வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

தேவன் - 18 ; ராஜத்தின் மனோரதம்

ராஜத்தின் மனோரதம்
4. சில வீட்டுக்காரர்களுக்குத் தெரிந்தது!
தேவன்




எதிர்பாராத வரிகளைத் தொடர்கதை அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருக்கும் அற்புதமும், அவரை விட்டால் தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. தேவனை இப்போதைய வாசகர் உலகு சரிவர அறிந்திருக்காதது துர்பாக்கியமே. என்போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார் தேவன்தேவனின் ’ ‘ஸ்ரீமான் சுதர்ஸனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஜஸ்டிஸ் ஜகன்னாதன் போன்ற தொடர்கதைகள் என் பள்ளியிறுதி, கல்லூரி இளங்கலை நாட்களில் குதூகலமளித்தன. எழுத்தாளனாக வேண்டும் என்கிற ஆசையை உயர்த்தினஇன்று அவைகளைப் படித்துப் பார்க்கும்போது தேவனின் சிறந்த புத்தகம்‘ராஜத்தின் மனோரதம் தான் என்ற முடிவுக்கு வர முடிகிறது. ”  


                                                                                 - சுஜாதா -

ஏராளமான நகைச்சுவைக் கட்டுரைகளையும்

 எழுதியிருக்கும் தேவன் , நாவலுக்கும் கட்டுரைத்

 தொடருக்கும் இடைப்பட்ட ஒன்றாகப் புதுமையான இலக்கிய

 முயற்சி ஒன்றையும் செய்திருக்கிறார். அதுதான் ‘ராஜத்தின்

 மனோரதம்’. ஒரு குடும்பத் தலைவர் தமக்கென்று

 சொந்தமாக வீடு கட்டிக் கொள்வதைப் படிப்படியாக,

 சுவாரசியமாக விவரிக்கிறது அந்தப் படைப்பு. வீட்டைக்

 கட்டித் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள பொறியாளர்,

 மேஸ்திரி, கொத்தனார், தச்சு வேலைக்காரர்,

 எலெக்ட்ரிஷியன் என்று பலரது மனோபாவங்க

ளையும் அழுத்தமாகப் பதிவு பண்ணியிருக்கிறார். அதுவும்

 நகைச்சுவையுடன். ஒரு படு சீரியஸான விஷயத்தையும்

 சுவையாகச் சொல்வது எப்படி என்று அறியவேண்டுமானால்

 இந்தப் படைப்பைப் படித்தால் தெளிவாக விளங்கும். “ 

                                    --முகுந்தன் , தினமணி, மே 5, 97.--

" ஒரு மத்திய தரக் குடும்பத்தின் வீடு கட்டும் முயற்சியை

 அத்தனை கலாசார அம்சங்களுடனும், புன்னகையை

 வரவழைக்கும் யதார்த்தத்துடனும் “ராஜத்தின்

 மனோரதம்” வெளிப்படுத்தியிருக்கிறது. தேவனால்

 மட்டுமே இது முடியும் என்பதை இந்த அரிய படைப்பு

 காண்பித்திருக்கிறது. 

                  -- இந்திரா பார்த்தசாரதி, முதல் தேவன்

 நினைவுச் சொற்பொழிவில், அமுதசுரபி, அக்டோபர், 2011.


"வீட்டைக் கட்டிப் பார்” என்பது பழமொழி. தேவன் ஒரு

 வீட்டையும் கட்டினார்; 1948/49-இல். அதற்கு ‘ஷண்முக

 விலாஸம்” என்ற பெயரையும் வைத்தார். பிறகு சும்மா

 ‘ஹாய்’யாக வீட்டில் இருந்தாரா? இல்லை, அந்த

 அனுபவங்களை வைத்து ஒரு புதுமையான கட்டுரைத்

 தொடரை விகடனில் எழுதினார். தன் அனுபவங்களைக்

 கட்டுரை/கதைப் படைப்புகளாய்த் தருவது தேவனுக்குப்

 புதிதல்ல. இப்படித்தான், அவர் கார் ஓட்டக் கற்றுக்

 கொண்டதையும், அந்த அனுபவங்களையும் ‘புஷ்பக விஜயம்’

 என்ற கட்டுரைத் தொடரில் எழுதியிருப்பார்; இன்னும் அச்சில்

 வராத ஒரு படைப்பு அது.  

” ராஜத்தின் மனோரதம் “ என்ற ‘தேவனின்’ அந்தக் கட்டுரைத்

 தொடர் 1951-52 -இல் விகடனில் வந்தது என்று நினைக்கிறேன்.

 16 அத்தியாயங்கள் கொண்ட சிறிய தொடர் தான்.

 ( அல்லயன்ஸ் பதிப்பகத்தில் நூல் கிடைக்கிறது) 

 யாருக்கும் தெரியாதது, சில பேருக்கு மட்டும் தெரிந்தது,

 ....தெரிந்திருக்க வேண்டியது, .... தெரிகிறது, ...தெரிந்து

 கொண்டது ...இப்படிப்பட்ட தலைப்புகளைக் கொண்ட

 தொடர்! ஒவ்வொரு அத்தியாயத்திலும் ’கோபுலு’வின் 5-6

 படங்கள் களை கட்டும். வீடு கட்டுபவரைத் ‘தேவன்’ போலவே

 வரைந்திருப்பார் கோபுலு! 

 மேலும் அந்தத் தொடரில் வரும் பல பாத்திரங்கள் அவர்

 பார்த்துப் பழகிய பலரை ஆதாரமாகக் கொண்டவை என்பர்.

 உதாரணமாக, தொடரில் வரும் ஸ்ரீஜயம்- -- தேவன் ஒரு காலி

 மனையை வாங்கி, அதில் தன் வீட்டைக் கட்ட மூல காரணர் --

 தேவனின் ஓர் அத்யந்த நண்பரான ‘மர்ரே’ கம்பனி ராஜம். 

( மிஸ்டர் வேதாந்தத்தில் வரும் ஸ்வாமி என்ற பாத்திரமும்

 ’மர்ரே’ ராஜம் தான்! இதே ‘மர்ரே’ ராஜம் தான் ஓவியர் கோபுலு

 இப்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் வீட்டை

 அவர் வாங்குவதற்கும் மூல காரணர்! )    

 அந்தத் தொடரிலிருந்து , மாதிரிக்கு ஒன்றாய் நான்காம்

 அத்தியாயத்தையும், அதனுள் வந்த கோபுலுவின்

 படங்களையும் இங்கே இடுகிறேன். 



ராஜத்தின் மனோரதம்
4. சில வீட்டுக்காரர்களுக்கு தெரிந்தது!
தேவன்
              
ரு வீடு என்றால் என்ன இருக்க வேண்டும்? ஒரு ஆபீஸ் அறை, ஒரு ஹால், சமையல் அறை, சாமான் அறை, ஒரு பாத் ரூம், படுக்கை அறை இவ்வளவுதானே? இவைகளை முன்னே பின்னே பார்த்து வைத்துக் கட்டிவிட்டால் ஆயிற்று!... இதற்குப் பிரமாதமாக யார் யாரையோ யோசனைகள் கேட்கிறதும், மனத்தைக் குழப்பிக் கொள்கிறதுமாக இருக்கிறீர்களே!'' என்று கேட்டாள் ராஜம். எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

''முக்யமான ஒன்றை விட்டு மற்றதையெல்லாம் சொல்லிவிட்டாய்!'' என்றேன் பல்லைக் கடித்து.

''என்னவாம் அது?''

''உன் முதுகு கேட்கிறது ஒரு அறை!... ஆமாம்!'' என்றேன்.

''ரொம்ப சமர்த்தாகச் சொல்லிவிட்டீர்கள்! முதலில் அதைச் செய்து விடுங்கள், காசு பணம் செலவில்லை.''

''பின் என்ன உபத்திரவம் இது? நான் கிடந்து தவிக்கிறேன்! ஒரு பக்கம் பார்த்தால் கட்டிவிடலாம் என்று உத்ஸாகமாக இருக்கிறது; ஒரு பக்கம் பார்த்தால், நாலு பேர் பயமுறுத்தி வைக்கிறார்கள். நீ வேறு நடுவில் என்னைக் குழப்புகிறாய்'' என்று என்னையே அங்கலாய்த்துக் கொண்டேன்.

''நான் சொன்னபடி கேட்கிறீர்களா? உங்கள் ஜயம் வந்து, என்ன யோசனை செய்தீர்கள் என்று கேட்டால், ஏதானும் பதில் சொல்ல வேண்டாமா!''

''ஆமாம்; அதற்கென்ன வழி சொல்லுகிறாய்? வந்து கேட்கும்போது நான் வீட்டில் இல்லையென்று சொல்கிறேன் என்கிறாயா?''

''ஐய! பேச்சைப் பார்க்கல்லை! நாம் இரண்டு பேருமாகத் தான் புது வீடுகள் சிலவற்றைப் பார்த்து விட்டு வருவோமே?... எப்படிக் கட்டியிருக்கிறார்கள் என்று கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலா மல்லவா?''

ரியான யோசனை தான்! நான் அதை ஏற்றுக் கொண்டேன். அடுத்த நாலைந்து ஞாயிற்றுக் கிழமைகள், காலையும் மாலையும் இந்த அலுவலில் செலவு செய்தோம். வீடுகளில் எத்தனை தினுசு!

முன்னால் வானவில்போல் வளைத்த வீடுகள், ஒரு புறம் துறவு கிணறு போல் தோன்றிய இல்லங்கள், மடக்கி மடக்கிப் பல கோணங்கள் தென்பட உருவாகியிருந்த பங்களாக்கள், பல உருண்டைகளை உருட்டினாற் போல் காட்சி அளித்த கிருஹங்கள், அரக்கன் ஒருவன் வாயைப் பிளந்து கொண்டிருப்பது போல் மாடி அமைத்த நூதன கட்டடங்கள் - எல்லாற்றையும் பார்த்தோம். எங்களுக்கு ஏற்றதாகப்பட்ட சில வீடுகளுக்குள்ளே நுழைந்தும் ஆராய்ந்தோம்.

ஒருவருடைய புதிய வீட்டைப் பார்க்க வேண்டுமென்று நாங்கள் விரும்பியதும், அவர் ''சற்று இருங்கள். செளகரியப்படுமா பார்த்துச் சொல்கிறேன்'' என்று எங்களை வாசற்படியில் நிறுத்தி வைத்து விட்டு உள்ளே சென்றார். உள்ளே இருவர் பேசுவது எங்கள் காதில் கணீர் என்று விழுந்தது.

''யாரது?'' என்றது பெண்குரல்.

''யாரோ தெரியவில்லை. புதிதாக வீடு கட்டப் போகிறார்களாம். நம் வீட்டைப் பார்ககலாமென்று வந்திருக்கிறார்கள்!'' என்றார் வீட்டுக்காரர்.

''வேறே வேலை இல்லை!...''



''என்ன செய்கிறது? புது வீடு என்றால் அப்படித்தான் நாலு பேர் பார்க்க வேண்டும் என்பார்கள்.''

''நல்ல புது வீடு! அடுப்பங்கரையில் கண் அவிந்து போகிறது. அதைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போகட்டும்.''

''நான் என்ன பண்ணுவேன்? அந்தக் 'கண்டிராக்டர்' பேச்சை நம்பினதில் ஏமாந்து போய்விட்டேன்!''

''இது ஒன்றுக்கு மட்டுமா? பாத்ரூமில், ஒரு சொம்பு ஜலம் விட்டால், சாப்பிடுகிற இடம் வரைக்கும் ஓடி வருகிறது... நீங்கள் அசடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டு...''

''உஷ்... இரைந்து பேசாதேடி! வாசலில் அவர்கள் நிற்கிறார்கள்...''

''கூட்டிக் கொண்டு வந்து காண்பியுங்கள்! மாடிப் படிகள் கோணலும் மாணலுமாக இருக்கிற அழகைப் படம் பிடித்துக்கொண்டு போகட்டும்!''

ராஜம் என்னைப் பார்த்தாள். ''உங்கள் காதில் விழுகிறதா உள்ளே நடக்கிற சம்பாஷணை?'' என்று ரகசியமாகக் கேட்டாள்.

''நன்றாக விழுகிறது! அந்த அம்மாளுக்கும் உன் மாதிரி சுபாவம் போலிருக்கிறது!''

''சொல்ல மாட்டீர்களோ? அந்த மனுஷன் பொறுமையில் நூற்றில் ஒரு பங்கு உங்களுக்கு உண்டா? அல்லது வருமா?''

இந்த சமயம் அந்த தம்பதிகளே வெளியில் வந்து விட்டார்கள். பார்வைக்கு 'இவளும் இப்படிப் பேசியிருப்பாளா?'' என்றே எனக்குத் தோன்றியது. தம்பதிகள் எங்களுக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்தார்கள்.

''எங்களுக்கு 'ஸ்பெஷலா'கச் சொல்லி ஸிமெண்ட் வந்தது, ஸார்! எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!'' என்றார் அவர்.

''எங்களுக்கு நல்ல கண்டிராக்டர், அனுபவஸ்தராக அமைந்தார். ஒன்றொன்றும் கவனித்துச் செய்தோம்....” என்றாள் அம்மாள்.

''முக்கியமாக, ஸார்! நாம் எங்கே அதிகமாக வீட்டில் இருக்கிறோம்? பகலெல்லாம் ஆபீஸுக்குப் போய் விடுகிறோம்... முழுக்க முழுக்க இருக்கிறது பெண் பிள்ளைகள். அவர்களுக்கு முன்னாடி எல்லா செளகர்யமும் செய்து கொடுக்க வேண்டும் என்பதே என் 'பிரின்ஸிபிள்'. அதன்படி செய்தேன்!'' என்றார் புருஷர்.


''எங்களுக்க வீடு நன்றாக அமைந்து விட்டது " என்றாள் அம்மாள். 

''என்ன ஸார் அடக்கம் இருக்கும்?'' என்று அவரைத் தனியாகக் கேட்டேன்.

''உண்மையைச் சொல்லி விடட்டுமா?'' என்றார்.

''சும்மாச் சொல்லுங்கள். நானும் சீக்கிரம் வீடு கட்டப் போவதால்...''

''இருபத்தெட்டு ஆயிற்று!''

ராஜம் அந்த அம்மாளுடன் சமையற் கட்டைப் பார்த்துவிட்டு வந்தாள். நாங்கள் இரண்டு பேரும் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.

''எப்படி இருக்கிறது, ராஜம்?''

''என்னமோ இருக்கிறது... நாம் வீடு கட்டினால் சாமான்கள் கீழே இறைந்து கிடக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும்... ஆனாலும் அவள் ராங்கிக்காரி!''

''ஏன்? என்ன சொன்னாள்?''


''விலையைக் கேட்டேன். 'அதை எல்லாம் யார் கூட்டிப் பார்த்தார்கள்? முப்பத்தியேழோ, முப்பத்தெட்டோ என்றாள் அலட்சியமாக"

''அவர் இருபத்தெட்டு என்றாரே! இதில் யார் சொன்னது நிஜம்"

நாங்கள் இதுபற்றிய தர்க்கம் செய்து முடிவதற்குள் வேறொரு வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.

து கட்டி முடியும் தறுவாயில் இருந்தது. சில இடங்கள் பூசப்பட்டும், சில இடங்கள் பூசப்படாமலும் காணப்பட்டன. ஒரு பக்கம் 'வார்னிஷ்' அடிப்பவர்களும், ஒரு பக்கம் 'பெயிண்ட்' அடிப்பவர்களும், ஒரு பக்கம் சுண்ணாம்பு அடிப்பவர்களும் மேலே எலக்ட்ரிக் கம்பி பொருத்துபவர்களும், பக்கவாட்டில் குழாய்க்குக் குழி வெட்டுபவர்களும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அங்கே மேஸ்திரி போல் இருந்த ஒருவரைப் பார்த்து, ''இந்தக் கட்டடம் என்ன ஆகிறது?'' என்றுமெள்ள விசாரித்தேன்.

''ஐம்பது ரூபாய்க்குக் குறையாது!''

''அம்மாடியோவ்'' என்றேன்.

''காலம் அப்படி இருக்குதுங்க........ கல்லு விலை முன்னே இருபது இருபத்திரண்டு. இப்ப நாப்பத்தேளு நாப்பத் தெட்டு ஆவுதே!''

''ஓஹோ!''

''மரமே ஆளைத் தின்னுடுமே. இவரு ஆர்ஸியிலே கட்டியிருந்தால் அஞ்சாயிரம் கொறஞ்சியிருக்குமே,"

இந்த ஆளைத் தைரியமாகக் கேட்கலாமென்று "ஆர்.ஸி. என்றால் என்ன என்று தைரியமாக விசாரித்துவிட்டேன். தேக்க மரங்களைக் குறுக்கே போட்டுத் தளம் போடுவது 'மெட்ராஸ் டெர்ரஸ்' என்றும், இரும்புக் கம்பி கட்டி ஜெல்லியும் ஸிமெண்டுமாகக் 'கான்கிரீட்' செய்வது 'ஆர்.ஸி.' என்றும் சொன்னான் அவன்.

''ஓஹோ! நிமிர்ந்து பார்த்தால் மரச் சட்டமே இல்லாமல் 'வெழுமூணா' இருக்குமே அதுவா?'' என்று பச்சைக் குழந்தைபோல் கேட்டேன். இந்த சமயம் ராஜம் எனக்கு அழகு காட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்து, ''என்ன?'' என்றேன்.

''எல்லாரும் சிரிக்கப் போகிறார்கள்! பேசாமல் வாருங்கள்!'' என்றாள்.

'' நீ பேசாமல் இரு! இதுவும் தெரியாமல் என் சிநேகிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதைச் சொல்லித் திணற அடிக்கமாட்டேனா நான்?'' என்றேன்.

ஒரு வீட்டில் அறைகள் என்றில்லாமல் 'ஹால்' 'ஹாலாக' இருந்தது. அந்த வீட்டுக்காரர், ''வீடு என்றால் விசாலமாக இருக்க வேண்டும். உள்ளே வந்து விட்டால் ஜெயில் மாதிரி தோன்றி வெளியே போக வேண்டுமென்று வெறுப்பு வரக்கூடாது. அதனால் நான் 'ரூம்' என்று போடாமல் 'ஹால்' களாகவே போட்டு விட்டேன்!'' என்று சொன்னார்.


''ரொம்ப நல்ல யோசனை, ஸார்'' என்று அதை ஆமோதித்தேன்.

''நீங்கள் அப்படிச் சொல்லி விடுகிறீர்கள்! இப்போ எங்கே பார்த்தாலும் 'பம்பாய் - பாஷன்' என்று சொல்லிக் கொண்டு, எட்டடி சதுரத்தில் அறை அறையாகத் தடுத்து விடுகிறார்கள். ஒரே அவலட்சணம்! பார்த்தால் திராக்ஷைக் குலை மாதிரி இருக்கிறது!'' என்றார்.

இன்னொருவர் வீட்டில் சிறு சிறு அறைகளாக ஏகப்பட்ட அறைகள் இருந்தன. அந்த வீட்டுக்காரர். ''வீடு என்றால் ஒரு 'பிரைவஸி' வேண்டாமா? அதில்லாவிட்டால் ஹோட்டலிலோ, ஆபீஸிலோ இருந்து விடலாமே! வெள்ளைக்காரன் வீட்டைப் போய்ப் பாருங்கள். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அறை! நான் எங்கள் வீட்டு சுப்பிணிக்குக்கூட ஓர் அறை கொடுத்து விட்டேன்” என்றார் சுப்பிணி அப்போது கைக்குழந்தையாக இருந்தான் !

ஒரு நண்பர் ஒரு குடித்தனம் கூடவே இருக்க வசதி இல்லாமல் கட்டுகிற வீடு வீடே இல்லை என்று என்னிடம் வாதித்தார். ''வீட்டை நாம் பூட்டிக் கொண்டு போகிறோம் என்றால், இப்போ இருக்கிற நிலைமையில் கொள்ளை போய்விடுமே, ஸார்'' என்றார். பிறகு என் அருகாமையில் நெருங்கி, ''வாடகையைச் சொல்லுங்கள்! இப்போ இருக்கிற அகவிலையில், முப்பதையும் முப்பத்தைந்தையும் கொட்டி வீட்டைக் கட்டி வீட்டு, வட்டி நஷ்டப் படுவானேன்? வீட்டு வரியே வாரியோ வாரி!'' என்றார். அவர் சொல்லுகிறபோது அதுவும் நியாயம் என்று தோன்றியது.

மறு வாரம் வேறொருவருடைய வீட்டைச் சுற்றி வந்துவிட்டு, ''குடித்தனம் ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லையா?'' என்று கேட்டு வைத்தேன்.

அவர் முகத்தில் குப்பென்று ரத்தம் ஏறி விட்டது. ''ஸார்! ஆண்டவன் கிருபையால் இன்று வரைக்கும் தனி வீட்டில்தான் இருந்திருக்கிறேன். வீடு கட்டிக் கொண்டு வரும்போதும் அப்படியே வந்து விட்டேன். என்ன இருந்தாலும், குடித்தனம் என்று வைத்தால், நம் சமாசாரம் வெளியே போகத்தான் போகும். நம் 'ஒய்ப்' கிட்ட சித்தெ நாழி ஜாலியா பேசினோம்; அல்லது நாமாக குஷி பிறந்து நம் இஷ்டம் போல் ஒரு காம்போதி ராகம் ஆலாபனை பண்ணினோம் என்றெல்லாம் குடித்தனம் வைத்து விட்டால் முடியுமா?''

''முடியவே முடியாது!'' என்று ஒப்புக் கொண்டு வந்தேன்.

ப்படிப் பல வாரங்களில் பல இடங்களைப் பார்த்து விட்டு வந்த பிறகு, மனிதர்கள் எத்தனையோ, அத்தனை மனித சுபாவமும் இருக்கிறது என்ற உண்மையை நாங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் எத்தனை பார்த்தும் ஸ்ரீ ஜயம் கொடுத்த பிளானை மாற்ற எங்களுக்குத் திடம் ஏற்படவில்லை.

ஒரு நாள் வீடு கட்டி வரும் என் நண்பர், ''என்ன ஸார், எப்போது வீடு கட்டப் போகிறீர்கள்? உங்கள் பி.ஏ. நம்பர் என்ன?'' என்று கேட்டார்.

நான் சற்று விழித்துவிட்டு, ''ஞாபகம் இல்லை... நான் பி.ஏ. பாஸ் பண்ணிப்பதினெட்டு வருஷங்கள் ஆகி விட்டதால் மறந்து விட்டேன்.... வீடு கட்ட அது கூட வேண்டியிருக்குமா?'' என்று கேட்டேன்.

அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ''அதில்லை, ஸார்! உங்கள் 'பிளான்' இருக்கிறதல்லவா? அதற்கு 'ப்ளூ ப்ரிண்ட்' போட்டு, கார்ப்பரேஷனுக்கு அனுப்பியிருப்பீர்களே. அவர்கள் அதற்குக் கொடுக்கும் நம்பருக்கு பி.ஏ.நம்பர் என்று பெயர்... அது வந்த பிறகு தானே நீங்கள் சிமிட்டிக்கும், இரும்புக்கும் அப்ளிகேஷன் போடவேண்டும்!'' என்றார்.

''அதற்கு ரொம்ப நாளாகுமோ?''

''சில சமயம் ஆகும்; சில சமயம் ஆகாது... அங்கங்கே தெரிந்த மனிதர்கள் இருந்தால் ரொம்ப நல்லது.''

''உங்களுக்கு அப்படி யாராவது இருக்கிறார்களா?''

''நமக்குக் காரியம் ஆகவேண்டுமே! நாமாக விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.''

''காசைக் கொடுத்தோம், கடையில் வாங்கினோம் என்று கிடையாது?...''

''அதெல்லாம் போய் எத்தனையோ யுகம் ஆச்சே! எங்கே, உங்கள் 'பிளான்' இருக்குமா?''

என் வீட்டு பிளானைச் சட்டென்று நான் ஒரு காகிதத்தில் போட்டு அவர் கையில் கொடுத்தேன்... ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேனே! கொஞ்ச நாளாகவே நான் பிளான் போடுவதில் முனைந்து திருந்தியும் போயிருந்தேன். வீட்டில் ஒரு சாக்-பீஸை வைத்துக்கொண்டு நினைத்த இடங்களெல்லாம் போட்டு நண்பர்களுக்குக் காண்பித்து வரத் தொடங்கியிருந்தேன்.

அவரும் அதைப் பார்த்து விட்டு, ''கிட்டத்தட்ட நம் வீடு மாதிரி தான்... சிற்சில மாறுதல்களே செய்திருக்கிறது!'' என்று சொல்லி, தமது வீட்டுப் பிளானைப் போட்டு என் கையில் கொடுத்தார்.

''நான் சாப்பிடுகிற ரூமைப் பெரிதாகப் போட்டேன்'' என்றேன்.

''நான் முன் - ஹாலை விஸ்தாரமாக வைத்துக் கொண்டேன்'' என்றார்.

''என் வீட்டு மாடிப் படி நல்ல அகலம்... தாராளமாக இருக்கிறது.''

''நான் நாலு ஜன்னல் கூடப் போட்டிருக்கிறேன், அதைக் கவனித்தீர்களா?''

''ஏன், என் வீட்டில் குறைவா? எத்தனை 'வெண்ட்டிலேட்டர்' போட்டிருக்கிறேன், பார்த்தீர்களா?''

''மழை குளிர் காலங்களுக்கு என் ஆபீஸ் ரூம் வெகு சுகம், வெகு சுகம்.''

''வெய்யில் காலத்தில் என் வீட்டு ஹால் கோடைக்கானல் மாதிரி இருக்கும்!''

''அரைக்க, இடிக்க அருமையான இடம்.''

''த்ஸொ! த்ஸொ! ஸ்நான அறை அற்புதமாகச் செய்திருக்கிறேன்.''

''என்னமோ, ஸார்! எனக்குப் 'பிளான்' போட்டுக் கொடுத்தவர் ரொம்ப அனுபவஸ்தர். அதோடு உங்களை விட எனக்கு 'இன்ப்ளூவன்ஸ்' ஜாஸ்தி இருக்கிறது. நான் நாலு இடத்தில் அலைந்து பார்த்து, சிரமப்பட்டு, சாமான்கள் நல்லதாகப் பொறுக்கி வாங்குவேன். ....எனக்கு மலிவாகக் கூடக் கிடைக்கும். உங்களால் அத்தனை முடியும் என்று சொல்வதற்கில்லை'' என்றார் அவர்.

எனக்கு இது உறைத்துவிட்டது: ''என் இல்லை? எனக்காக ஜயம் ஆறுமாசம் முனைந்து கட்டப் போகிறார். அவர் உதடு அசைத்தால் ஊர் அசையுமே...'' என்றேன்.

''ரைட், ரைட்!''

''ஆல் ரைட், ஆல் ரைட்!''

நண்பர்கள் பிரிந்து வந்து விட்டோம். ஆனால், சற்று நிதானித்த பிறகு, நாங்கள் சிறு பிள்ளைகளைப் போல் போட்டி போட்டு எதற்காகப் பேசிக்கொண்டோம் என்று நான் மிக வெட்கம் அடைந்தேன்.

தற்கெல்லாம் பிறகு, திடீரென்று ஒரு நாள் ஸ்ரீ ஜயம் என்னை வந்து அழைத்தார். உள்ளே கூப்பிட்டு நாற்காலியில் உட்கார்த்தி வைத்து அவரை உபசரித்தேன்.

''பிளானை எந்த மட்டில் வைத்திருக்கிறீர்? உங்கள் வீட்டுக் கரப்பான் பூச்சி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதோ?''

''இல்லை, ஸார்! நான் ரொம்ப இடங்களைப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். நீங்கள் சொன்னபடி பல பேர் யோசனைகளையும் கேட்டிருக்கிறேன்.''

''தெரிகிறது... மிக மிக குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.''

''ஆமாம், ஸார்! நீங்கள் போட்ட ''பிளான்'படி பேசாமல் நடத்தி விடலாம்.''

''நீர் அப்படிச் சொல்லுவீர் என்று முன்னாடியே தெரியும் எனக்கு. ஆகையினால் 'ப்ளூ - பிரிண்ட்' போட்டு விட்டேன். கார்ப்பரேஷனுக்கு மூன்று காப்பிகள் அனுப்ப வேண்டும். சீக்கிரம் கையெழுத்தைப் போட்டுக் கொடும்! என்றைக்குச் சுப முகூர்த்தம்? உம்ம 'பிளாட்'டில் தவளைகள் போடுகிற கூச்சல் என்னால் சகிக்க முடியவில்லையே!'' என்றார்.

''ஸார்! இதோ பார்த்து விடுகிறேன், ஸார்!''

''ஈசான்ய மூலை - ஞாபகம் இருக்கட்டும்.''

''அப்படியென்றால்?''

''ஈசான்ய மூலையில் தான் ஐயா, முதல் முதல் ஒன்பது கல்லை நவக்கிரஹங்களாக வைத்துப் பூஜை செய்வார்கள்'' என்று எழுந்து விட்டார்.

வாசல் வரை அவரைக் காரில் கொண்டுவிட்டேன். ''வீடு கட்ட ஆரம்பிக்கிறதற்கு முந்தி முக்யமாக மூன்று சாமான்கள் வேணும்! அவை எப்போதும் உம்முடைய கையோடு வரவேண்டும். ஒரு 'டேப்', ஒரு ரஸ மட்டம், நல்ல கனமாக ஒரு பேனாக் கத்தி....... எதிலும் அளவு என்றால் அளவாக இருக்க வேண்டும், தெரிந்ததா? அறை பதினோரு அடி சதுரம் என்றால், பத்தரை அடி நீளம் பத்தே முக்கால் அடி அகலம் என்றில்லை!...''

''நானா அதை அளக்கவேண்டும்?''

''நானா, நீரா? வீட்டுக்கு எவன் சொந்தக்காரனோ அவன் அளக்கிறான்! உம்மோடு கதை அளந்து கொண்டு நிற்க நேரம் இல்லை... நான் வருகிறேன்.''

''ஆமாம்! நீங்கள் சொன்ன 'டேப்' 'ரஸ மட்டம்' எல்லாம் எங்கே விலைக்குக் கிடைக்கும்?''

''வெற்றிலை பாக்குக் கடையில் விசாரித்துப் பாரும்!'' - புர்ர்ர் - என்று கார் ஓடி விட்டது.

தற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு நான் என் 'பிளாட்'டைப் பார்க்கலாமென்று போயிருந்தேன். பக்கத்து நிலங்களில் வரிசையாக வீடுகள் கட்ட ஏற்பாடு தொடங்கியிருந்தார்கள். கடைசி வீட்டின் முன் கிணறு வெட்டிக் கொண்டுமிருந்தார்கள். அங்கே அந்த வீட்டுக்காரரே நின்று மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அவர் 'பிளானைக் கேட்டு வாங்கிப் பார்த்தேன்.

''உம்ம்...... ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறது!'' என்றேன்.

''ஓ!........ கிடு கிடு வென்று ஒவ்வொன்றாக நடக்க வேண்டியதுதானே?'' 
என்றார். பிறகு, ''உங்கள் நிலத்தில்கூட நேற்று கோடுகள் போட்டுக் கொண்டிருந்தார்களே! மிஸ்டர் ஜயம் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாரே!''

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒடிப் போய்ப் பார்த்தேன். முன்னே 'சாக்-பீஸி'னால் நான் என் வீட்டுக் கூடம் தாழ்வாரம் எல்லாம் 'பிளானைக் கிறுக்குவேன் என்று சொன்னேன் அல்லவா? அதே போல் நிஜ அளவில் சுண்ணாம்புப் பொடியினால் குறி போட்டிருந்தது. கிணறு முதல் கொண்டு அதில் காட்டியிருந்தது. நான் 'மனை முகூர்த்தம்' செய்யவேண்டிய இடத்தில் ஒரு சதுரத்திற்கு ஆறு அடி ஆழம் தோண்டியும் காண்பித்திருந்தார்கள்.


பர பர வென்று வீட்டுக்கு ஓடி விஷயத்தைச் சொன்னேன். என் மருமான் சாஸ்திரிகள் வீட்டுக்கு ஓடினான்; சாஸ்திரிகள் என் வீட்டுக்கு ஓடி வந்தார்; ''குழந்தை சொன்னான்.... ரொம்ப சந்தோஷம்.... '' ஆயதனவான் பவதி' என்று சொன்னார்களே! ஆயதனம், ஆயதனம் என்றால் வீடு என்று அர்த்தம்!''

''ஓஹோ அப்படியா?''

'' 'வீடுடையவனாக ஆகிவிடு' என்பது பெரியவாள் வாக்கு!... சரி, நவக்கிரஹ பூஜையை நன்னாப் பண்ணிவிடுகிறது.''

அடுத்த வாரம் நல்ல நாள் ஒன்றில் பூஜை செய்யப் போனோம். ஸ்ரீ ஜயம் வீட்டிலே அகப்பட வில்லை; அவர் ஆபீஸிலும் அகப்பட வில்லை. விஷயத்தைச் சொல்லி விட்டு வந்தேன். பூஜை நடந்து முடிகிற சமயத்தில்தான் அவர் வந்து நின்று, ''சாஸ்திரிகள் கைராசியைப் பார்க்கப் போகிறேன்!'' என்றார்.

''நன்றாகப் பாருங்கள்! நான்தான் ஸர்..... அவர்களுடைய வீட்டுக்குப் பூஜை செய்தேன்! நாளைக்கும் சொல்வார்!''

சாஸ்திரிகள் குறிப்பிட்ட ஸர் அவர்களை நான் எங்கே கண்டு, கேட்டு இந்த வார்த்தையை நிரூபித்துக்கொள்ளப் போகிறேன்!

''ஐயய்ய!'' என்றாள் ராஜம், ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வந்து.

''என்ன சமாசாரம்?''

''ஆபீஸ் ரூம் துளியூண்டு இருக்கிறது; ஹால் ஒரு அங்கணம் அளவு கூட இல்லை; ஸ்நான அறையில் ஒரு ஆள் நிற்க இடமில்லை. சமையல்கட்டானால் ஒரே கீக்கிடம்....''

ஸ்ரீ ஜயம் கடகடவென்று சிரித்தார். ''இப்போதே சொல்லி விட்டேன்... கட்டடம் கட்டின பிறகு, ஏன் இவ்வளவு பெரிசு போட்டீர்கள் என்று இந்த அம்மாளே குற்றம் சொல்லப் போகிறார். பார்த்துக் கொண்டிருங்கள்!'' என்று கூறிவிட்டு, காரில் போய் ஏறிக் கொண்டு விட்டார்.

நான் ராஜத்தைக் கோபித்துக் கொண்டு, ''உனக்கு ஆனாலும் இத்தனை வாய் ஆகாது... அரட்டை!'' என்றேன்.

''ஆ...மாம்! அவர் அங்கே மரத்தின் பின்னால் நிற்கப் போகிறார் என்று நான் கண்டேனா?... தவிர, அறைகள் சின்னதாக இருந்தால் அதை நாம் இப்போதே கவனித்தால்தானே உண்டு?''

எனக்கும் மனத்தில் அப்படித்தான் பட்டது. அறைகள் ரொம்ப ரொம்பச் சின்னவையாக இருந்த விட்டால் எப்படி ஆகிறது? ஆனால் அதை நான் யாரிடம் சொல்வது? மிகுந்த மனக் குழப்பத்துடன் வீட்டுக்கு வந்தேன்.

வீட்டுக்கு வந்ததும், 'டேப்'பை எடுத்துக் கொண்டு என் ஜாகையிலிருந்த அறைகளை அளந்து பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அவைகள் எல்லாம் புது வீட்டை விடச் சிறியவைகள்! என்ன! நம் கண்ணே நம்மை ஏமாற்றுகிறதா?

''ராஜம்! அநியாயமாக நீ ஜயத்தைப் புகார் சொல்லிவிட்டாய்! அவர் எத்தனை அனுபவசாலி!'' என்று, நான் கண்டு பிடித்த விஷயங்களை அவளுக்கும் எடுத்துச் சொன்னேன்.

மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு கார்ப்பரேஷன் சிப்பந்தி என்னைத் தேடிக்கொண்டு வந்து ஒரு கவரைக் கொடுத்தான். என் 'பிளான்' அங்கீகரிக்கப்பட்ட விஷயமாகத்தான் இருக்கும் என்று அவசரமாக அதை உடைத்துப் படித்தேன். என் நெஞ்சு உட்கார்ந்து போயிற்று.

''ஐயா! நீர் அனுப்பிய வீட்டுப் 'பிளான்' விஷயமாக மாறுதல் செய்ய வேண்டியிருப்பதால், நாளது திங்கள் கிழமை 11 மணி முதல் 1 மணிக்குள்ளாக இன்ஜினியரை வந்து நேரில் காண வேண்டியது. காணத் தவறினால், உமது 'பிளான்' ரத்து செய்யப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.''

பல நிமிஷங்கள் சமைந்து போய் உட்கார்ந்திருந்து விட்டு நிமிர்ந்தேன். அந்த லெட்டர் கொடுத்த ஆள் இன்னும் நின்று கொண்டே இருந்தான்.
''நீ ஏன் அப்பா நிற்கிறாய்?'' என்று அவனைக் கேட்டேன்.



''எதினாச்சும் இனாமுங்க!'' என்று கேட்டு, அவன் அசட்டுச் சிரிப்புடன் நாணிக் கோணிக் காதுக்குப் பின்னால் தலையைச் சொறிந்துகொண்டான்!
============== 
[ நன்றி : விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்: 

தேவன்: சில படைப்புகள்

5 கருத்துகள்: