திங்கள், 9 ஜூலை, 2012

“ திருமால் மாருதி” : மாலை மாற்று

திருமால் மாருதி
பசுபதி



‘விகடகவி’ ‘மோரு போருமோ’ ‘தேரு வருதே’ போன்றவற்றை  மாலைமாற்றுச் சொற்றொடருக்கு ( Palindrome) உதாரணங்களாகப் பள்ளி நாட்களில் படித்திருப்பீர்கள்.  மாலைமாற்றைத் திரும்பிப் படித்தாலும் அதே சொற்றொடர் வரும்.  திருஞானசம்பந்தர் ஒரு மாலைமாற்றுப் பதிகமே பாடியிருக்கிறார்!

”தற்காலத் தமிழர்கள்” யாவரும் அகராதியின்றிப் புரிந்துகொள்ளும்படி ஒரு முழுப் பாடலை மாலைமாற்றாகப் பாடுவது எளிதன்று.

நான் எளிதில் புரிந்து கொள்ளமுடியும் சில மாலைமாற்றுச் சொற்றொடர்களை பாடலின் ஈற்றடியாக வைத்துச் சில கவிதைகளைப் புனைந்துள்ளேன். அவற்றில்

போ! வேகமாகவே போ!  

என்ற கவிதை ஒன்று ; இது ‘அம்மன் தரிசனம்’ 2002 -தீபாவளி மலரில்  வெளிவந்தது .

எனக்குப்  பிடித்த இன்னொரு மாலைமாற்றுச் சொற்றொடர் :

“திருமால் மாருதி” .

இதைப் பயன்படுத்திப் பல கவிதைகள் எழுதியுள்ளேன். ஒன்று இதோ:
( அம்மன் தரிசனம் இதழில் 2001 -இல் வெளியான கவிதை )


(“ கா!திருமால் மாருதி கா! “ என்பதை வெண்பாவின் ஈற்றடியாக வைத்துச் சில நான்கடி வெண்பாக்களையும் இயற்றியிருக்கிறேன். )

இன்னொரு கவிதை ( இணைய மின்னிதழ் திண்ணையில் 2004-இல்  வெளிவந்தது )

சொல்லின் செல்வன் 
பசுபதி


அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்;
'என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? '

தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்:
'ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். '

ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;
ஞானம் கனிந்தபின்னர் நானேநீர்; நீரேநான். '

சிரித்தணைத்தார் ஸ்ரீராமர் சொல்லின் செல்வனை;
திருமாலாய்க் காட்சிதந்தார்; செஞ்சொற்கள் ஒலித்ததங்கே.

' 'திருமால் மாருதி! ' திருப்பியிதைப் படித்தாலும்
'திருமால் மாருதி 'தான்
! தெளிந்தவர் களித்திடுக! '

இருநாமம் இணைந்துநிற்கும் இணையற்ற மந்த்ரமிது!
இருபோதும் ஓதுங்கள் ! இறையோடு இணையுங்கள் ! ”

தொடர்புள்ள பதிவுகள்:
கவிதைகள்

5 கருத்துகள்:

  1. 'திருமால் மாருதி! ' திருப்பியிதைப் படித்தாலும்
    'திருமால் மாருதி 'தான் ! தெளிந்தவர் களித்திடுக!//

    அருமை அருமை
    படித்துக் களித்தேன் பெருமிதம் கொண்டேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி, ரமணி அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. நல்ல ஓவியத்தைப் பார்த்துத் தரையில் கிறுக்கும் பிள்ளைபோல நானும் நாலு வரி எழுதிப் பார்த்தேன் :)

    சிவன்,திருமால், மாருதி, சுப்ரமணி என்றே
    இவருக்கு எப்பெயரை இட்டாலும் ஒன்றே,
    தவமெதற்கு? நெஞ்சில் தவழவிடு அன்பை,
    அவர்தருவார் என்றும் அருள் |

    பதிலளிநீக்கு
  4. என் பங்கிற்கு

    அத்திருமால் மாருதிக்கு ஆதர்ச நாயகனாம்
    பித்தனைப்போல் இக்குரங்கும் பின்னால்தான் சென்றானாம்
    முத்தமிழில் நானுமெந்தன் மூத்தவனைப் போற்றிடுவேன்
    அத்திறனை ஆண்டவனே தா!

    பதிலளிநீக்கு