்படி ஏறி வருபவரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருக்கும்! ஒரே பாய்ச்சலாக, பீரோவுக்கும் சுவருக்கும் இடையில் இருந்த சந்திற்குள் தன் உடலைத் திணித்துக் கொண்டான். ஊளச்சதை, தொந்தி தொப்பை எதுவும் இன்றி பகவான் அவனை வைத்திருந்ததற்கு அப்போது மனதார நன்றி செலுத்தினான்.

நாகப்பன் நுழைந்த அதே க்ஷணத்தில் அறைக்குள் ஒருவர் நுழைந்ததையும் எலெக்ட்ரிக் விளக்கு ஏற்றப்பட்டதையும் அறிந்து கொண்டான். வந்தது ஒரு ஸ்திரீ; அவளுக்குச் சுமார் முப்பது வயதிருக்கும். கம கமவென்று 'ஸெண்ட்' வாசனையும், புதுப் புடவையின் சலசலப்பு ஓசையும் அவளைப் பின் தொடர்ந்தன. "அப்பாடா!" என்று அவள் கட்டிலின் மேல் உட்கார்ந்தாள். கட்டில் 'கிறீச்' என்றது. அப்போது அறைக்குள் இன்னொருவரும் நுழைந்ததை நாகப்பன் அறிந்தான்.

அந்த ஸ்திரீ உடனே மடமடவென்று பேச ஆரம்பித்து விட்டாள். கடைசி வரையில் அவள் பின்னால் வந்த புருஷனுடைய குரலை நாகப்பன் கேட்கவே இல்லை.

"அப்பாடா! ஒரு வழியாய் வீட்டைக் கண்டேன்! இந்த ஜன்மத்திலே உங்களைப் போல 'வெறுவாய்க்கலங்கெட்ட' புருஷனைக் கட்டிண்டப்புறம் வெளிக் கிளம்பவே படாது. எத்தனையோ தடவை பார்த்தாச்சு! சாமர்த்தியமில்லாத புருஷன்னால், முதல் பிரைஸ் உங்களுக்குத்தான். உங்களண்டே கொண்டு எங்கப்பா என்னைத் தள்ளினாரே... அவர் என்ன பண்ணுவார்? பி.., பி.எல். என்று மயங்கிப் போயிட்டார். 'அருணாசலம் அட்வகேட்'ன்னு போர்ட் போட்டிருந்ததைக் கண்டு பூரித்துப் போயிட்டார்.

"உங்களைக் கண்டு அத்தனைப் புருஷர்களும் சிரிச்சா. முண்டியடிச்சிண்டு போய் ஒரு டிக்கெட் வாங்க சாமர்த்தியமிருக்கா? நாலு பேரோடே பேசத்தான் ஒரு சாதுர்யம் இருக்கா? ஒரு வண்டி பேச உங்களுக்கு வழி தெரியல்லியே! என்னைப் பதினைந்து நிமிஷம் நிறுத்தி வைச்சு, அத்தனை வண்டிகளையும் மற்ற எல்லாரும் பேசிண்டு போன அப்புறம் ஒரு நொண்டிக் குதிரை வண்டி பேசினேளே, போறும்டி அம்மா, போறும்!" என்று நீட்டினாள். உடனேயே மறுபடி தொடங்கி விட்டாள்.

"உங்களோடு நான் குடித்தனம் பண்ணினத்துக்கு, தங்கத்தினாலே ஒரு திருகாணியைக் காணல்லே! ஒடிஞ்சதை ஒக்கப் பண்ண ஒரு வழியைக் காணல்லே; இந்த மட்டும் எங்கப்பா பண்ணிப் போட்டதையாவது கெட்டுப் போக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறேனே, அதுவே பெரிசு; பெரியவாள் பண்ணின புண்யம். அதையும் உங்கள் கிட்டே ஒப்பிச்சிருந்தால் போயே போய், போன இடமும் புல் முளைச்சுப் போயிருக்கும். நான் ஒருத்தி இருந்து, அதை இதை கவனித்துக் கொண்டிருக்கப் போக, நாலு பேர் முன்னே நகைக்க இடம் இல்லாமே இருக்கு..."

அவள் ஒரு பெரிய பெருமூச்சு விட்டதையும், தன் நகைகளைக் கழற்றிப் புருஷன் கையில் கொடுத்ததையும் நாகப்பன் கவனித்தான். எல்லாம் கொடுத்தான பிறகு அவள் மீண்டும் பேசினாள்:-

"சரி, சரி... எல்லாத்தையும் ஜாக்கிரதையாகப் பொட்டியிலே பூட்டிட்டுத்தானே படுங்கோ. ஒரு தரத்துக்கு இரண்டு தரமாய்ப் பாருங்கோ. யாரானும் திருடன் கூட, உங்கள் புத்திசாலித்தனத்தைத் தெரிஞ்சுண்டு இங்கே திருட வந்துடுவான்... இந்த வீட்டிலே ஏதானும் திருட்டுப் போனா, அதுக்கு நீங்கதான் காரணம். உங்களைக் கண்டுதான் திருட வரவனும் வருவான். நன்னாப் பூட்டை இழுத்துப் பார்த்துட்டுத்தானே படுங்கோ. ஆமாம்... எதையானும் பறி கொடுத்து விட்டு நாளைக்குத் திருதிருன்னு முழிக்க வேண்டாம்..."

இத்தனைக்கும் அந்தப் புருஷன் பதிலே சொல்லவில்லை. பீரோவைத் திறந்து, அவள் நகைகளை வைத்துப் பூட்டியதும் நாகப்பனுக்குக் காதில் விழுந்தது. அந்தப் புருஷன் சட்டையைக் கழற்றி, கோட் ஸ்டாண்டில் மாட்டி, தன் மணி பாக்ஸை அதில் வைத்தான். அந்த ஸ்திரீயின் கையிலிருந்த தங்க செயினுடன் கூடிய ரிஸ்ட் வாட்சை வாங்கி ஜேபியில் வைத்தான். பிறகு விளக்கை அணைத்துப் படுத்தான்.

அந்த ஸ்திரீயின் குரல் வர வர அடங்கிற்று; பிறகு பெரிய குறட்டைகள் அவள் தூங்கி விட்டாள் என்பதை தெரியப்படுத்தின.

சுமார் அரை மணி நேரங் கழித்து மறைவிடத்திலிருந்து வெளியே வந்த நாகப்பன் சட்டை ஜேபியிலிருந்த மணி பாக்ஸையும் கெடியாரத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டான். பீரோவைத் திறக்க அவனுக்குத் தைரியப்படவில்லை. பிறகு பூனைபோல் அடி வைத்து, தூங்குகிற தம்பதிகளைத் தாண்டிக் கொண்டு, வெளியே வந்தான்.

வராந்தாவைக் கடந்து மாடியின் கைப்பிடிச் சுவரண்டை வந்ததும் சற்றுத் தயங்கினான். அவன் மனக்கண் முன் ஒரு பரிதாபகரமான காட்சி தோன்றிற்று. மறுநாள் காலை அட்வகேட் அருணாசலத்தின் நிலைமை எப்படி இருக்கும் என்பதுதான் அது. களவுபோன சமாசாரம் காலையில் அறிந்து அவருடைய மனைவி என்னவெல்லாம் பேசுவாள், ஏசுவாள் என்று நினைத்துப் பார்த்தான். கைகளைப் பிசைந்து கொண்டு மனோ வேதனை தாங்காமல் அவர் நின்று கண்ணீர் விடுவது போல் தோன்றிற்று.

நாகப்பன் தயங்கினான். அவன் முகத்தில் இரக்கக் குறி தெரிந்தது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல் தோன்றிற்று. பிறகு சட்டென்று வந்த வழியே திரும்பித் தைரியமாகச் சென்றான். தம்பதிகள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தான் எடுத்த பண்டங்களைச் சட்டை ஜேபியின் முன்போல் வைத்து விட்டுத் திரும்பினான். மனைவியைப் பற்றியும், அவள் அவனை ஏசப் போவதையும் நினைத்தபோது, மனத்திலே பெருங் கவலை குடிகொண்டது. ஆனால், "என்னைப் போலவே குடும்பத்திலே சிரமப்படும் ஒருவருக்கு உதவி செய்தோம்" என்ற திருப்திதான் மேலோங்கியிருந்தது. வெறுங்கையுடன் வீட்டை நோக்கி நடந்தான்.

~*~o0O0o~*~

[ நன்றி ; ‘ஜாங்கிரி சுந்தரம்’, அல்லயன்ஸ் ]

தொடர்புள்ள சில பதிவுகள் :

தேவன் நினைவு நாள், 2010
தேவன்’: துப்பறியும் சாம்பு
தேவன் படைப்புகள்
தேவன்' : நினைவுகள்

1 கருத்து: