“ கல்கியின் தமிழ்ப் பற்றும் இசைப் பிரேமையும் அவருடைய ரசிகத்தனமையும் ஒன்று சேர்ந்துதான் பாடல்களாக வெளிப்பட்டன. அநேகம் பாடல்கள், ஏற்கனவே அமைந்த மெட்டுக்குள் பொருந்தும்படி எழுதப்பட்டவை. ‘பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்’ என்ற பாட்டு, சைகால் பாடிய ஹிந்திப் பாட்டின் மெட்டுக்குள் அப்படியே பிசகாமல் பொருந்தும். இந்தப் பாடலை கல்கி எழுதியதும், நான் அதை முதன்முதலில் பாடியதும், பின்னர் அது இசைத்தட்டாக வெளியாகி அமோக வரவேற்பு பெற்றதும் பசுமையாக ஞாபகமிருக்கிறது. ‘பூங்குயில் பட்டமாள்’ என்று எனக்கொரு இனிய பட்டமும் வாங்கிக் கொடுத்தது இப்பாடல்! அழகான , எளிமையான தமிழ்; வெறும் வார்த்தையால் பாடலை வளர்க்காமல் காட்சி விவரணை மூலம் கதை சொல்லிக் கொண்டு போவது - இவை கல்கி பாடல்களின் முத்திரை.”
[ நன்றி : அமரர் கல்கி பாடல்கள், வானதி பதிப்பகம், டிசம்பர் 2003 ]
டி.கே.பட்டம்மாள் கச்சேரியில் பாடுவதற்கென்றே ‘கல்கி’ அவரிடம் நான்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அவை : 1)குழலோசை கேட்டாயோ -கிளியே 2) பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள் 3) திரைகடல் தூங்காதோ 4) இன்பக் கனவொன்று துயிலினில் கண்டேன். இவை 1940-களில் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தன. டி.கே.பட்டம்மாள் திரைப்படங்களில் பாடியுள்ள பாடல்களையும் பலர் அறிவர். முதன் முதலில் எஸ்.எஸ்.வாசன் ’தியாகபூமி’யில் அவரைப் பாட அழைத்தபோது, டி.கே.பட்டம்மாள் போட்ட ‘கண்டிஷன்’ என்ன? அவரே சொல்லட்டும்! ”சினிமாவில் பாடுவதற்கு ஜெமினி நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. வாசன் அவர்கள் தான் என்னை வரவேற்று உபசரித்தார். “எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நீங்களும் பாட்டுப் பாட வேண்டும். வருகிறீர்களா? “ என்று கேட்டார். ”மிகவும் மகிழ்ச்சி” என்று சம்மதம் தெரிவித்ததோடு “ஒரேயொரு கண்டிஷன்” என்றேன். “என்ன” என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார் வாசன். “சினிமாவின் டூயட் பாடல்கள் பாடுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசபக்தி மற்றும் பொதுவான பாடல்கள் பாடுகிறேன்” என்று சொன்னேன். வாசனும் சந்தோஷமாகத் தலையசைத்தார். அதன்பின் ‘தியாகபூமி’, ‘மிஸ் மாலினி’ உட்பட சில படங்களில் பாடியிருக்கிறேன்” [ நன்றி : அமரர் வாசன் நூற்றாண்டு மலர், விகடன், 2004] ( பின் குறிப்பு: ‘மிஸ் மாலினி’க்காக டி.கே.பி ‘ஸ்ரீ ஸரஸ்வதி நமோஸ்துதே’ என்ற பாடலைப் பாடினார். ஆனால், வாசன் கடைசியில் அதைப் படத்தில் பயன்படுத்தவில்லை! ஏனென்றால் மாலினி என்ற அந்த பெண்மணியின் திரைப்படக் குணசித்திரப்படி அவள் அவ்வளவு அழகாக ஒரு பாடலைப் பாடி இருக்கமுடியாது என்று முடிவு செய்தார் ! இது ராண்டார் கை ஒரு கட்டுரையில் கொடுத்த தகவல்! ) ‘தியாகபூமி’ படத்தில் ‘கல்கி’ யின் ‘பாரத புண்ணிய பூமி ‘, 'தேச சேவை செய்ய வாரீர்’, ‘பந்தம் அகன்று’ ஆகிய மூன்று பாடல்களையும் டி.கே.பட்டம்மாள் பாடியிருக்கிறார். இதோ இன்னும் சில திரையுலகப் பாடல்கள் பற்றிய தகவல்கள்:
டி.கே.பட்டம்மாள் சங்கீத சங்கதிகள் DKPATTAMMAL-FILM-SONGS |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக