ஞாயிறு, 1 டிசம்பர், 2013

இந்த மண் பயனுற வேண்டும் : கவிதை

இந்த மண் பயனுற வேண்டும்
பசுபதி

”சண்முக கவசம்” என்ற மாத இதழின் 2013 தீபாவளி மலரில் வெளியான என் கவிதை.


கூழ்வேண்டிக் கெஞ்சுபவர் குழிவிழுந்த கண்ணில்
. . கொடுங்காலன் கண்டுளம் கொதிப்பவர் வேண்டும்;
ஊழ்வினையால் வறுமையெனும் உளுத்தபழங் கருத்தை
. . உதறிடநல் அறிவுரை உரைப்பவர் வேண்டும்.
வாழ்வினிலே வளமென்று வாக்குறுதி கூறி
. . வாய்கிழியும் அரசியல் வாதிகள் ஒதுக்கி
ஏழ்மையெனும் இருளதனை இல்லையெனச் செய்யும்
. . இளைஞரால் இந்தமண் பயனுற வேண்டும்.

விதவிதமாய் வண்ணங்கள் விரித்தாடும் வெண்மை
. . வேற்றுமையுள் ஒற்றுமை மிளிர்ந்திடும் உண்மை;
இதயங்கள் அனைத்திலுமே இரத்தநிறம் சிவப்பு;
. . இறையொன்றே என்றிட ஏன்மிகக் கசப்பு ?
மதமென்னும் புதரினிலே மறைந்திருந்து வெறியை
. . வளர்த்துவிடும் தீவிர வாதிகள் விலக்கி
மதஇனநல் இணக்கமெனும் மரத்தினிலே மலரும்
. . மக்களால் இந்தமண் பயனுற வேண்டும்.

தொன்மரபை, செந்தமிழின் சொல்லழகைத் துகைக்கும்
. . தொலைக்காட்சித் தொல்லையைத் தொலைப்பவர் வேண்டும்.
இன்னிசையும் இலக்கியமும் இறவாமல் காக்கும்
. . இலக்குடனே இல்லறம் ஏற்பவர் வேண்டும்.
சின்னதென்றும் பெரியதென்றும் செந்தழலில் உண்டோ ?
. . சீரழிக்கும் சிறுதிரைப் பெட்டியைத் தவிர்த்துப்
பண்பாட்டுப் பழந்தேனைப் பாலோடு புகட்டும்
. . பாவையரால் இந்தமண் பயனுற வேண்டும். 
====
தொடர்புள்ள பதிவுகள் :

6 கருத்துகள்:

  1. அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    கட்டுரைப் போட்டி : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சின்னதென்றும் பெரியதென்றும் செந்தழலில் உண்டோ ?
    . . சீரழிக்கும் சிறுதிரைப் பெட்டியைத் தவிர்த்துப்
    பண்பாட்டுப் பழந்தேனைப் பாலோடு புகட்டும்
    . . பாவையரால் இந்தமண் பயனுற வேண்டும். - ஆஹா! அருமையான விருப்பம்!

    பதிலளிநீக்கு
  4. கருத்தான கவிதை. வாழ்த்துக்கள் டாக்டர்.

    டாக்டர் வ.க.கன்னியப்பன்

    பதிலளிநீக்கு
  5. கருத்துரைத்த யாவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு