பெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 2
உ.வே.சாமிநாதய்யர்
முந்தைய பதிவு
பெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1
( தொடர்ச்சி)
'சங்கீத மருந்து'
ஒரு சமயம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்கு இடுப்பில் வாயுப் பிடிப்பினால் உபத்திரவம் உண்டாயிற்று; நிமிரவும், நடக்கவும், சரியானபடி உட்காரவும் முடிய வில்லை. இடைவிடாமல் வலி இருந்து வந்தது. அவருடைய நிலைமையைக் கண்டு மடத்தில் இருந்தவர்கள் மிக்க வருத்தம் அடைந்தார்கள். தக்க வைத்தியர்களைக் கொண்டு மருந்துகளைத் தடவச் செய்தும் ஒற்றடம் கொடுத்தும் வந்தனர். ஆயினும், வாயுவின் கொடுமை குறையவில்லை. இங்ஙனம் சில தினங்கள் சென்றன.
ஒருநாள் தமக்கு இருந்த வலி தாங்கமாட்டாமல் தேசிகர் உட்கார்ந்திருந்தார். திடீரென்று அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டாயிற்று. எதையோ உற்றுக் கேட்பவர்போல இருந்தார்; பிறகு அருகில் இருந்தவர் களை நோக்கி, "பெரிய வைத்தியநாதையரவர்கள் வரு கிறார்கள்; அவர்களுடைய வண்டிக் காளையின் சலங்கை யொலி என் காதில் விழுகிறது; அவர்கள் பாட்டைக் கேட்டு நெடுநாளாயிற்று. அவர்கள் வந்தால் தடை செய்யாமல் உள்ளே அழைத்து வாருங்கள்" என்றார். நோயினால் துன்புறும்போது இவர் வந்தால் பின்னும் துன்பமுண்டாகுமென்று மடத்திலுள்ளவர்கள் தாமே எண்ணிக்கொண்டு ஒருவேளை இவரை உள்ளே விடாமல் இருந்துவிட்டால் என் செய்வதென்பது தேசிகருடைய எண்ணம்.
பெரிய வைத்தியநாதையர் மிக்க உத்ஸாகத்தோடு மடத்துக்குள் நுழைந்தார். இவர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காரியஸ்தர்கள் இவரை உபசாரத்தோடு உள்ளே அழைத்துச் சென்றார்கள். அதனால் இவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. தேக அசௌக்கியத்தால் தேசிகர் வருந்துவதை இவர் அறியார். உள்ளே நுழையும்போதே, "ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' என்ற கீர்த்தனத்தின் பல்லவியைச் சொல்லிக் கொண்டு வந்தார்.
சுப்பிரமணிய தேசிகர் இவரை முகமலர்ச்சியுடன் வரவேற்றார்; "இருக்க வேண்டும்; யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப்போல் சங்கீத மத யானையாகிய உங்கள் வரவை உங்கள் வண்டிக் காளைகளின் சலங்கையொலி முன்னே தெரிவித்தது; நெடு நாளாகக் காணவில்லையே யென்றிருந்த வருத்தம் நீங்கி மிக்க சந்தோஷம் உண்டாயிற்று" என்றார்.
பெரிய வைத்தியநாதையர் புன்னகையோடு உட்கார்ந்து பாட ஆரம்பித்து விட்டார். காம்போதி ராகத்தை ஆலாபனம் செய்தார்; பல்லவி பாடினார்; ஸ்வரம் பாடினார்; இப்படி மூன்று மணி நேரம் தம்முடைய கான வர்ஷத்தைப் பொழிந்தார்.
சுப்பிரமணிய தேசிகர் தம் வாயு உபத்திரவத்தை மறந்து கேட்டுக்கொண்டிருந்தார். பெரிய வைத்திய நாதையருடைய இசைமாரி அந்த நோயின் வெம்மையை அவித்து மறைத்துவிட்டது. தேசிகர் தம் தேகத்தையே மறந்து கேட்டபோது அத்தேகத்திலுள்ள நோய்த் துன்பம் எப்படி நினைவுக்கு வரும்?
சங்கீதம் ஒருவாறு நின்றமை இனிய மழை பெய்து ஓய்ந்ததுபோல் இருந்தது. தாம் அதுகாறும் நோயை மறந்து கேட்டது தேசிகருக்கே மிக்க வியப்பை உண்டாக்கிற்று; "உங்களுக்குப் பெரிய வைத்தியநாதைய ரென்ற பெயர் அமைந்திருப்பது பொருத்தமானதே. சில நாளாக நான் வாத நோயினால் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேன். இடுப்பை வாயு பிடித்துக் கொண்டது. நிமிஷத்துக்கு நிமிஷம் பதினாயிரம் தேள் கொட்டுவது போன்ற வலி இருந்தது. எந்த வைத்தியத்துக்கும் அது பயப்படவில்லை. உங்களுடைய பாட்டு இந்த மூன்றுமணி நேரமாக அதன் ஞாபகமே இல்லாமற் செய்து விட்டது. இப்பொழுதும் அந்த உபத்திரவம் தலை நீட்ட வில்லை. உங்களுடைய சங்கீதமாகிய மருந்து ஆச்சரியமான பலனை உடையது. அதைக் கொண்டு வைத்தியம் செய்து நோயை மறக்கச் செய்த நீங்கள், பெரிய வைத்தியரென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இன்றைக்கு நீங்கள் செய்த உபகாரத்தை வேறு யாரால் செய்ய முடியும்?" என்று தேசிகர் இவரை நோக்கிக் கூறினார்.
"எல்லாம் சந்நிதானத்தின் ஆதரவின் விசேஷமே யன்றி வேறொன்றுமில்லை. இங்கே வந்தால் எனக்கே ஒரு தனி உத்ஸாகம் உண்டாகிவிடுகிறது. மற்ற இடங்களில் நான் பாடும் முறை வேறு; இங்கே பாடும் விதம் வேறு!" என்றார் இவர்.
அன்றைக்கு முதல் நாள் காசியிலிருந்து வந்த பக்திமானும், ஆதீனத்து அடியவருமாகிய தம்பிரான் ஒருவர் சுப்பிரமணிய தேசிகருக்காக உயர்ந்த பட்டில் சரிகை வேலைகளுடன் மெத்தை, தலையணை, திண்டு, கொட்டை முதலியவைகளைக் காசியிலே தைக்கச் செய்து, அவற்றைத் திருநெல்வேலிக்குக் கொணர்ந்து நல்ல பஞ்சை அடைத்துக்கொண்டு கல்லிடைக் குறிச்சிக்கு வந்து அவற்றைத் தேசிகருக்குமுன் வைத்து வணங்கி, " சந்திதானத்தின் திருமேனிக்கு உவப்பாக இருக்க வேண்டு மென்று அடியேன் இவற்றைக் கொணர்ந்தேன்; அங்கீ கரித்தருளவேண்டும்" என்று விண்ணப்பம் செய்து கொண்டார். தேசிகர் அவற்றை எடுத்துத் தனியே உள்ளே வைக்குமாறு காரியஸ்தர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மறுநாள் பெரிய வைத்தியநாதையர் பாடி நோயை மறக்கச்செய்த நிகழ்ச்சி நடந்தது. தேசிகர் அந்த மெத்தை முதலியவற்றை எடுத்து வரச்செய்து பெரிய வைத்தியநாதையரைப் பார்த்து " நீங்கள் இவற்றை உபயோகித்துக்கொள்ள வேண்டும். உங்களால் என் நோயை மறந்தேன். அதற்கு இந்த மெத்தை முதலியவை அறிகுறியாக இருக்க வேண்டும்" என்றார். சுக புருஷராகிய வைத்தியநாதையருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. மெத்தை முதலியன இவருடைய வண்டியிற் கொணர்ந்து வைக்கப்பட்டன.
அப்போது, அவற்றை முதல்நாள் கொண்டுவந்த தம்பிரானுக்குக் கண்களில் நீர் தோன்றியது. அருமையாகப் பெற்று வளர்த்த குழந்தையை அதன் தந்தை சிறிதும் யோசியாமல் யாருக்காவது கொடுத்துவிட்டால், அக்குழந்தையைப் பெற்ற தாய்க்கு எவ்வளவு துக்கம் இருக்குமோ அத்தனை துக்கம் அவருக்கு இருந்தது. அருகில் இருந்தவர்களுக்கோ இந்த வித்துவானைக் காணக் காணக் கோபம் உண்டாயிற்று; ' இவன் எங்கே வந்தான்?' என்று முணுமுணுத்தார்கள். தேசிகரோ, ' இந்தச் சமயத்தில் இவர் வந்து நம் துன்பத்தை மறக்கச் செய்தாரே!' என்ற நன்றியறிவினால் முகமலர்ச்சியுடன் இருந்தார். இப்படிப் பலவகையான அபிப்பிராயங்கள் கலந்திருந்த அக்கூட்டத்தில, வைத்தியநாதையர் யானையைப்போலவே கம்பீரத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். தம்பிரான்களுடைய கோபக்குறிப்பை இவர் லக்ஷியம் செய்யவில்லை. சந்தோஷ மிகுதியானால் தேசிகரை யோக்கி, "சந்நிதானத்தில் கொடுத்த மெத்தை யையும், மற்றவைகளையும் அருமையறிந்து உபயோகப் படுத்துபவர் என்னைப் போல வேறு யாரும் இரார். நான் இதுகாறும் பெற்ற பொருள்களுள் இவற்றிற்குச் சமமானவை வேறு இல்லை. மிகவும் சந்தோஷம். எப்போதும் சந்நிதானத்தின் அன்பு குறையாமல் இருக்க வேண்டுமென்பதே என் பிரார்த்தனை" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார். போகும்போதே மெத்தை முதலியவற்றை வண்டியிலே விரிக்கச்செய்து பேருவகையோடு ஏறிக்கொண்டு சென்றார்.
இவர் சென்ற பின்பு, தம்பிரான் முதலியவர்களுடைய உள்ளக் கருத்தை அறிந்துகொண்ட சுப்பிர மணியதேசிகர், "மெத்தையை இவருக்குக் கொடுத்தது பற்றி உங்களுக்கு வருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. இவர் இன்று எனக்குச் செய்த மகோபகாரத்திற்கு என்னதான் செய்யக்கூடாது? நான் படும் அவஸ்தை உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. இவ்வளவு நேரம் நான் அதை மறந்திருந்தது எவ்வளவு ஆச்சரியம்! இந்த நன்மையை நீங்கள் நினைக்கவில்லையே! அன்றியும் *துறவியாகிய எனக்கு மெத்தை முதலியவை எதற்கு?" என்று சமாதானம் கூறினார்.
-----------
* ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் பகலில் ஒரு தலையணையை மட்டும் வைத்துக்கொண்டு, வெறுந் தரையிலேதான் படுத்துக்கொள்வார்கள். இரவில் ஒரு முழ அகலமுள்ள ரத்ன கம்பளத்தை விரித்துக்கொள்வார்கள். சில சமயங்களில் அங்க வஸ்திரத்தையே சுருட்டித் தலையணையாக வைத்துக் கொள்வது முண்டு.
சங்கீதமா? வலிப்பா?
அக்காலத்தில் எட்டயபுரம் ஜமீன்தார் மைனராக இருந்தமையால், சில வருஷங்கள் அந்த ஜமீன் அரசாங்கத்தாருடைய பார்வையில் இருந்து வந்தது.
ஜமீன்தாருக்கு உரிய பிராயம் வந்தவுடன், ஜமீன் மீண்டும் அவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அங்ஙனம் ஒப்புவிக்கப்பட்ட காலத்தில் வந்திருந்த ஜில்லா கலெக்டர், ஜில்லா ஸர்ஜன் முதலிய பல பெரிய உத்தியோகஸ் தர்களுக்கும் பல ஜமீன்தார்களுக்கும் ஒரு பெரிய விருந்து நடைபெற்றது. அப்பொழுது பல சங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். அவர்களுள் பெரிய வைத்தியநாதையரைப் பாடும்படி செய்தார்கள்.
பெரிய மாளிகையொன்றில் பெருங்கூட்டத்துக்கிடையே இவருடைய வினிகை நிகழ்ந்தது. 'பல பெரிய உத்தியோகஸ்தர்களுடைய முன்னிலையில், பல வித்துவான்கள் இருக்க நம்மைத்தானே முதலிற் பாடச் சொன்னார்கள்' என்ற எண்ணத்தால் இவருக்கு உத்ஸாகம் அதிகமாயிற்று. அதனால் இயல்பாகவே நன்றாகப் பாடும் இவர் அன்று பின்னும் நன்றாகப் பாடலானார். இவருடைய சங்கீத சாமர்த்தியம் எவ்வளவுக் கெவ்வளவு மிகுதியாக வெளிப்பட்டதோ, அவ்வளவுக்கவ்வளவு இவருடைய அங்கசேஷ்டைகளும் வெளிப்பட்டன.
அங்கே வந்திருந்த ஜில்லா ஸர்ஜன் ஒரு வெள்ளைக் காரர். அவருக்கு நம்முடைய தேசத்துச் சங்கீதம் விளங்கவில்லை. அதனால் அவருடைய காது அப்பொழுது பயன்படவில்லை. ஆயினும் வைத்தியநாதருடைய தேகத்தில் உண்டாகும் சேஷ்டைகளை அவர் கண்கள் கூர்ந்து கவனித்தன. நேரம் ஆக ஆக அந்தச் சேஷ்டைகள் அதிகப்பட்டன; ஸர்ஜனுடைய கவனமும் அதிகமாயிற்று.
வைத்தியநாதையருடைய குடுமி அவிழ்ந்து நான்கு புறமும் விரிந்து பரவியது; கண்கள் பிதுங்குவன போல இருந்தன; வாய் ஆவெனத் திறந்தது; கைகளோ தரையிலும் துடையிலும் பளீர் பளீரென்று அறைந்தன; அருகிலுள்ளவர்கள் விலகிக்கொண்டார்கள். இவற்றை யெல்லாம் ஸர்ஜன் பார்த்தார்; 'சரி, சரி, இவர் பாட வில்லை; மத்தியிலே இவருக்கு ஏதோ வலிப்பு வந்துவிட் டது; இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் இதைச் சங்கீத மென்று எண்ணி இந்த மனுஷரைச் சாவ அடித்து விடுவார்களென்று தோற்றுகிறது' என்று அவர் எண்ணினார்.
வித்துவான் துள்ளித் துள்ளி நான்கு புறமும் திரும்பிச் செய்யும் சேஷ்டைகளை மட்டும் கவனித்த அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவற்றோடு மிக்க பலமாக உச்சஸ்தாயியில் வித்துவான் பல்லவியை ஏகாரத்துடன் முடிக்கும்போது, அந்தக் கோஷம் வலிப்பு வந்தவன் உயிருக்கு மன்றாடிக் கத்துவதைப்போல ஸர்ஜனுக்குத் தோற்றியது. அதற்கு மேல் அவராற் பொறுக்க முடியவில்லை; அவர் தம் கைக்கடியாரத்தை எடுத்தார்; கலெக்டரை நோக்கினார்; "ஐயா, இந்த மனுஷர் இன்னும் ஐந்து நிமிஷம் இப்படியே கத்தினால் நிச்சயமாக உயிர் போய்விடும். நிறுத்தச் சொல்ல வேண்டும். இப்பொழுது இவருக்கு வலிப்பு ஏதோ கண்டிருக்கிறது" என்று வேகத்தோடு சொன்னார். கலெக்டர் சமஸ்தானத்தின் முக்கிய அதிகாரியை அழைத்து இதை அறிவித்தார். அவர், "இவர் பாட்டல்லவா பாடுகிறார்!" என்றபோது ஸர்ஜன், "பாடவாவது! முன்பு பாடி யிருக்கலாம். இப்பொழுது பாடவேயில்லை. எனக்கல்லவா அந்த விஷயம் தெரியும்! இவரை நிறுத்தச் செய்யாவிட்டால் அப்புறம் விபரீதமாகிவிடும்!" என்றார். அதிகாரி என்ன செய்வார் பாவம்! ஜில்லாவுக்கே வைத்திய அதிகாரியாக இருப்பவர் வலிப்பென்று சொல்லும்பொழுது அதை மறுத்துப் பேச அவருக்குத் துணிவு உண்டாக வில்லை.
அதிகாரி மெல்லப் பெரிய வைத்தியநாதையர் அருகிற்சென்று பக்குவமாக, "இன்னும் சில வித்துவான்களைப் பாடச் சொல்ல வேண்டுமென்று கலெக்டர் துரை முதலியவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் அவகாசம் குறைவு; அதற்குள் சிலரைப் பாடச்சொல்ல வேண்டும். தாங்கள் தயை செய்து அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்; அன்றியும் உயர்ந்த சம்மானங்களையும் அளித்தார். சட்டென்று நிறுத்தும்படி சொன்னால், மிக்க தைரியசாலியாகிய வைத்தியநாதையரால் ஏதாவது விபரீதம் விளையுமென்பதை அவ்வதிகாரி உணர்ந்தவர். அவர் வேண்டுகோளின்படியே இவர் ஒருவாறு தமது பாட்டை முடித்து மரியாதைகளைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார்.
பிறகு அங்கிருந்த வித்துவான்களுள் ஸ்ரீ வைகுண்டம் சுப்பையரென்ற ஒருவர் பாடினார். அவர் சித்திரம் போல இருந்து பாடும் இயல்புள்ளவர். அவருடைய பாட்டு அனைவருக்கும் திருப்தியை விளைவித்தது; ஸர் ஜன், "இதுதான் பாட்டு; இவரல்லவா உண்மையாகப் பாடுபவர்!" என்று தம்முடைய மதிப்புரையில் வெளி யிட்டார்.*
---------
* மேலேயுள்ள இரண்டு நிகழ்ச்சிகளும் மேலகரம் ஸ்ரீ சுப்பிர மணிய தேசிகரவர்கள் கூறியவை.
பேயாட்டம்
தஞ்சாவூரில் ஒரு முறை இவர் பாடினார்; வழக்கம் போல இவருடைய சேஷ்டைகள் இருந்தன; அப்போது அங்கிருந்தவரும், தஞ்சாவூர் சமஸ்தானம் சங்கீத வித்துவான்களில் ஒருவருமாகிய *தோடி சீதாராமைய ரென்பவர் அவற்றைப் பார்த்துவிட்டு, "இந்தப் பெரிய வைத்தி பேயாடுகிறான்; கிஞ்சிராக்காரன் உடுக்கை யடிக்கிறான்; கடவாத்தியக்காரன் குடமுடைக்கிறான்!" என்று சொல்லி ஆச்சரியப்பட்டாராம்.
--------
* இவர் ஸோல்ஜர் சீதாராமையரென்றும் கூறப்படுவார்.
சித்தபேதம்
லாகிரி வஸ்துக்களை உபயோகித்து வந்ததன் பயனாக இவர் பிற்காலத்தில் சிறிது சித்தபேதத்தை யடைந்தார்; இவருடைய கம்பீரம் குறைந்தது; ஓரிடத்தில் பாடிக் கொண்டே யிருப்பார்; திடீரென்று நிறுத்திவிட்டு எங்கேனும் போய்விடுவார். மிகவும் உச்ச ஸ்தாயியில் பாடி வந்ததனால் இவருக்குச் செவிட்டுத் தன்மையும் உண்டாயிற்று.
அக்காலத்தில், பல இடங்களில் முன்னமே இருந்த பழக்கமிகுதியால் அங்கங்கே இருந்தவர்கள் தங்களிடம் இவர் வந்தபோது ஏதேனும் உதவி செய்து பாதுகாத்து வந்தார்கள்.
உடுக்கடித்துப் பாடியது
ஒரு சமயம் மைசூர் மகாராஜாவைப் பார்க்கவேண்டு மென்றெண்ணி அந்நகருக்குப் போயிருந்தார். அங்கே மருத்துவக்குடி ஜஞ்சாமாருதம் சுப்பையர் முதலிய சங்கீத வித்துவான்கள் இருந்தனர். அறிவின் மாறுபாட் டினால் ஏதேனும் விபரீதமாக இவர் நடந்து கொண்டால் என்ன செய்வதென்றெண்ணி அங்குள்ளவர்கள் இவருடைய வரவை அரசருக்குத் தெரிவிக்கவில்லை; எப்படி யேனும் அரசரைப் பார்த்துவிட்டே போவதென்று பிடி வாதத்தோடு இவர் அங்கே சில நாள் ஒரு சத்திரத்தில் உண்டு தங்கியிருந்தார். சிலர் இவருக்கு வேண்டியவற்றை அளித்துப் பாதுகாத்தனர்.
ஒருநாள் மகாராஜா அரண்மனையிலிருந்து வெளியே புறப்பட்டு வந்தார். அப்போது தெருவிலுள்ள ஒரு கோயிலுக்கு அருகிலிருந்த இவர் அங்கிருந்த பூசாரியின் கையிலிருந்த உடுக்கையை வாங்கி அதை அடித்துக் கொண்டே பாடத் தொடங்கினார். உடுக்கையினுடைய முழக்கத்துக்கு நடுவே இவருடைய இனிய சங்கீதம் வீதி வழியே சென்ற மன்னரின் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர் தம் வாகனத்தை நிறுத்தச் செய்து பாடுபவர் யாரென்பதை விசாரித்தார். பெரிய வைத்தியநாதைய ரென்பதை அறிந்தார்; இவருடைய ஆற்றலைப்பற்றி அவர் முன்னமே கேள்வியுற்றவராதலின், உடனே இவரை அரண்மனைக்கு வருவித்துப் பாடச் செய்து கேட்டு மகிழ்ந்தார். இவர் மிக அருமையாகப் பாடி மகா ராஜாவால் அளிக்கப்பெற்ற சம்மானங்களைப் பெற்று ஊர்வந்து சேர்ந்தார்.
பிற்கால நிலை
மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் பெரிய பட்டத்தைப் பெற்றுத் திருவாவடுதுறையில் இருந்த காலத்தில், இவர் சிலமுறை அங்கே சென்றதுண்டு. இவருடைய சக்தி மழுங்கியிருந்தபோது இவரை நான் பார்த்திருக்கிறேன். அப்போது இவர் திடீரென்று அழுவார்; பிறகு சிரிப்பார். பழைய சமாசாரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தால் இவருக்கு உத்ஸாக முண்டாகிவிடும்; இடையிடையே நிறுத்தி விடுவார்.
ஒருமுறை இவர் திருவாவடுதுறைக்கு வந்த காலத்தில் என்னுடைய தந்தையார் இவரை வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்தனர். இவர் மைசூரில் தாம் அரசரைக் கண்ட வரலாற்றைச் சொன்னார். "அங்கே இருந்த பயல்கள் என்னை உள்ளே விடாமல் தடுத்தார்கள். நானா விடுபவன்? உடுக்கையைத் தட்டிப் பாட ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் ராஜாவாவது, சக்கரவர்த்தியாவது! எல்லாரும் மயங்க வேண்டியதுதானே!" என்று இவர் அதைப்பற்றிக் கூறினார். பிறகு சில கீர்த்தனங்களைப் பாடினார். பாட்டு மிக அருமையாக இருந்தது. திடீரென்று திண்ணையிலிருந்து குதித்து எங்கேயோ போய்விட்டார்.
அப்போதிருந்த இவருடைய நிலையைக் கண்டு நான் வருந்தினேன். பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தினால் அருமையான வித்தை கிடைத்திருந்தும், அதைத் தக்கபடி வைத்துக் காப்பாற்றாமல் மனம் போனவாறு உழன்று அறிவையும் தேகத்தையும் கெடுத்துக் கொண்ட இவருடைய பேதைமையை நினைந்து இரங்கினேன்; கல்வி அறிவு ஒழுக்கம் என்பவற்றை ஒருங்கு சேர்த்துப் பெரியோர்கள் கூறுவதில் எவ்வளவு உயர்ந்த கருத்து அடங்கி யிருக்கிறதென்பதை உணர்ந்தேன்.
பெரிய வைத்தியநாதையருடைய குறைகள் பல; இவருடைய வித்தை பெரிது. அந்த வித்தையின் பிரகாசம் சில காலம் வீசியது; பிறகு இவருடைய குறைகளால் அது மங்கியது. அதுவே இவர் ஜாதகமாக அமைந்து விட்டபோது நாம் என்ன செய்யலாம்!

[ நன்றி : நல்லுரைக் கோவை, முதல் பாகம் ]
தொடர்புள்ள பதிவுகள்;
என் சரித்திரம்: உ.வே.சா
கம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா
உ.வே.சா
மற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்
தொடர்புள்ள பதிவுகள்;
என் சரித்திரம்: உ.வே.சா
கம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா
உ.வே.சா
மற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்
Certainly a case of interplay of Nature and nurture in the case of this musician. What you inherit and how you maintain it. It applies to everybody in any field.
பதிலளிநீக்குஇசை ஆர்வம் உள்ளவர்கள் அறிய வேண்டிய செய்திகள் பல. அருமையான தகவல்களைச் சொல்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஇக்காலத்து வித்துவான்கள் சிலர் உடுக்கையில்லாமலே பாடுகிறார்கள் என்பதை மீ-டூ மூலம் தெரிந்துகொண்டோமே. உடுக்கையுடன் பாடுவது பெரிய விஷயமா என்ன?
பதிலளிநீக்கு