பொறந்த நாட்டை நினைச்சுப்
பாத்துப்
டி-டே ( D-Day ) என்று பரவலாக அறியப்படும் நாள். இன்று ( 6-6-2014 ) அதன் 70 ஆண்டு நிறைவை உலகெங்கும் பலர் நினைவு கூர்கிறார்கள்.
இரண்டாம் உலகப் போரில், நேச நாடுகளின் படைகள் பிரான்ஸ் நாட்டில் , நார்மண்டி கடற்கரையில் இறங்கின தினம் ஜூன் 6,44. உலகப் போர் வரலாற்றிலேயே மிகப் பெரிய படையிறக்கம் நடந்த நாள். அன்று தொடங்கிய போர் சில மாதங்களுக்குத் தொடர்ந்து நடந்தபின், ஆகஸ்டில் பிரான்ஸ் விடுதலை பெறுகிறது.
போர் நிகழ்வுகளைப் பற்றி உன்னிப்பாய்த் தொடர்ந்து படித்து வந்த ஓர் இந்தியக் கவிஞர் இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டிஷ் படையில் இந்தியப் போர்வீரர்கள் பலர் பணி புரிந்து, வெற்றிக்கு வழிகோலியதை எண்ணிப் பூரிக்கிறார். போர் முடிகிறது. நாட்டுக்குத் திரும்பி வாருங்கள்’ என்று போர் வீரர்களைக் கூப்பிடுகிறது அந்தக் கவியுள்ளம்.
பிராஞ்சிநாட்டுச் சுதந்திரத்தைப்
பிடிச்சுத் தந்தீங்க
போனமானம் போலந்துக்குத்
திரும்பத் தந்தீங்க
போனமானம் போலந்துக்குத்
திரும்பத் தந்தீங்க
போய்மிதிச்ச நாட்டையெல்லாம்
பொழைக்க வச்சீங்க.
பொறந்தநாட்டை நினைச்சுப்பாத்துப்
பொறப்பட்டு வாங்க.
’கலைமணி’ கொத்தமங்கலம் சுப்பு கலைத்துறையின் பன்முகங்கள் பிரகாசிக்கும் மாமனிதர் தான். ஆயினும், அவருடைய முதல் முகம் மண்வாசனை வீசும் பல அற்புதமான கவிதைகளைப் படைத்த ’கவிமுகமே’! அவருடைய கவிதைகளிலும் நாம் பல வாழ்க்கை வண்ணங்களைச் சந்திக்கலாம். இயற்கை, பக்தி, தலைவர்கள், அறிவியல், சமுதாயம் என்று பல்வேறு கோணங்களில் அவர் கவிதைகளை நாம் பிரித்துப் பார்த்து, படித்து ருசிக்கலாம். அந்த வழியில் அவருடைய பல போர்ப் பாடல்கள் மிகுந்த எழுச்சியும், நெகிழ்ச்சியும் கொண்டவையாய் விளங்குகின்றன.
அவருடைய போர்ப் பாடல்களில் , 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அவர் விகடன் தீபாவளி மலரில் எழுதிய ஒரு பாடல் எல்லோர் மனத்திலும் இன்றும் நிலைத்து உயர்ந்து நிற்கும் ஒரு ‘கோபுர’க் கவிதை! ( பல நண்பர்கள் என்னை ‘எங்கே? எங்கே?’ என்று கேட்டுத் துளைக்கும் கவிதையும் தான்!:-) அந்தக் கவிதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!
போர் முடிந்துவிட்டது, ஆறு வருடங்களாய் வெளிநாட்டில் இருந்த சிப்பாய்களை நாட்டுக்குத் திரும்பி வந்து நாட்டுக்கு உழைக்கச் சொல்லி வேண்டுவதுபோல் அமைந்த கவிதை இது.
இந்தியச் சிப்பாய்களின் வீரம், கடமை உணர்ச்சி இவற்றில் பெருமை கொள்ளும் அதே நேரத்தில் , சிப்பாயின் குடும்பத்தினரும், அண்டை அயலும் --ஏன், மாடு, கன்றுகளும் தாம்... அவனைப் பார்க்காமல் ஏங்கும் சித்திரம் நம்மை நெகிழவைக்கிறது. போருக்குப் போகும்போது தொட்டிலில் இருந்த குழந்தை --இப்போதோ பள்ளிக்குச் செல்லும் பிள்ளை -- ‘அப்பன் எங்கே’ என்று அம்மாவைக் கேட்பது, தந்திதபால்காரன் வந்தால் ‘எங்கே துயரச் செய்தி வந்துவிடுமோ’ என்று தாலியைத் தொட்டுப் பயப்படும் மனைவி, சிப்பாய்க்குப் பேர் இட்ட கிழவி தன் கடைசிக் காலத்தில் அவனைப் பார்க்கத் துடிப்பது ..போன்ற பல மனமுருக்கும் காட்சிகள் நிறைந்த ‘நிறைகுடம்’ இந்தக் கவிதை.
விளக்கங்கள் எதற்கு? வாய்விட்டுப் படியுங்கள்! 1945-க்கே போய்விடுவீர்கள்! இந்தப் பாடலை உணர்ச்சியுடன் திரு சுப்புவே படிக்கக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள்!
விளக்கங்கள் எதற்கு? வாய்விட்டுப் படியுங்கள்! 1945-க்கே போய்விடுவீர்கள்! இந்தப் பாடலை உணர்ச்சியுடன் திரு சுப்புவே படிக்கக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள்!
வேட்டை முடிஞ்சு
போச்சுதம்பி
வீட்டுக்கு வாங்க
காட்டைஉளுது செய்திருத்திக்
கஞ்சி வாருங்க ( வேட்டை )
எக்களிக்கும் கடலுமேலே
ஏறிப் போனீங்க
முக்குளிக்கும்
கப்பலுள்ளே
மொடங்கிப் போனீங்க
திக்குஎட்டும் செதறியோடிச்
செயிச்சுப் பிட்டீங்க
செரமப்பட்டது போதும்
தம்பி
வீட்டுக்கு வாங்க.
மாராழத்திலே பள்ளம்வெட்டி
மறைஞ்சி ருந்தீங்க
பாறாங்கல்லுலே நெஞ்சுருத்தப்
படுத்திருந் தீங்க.
நின்னுநின்னு கால்கடுத்து
நினைப் பழிஞ்சீங்க
நீட்டிநிமிர்ந்து
படுத்துக்கலாம்
வீட்டுக்கு வாங்க.
ஆலாக்குருவி போலே
நீங்க
ஆகாசம் மேலே
அலைஞ்சுதிரிஞ்சு
களைச்சிட்டீங்க
ஆனாத் தன்னாலே
நூலாம்படையைப் போலேபறந்து
நோட்டம் பாத்தீங்க
நூறுவயசுப் பயிருகளா
வீட்டுக்கு வாங்க.
சட்டைதொப்பி மாட்டிக்கிட்டுச்
சண்டைக் குப்போயி
செமந்தநாளு ஆயிப்போச்சு
திரும்பி வாருங்க.
கொட்டைதுப்பி நட்டமாவும்
குலுங்கிப் பூக்குது
கொம்பைவளைச்சுப்
பழம்பறிக்க
வீட்டுக்கு வாங்க.
வளவுதேடி மாமன்வந்து
வாரம் நடக்குறான்
வடக்கிவீட்டுக்
குட்டிசும்மா
பாட்டுப் படிக்கிறா
பிளவுபாக்குகேட்டு
அயித்தை
பேச்சுக் குடுக்குறா
பெருகிப்பலுகி வாளவேணும்
வீட்டுக்கு வாங்க.
பெத்துவளத்துப்
பேருமிட்ட
பெரிய நாச்சியா
பித்துப்பிடிச்சு
ராப்பகலா
பேத்தி நிக்கிறா
முத்தைஉதுத்துப்
பேந்தபேந்த
முளிச்சுப் பாக்குறா
முகத்தைக்காட்ட
வேணுமிடா
வீட்டுக்கு வாங்க.
தொட்டிலிலே கிடந்த புள்ளை
செவுடி தூக்குறான்
தொட்டுத்தொட்டு
அப்பன்எங்கே
என்று கேக்குறான்
வட்டியிலே சோத்தை
வச்சா
மொகத்தைப் பாக்குறான்
வருத்தம்சகிக்க
முடியுதில்லே
வீட்டுக்கு வாங்க.
தந்திதவால் காரன்வந்தா
தவிதவிக் கிறா
தாலிச்சரட்ட பாத்துக்கண்ணு
தண்ணி வடிக்கிறா
அந்திப்பட்டா ஒருயுகமா
அவ துடிக்கிறா
ஆறுவருச மாச்சுதப்பா
வீட்டுக்கு வாங்க.
வீடுவாசல் நீயில்லாமல்
வெறிச்சுன்னு போச்சு
மாடுகன்னும் ஒன்னைத்தேடி
மருகர தாச்சு
காடுகரையும் ஆளில்லாமல்
மோடிட்டுப் போச்சு
கலப்பைபுடிக்கும்
சிங்கங்களா
வீட்டுக்கு வாங்க.
பிராஞ்சிநாட்டுச்
சுதந்திரத்தைப்
பிடிச்சுத் தந்தீங்க
போனமானம் போலந்துக்குத்
திரும்பத் தந்தீங்க
போனமானம் போலந்துக்குத்
திரும்பத் தந்தீங்க
போய்மிதிச்ச நாட்டையெல்லாம்
பொழைக்க
வச்சீங்க.
பொறந்தநாட்டை நினைச்சுப்பாத்துப்
பொறப்பட்டு வாங்க. பின்னர் இசைத்தட்டிலும் வெளியானது இந்தப் பாடல்.
கேட்டிருக்கிறோம்.. கேட்டிருக்கிறோம்.. 1972 டிசம்பர் 25 (ராஜாஜி மறைந்த நாள்).. இந்தப் பாடலை உணர்ச்சிகரமாகச் சொல்லிக் கொண்டே வருகிறார் சுப்பு. நல்லூர் இலக்கிய வட்டத்தின் முதல் ஆண்டு விழா. ஓரிடத்தில் மறந்து போய்விட்டது.. சற்று தடுமாறுகிறார் கவிஞர்.. ஆடியன்ஸிலிருந்து ஒரு வெள்ளை ஜிப்பா முறுக்கு மீசை எழுந்திருந்து, விட்ட இடத்திலிருந்து மொத்தப் பாடலையும் கடகடவென்று ஒப்பிக்கிறார். (இது ஆசிரியர் நாகநந்தி என்கிற தி வேணுகோபாலன் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.) ரசிகருடைய நினைவாற்றலில், தன் கவிதையைத் தானே கேட்ட சுப்பு, தேம்பத் தொடங்கிவிட்டார். ‘சுப்புல பாதி பெண்மை’ என்றார். பாதி மட்டுந்தானா!
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குமிக்க நன்றி.
பதிலளிநீக்குஅருமையான பதிவு. வாய்விட்டுப் படிக்க மனம் இனிக்கிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி
பதிலளிநீக்குNostalgic delight. Many thanks for posting this gem.
பதிலளிநீக்கு