வியாழன், 17 ஜனவரி, 2013

சொற்களைச் சுவைப்போம் - 4

வாஞ்சையுடன் பூமாலை  வாங்கு !
 பசுபதி




‘தமிழ்’  மொழியைப் பற்றிப்  பேசுபவர்கள் மறக்காமல் சொல்லும் ஒரு விஷயம் உண்டு.  தமிழ் மொழியின்   வல்லினம் (த ), மெல்லினம் ( மி ) , இடையினம் 
 ( ழ் ) என்று மூன்று இனங்களும் தமிழ் என்ற சொல்லிலேயே அழகாக இணைந்திருக்கிறது  என்பதே. ‘முருகன்’  ஒரு தமிழ்க் கடவுள் என்று குறிப்பிடும் அறிஞரும் ‘முருகு’ என்ற சொல்லிலும் மூன்று இனங்கள் இருப்பதைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.



தமிழில் மூன்று வித ஓசைகளைக் குறிப்பிடும் மூன்று இனங்கள் இருப்பது நம் மொழியின் ஒரு தனித்தன்மை. மூவினங்களை வைத்துப் பல விதமான வார்த்தை விளையாட்டுகளை ஆடலாம். அவற்றுள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.



முதல் ஆட்டம்:



மூவினங்களும் ஒரே ஒரு முறை வரும் ( தமிழ், முருகு போன்ற )  மூன்றெழுத்துச் சொற்கள் தமிழில் பல உள்ளன. கரம், சரம், பரம், ….அல்லது காலணி, சேமியா, தாமரை என்று  நிறைய சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப் பொதுவாய் எல்லா மூன்றெழுத்துச் சொற்களையும் வரிசைப் படுத்துவதற்குப் பதிலாய், மூவின எழுத்துகள் சேர்ந்த ஆண், பெண் பெயர்களை எழுதுவது முதல் ஆட்டம்.


இதோ ஒரு மாதிரிப் பட்டியல்:


கமலா, குமார், சரண், சிவன்,  சுநீல், சேரன், சோழன், சௌம்யா, தாரிணி, நித்யா, பரணி,  பவானி, பாலன், பிரேமா, மாதவி, மாலதி, யோகம், ரோகிணி, ரேணுகா, வனிதா, வேம்பு.



இப்படிப்பட்ட ‘மூவினப்’ பெயர்கள் கொண்ட மூவெழுத்துக்காரர்கள்  பெருமைப் படுவதோடு, தமிழ் மொழியின் ஒரு பரிமாணத்தையும் புரிந்து கொள்வார்கள் அல்லவா? 



இரண்டாம் ஆட்டம்:



மூவின எழுத்துகள் ஒவ்வொன்றும் இரு முறை மட்டும்  வரும் ஆறெழுத்துச் சொற்களைக் கண்டுபிடித்து எழுதுவது சற்றுச் சிரமமான வேலை. முயலுங்கள்!  கீழே கொடுக்கப் பட்டிருக்கும் பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கு இந்த ஆட்டம் தெளிவாகப் புரியும்.



களஞ்சியம், தலைநகரம், நெடுந்துயில், பணியரங்கு, பயங்கரம், பலவந்தம், பிரயோசனம், பெரியதனம், விற்பன்னர், மகாவித்வான், சிருங்காரம், மாங்காய்கள்.



களஞ்சியம் என்ற சொல்லில் வல்லினம் இரு முறையும் ( க, சி ) , இடையினம் இரு முறையும் ( ள, ய ) , மெல்லினம் இரு முறையும் (ஞ் , ம் ) வந்திருப்பதைக் கவனியுங்கள். இதே மாதிரி மற்ற சொற்களும் உள்ளன.  சொல்லில் ஓர் இனத்தைக் குறிக்க ஒரே எழுத்தின் இரு வர்க்கங்கள் வராமல், வெவ்வேறு  எழுத்துகள் வந்தால் இன்னும் அழகு தான். அதாவது, விற்பன்னர் என்ற சொல்லில்  அதே மெல்லின எழுத்து  இரு முறை ( ன்,ன ) வருகிறது . இதை விட, களஞ்சியம் என்ற சொல்லில் ஞ், ம் என்ற வித்தியாசமான மெல்லின எழுத்துகள் வருவது போல் வந்தால் அழகு. 



 மூன்றாம் ஆட்டம்:



மூவின எழுத்துகள் சமமான விழுக்காடுகளில் , ஒரு தடவை, இரண்டு தடவை , வார்த்தைகளில் வருவதை முதல் இரண்டு ஆட்டங்களில் பார்த்தோம். ஆனால், இப்படிச் சம எடையில் மூவினங்களும்  வரும்  தமிழ் வாக்கியங்களை எழுதுவது மேலும் சிரமமான ஓர் ஆட்டம். அதாவது, வாக்கியத்தில் ஒவ்வொரு இனமும் சமமான எண்ணிக்கையில் … 2,3, 4 ,… என்று வரவேண்டும். நான் கீழே கொடுத்திருக்கும் சில காட்டுகளைப் பாருங்கள். இதே மாதிரி சில வாக்கியங்களை உங்களால் எழுத முடியுமா? ”



துலாம் சாயுமோ?

தரணி தாங்கு!

வந்த  கனவு நீளுதே!

வாஞ்சையுடன் பூமாலை வாங்கு!

பழனிநகர் மேடையொன்றில் மயிலாட்டம் காணவா.

பெரும்பாலும் சாயங்காலம் தலபுராணம் வந்துசேரும்.    

பி.கு.

மேற்கண்ட கட்டுரையைப் படித்த ‘வெண்பா வீட்டு’ நம்பி

சார்! ”வாஞ்சையுடன் பூமாலை வாங்கு” வெண்டளை பிறழாமல், ஒரு வெண்பா ஈற்றடி போல் இருக்கிறதே?” 

என்றான்..

அட! கவனித்தாயா? பலே! ஆம், ‘சம எடை மூவின’க் குறள் வெண்பாக்களைக் கூட நம் ஆட்டத்தில் இயற்ற முயலலாம். நல்ல மென்பொருள் உதவியால்  ‘திருக்குறள்’ போன்ற சிறு கவிதைகளில்  எங்காவது  மூன்று இனங்களும் சம எடையில் ( அல்லது தோராயமாகச் சம எடையில்)  வருகின்றனவா என்றும் ஆய்ந்து அறியலாம்”  என்றேன்.


~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவுகள்:

சொல்விளையாட்டு

17 கருத்துகள்:

  1. மழைபெய்ய மண்குளிரும்! தேன்தமிழ் பெய்யத்
    தழைத்திடும் நெஞ்சம்! தவறென்றே கண்டாலும்
    கன்னித் தமிழைக் கவிகளின் நெஞ்சமோ
    பொன்னாகப் போற்றும் பொருத்து!

    ஐயா... நான் நீங்கள் சொன்னவாறு எழுதி இருக்கிறேனா...?
    தவறு எனில் பொருத்தருளுக.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. @அருணா செல்வம்
    நல்ல இன்னிசை வெண்பா!

    பதிலளிநீக்கு
  3. @அருணா செல்வம்
    >>ஐயா... நான் நீங்கள் சொன்னவாறு எழுதி >>இருக்கிறேனா.

    உங்கள் வெண்பாவில் உள்ள வல்லின, இடையின,மெல்லின எழுத்துகள் எவ்வளவு என்று எண்ணிச் சொல்லுங்கள்! நான் விரைவாகப் பார்க்கும்போது மூன்றும் சம எண்ணிக்கையில் இருப்பதாகத் தோன்றவில்லையே?

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா.

    நிரல் எழுதும் வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    tamilvu.org திருக்குறள் பாடத்தை மூவின எழுத்துகளின் எண்ணிக்கை வரிசையில் இங்கு அமைத்துள்ளேன்: http://mstamil.com/moovinam/thirukkural.html
    (சம எடைக் குறட்பாக்கள் கிடைக்கவில்லை.)

    உபரியாய்க் கிடைத்தவை:

    மெல்லினம் இல்லாத குறட்பாக்கள்:

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார். (26)

    வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
    வாழ்வாரே வாழா தவர். (240)

    அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
    ரஃதறி கல்லா தவர். (427)

    வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
    பாத்திப் படுப்பதோ ராறு. (465)

    இடையினம் இல்லாத குறட்பா:

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
    தகநக நட்பது நட்பு. (786)

    வல்லினம் இல்லாத குறட்பாக்கள் இல்லை.

    இம்முயற்சியில் ஏதேனும் மாற்றம் / திருத்தம் தேவையெனில் சுட்ட வேண்டுகிறேன்.

    ("மூவினச் *சொற்கள்* ஒவ்வொன்றும் இரு முறை மட்டும் வரும் ஆறெழுத்துச் சொற்களை"; "மூவினச் *சொற்கள்* சமமான விழுக்காடுகளில்": இவை தட்டச்சுப் பிழைகளோ?)

    நன்றி.
    அர்விந்த்
    http://mstamil.com

    பதிலளிநீக்கு
  5. நன்றி, அர்விந்த். தோராயமாக இருக்கும் சமஎடைக் குறள்கள் கிடைத்திருக்கின்றனவே! அதுவே பெரிய விஷயம். உடனே தோன்றியதைச் சொல்கிறேன். பிற பின்.

    1) இந்தப் பட்டியல் அப்படியே இருக்கட்டும். இன்னொரு குறள் பட்டியல் வேண்டும். உயிர் எழுத்தில் தொடங்கும் குறள்களை விட்டுவிட வேண்டும். குறள் நடுவில் வரும் உயிரெழுத்துக்ளைப் புணர்ச்சி விதியால் ‘ய’கர ]வ்’கர என்று மாற்ற வேண்டும். அதாவது, உயிரெழுத்தே இல்லாத குறள்கள்! ..பிறகு மீண்டும் தேடல்...

    2) (1) இல் உள்ள குறள்களில் ஈற்றடியை மட்டும் சோதிக்க வேண்டும். 9, 12,..எழுத்துகள் உள்ள ஈற்றடிகள் யாவை?
    இவற்றில் எவை எவை ”கிட்ட” வருகின்றன? ( வல்லினம் மட்டும், மெல்லினம் மட்டும்...இத்யாதி கொசுறு...)

    இவற்றை வைத்துப் புதுக் குறள்கள் புனைய முடியலாம்....

    பதிலளிநீக்கு
  6. ஆய்வுக்கு வேண்டியது: நல்ல ஆய்வுப் பதிப்பிலுள்ள, சந்தி பிரிக்காத பாக்கள்.
    ஏனெனில் சொற்புணர்ச்சியில் இனங்கள் (ல்-->ற்)மாறும். சில எழுத்துகள் ( முக்கியமாய் மெல்லின ) காணாமற்போகும்.

    மேலும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன்....இப்படியும் தேடலாம்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா.

    > ஆய்வுக்கு வேண்டியது: நல்ல ஆய்வுப் பதிப்பிலுள்ள,
    > சந்தி பிரிக்காத பாக்கள்.
    > ஏனெனில் சொற்புணர்ச்சியில் இனங்கள் (ல்-->ற்)மாறும்.
    > சில எழுத்துகள் ( முக்கியமாய் மெல்லின ) காணாமற்போகும்.

    கைவசம் உள்ள tamilvu.org பதிப்பு ஏற்றதல்ல என்று எண்ணுகிறேன். காரணம் குறள் 7 "தனக்குவமை *இ*ல்லாதான்" என்று வருகிறது. "தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான்" என்று இணையத்தில் தேட, கிடைக்கும் ஒரே பதிப்பு wikisource.

    wikisource-இல் இருந்து முதல் அதிகாரத்தை இங்குத் தந்துள்ளேன். அதில் ஓர் ஐயம் ஐயா. "கோளில் பொறியிற்" (குறள் 9) என்பது சரியா அல்லது "கோளிற் பொறியிற்" என்று வரவேண்டுமா? (என் கைவசம் கி.வா.ஜ. ஆராய்ச்சிப் பதிப்பு இல்லை!) தாங்கள் ஏதேனும் பதிப்பைப் பரிந்துரைக்கிறீர்களா என்று அறியவும் ஆவலாய் உள்ளேன்.

    அகர முதல வெழுத்தெல்லா மாதி
    பகவன் முதற்றே யுலகு. (01)

    கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
    நற்றா டொழாஅ ரெனின். (02)

    மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார். (03)

    வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்
    கியாண்டு மிடும்பை யில (04)

    இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)

    பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார் (06)

    தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான்
    மனக்கவலை மாற்ற லரிது.(07)

    அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
    பிறவாழி நீந்த லரிது (08)

    கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
    றாளை வணங்காத் தலை.(09)

    பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
    ரிறைவ னடிசேரா தார். (10)

    மீண்டும் நன்றி.
    அர்விந்த்

    பதிலளிநீக்கு
  8. நன்றி, அர்விந்த். என்னிடமும் ஆய்வுப் பதிப்பு இல்லை. என்னிடம் இருக்கும் திருக்குறள்
    ( தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு) நூலிலும்
    ”கோளில்” என்று தான் இருக்கிறது. இந்தப் பதிப்பை வைத்தே ஆய்வு செய்யுங்கள். விளைவுகளைப் பார்த்துப் பிறகு fine tune செய்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா.

    காய்ச்சல் காரணமாகக் கால இடைவெளி ஏற்பட்டு விட்டது. குணமடைந்து இப்பொழுது மீண்டும் தொடர்கிறேன். :-)

    1) உயிரளபெடை, ஆய்தம், தொடக்கத்தில் உயிரெழுத்து — இவை இல்லாத குறட்பாக்கள் கொண்ட பட்டியல்: http://mstamil.com/moovinam/thirukkural-2.html

    2) (1)-இல் இருந்து ஈற்றடிகள் மட்டும் கொண்ட பட்டியல்: http://mstamil.com/moovinam/thirukkural-3.html

    கீழ்வரும் சம எடை ஈற்றடிகள் (சில பொழிப்பு மோனை உடன்!) கிடைத்தன:


    தறனல்ல செய்யாமை நன்று.
    வூட்டா கழியு மெனின்.
    முடையானாம் வேந்தர்க் கொளி.
    கில்லைநன் றாகா வினை.
    நாவாயு மோடா நிலத்து .
    கோலொடு நின்றா னிரவு .
    னொருவந்த மொல்லைக் கெடும்.
    மாறாநீர் வையக் கணி.
    னுண்ணவை யஞ்சு பவர்க்கு.
    நாட வளந்தரு நாடு
    யாங்கணும் யார்க்கு மெளிது.
    குன்றி யனைய செயின்.
    மிரவாமை கோடி யுறும்.
    யாரஞ ருற்றன கண்.



    3) பிற நீதி நூல்கள்:

    கொன்றைவேந்தன்
    ஆத்திசூடி
    வெற்றிவேற்கை
    முதுமொழிக் காஞ்சி
    முதுமொழிக் காஞ்சி, "ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம்" என்ற தொடர் இல்லாமல்

    வெற்றிவேற்கையில் சம எடை மூவின நூற்பா ஒன்று கிடைத்தது: "முதலைக் கில்லை நீத்தும் நிலையும்."

    உயிரெழுத்தில் தொடங்கும், ஆனால் சம எடை மூவின நூற்பாக்கள் சிலவும் கிடைத்தன:

    ஆத்திசூடி: "அறனை மறவேல்", "அனந்த லாடேல்", "உத்தம னாயிரு".
    கொன்றைவேந்தன்: "ஐயம் புகினுஞ் செய்வன செய்"
    வெற்றிவேற்கை: "அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை"

    இவற்றில் ஏதேனும் மாற்றம் / திருத்தம் தேவையெனில் சுட்ட வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    அர்விந்த்
    http://mstamil.com

    பதிலளிநீக்கு
  10. அர்விந்த்! அமர்க்களம்!அற்புதம்!
    அருமையான கண்டுபிடிப்புகள்!
    இவற்றில் சில மாணிக்கங்களை என் கட்டுரையில் சேர்க்கிறேன், விரைவில்.
    மேலும் யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அர்விந்த்! ஒரு யோசனை. காளமேகம், ஔவை போன்றோரின் வெண்பாக்கள் பலருக்கும் தெரிந்தவை. அவற்றின் ஈற்றடிகளை மட்டும் பரிசோதிக்க முடியுமா? மிக அழகான “முத்தமிழ்” ஈற்றடிகள் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள ஐயா, ஊக்கம் தரும் தங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. :-)

    இணையத்தில் கவி காளமேகத்தின் பாடல்கள் சந்தி பிரித்த வடிவில் உள்ளன. Project Madurai பக்கத்தை எடுத்துக்கொண்டு, ஈற்றடிகளைச் சந்தி சேர்த்து எழுதி வருகிறேன். பிற அலுவல்களின் காரணமாக இந்தப் பணி மெதுவாகச் செல்கிறது! முடிந்தவுடன் பட்டியலை இங்கு இடுகிறேன்.

    அதே சமயம் தாங்கள் கொடுத்துள்ள ஈற்றடி நினைவிலேயே இருக்க, ஒரு "சம எடை" குறட்பா முயன்றேன்:

    பூஞ்சை யிதயம் பொலியணுமா? சந்தையில்நீ
    வாஞ்சையுடன் பூமாலை வாங்கு


    [திரு. கோபால் அவர்கள் ரோஜாப்பூ இதயத்திற்கு நல்லது என்று சொன்ன கருத்தை அடிப்படையாகக் கொண்டு. :-) ]

    அன்புடன்,
    அர்விந்த்
    http://mstamil.com

    பதிலளிநீக்கு
  13. சபாஷ்! அர்விந்த்!

    பொழிப்பு மோனை யுள்ள குறள் ஈற்றடிகளை வைத்து இப்படியே முயலவும்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா. சில புணர்ச்சி விதிகளுக்குச் சிறு சிறு நிரல்கள் எழுதியும் சிலவற்றைக் கைகளால் திருத்தியும் Project Madurai தளத்தில் உள்ள கவி காளமேகம் ஈற்றடிகளைச் சந்தி சேர்த்துள்ளேன். கைவசம் உள்ள "காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் / புலியூர்க் கேசிகன் உரை / முல்லை நிலையம் / பதிப்பாண்டு: 2000" புத்தகம் கொண்டும் சில திருத்தங்கள் செய்துள்ளேன். இந்தக் கோப்பில் தேடியபோது இரண்டு சம எடை அடிகள் கிடைத்தன. :-) :-)

    மாரிலே கொம்பான வாறு
    தம்பிமா ராயிருந்தார் தாம்


    முழுப் பட்டியல் இங்கே: http://mstamil.com/moovinam/kalamegam.html

    புத்தகத்திலும் சில பிழைகள் இருந்தன—இயன்றவரை திருத்தியுள்ளேன்! மேலும் பிழைகள் மற்றும் பாட பேதங்கள் கண்டாலோ, வேறு மாற்றங்கள் தேவையெனிலோ தெரிவிக்க வேண்டுகிறேன் ஐயா. திருத்தி மீண்டும் பட்டியல் தயாரிக்கலாம்.

    இந்த நிரல்கள்+அனுபவம் கொண்டு ஔவையார் பாடல்களை அடுத்து அணுகுகிறேன்.

    நன்றி.
    அர்விந்த்
    http://mstamil.com

    பதிலளிநீக்கு
  15. மிக அருமை, அர்விந்த்!

    2000-வருடங்களில் தமிழுலகில் யாரும் செய்யாத ஆய்வுகளை அர்விந்த் செய்தார் என்று ஒரு நாள் வரலாறு கூறும்.

    அது போதும்.

    பதிலளிநீக்கு
  16. ஔவையார் தனிப்பாடல்கள் (கங்கை வெளியீடு) புத்தகத்தைக் கொண்டு, தெரிந்த வரை திருத்தங்கள் செய்து, பட்டியல் தயாரித்துள்ளேன் ஐயா: http://mstamil.com/moovinam/avvai.html

    "சம எடை" ஈற்றடிகள் கிடைக்கவில்லை.

    > 2000-வருடங்களில் தமிழுலகில் யாரும் செய்யாத ஆய்வுகளை

    இச்சொல் தங்கள் கட்டுரைகளுக்குத்தான் பொருந்தும் ஐயா. குறிப்பாக, வருக்கப் பாடல்கள், வல்லின, மெல்லின, இடையினப் பாடல்கள் என்று கலக்கியிருக்கும் கவி காளமேகம் "இக்கட்டுரையைப் படித்திருந்தால் ..." என்ற ஆதங்கத்தைத் தவிர்க்க முடியவில்லை!

    தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி. எழுதுபவை சின்ன நிரல்களாக இருந்தாலும், கற்றுக்கொள்பவை ஏராளம்.

    அன்புடன்,
    அர்விந்த்
    http://mstamil.com

    பதிலளிநீக்கு
  17. நல்லது, அர்விந்த்!
    fun with language ...fun thru language...if taught in school, we can have more creative persons in Tamil...more kALamEgam-s for sure...! Unfortunately Grammar and Literature are taught in such a way that students get to hate them.... so that even poetry and prose are nowadays written without satisfying basic rules of Tamil grammar....a sad state of affairs... indeed!

    பதிலளிநீக்கு