வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

லா.ச.ராமாமிருதம் -3: சிந்தா நதி - 3

12. ஒரு யாத்திரை

லா.ச.ரா



லா.ச.ரா வின் ஒவ்வொரு கட்டுரைக்கும் பல அடிக் குறிப்புகள் வேண்டும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். ஆங்கிலத்தில், ‘ ஆலஸ் இன் வொண்டர்லாண்ட்’ ( Alice in Wonderland) என்ற பிரபல ’சிறுவர்’ புத்தகத்திற்கு இப்படிப் பல அடிக்குறிப்புகள் எழுதி ‘அன்னொட்டேடட் ஆலஸ்’( Annotated Alice)  என்ற நூலையே மார்ட்டின் கார்ட்னர் எழுதியுள்ளார்! இதுபோல் லா.ச.ரா வின் ‘சிந்தா நதியை’யும் யாரேனும் விவரக் குறிப்புகள் சேர்த்து வெளியிட வேண்டும் என்று தோன்றுகிறது! ஒரு சின்ன முயற்சியாய்ச் சில குறிப்புகளைக் கீழ்க்கண்ட கட்டுரைக்குப் பின் எழுதியிருக்கிறேன்.

இந்தக் கட்டுரை வழக்கம்போல் தலைப்பு இன்றித் ‘தினமணி கதிரி’ல் வந்தது. நூலில் இது  12-ஆம் அத்தியாயம் .  மார்வாரிப் பெண்கள் கும்மியடிப்பதை அழகாய்ப் படமாக்கியிருக்கிறார் ஓவியர் உமாபதி. லா.ச. ரா எழுதுவது உரைநடைக் கவிதை தான் என்று நெருப்பின் மீது கைவைத்துச் சத்தியம் செய்பவர் பலர். இந்த ’உரைநடை’ நினைவலையில் ஓர் அடையின் ’கவிதை’ மிதக்கிறது!

=====

12. ஒரு யாத்திரை

முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன், என் எழுத்தின் பாதிப்புக் காரணமாக எனக்கு ஒரு நண்பர் குழு சேர்ந்தது. கொத்தாக நாலு பேர். தாத்து, மாசு, செல்லம், வரதராஜன். இப்போதைய நிலவரம் தாத்து காலமாகி விட்டார். உத்யோக ரீதியில் செல்லம் எங்கேயோ? மாசுவும் வரதராஜனும் சென்னையில் இருப்பதால் தொடர்பு அறியவில்லை. அப்படியும் நானும் வரதராஜனும் சந்தித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.

வரதராஜன்- அதான் நா.சி.வரதராஜன்(1) கவிஞர். 'பீஷ்மன்' என்கிற புனைபெயரில் கதைக்ஞர்.

இவர்களுக்குள் நான்தான் மூத்தவன். அவர்களிடையே அவர்கள் ஏறக்குறைய ஒரே வயதினர். எல்லோருக்கும் பூர்வீகம் வில்லிப்புத்தூர். சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர். கொத்தாக ஒரே இடத்தில் குடியிருந்தனர்.

வரதராஜன் மட்டும் சிந்தாதிரிப்பேட்டையில். மாசு, நான் இன்னும் படித்து முடிக்க முடியாத ஒரு தனிப் புத்தகம், அவர் தன்மைக்கு இரண்டு மாதிரிகள் மட்டும் காட்டி நிறுத்திக் கொள்கிறேன்.

"உங்களைப் படித்ததன் மூலம் உங்களுடன் நேரிடையான பரிச்சயம் கிடைத்தது. நீங்கள் எழுதியவை அத்தனையும் நான் படித்தாக வேண்டும் என்பதில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். உங்களுடன் நேரப் பழகும் வாய்ப்புக்குப் பின் உங்களுக்கப்புறம்தான் உங்கள் எழுத்து."

அவருடைய தராசு தூக்கியே பிடித்திருக்கும். இப்படிச் சொன்னாரே ஒழிய அவர் என்னை விடாது படித்து வந்தவர். எனக்குத் தெரியும்.

நாங்கள் சந்தித்து இரண்டு வருடங்களாகியிருக்குமா? ஓரிரவு பத்து, பத்தரை- பதினொன்று. வாசற் கதவை மெதுவாகத் தட்டும் சத்தம். எழுந்து போய்த் திறந்தால், தெரு விளக்கு வெளிச்சத்தில் மாசு.

‘என்ன மாசு, இந்த நேரத்தில், என்ன விசேஷம்?' அவரை உள்ளே அழைப்பதா, அங்கேயே நிறுத்திப் பேசுவதா? சங்கடம்.

"ஒன்றுமில்லை. உங்களைப் பார்க்கணுமென்று என்னவோ திடீரென்று தோன்றியது. என்னால அடக்கவே முடியவில்லை. வந்தேன். பார்த்தாச்சு. போய் வருகிறேன்." மறு பேச்சுக்கே காத்திருக்கவில்லை. விர்ரென்று தெருக்கோடியில் மறைந்து விட்டார்.

அங்கேயே சுவரில் முகத்தை வைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதேன். என் தங்கையை சிதையில் வைத்து விட்டு வந்திருக்கிறேன். இப்பவும் எரிந்து கொண்டிருப்பாள்.

நான் சொல்லி அனுப்பவில்லையே. இவருக்குத் தெரிய நியாயமோ, வழியோ இல்லையே! தங்கச்சாலைக் கோடி எங்கே, மீர்சாப்பேட்டை எங்கே? டெலிபதி? நரம்பு ஆட்டம்? இன்னதென்று புரியாமலே, ஏதோ

நரம்புக்கு நரம்பு அதிர்வில் வந்திருக்கிறார்?

கவிதை, வார்த்தைகளில் இல்லை, மடித்து எழுதும் வரிகளால் இல்லை.

நரம்புக்கு நரம்பு தன் மீட்டலில்தான் இருக்கிறதென்பதில் இனியும் ஐயமுண்டோ?

நாங்கள் சேர்ந்து இருந்த வரையில், அந்த நாளில் ஒரு 'ஜமா'. கையில் ஓட்டம் கிடையாது. அதனால் என்ன? கால் நடையில்லையா, இளம் வயது இல்லையா, உடம்பில் தென்பு இல்லையா, மனதில் உற்சாகம் இல்லையா?

ராச் சாப்பாட்டுக்குப் பின், சுமார் எட்டு மணிக்குக் கிளம்புவோம். அவர்கள்தான் என்னை அழைத்துப் போக வருவார்கள்- மாசு, தாத்து, செல்லம்; தங்க சாலைத் தெருக்கோடியிலிருந்து பேசிக்கொண்டே, மரீனாவுக்கு நடந்து, அதன் வழியே டவுன், தங்கச் சாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவனில் பூரி, பாஜி, அரைக் கப் பால். (மலாய்! மலாய்!) பேசிக்கொண்டே, கோவிந்தப்ப நாயக்கன் தெரு விளக்கு வெளிச்சத்தில் இரவு பகலாகியிருக்கும். கை வளையலும், பாதக் கொலுசும் குலுங்க, விதவித வர்ணங்களில் மேலாக்குகள் சுழல, மார்வாரிப் பெண்கள் கும்மி அடிக்கையில் இது என்ன செளகார் பேட்டையா, பிருந்தாவனமா?

மீண்டும் மரீனா பீச், நள்ளிரவில் பட்டை வீறும் நிலா. லேசான குளிர். பேசிக்கொண்டே பைக்ராபட்ஸ் ரோடு, விவேகானந்தர் இல்லம், ஐஸ் ஹவுஸ் ரோடு, மீர்சாப் பேட்டை, பெசண்ட் ரோட்டில் என் இல்லத்தில் என்னை விட்டுவிட்டு, அங்கே வாசலிலேயே ஒரு நீண்ட ஆயக்கால்- மணி இரண்டு- பிரியாவிடை பெற்றுக் கொண்டு கால் நடையாக அவர்கள் மீண்டும் தங்க சாலைத் தெருவுக்கு.

ஞாயிற்றுக்கிழமை, அத்தனைபேரும் சிந்தாதிரிப் பேட்டையில் வரதராஜன் வீட்டில் காம்ப். அவருடைய தாயார், அக்கா, அண்ணா மன்னி- அத்தனை பேருமா அப்படி ஒரு பிரியத்தைக் கொட்டுவார்கள்! ஒரு சமயமேனும் ஒருத்தருக்கேனும், ஒரு சிறு முகச்சுளிப்பு? ஊஹூம். இப்படிச் சந்தேகம் தோன்றினதற்கே என்ன பிரயாச்சித்தம் செய்துகொள்ள வேண்டுமோ?

-பேசுவோமோ, பேசுவோமோ என்ன அப்படிப் பேசுவோமோ இலக்கியம், சினிமா, ஆண்டாள், ஸைகல்(2), கம்பன். 'துனியா ரங்க ரங்கே(3)', ஆழ்வாரதிகள், பாரதி, ராஜாஜி, ஆக்(4), அத்வைதம், விசிஷ்டாத்வைதம், பேச்சு எங்கெங்கோ தாவி, எங்களை இழுத்துச் செல்லும் தன் வழியில் பலகணிகள் ஏதோதோ திறக்கும். புது வெளிச்சம் புது சிருஷ்டிகள். திறந்து மூடுகையில், புதுக் கூச்சங்கள். வியப்பாயிருக்கும் ஆனந்தமாயிருக்கும் சில சமயங்களில்- பயமாயிருக்கும்.

பசி அடங்கி, வயிறு நிரம்புவது போல் மனம் நிறைந்து மோனம் ஒன்று எங்கள் மேல் இறங்கும் பாருங்கள், எத்தனை பேச்சும் அதற்கு ஈடாக முடியுமா?

அந்த உலகம் எங்களுக்காக மீண்டும் இறங்கி வருமா? வாழ்க்கையின் பந்தாட்டத்தில், அவரவர் சிதறி, 'ஜமா' தானே பிரிந்துவிட்டது.

ஆனால் நாங்கள் எல்லோரும் ருசி கண்டுவிட்ட பூனைகள். எங்களுக்கு ருசி மறக்காது.

போன தடவை நான் பீஷ்மனைச் சந்தித்தபோது அவர் திருவல்லிக்கேணிக்குக் குடி மாறிவிட்டார். பேச்சு வாக்கில் நான்,

"வரதராஜன்! அந்த நாள் உங்கள் வீட்டு அடை டிபன் மறக்க முடியுமா? வரட்டி போல், விரைப்பான அந்த மொற மொறப்பு, இடையிடையே ஜெவஜெவ வென மிளகாய், அப்படியே கல்லிலிருந்து தோசைத் திருப்பியில் எடுத்து வந்து வாழையிலைப் பாளத்தில் விடுகையில், பளப்பளவென எண்ணெயில் அந்த நக்ஷத்ர மினுக்கு.

"அதன் மேல், மணலாய் உறைந்த நெய்யை உங்கள் அம்மா விட்டதும், அது உருகுகையில் உஸ் அப்பா!" அந்த நினைப்பின் சுரப்பில் தாடை நரம்பு இழுக்கிறது. கன்னத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டேன்.

"உங்காத்து அடை அதுபோல வார்த்துப் போடச் சொல்லுங்களேன்!"

புன்னகை புரிந்தார். "நீங்கள் அடையின் பக்குவத்தையா சொல்கிறீர்கள்? அதன் கவிதையை அல்லவா பாடுகிறீர்கள்! இவளை அடை பண்ணச் சொல்கிறேன். இவளும் நன்றாகப் பண்ணுகிறவள்தான். ஆனால் நீங்கள் கேட்கிற அந்த அடை உங்களுக்குக் கிடைக்காது. அந்த மனுஷாள் இப்போ இல்லை. போயாச்சு!"

மேலெழுந்தவாரியில் இது ஒரு சாப்பாட்டு ராமமாகப் பட்டால், இதன் உயிர்நாடி அடையில் இல்லை.

அந்த மனுஷாள் இப்போ இல்லை. போயாச்சு!

சிந்தா நதியில் ஒரு யாத்திரை.
* * *


அடிக்குறிப்புகள்:

1. அமரர் நா. சீ.வரதராஜன் . பாரதி கலைக் கழகத்தின் கவிமாமணி பட்டம் பெற்றவர்.
புனைபெயர்: ‘பீஷ்மன்’ ; பிறப்பு: 20.5.1930
கவிதை நூல்கள்: அஞ்சலிப் பூக்கள், கானூர் கந்தன் திருப்புகழ், எண்ணத்தில் பூத்த எழில் மலர்கள், வெளிச்ச வாசல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்: ஆத்மாவின் மன்னிப்பு, தூவானம், நாதக் கனல், தேனிலவுக்கு வந்தவர்கள், இருட்டில் ஒரு விடிவு

[ நன்றி: பாட்டுப் பறவைகள், தொகுப்பாசிரியர்: பாரதி சுராஜ், ராஜேஸ்வரி புத்தக நிலையம் ]

உதாரணமாய்,  நா.சீ. வ வின் ஒரு கவிதை:


அக்கறை 

நா.சீ. வ 

புதுஇடத்தில் புது வீடு புது மனைவி
புது வாழ்க்கை மதுகுடித்த நிலையிலொரு
மயக்கத்தில் சுக வேட்கை
நண்பரொரு பொறியாளர், நன்றமைத்த வீட்டினிலே
பண்பரவத் தென்றலுடன் பளிச்சென்று வெளிச்சம் வர
உல்லாசமாய் வாழ்க்கை ஓடிக்கொண்  டிருக்கிறது
சல்லாபத் தனிமையினைத் தகர்க்கின்ற கீச்சொலியைக்
கேட்டவனின் பார்வை கீழ்மேலாய் அலைகிறது.
வீட்டினொரு மூலையிலே விர்ரென்று பறக்கின்ற
குருவிகளின் கூச்சல் கூடுகட்டும் வேலையங்கே
விரைவாய் எழுந்தவனும் விரட்டக்கை யோங்குகிறான்
விலக்குகிறாள் அவன் துணைவி ,வேண்டாங்க என்கின்றாள்
கலக்கமவள் முகத்தினிலே. கலங்காதே புது வீட்டில்
அவற்றுக்கும் குடியிருப்பொன் றமையட்டும் எனச்சிரித்தே
இவற்றுக்கும் இல்வாழ்க்கை இனிதாகுக என்றான்.
தன்னவளின் முகம் பார்த்து தனிமுறுவல் அவன் முகத்தில்
சின்னாளில் கூட்டைமிகச் செப்பமுடன் கட்டிவிட்டுக்
கீச்கீச்சென் றொலியும்சங் கீதமங்கே இசைக்கிறது
பேச்சுத் துணையிதென்று பெண்சிரித்தாள் அவன் மகிழ்ந்தான்
மழைக்காலம் இடியோடு வானத்தில் மின்னொளியும்
இழைக்கோலம் போட்டொளிய, இடையின்றி மழை பொழிய
குருவிகளும் சுகமாகக் கூண்டிற்குள் ளேபதுங்க,
அருவியென முற்றத்தில் அப்படியோர் மழை வெள்ளம்
வானம் பிளந்ததுபோல் மழை தொடர்ந்து பெய்கிறது
ஏனிப்படி யென்றான் எரிச்சலுடன் அவன். அவளோ
பாருங்கள் இதையென்றே பகர்ந்தாள் அவன் சென்றான்
ஓரங்களில் சுவரில் ஓழுகுகின்ற நீர்கண்டான்
நேருயரே மேற்சுவால் நீர்படிந்து சொட்டுவதை
பொறியாளர் திறமையிஙகு பொத்தல்கண்டு விட்டதெனில்
கும்மாளம் கீச்சொலிகள் குறையொன்றும் இல்லாமல்
செம்மாந்தப் புள்வீடு சிரிக்கிறது மூலையிலே.

[ நன்றி: கவிமாமணி இலந்தை இராமசாமி ]

2. ஸைகல் 

குந்தன் லால் ஸைகல். K. L. Saigal.  ’அந்த’க் காலத்தவருக்கு மிகப் பழக்கமான இந்திப் பாடகர். தமிழிலும் ஓரிரண்டு பாடி இருக்கிறார்!
1935  'தேவதாஸ்’ தமிழாக்கத்தில் -இல் “கூவியே பாடுவாய் கோமளக் கிளியே!’ கேட்கிறீர்களா?
http://www.youtube.com/watch?v=ZVU0pbXBNj4

3. துனியா ரங்க் ரங்கேலி 

1938- திரைப்படம் ஒன்றில் ஸைகல் மேலும் இருவருடன் பாடிய பிரசித்தமான பாடல்.
http://www.youtube.com/watch?v=_6ZQqHEB8kE



துர்கா ராகம் . இசை விமர்சகர் சுப்புடு சொல்வது போல், “ சுத்த சாவேரிக்குச் சுரிதர் போட்டால் துர்கா” . “பிருந்தாவனத்தில் நந்தகுமாரனும் “.... என்ன, நினைவுக்கு வருகிறதா?


4. ஆக் ---   இது 1948-இல் வந்த , ‘ராஜ் கபூர், நர்கிஸ்’ நடித்த இந்திப் படம் என்று நினைக்கிறேன்.  கால நிர்ணயம் சரியாய் இருக்கிறது.
http://www.imdb.com/title/tt0040067/



[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம் ]

தொடர்புள்ள பதிவுகள் :

லா.ச.ரா : படைப்புகள் 

நா.சீ.வரதராஜன்

1 கருத்து:

  1. அட்டகாசம். பீஷ்மனை இங்கு நன்றாக ஞாபகப்படுத்தி என்னை நெகிழச் செய்துவிட்டீர். அவரும் நானும் தில்லகேணியில் பக்கத்து பக்கத்துத் தெருவில் குடியிருந்து உரையாடிய இரட்டை அர்த்தம் தொனிக்கப்பேசிய நகைச்சுவையெல்லாம் இப்போ ஞாபகம் வந்து படுத்துகின்றது. வாழ்க பசுபதி பணி,
    வேதம்

    பதிலளிநீக்கு