ஞாயிறு, 16 ஜூன், 2013

லா.ச.ராமாமிருதம் -4: சிந்தா நதி - 4

15. தன்மானம்
லா.ச.ரா 


கர்நாடக இசையாசிரியர் தியாகராஜரின்  பாடல்களை ஆதாரமாக வைத்துச் சிலர் “தியாகோபனிஷத்” என்ற ஓர் இசைச் சொற்பொழிவு நடத்துவது உண்டு. அதைபோலவே, லா.ச.ரா வின் சில கட்டுரைகளைப் படிக்கும்போது, எனக்குத் தோன்றும்: யாராவது “லாசரோபனிஷத்” என்ற சொற்பொழிவு செய்யலாமே என்று.

இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதோ வயிற்றைப் பிசையும். ஏதோ கீதையைப் படித்த மாதிரியும் இருக்கும். ”அப்போ நாம் ?” என்ற லா.ச.ரா வின் கேள்வியும் நம்மைக் குடையும்.

உமாபதியின் ஆக்ரோஷமான ஓவியத்தை உள்வாங்கிப் பிறகு படியுங்கள்!
====
    நன்கு இருட்டிவிட்டது. ஆனால் இரவு ஆகவில்லை. விளக்கு வைத்தாகிவிட்டது. நான் ஒரு சந்தைக் கடந்து கொண்டிருந்தேன். அடுத்த தெருவுக்குப் போக அதுதான் குறுக்குவழி. கொஞ்சம் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போகணும். வேளை சமயத்துக்குக் காய்ந்த மீன் வாடை பார்த்தால் முடிகிறதா? அவசரங்கள் அப்படி அமைந்து விடுகின்றன.

    திடீரென்று ஒரு பெரிய கூக்குரல் என் பின்னால் கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பினேன்.

    ஒரு நாயும், ஒரு பூனையும் சண்டைக்கு ஆயத்தமாக நின்றன. நான் கேட்டது பூனையின் கத்தல்.

    என் கண்ணெதிரிலேயே, மயிரைச் சிலிரித்துக் கொண்டு பூனை மிகப் பெரிதாகி விட்டது. இரண்டு பங்கு, இரண்டரைப் பங்கு. போர்க் கொடியாக விரைத்த வால். பூனையின் ஆற்றல் இந்த அளவுக்கு நான் பார்த்ததில்லை.

    என் காரியத்தை மறந்து நின்றுவிட்டேன்.

    சிந்தப் போகும் இரத்தத்திற்குத் தனி வசியம் இருக்கத்தான் செய்கிறது.

    மனிதனாவது, மிருகமாவது, மரமாவது! உயிரின் அடிப்படை வனவாடை, எத்தனை லட்சக் கணக்கில் வருடங்கள் ஆனாலும், எங்கே போகும்? நான் சொல்கிறேன், எங்கும் போகவில்லை. உள்ளேதான் உறங்குகிறது. அது விழிக்கும் நேரம் சொல்லிக்கொண்டு வராது.

    எல்லா ஜீவராசிகளுக்கும் பொது டினாமிநேட்டர்; குரூரம்.

    இப்போது, இந்தச் சேரிச் சந்தில், நிமிஷமாக உருவாகியிருக்கும் இந்தக் கோதாவின் சரித்திரப் பரம்பரை, பின்னோக்கில் ரோமன் காலத்தை எட்டுகிறது. அவ்வளவு துரம் போக வேண்டாம். ஸ்பெயின் புல் ஃபைட். இன்னும் கிட்ட இப்பவே. நம் தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு.

    மூன்றும் நான் பார்த்ததில்லை. எனக்குக் கிடைத்தது இந்த நாயும் பூனையும் சண்டைதான்.

    ஆனால், இந்த அலசல் எல்லாம், பின்னால், சாய்வு நாற்காலியில் அவகாசச் சிந்தனையில்.

    பூனைமுகம் நேர் பார்வைக்கு, மனிதமுகத்தை நிறைய ஒத்து இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மனிதனுக்குப் போலவே, முகத்தின் அவயவங்கள்- நெற்றி, கண்கள், மூக்கு, அடியில் வாய், மோவாய்கூட உள் அடங்கியிருக்கின்றது. அதுவும் இப்போ முகத்தில் காணும் கோபத்துக்கு எச்சில் துப்புவதுபோல் அது அவ்வப்போது சீறித் தும்மும் குரோதத்துக்கு..... நாய்க்கும் பூனைக்கும் பகை. இன்றையதா நேற்றையதா, சிருஷ்டியிலிருந்தே அல்லவா?

    இவ்வளவு உன்னிப்பாய் இவைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எப்போ, என்ன- கண்ணெதிரில் பூச்சி பறந்த மாதிரி இருந்தது, அவ்வளவுதான். இரண்டும் ஓருருவாய் உருள்வதுதான் கண்டேன்; காண முடிந்தது.

    பாய்ச்சலைப் பார்க்க முடியவில்லை. இந்த மோதலும் ஒரு கணம்தான். இல்லை, அதிலும் பாதி, இரண்டும் அவைகளின் தனித்தனி இடத்துக்கு மீண்டு விட்டன.

    உர்.... உர்ர்..... உர்ர்ர்.....

    பூனையின் ஊளைக்கு ஈடு சத்தம் என்னால் எழுத்தில் எழுப்ப முடியவில்லை. அதன் கத்தல் அடி வயிற்றைக் குழப்பிச் சுண்ட அடித்தது.

    பூனை நிச்சயமாக ஒரு உத்தியைக் கண்டுபிடித்து விட்டது. தன்னைப் பந்தாகச் சுருட்டிக்கொண்டு எகிறி எகிறி நாய்மேல் விழுந்தது. நாய், பூனையைப் பூனையாகப் பார்க்கவில்லை. (நானும் அவ்விதமே) ஒரு பெரிய பந்து கால் பந்தைக் காட்டிலும் பெரிய, உயிருள்ள, காட்டுக் கத்தல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் முள் பந்து. இதென்ன மந்திர வாதம், சூன்யம்?

    எனக்கு அப்படித் தோன்றிற்று. நாய்க்கு எப்படித் தோன்றிற்றோ? *பத்து எகிறி எகிறித் தன் மேல் விழும் இரண்டு மூன்று தடவைக்கு. அது சமாளித்துப் பார்த்தது. ஆனால், பந்து, அடுத்தடுத்து, அலுக்காமல், தன் உயிரையும், உருவத்தையும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு அதன்மேல் விழுகையில், அதன் முகத்தில் குழப்பத்தை என்னாலேயே காண முடிந்தது.

    குழப்பம்- கலக்கம்- பீதி- பிறகு அப்பட்ட பயம்.

    புறமுதுகிட்டு ஓடிற்று, ஓடியே விட்டது.

    பந்து, விண்டு, சுய ரூபத்துக்கு விரிந்தது. ஆனால் அதன் வால், அதன் வெற்றிவிரைப்பினின்று இறங்கவில்லை. அடிவயிற்றை, நின்றபடியே, அவகாசமாக நக்கிக் கொண்டது. பிறகு மெல்ல நடந்து, மெல்ல மெல்ல எதிர்ச் சுவரோரமாக, தெரு விளக்குக் கம்பத்தின் நிழல் மறைவில் ஒதுங்கி, விழுந்து, மரணாவஸ்தையில் கால்களை உதைத்துக் கொள்ள ஆரம்பித்தது.

    அதன் இழுப்பு, கடைசி அமைதியில் அடங்குவரை பார்த்துக்கொண்டு நின்றேன்.

    "ஸோ, அதற்கு விழுந்துவிட்ட மரணக் கடியைக் கடைசிவரை எதிரிக்குக் காட்டிக் கொடுக்காது, கொடுக்கக் கூடாத, முடியாத ஒரு கெளரவம், தன்மானம், ஜயம் கண்ட பின்தான் மரணம் எனும் தீர்மானம் அதற்கு.

    அதற்கே, அப்படி.

    அப்போ நாம்?....

    சிந்தா நதியில் அலைந்து செல்லும் ஒரு சருகு.
    * * * 

[நன்றி : தினமணி கதிர், மதுரைத் திட்டம்]

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம் படைப்புகள்

1 கருத்து: