செவ்வாய், 5 நவம்பர், 2013

திசைமாற்றிய திருப்பங்கள் : கவிதை

திசைமாற்றிய திருப்பங்கள்

பசுபதி 

கலைமகள் 2013-ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியாகியுள்ள என் கவிதை இதோ!


திசைமாற்றிய திருப்பங்கள்
பசுபதி , கனடா

திருப்பம் 1:
காலமொன்றே மருந்தாமோ காயத்தைக் குணமாக்க?
காலமென்னும் சாம்பலுக்குள் கனன்றிருக்கும் தணலுண்டே!
சிறுவயதில் உண்டையம்பால் சீராமன் அடித்ததெல்லாம்
மறக்காமல் பழிவாங்க மந்தரையும் காத்திருந்து
காலக்கோள் ஆகிநின்றாள்; கைகேயி மனம்மாற்றிக்
கோலமிகு காப்பியத்தின் கூர்திசையைத் திருப்பியது
கூனியின் கோபக் கொதிப்பு

திருப்பம் 2 :

காகுத்தன் முடிதுறக்கக் காரணியோர் மங்கையெனின்
ராகவன்தன் மனையிழக்கச் சூர்ப்பணகை வந்தனளே!
இராமனென்ற சொல்லுக்குள் ரம்யமெனும் பொருளிருந்தால்
அரக்கியுமே அவனழகுக் கடிமையெனின் அதிசயமோ?
கற்புத்தீ நகரழித்தல் கண்டோம்நாம் சிலம்பினிலே!
காமத்தீ குலமழித்தல் காட்டுகிறது ராமகதை!
காப்பியத்தின் திசைமாற்றிக் கதைப்போக்கைத் திருப்பியது
அரக்கியின் காமவெறி ஆம்.

திருப்பம் 3:

துரியோத னனுக்கொருநாள் துணைநின்றான் அவன்மாமன்;
அரக்கனுக்குத் துணைநின்றான் அவன்மாமன் மாரீசன்.
மா யமனாய் ராமனம்பு வருமென்று தெரிந்தாலும்
மாயமான் உருவெடுத்து மயிலாளை மயக்கிவிட்டான்.
மாயவனோர் மானிடனாய் மண்ணுலகில் அவதரித்தும்
மாயம்செய் மானிடத்தில் மயங்கிநின்றான் விதிவசத்தால்.
கூற்றுவன் அழைத்தவுடன் கூக்குரலால் கதைத்திசையை
மாற்றியது மாரீச மான்.

திருப்பம் 4:

தாசரதி மட்டுமா? தசமுகனின் தம்பியுமே
தர்மங்கள் இழுபறியில் தத்தளித்து மீண்டவன்தான்.
இரணியனின் கதைகேட்டும் மனம்மாறா இராவணனின்
அரண்மனையை விட்டுவிட்டு அரியவனைச் சரணடைந்தான்
சரணடைதல் சாத்திரமாய்க் கதைவிளங்கச் சாட்சியிவன்.
அடைக்கலம் பெற்றபின்னர் ஆழ்வானாய் உயர்ந்துவிட்டான்;
கடல்கடக்க வழிசொன்னான்; கதைச்சிலைக்குக் கண்திறந்தான்.
அறவழியில் நடந்துசென்று ஆக்கமுறக் கதைமுடித்த
அரக்கன் விபீஷணனே ஆம்.

===========================

[ நன்றி : கலைமகள் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

3 கருத்துகள்:

  1. அருமையான கவிதை.

    ஒவ்வொரு திருப்பங்களையும் கவிதையாகப் படைத்திட்டது நன்று.

    பதிலளிநீக்கு
  2. இந்தக் கவிதைப் பாவினம் என்ன?
    வெண்பா ஈற்றடி; அடிகளுக்குடையில் வெண்டளை இல்லை; அடிகளின் எண்ணிக்கையிலும் வேறுபாடு இருக்கக் காண்கிறேன்.

    பதிலளிநீக்கு