திங்கள், 15 செப்டம்பர், 2014

சங்கீத சங்கதிகள் - 39

இசைக்கு ஒரு ராணி!
 டி.டி.கிருஷ்ணமாச்சாரி



செப்டம்பர் 16எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பிறந்தநாள். 

1968 .எம்.எஸ். அவர்கள் சங்கீத கலாநிதி விருது பெற்ற ஆண்டு.
அந்த வருடம் ‘விகடனில்’ ( 22 டிசம்பர் , 68 இதழில்) வந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் இதோ! 
=== 
''இன்று மாலை சௌந்தர்ய மஹாலில் ஒரு பெண் பாட்டுப் பாடுகிறாள். போவோம் வாருங்கள்...'' என்று என்னுடைய நண்பர் ஒருவர் என்னை அழைத்தார். அவர் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன். மேடையில் ஒல்லியாக, மெலிந்த உருவம் கொண்ட ஒரு சிறு பெண் பாடிக்கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. 'கணீர்' என்ற அந்தச் சாரீரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ''பரவாயில்லை; சின்னப் பெண் நன்றாகப் பாடுகிறாள். நல்ல சாரீரம்'' என்று என் நண்பரிடம் கூறினேன்.

''பிரமாதமான சாரீரம். ’ஏனாதி ஸிஸ்டர்ஸ்’ என்று ரொம்பப் பிரபலமானவர்கள் உண்டு. அதில் பெரியவளுடைய சாரீரம் பிரமாதமாக இருக்கும். இந்தப் பெண்ணுடைய சாரீரம் அதை விடச் சிறப்பாக இருக்கிறது'' என்றார் என் நண்பர்.

இது நடந்தது 1931-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்.

ஆமாம். நான் கேட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் முதல் கச்சேரி அதுதான்!

அதன்பிறகு, நான் எம்.எஸ். கச்சேரி கேட்கவே இல்லை. சங்கீத உலகிலே ஒரு பெரிய பரபரப்பையே அவர் உண்டாக்கிக்கொண்டு இருந்தார். எங்கு பார்த்தாலும் 'எம்.எஸ்., எம். எஸ்.' என்ற பேச்சுத்தான்! இடையில், சினிமாவில் சேர்ந்து நடித்தார் என்று கேள்விப்பட்டேன். நான் எதையும் பார்க்கவில்லை. அந்தச் சமயத்தில், எ.எஸ்.ஸின் பாட்டில் ஜி.என்.பி.யின் சாயல் இருக்கிறது என்று சிலர் என்னிடம் சொல்வார்கள்.   

எம்.எஸ். கச்சேரி என்னை வெகுவாகக் கவர்ந்தது 1953-ல்தான். அந்த நாள் கூட எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஜனவரி 25-ம் தேதி, டி.எம்.எஸ். மணி வீட்டில் கல்யாணம். நான் போயிருந்தேன். என்னை முதல் வரிசைக்கு அழைத்துக்கொண்டு போய், அப்போது முதல்மந்திரியாக இருந்த ராஜகோபாலாச்சாரியார் பக்கத்தில் உட்கார வைத்து விட்டார்கள்.

''முன்னெல்லாம் நல்லா பாடிண்டிருந்தா. இப்போ கொஞ்சம் மாறுதல் இருக்கு'' என்று என்னிடம் சொன்னார் ராஜகோபாலாச்சாரி. எனக்கென்னவோ அன்றைய கச்சேரி ரொம்ப நன்றாகவே இருந்தது. அப்போதுதான் எம்.எஸ்-ஸிடம் பரிபக்குவம் ஏற்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.

''நீங்க சொல்றது சரியில்லே. இப்பத்தான் அவர் சங்கீதத்திலே ஒரு பரிபக்குவம் ஏற்பட்டிருக்கு. உணர்ச்சியோடு பாடுகிறார்'' என்று என்னுடைய அபிப்பிராயத்தை ராஜகோபாலாச்சாரியிடம் சொன்னேன்.

அது ரொம்பவும் உண்மை. அப்போது அவருக்கு, செம்மங்குடியோட சிட்சை! நல்ல அப்பியாசம் ஏற்பட்டிருந்தது. அதற்குப் பிறகு எம்.எஸ். கச்சேரியை அடிக்கடி கேட்க, எனக்கு அவகாசம் ஏற்பட்டது. டெல்லிக்கு அடிக்கடி வருவார். வரும்போது சில சமயம் என் வீட்டில் தங்குவதுண்டு. அந்தச் சமயத்திலெல்லாம் அவருடைய சங்கீதத்தை நான் கேட்பேன். ''நீ தேர்தலுக்கு நில். இப்போது உனக்கு இருக்கிற மவுசுக்கு ஜெயித்துவிடுவாய்" என்று வேடிக்கையாகச் சொல்வேன்.

சங்கீதம்தான் எம்.எஸ்.ஸுக்கு உலகம். அதைத் தவிர, அவருக்கு வேறு சிந்தனையே கிடையாது. எப்போதும் அதே தியானம்தான்.
அவர் சங்கீதத்திலே ஒரு சிறப்பு, படிக்குப் படி விருத்தி! பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிற மனப்பக்குவம் அவ ருக்கு உண்டு. சாதகம், உணர்ச்சி, கிரகித்துக்கொள்கிற சக்தி எல்லாம் உண்டு. பகவான் நல்ல சாரீரத்தைக் கொடுத்திருக்கிறார். சாதகம் செய்து அந்தச் சாரீரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார் அவர். எனக்குத் தெரிந்து இப்படிப்பட்ட இனிய சாரீரம் வேறு யாருக்குமே கிடையாது என்று சொல்வேன். அவருடைய க்ரமேண ஞான அபிவிருத்தி, அவரை விடாமல் கேட்கிறவர்களுக்கு நன்றாகப் புரியும்.

சமீபத்திலே ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன். சக்ரவாஹ ராகம் பாடி, 'சுகுண முலேகா' பாடினார். அது ரொம்ப இடக்கான ராகம். கொஞ்சம் இப்படி அப்படிப் போனால், சௌராஷ்டிரத்தில் கொண்டு போய் விட்டுவிடும். அன்றைக்கு அவர் பாடினது, பெரிய வித்வான்கள் வரிசையில் அவருக்கு ஓர் இடம் இருக்கிறது என்பதை நிரூபித்தது.
அவர் கச்சேரியை வெளிநாட்டுக்காரர்கள் கேட்டு ரசித்திருக்கிறார்கள். நம் சங்கீதத்தை அவர்கள் எவ்வளவு தூரம் ரசித்திருப்பார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், எம்.எஸ். ஸுடைய வாய்ஸ் அவர்களை மயக்கியிருக்கும்.

ஜவஹர்லால் அவரை 'இசைக்கு ஒரு ராணி' என்று சொன்னார். அது முற்றிலும் உண்மை!

பரிபூர்ண பக்தியுடன், விநயத் துடன் பெரியவர்களிடமிருந்து நல்லதை எல்லாம் கிரகித்துக் கொண்டு, 'வித்வத்' தன்மையை அடைந்திருக்கிற திருமதி எம்.எஸ்.ஸை. இந்த வருஷம் மியூசிக் அகாடமி கௌரவிப்பது ரொம்பப் பொருத்தம்.
              
 [ நன்றி: விகடன் ] 






2 கருத்துகள்:

  1. அன்புடையீர்,
    வணக்கம். நலமா?

    இன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அபுசி-தொபசி-45’ வெளிவந்துள்ளது. அதில் தங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

    கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
    http://chellappatamildiary.blogspot.com/2014/09/107-45.html

    படித்து, கருத்துரை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.

    அன்புடன்,
    இராய செல்லப்பா
    (Y.Chellappa) சென்னை.

    பதிலளிநீக்கு
  2. Recently read your article on S.V.VENKATARAMAN. and about Mannum Imayamali song. The record had almost vanished even from web. Mukundan is having it in his streaming site but he zealously guards it. Managed to extract it with the help of a friend in technology and posted it in youtube. It is a lovely song. Orchestration , rendering, lyrics, ..everything there. The audio may be muted by youtube as license infringement anytime. May I request you to share that link under ms.subbulakshmi pages and s,v,venkataraman pages? https://www.youtube.com/watch?v=N8jAHx4TlXA

    பதிலளிநீக்கு