சனி, 22 செப்டம்பர், 2012

செருப்புக்கும் உண்டே திருட்டு! : கவிதை

செருப்புக்கும் உண்டே திருட்டு !

பசுபதி

இன்னிசை வெண்பா





தும்பிக்கை யானைத் துதித்(து)அவன் தாளினைக்
கும்பிடும்  போது குடைந்ததென் புத்தி ;
"தெருக்கடையில் வைக்காமல் தேரடியில் வைத்த
செருப்புக்கும் உண்டே திருட்டு."

[மதுரை ஊர்த்துவ கணபதி
படம்:சில்பி;
 நன்றி:விகடன்]



பி.கு.

இந்த அழகான ஈற்றடியை நண்பர் ஹரிகிருஷ்ணன் எப்போதோ ஒரு கவனகரிடம் சொன்னதாய் நினைவு. கவனகர் எப்படி வெண்பாவைப் பாடினார் என்பது எனக்குத் தெரியாது! இது என்னுடைய  ‘டேக்’!

பி.கு.2
பின்னூட்டங்களைப் படிக்கவும்!

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

8 கருத்துகள்:

  1. ஓ.. அந்த ஈற்றடி இவ்வளவு காலம் நினைவிருக்கிறதா? ஒரு நண்பன் தன்னுடைய செருப்பைக் கோவில் வாசலில் தொலைத்துவிட்டான். அது பற்றிப் பேச்செழுந்தபோது, தெருவில் நடந்து கொண்டிருந்தோம். பேச்சில் எப்போதும் ஈற்றடிகள் இறைபடும். நண்பன் பா கிருஷ்ணன் ‘செருப்புக்கும் உண்டே திருட்டு’ என்று இதைப்பற்றிச் சொன்னான். அதற்கு இன்னொருத்தன் ‘அறுப்புக்கும் உண்டே லிமிட்டு’ என்று திருப்பி அடித்தான். பேசிக்கொண்டே நங்கநல்லூர் காலனி 26வது தெருவிலிருக்கும் கவிஞர் குணசேகரன் வீட்டுக்குப் போயிருந்தோம். அவருடைய மனைவியின் சித்தப்பாவான தசாவதானி இராமையா (கவனகர் கனகசுப்புரத்தினத்தின் தந்தை.) அப்போதுதான் வந்திருந்தார். அவரை முதன்முறையாகச் சந்திக்கிறோம். பேசிக் கொண்டிருக்கும் போது, ‘ஏதாவது ஈற்றடி கொடுங்களேன். வெண்பா சொல்வார்’ என்று கவிஞர் குணசேகரன் சொன்னதும் வழியில் உதிர்ந்த இந்த செருப்புக்கும் உண்டே திருட்டு என்ற ஈற்றடியைச் சொன்னோம். அவதானி அப்போது உடனடியாகச் சொன்ன வெண்பா--

    ஆசைக் களவில்லை ஆகாகா* எப்பொருளும்
    ஓசைப் படாமல் உடன்கவர்வர் - வீசித்
    தெருக்குப்பை மீதெறியும் செத்தவன்கால் கோத்த
    செருப்புக்கும் உண்டே திருட்டு.

    * இந்தச் சீர் சரியாக நினைவில்லை. இட்டு நிரப்பியிருக்கிறேன். ஆகா தெப்பொருளும் என்பதாக வீரராகவன் நினைவிலிருந்து சொன்னான். இருக்காது என்று தோன்றுகிறது.

    அன்றுமுதல் ஒரு அருமையான உறவு வளர்ந்தது. இது நடந்தது 1972ல். எனக்கு வயது 19. பா கிருஷ்ணனுக்கு 16 அல்லது 17 இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி, ஹரி. வரலாற்றைப் பதிவு செய்ததற்கு.

    பதிலளிநீக்கு
  3. இந்த வழக்கம் பண்டைநாள் தொட்டு (கல்தோன்றி மண்தோன்றா....செருப்புத்தோன்றிய)
    இருந்திருக்கிறது. காட்டாக,:

    ஆசாரம் நோக்கி அடுத்துச் சிவனுக்குப்

    பூசைசெயும் போதில்தன் காலணியை - வீசி

    ஒருபால் எறிந்தகண் ணப்பன் உணர்ந்தான்

    செருப்புக்கும் உண்டே திருட்டு!

    :-))
    அனந்த்

    பதிலளிநீக்கு
  4. எம்பெருமான் பொற்பாதம் எங்கென்று தேடுவார்
    ஐம்பொன் சிலைதிருடும் அற்பர்கள் - வம்பர்
    கருத்திலார் ஈனர் கசடர்போன் றாரால்
    செருப்புக்கும் உண்டே திருட்டு!
    - அரிமா இளங்கண்ணன்
    10-7-2016 ஞாயிறு. காலை11 45

    பதிலளிநீக்கு
  5. கோவிலன்றி எங்கெல்லாம் கூடுவரோ மக்களங்கு
    பாவியரும் வந்திடுவர் பாரோரே - நீவிர்
    கருத்திதைக் கொள்வீர்! கருதாக்கா லங்கும்
    செருப்புக்கும் உண்டே திருட்டு

    அஷோக் சுப்ரமணியம், செப்டம்பர் 25,2018

    பதிலளிநீக்கு
  6. ஒன்றை உயர்வென்றும் ஒன்றுயர் வில்லையென்றும்
    எண்ணாதீர் எல்லாம் இடம்பொருளால்! ஒன்றைப்
    பொருளின் மதிப்பைப் பொறுத்துமதி யாதீர்!
    செருப்புக்கும் உண்டே திருட்டு!

    பதிலளிநீக்கு