முதலில், இந்தத் தொடருக்கு ஓவியங்கள் வரைந்த உமாபதி அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள். ’கல்கி’ , ‘பூந்தளிர்’ போன்ற பல இதழ்களிலும் நிறைய வரைந்திருக்கும் இவரைப் பற்றி அதிகம் விவரங்கள் எனக்குக் கிட்டவில்லை. கடைசியில், 20-ஆண்டுகளுக்கு முன் , “கல்கி’யில் வந்த ஒரு குறிப்புக் கிட்டியது:
படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தபோதே ஓவியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார் இளைஞர் உமாபதி. சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவரைக் குடும்ப வியாபாரத்தைப் பொறுப்பேற்க நெருக்கின. வியாபாரக் கணக்குப் புத்தகத்தின் ஓரமெல்லாம் படம் போட்டுத் துணை வணிக அதிகாரியின் கோபத்துக்கு உள்ளானார் உமாபதி. “நீ உருப்பட மாட்டாய்” என்று அவரால் ‘ஆசி’ கூறப் பெற்றவர், முதன் முதலில் ராஜாஜியைக் கார்ட்டூனாக வரைய , ஹிந்துஸ்தான் இதழின் அட்டைப்படத்தில் அது பிரசுரமாயிற்று. ‘கல்கி’ நடத்திய அமரர் சந்திரா நினைவுப் போட்டியில் பங்கேற்றுப் பரிசும் பெற்றார். பல்லாயிரக் கணக்கில் படங்களும், கேலிச் சித்திரங்களும் வரைந்துள்ள இவரை ஒரு ‘குவிக் ஆர்டிஸ்ட்’ என்கிறது ‘கல்கி’க் குறிப்பு.
‘சிந்தா நதி’த் தொடரில் லா.ச.ரா ‘மணிக்கொடி சதஸை’ப் பற்றி எழுதிய இரண்டாவது கட்டுரை இதோ.
=====
படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தபோதே ஓவியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார் இளைஞர் உமாபதி. சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவரைக் குடும்ப வியாபாரத்தைப் பொறுப்பேற்க நெருக்கின. வியாபாரக் கணக்குப் புத்தகத்தின் ஓரமெல்லாம் படம் போட்டுத் துணை வணிக அதிகாரியின் கோபத்துக்கு உள்ளானார் உமாபதி. “நீ உருப்பட மாட்டாய்” என்று அவரால் ‘ஆசி’ கூறப் பெற்றவர், முதன் முதலில் ராஜாஜியைக் கார்ட்டூனாக வரைய , ஹிந்துஸ்தான் இதழின் அட்டைப்படத்தில் அது பிரசுரமாயிற்று. ‘கல்கி’ நடத்திய அமரர் சந்திரா நினைவுப் போட்டியில் பங்கேற்றுப் பரிசும் பெற்றார். பல்லாயிரக் கணக்கில் படங்களும், கேலிச் சித்திரங்களும் வரைந்துள்ள இவரை ஒரு ‘குவிக் ஆர்டிஸ்ட்’ என்கிறது ‘கல்கி’க் குறிப்பு.
‘சிந்தா நதி’த் தொடரில் லா.ச.ரா ‘மணிக்கொடி சதஸை’ப் பற்றி எழுதிய இரண்டாவது கட்டுரை இதோ.
=====
19. மணிக்கொடி சதஸ்
மெரினாவில் மணிக்கொடி எழுத்தாளர்களின் மாலைச் சந்திப்பு பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன்.
ஸ்ரீ சிதம்பர சுப்பிரமணியன், சில சமயங்களில், பட்டானியோ, சுண்டலோ, வேர்க்கடலையோ வாங்கிக் கொடுப்பார். "அதோ கொஞ்சம் எட்டினாற்போல உட்கார்ந்திருக்காளே, அந்த மூணு பேருக்கும்கூட," என்று சுண்டல்காரனுக்கு எங்களைச் சுட்டிக் காட்டுவார். ஆளுக்கு ஒரு அணா, வெங்காயம், மாங்காய், தேங்காய், கடுகு தாராளமாகத் தாளித்து, நல்லெண்ணெய்ப் பசையுடன்- பஹு ருசி. அறிவுக்கு உணவோடு நாக்குக்கும் சற்று ஈயப்படும்.
இந்த மாலைக் கூட்டத்தைப் பற்றிய புலன், எந்த திராஷைக் கொடி மூலமோ, பெரிய இடங்களுக்குப் போய்விட்டது. வேடிக்கை பார்க்க வருவோர், வேவு பார்க்க வருவோர், என்னதான் வாண வேடிக்கை இங்கு எனும் அவாவில் வருவோருமாகக் கூட்டம் பெருக ஆரம்பித்தது. லேசாக நாங்கள் அரை டிக்கெட்டுகள் கவலைப்பட ஆரம்பித்து விட்டோம். அந்த, குறிப்பிட்ட ஏழெட்டுப் பேர் மட்டும் அடங்கிய குழுவில் நிலவிய அந்நியோன்யம், பேசப்படும் விஷயங்களின் ஆசாரம்,
தடங்கலற்ற கருத்துப் பரிமாறல்- சிறுகச் சிறுகப் பாதிக்கப்பட ஆரம்பித்து விட்டனவோ?
யாகத்தைக் கலைக்க அசுரர்கள் வருவதுபோல, பாதகமான அம்சங்களும் கலந்துகொள்ள முயன்றன. அரசியல், கக்ஷி, குதர்க்கம், அநாவசியமான பேச்சுக்களைப் புகுத்தி பாதைகளையே திருப்ப முயன்ற களைகள். ஆனால் அவைகளுக்கு இங்கு பேசப்பட்ட விஷயங்களின் தடங்கள் புரியாமல், எட்ட முடியாமல், சுவாரஸ்யம் குன்றித் தாமே உதிர்ந்து போயின.
கொஞ்ச காலத்துக்குச் சில ப்ரமுகப்ரஸன்னங்கள் பங்கு கொண்டன. (பெயர்களை உதிர்க்கப் போகிறேன்) டாக்டர் வி. ராகவன், ஸ்ரீ கே. சேஷாத்ரி, ஸ்ரீ கே. சந்திரசேகரன், 'றாலி', ஸ்ரீ எஸ். வி. வி. 'ஹிந்து' ஸ்ரீ ரகுநாத அய்யர் (விக்னேச்வரா) அவரவர் வெளியிடும் கருத்துக்களைக் காட்டிலும் அவர்கள் வெளியிடும் தோரணை- நாங்கள்- இளவல்களின் கவனத்தை ஈர்த்தது.
இரவு, தலையணைமேல் தலை, மாலை நடந்ததைத் திரும்ப எண்ணிப் பார்க்க முயல்கையில், ஏதோ ஒரு குறைபாடு, நெஞ்சீரல், குழந்தைக்கு முழுத் தோசையை ஓரத்தில் விண்டு கொடுத்தால் அந்த அதிருப்தி- இம்சித்தது கலப்படம். இந்தக் கூட்டம் தன் பழைய Size க்குத் திரும்புமா?
எங்களுடைய மெளனப் பிரார்த்தனை கேட்க வேண்டிய செவியில் விழுந்து விட்டாற் போலும். இந்த அதிகப்படி பங்காளர்கள், பார்வையாளர்கள், சேர்ந்த மாதிரியே, விலகியும் போயினர். அப்பாடி!
'ஹிந்து' ரகுநாத அய்யர் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு வந்து கொண்டிருந்தார். அவருடைய முன்னிலை, ஈடுபாடு மணிகொடி குழுவுடன் கலவை இழந்த மாதிரி எனக்குப் படவில்லை; ஆனால் அந்தச் சிறிய உடலுக்குள் என்ன புலமை! என்ன ஆகாசம்! மணிக்கணக்கில், கீழே இறங்காமலே, சிறகை அடிக்காமலே, அங்கேயே நீந்துவார்.
குறுமுனி.
மணிக்கொடி ஸதஸ், வேறு முகம் எடுக்க ஆரம்பித்தது.
ஸ்ரீசிதம்பர சுப்ரமணியன்(3), நாங்கள் சற்று எட்ட ஒதுக்கிப் பார்க்கும் கூட்டம் உள்பட, வீட்டுக்கு இந்த எழுத்தின் உபாஸகர்களை அழைத்து, பாயஸம் பச்சடியுடன் விசேஷ சாப்பாடு போட்டார்.
அடுத்து க.நா.சு. அதேபோல் விருந்து வைத்தார்.
துமிலன் விட்டில் நடைபெற்ற எஸ். கே. சி. பார்ட்டியில் (ஸ்வீட், காரம், காபி) ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
அவர் கேட்டுக் கொண்டபடி, வந்திருந்தவர் ஒவ்வொருவரும் எழுந்து நின்று தங்கள் பெயரைச் சொல்லிக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டோம். என் முறை வந்ததும், "என் பெயர் லா.ச.ராமாமிருதம்!" என்று கூறிவிட்டு, என் பக்கலில் உட்கார்ந்திருந்த துமிலன் ஸாரைச் சற்றுப் பெருமிதத்துடன் பார்த்தேன். நான் எதிர்பார்த்த அடையாளம் அவர் கண்களில் கூடுவது காண அதைவிடக் குஷியாக இருந்தது. அப்போது அவர் புதுச் சிறுகதைகள் மட்டும் கூடிய கதைக்கோவை மாதம் ஒன்று வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
"ஓஹோ, இந்த மாஸம் வெளிவந்த 'சுமங்கல்யன்' (2)என்கிற கதையை எழுதியவர் நீங்கள்தானா? ரொம்ப நன்றாக இருந்தது. எந்த மொழியிலிருந்து தர்ஜமா அல்லது மொழி பெயர்ப்பு தெரியவில்லை."
பலூன் முகத்தில் வெடிக்கும்விதம் எப்படி?
இது சாக்கில் இதேபோல், மற்றொரு சம்பவத்தையும் சொல்லி விடுகிறேன்.
மேற்கூறிய சம்பவத்துக்குப் பின்னர்தான், 'ஹிந்துஸ்தான்' வாரப் பத்திரிகைக்கு ஒரு கதை அனுப்பியிருந்தேன். பத்து, பன்னிரண்டு நாட்கள் கழித்து அதன் விதியை அறியச் சென்றேன்.
"உங்களை ஆசிரியர் பார்க்க விரும்புகிறார்."
உள் அறையில் ஆசிரியர் உட்கார்ந்திருந்தார்.
"உட்காருங்கள். ஹூம், Yes, Mr.ராமாமிருதம், உங்கள் கதை 'துறவு'(2) மொழி பெயர்ப்பா, தழுவலா? Be frank with me you are a young man. உங்கள் கதை original ஆக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இவ்வளவு நன்றாக, புதுமையான டெக்னிக்கோடு அமைந்திருக்கும் ஒரு விஷயத்தை வெளியிடுவதற்கு எனக்கு இஷ்டம், சந்தோஷம். ஆனால் ஒரிஜினலை அக்னாலட்ஜ் பண்ணி விட்டால், நல்லது. பின்னால் சிக்கலுக்கு வழியில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?"
இது எப்படி! ஆகவே ஒன்று. உள் பொறியை அவிக்க மழைத்துளி வேண்டுமென்பது கூட இல்லை. விரல் நுனித்தெறிப்பே போதும். நண்பனே, உன் கொழுந்தைக் காப்பாற்ற வேண்டுமானால் பொங்கியெழும் ரோசத்தை சுரனை கெட்ட அழும்பாக மாற்றிக்கொண்டு, உன் முதுகு எலும்பைப் பலப்படுத்திக் கொள்.
பின்னர், ஒரு சமயம், மைலாப்பூரில் ஒரு வீட்டில் அப்பா என்ன கூட்டம்! இது என்ன சினிமா காக்ஷியா, கலியாணமா? இல்லை, மணிக்கொடி எழுத்தாளர்களைச் சந்திக்க வந்தவர்கள். இவர்களில் முக்காலே மூணு வீசம் பேருக்கு மேல், இவர்களுக்கும் எழுத்துக்கும் வாசகர் என்கிற முறையிலேனும் சம்பந்தம் இருக்குமோ, சந்தேகம், வகையான தீனி. என்னென்ன பட்டுப் புடவைகள். விதவிதமான கொண்டைகள், நகை வரிசைகள்.
ஒரு அம்மாவின் 'மேக் அப்' அலங்காரம் அடேயப்பா!- புதுமைப்பித்தன்: "யார் இவங்க, மாஸ்டர் விட்டலுக்கு (1) ஸ்திரீ பார்ட்டா?" என்றதும், நாங்கள் குப்பென்று சிரித்துவிட்டு, சிரித்த காரணத்தை வெளியிட முடியாமல், திருதிருவென விழித்தது ஞாபகம் வருகிறது.
இப்போ ஒன்று தெளிவாயிருக்கும். எங்களுக்குத் தீனி பிடித்தது. தீனிக்கு முன்னாலேயோ, பின்னாலேயோ இலக்கியம் எனும் பெயரில் நடந்த கூட்டம் பிடிக்கவில்லை. இந்தக் குற்ற உணர்வில், நாளடைவில், அந்தத் தீனியும் பிடிக்கவில்லை.
விருந்துகளும் ஒய்ந்து போயின. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டே!
திரும்பவும் குறிப்பிட்ட அந்த ஏழு எட்டு பேர் கடற்கரையில் சந்திக்கும் வாய்ப்புகளும் குறைந்து போயின. இரண்டாவது உலக மஹாயுத்தம், சுதந்திரப் போராட்டம், அவரவர் ப்ரச்னைகள்; ஸதஸ் கலைந்து விட்டது.
ஆயினும் என் போன்றவன் நெஞ்சில் அது நட்ட விதை வீண் போகவில்லை. துளிர்க்க ஆரம்பித்துவிட்டது.
யோசித்துப் பார்க்கிறேன். அந்தக் கடற்கரைச் சந்திப்பு கலைந்தது பேரிழப்போ? அதன் காரியம் முடிந்தது, லபியும் முடிந்தது என்றுகூட எண்ணிக் கொள்ளலாம்.
சந்திரோதயத்தில் என் கதை 'அபூர்வ ராகம்' (2) அப்போதுதான் வெளியாகியிருந்தது. பிற்பகல். எர்ரபாலு செட்டித் தெரு வழியே போய்க் கொண்டிருக்கிறேன். புதுமைப்பித்தனும் ந. பிச்சமூர்த்தியும் ஏதோ அவர்களிடையே, சுவாரஸ்யமாக, முக்கியமாகப் பேசிக்கொண்டு எதிர்நோக்கி வருகிறார்கள். முட்டிக்கொள்கிறாற்போல் நெருங்கிய பின்தான் அவர்கள் கவனம் என் மேல் பட்ட்து.
புதுமைப்பித்தன், வெடிப்பான அவர் சிரிப்பைச் சிரித்துவிட்டு, என்னை அணைத்துக் கொண்டார்.
"ஊம், நீங்களும் நம்மவரோடு சேர்ந்தாச்சு."
பிச்சமூர்த்தி பார்த்துக்கொண்டு நிற்கிறார். மீசைக்கும், தாடிக்கும் இடையே ஒளிந்து கொண்ட புன்னகை அவருடைய மூக்குத் துண்டு, விழியோரச் சுருக்கங்களில் வெளிப்படுகிறது. அவர் பார்வையே ஆசீர்வாதம். அவ்வளவுதான். போய்க் கொண்டேயிருக்கிறார்கள். போய் விட்டார்கள்.
வண்டி வாஹனப் போக்குவரத்துக்கு இலக்காக நடுத்தெருவில் நான் நிற்பதுகூடத் தெரியாமல், நடுத்தெருவில் நிற்கிறேன். பாதம் பூமியில் இல்லை.
சங்கப் பலகையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டேன்.
* * * ------------------
பின் குறிப்பு : 1) மாஸ்டர் விட்டல் = முதல் இந்தியப் பேசும் படமான ஆலம் ஆரா ( 1931) -இன் கதாநாயகன்.
2) ’சுமங்கல்யன்’ ‘அபூர்வ ராகம்’ கதைகள் லா.ச.ரா -வின் ‘பச்சைக் கனவு’ தொகுப்பில் உள்ளன. ‘துறவு’ ?
3) சிதம்பர சுப்பிரமணியனைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையை எழுதியுள்ளார் லா.ச.ரா. அப்படியே செல்லப்பா, பிச்சமூர்த்தியையும் பற்றி. இவை ’உண்மையின் தரிசனம்’ என்ற லா.ச.ரா தொகுப்பில் உள்ளன.
[ If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:
லா.ச.ராமாமிருதம் படைப்புகள்
Thank you for the information about artist Umapathy. I believe that any one can learn how to draw well at any age. I am a living proof. A year ago, when I was 79, I started learning how to to draw faces from YouTube lessons and the used books I bought from
பதிலளிநீக்குamazon.com. I am very happy with my progress and I enjoy the envy of my acquaintances. Ananth Sundararajan.