புதன், 29 ஏப்ரல், 2015

பாரதிதாசன் -2

ரவிவர்மா பரமசிவப் பட பாரதி 
பாரதிதாசன் 

29 ஏப்ரல் . இன்று பாரதிதாசன் பிறந்த தினம்.
ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பிறந்த தினமும் தான்!



இவ்விரண்டும் சேர்ந்து எனக்கு நினைவு படுத்திய இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன்!

இந்தக் கட்டுரைக்கு ஒரு முன்னுரையாக ‘பாரதி’ அறிஞர் ரா.அ.பத்மநாபன் ஒரு நூலில் எழுதியதில் ஒருபகுதியை முதலில் இடுகிறேன்.

பாரதியாரால் ஊக்குவிக்கப் பெற்றுக் கவியாகி, கவிதையில் பாரதியாரின் நேர் வாரிசாகத் திகழ்ந்த “பாரதிதாசன்” தாம் பாரதியாரை முதன் முதலில் சந்தித்த சுவையான சந்தர்ப்பத்தை இங்கு அழகுற விவரிக்கிறார். 

பாரதியாரை விட ஒன்பது வயது சிறியவரானாலும், பாரதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விளங்கிய பாரதிதாசன், கடைசி வரை பாரதியாரை “ஐயர்” என்றே அழைப்பார். பாரதியைத் தவிர நிறை, எடை, தெய்வம் ஏதுமில்லை  அவருக்கு; “ஐயரை” யாரேனும் குறை சொல்லிவிட்டால் பொல்லாத கோபம் வந்துவிடும். அது மட்டுமல்ல. சாதாரணமாகப் பாரதியார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே குரல் உயர்ந்துவிடும்:  ஏதோ ஆவேசம் வந்தவர் போலப் பேசத் தொடங்கிவிடுவார் . ...... 

1939-இல் “ஹிந்துஸ்தான்” தமிழ் வாரப் பத்திரிகையில் இந்நூல் பதிப்பாசிரியர் வெளியிட்ட , ‘பாரதி மல’ரில் இக்கட்டுரை பிரசுரமாயிற்று. அனுமதியுடன் வெளியிடப் பெறுகிறது “ 
                                                                   --ரா.அ.ப. -- 

இப்போது  பாரதிதாசன் பேசுகிறார்!
=====

பாரதியார் பாடி வெளியிட்டிருந்த ' சுதேச கீதங்கள்' புதுச்சேரியில் படித்தவர்களிடையே உலவியிருந்தது. குவளை (குவளை கிருஷ்ணமாச்சாரியார்) அந்தப் பாட்டுக்களில் சிவற்றைக் கூவிப் பாட நான் கேட்டிருக்கிறேன். என் ஆசைக்கு ஒரு புத்தகம் கிடைத்தது ஒரு நாள்.

சுதேச கீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு முணுமுணுத்து வந்தேன். 'இந்தியா' பத்திரிகையில் சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு வளைவுகள், குவளையின் கூச்சல் இவை எல்லாம் சுதேச கீதங்களின் உட்பொருளை எனக்கு விளக்கின. அதன் பிறகு கொஞ்சம் விஷயமான உணர்வோடும், 'நான் ஓர் இந்தியன்' என்ற அகம்பாவத்தோடும் அப்பாடல்களைப் பாட முடிந்தது நாளடைவில்!

எனது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கருக்குக் கல்யாணம் வந்தது. மாலை 3 மணிக்குக் கல்யாணப் பந்தல் பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில் நானும் ஒருவன்.

கணீரென்று ஆரம்பித்தேன். "வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ!" என்பதை. அப்போது என் பின் ஒருபுறமாக, இதற்குமுன் நான் வீதியில் பார்த்த சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றில் ஒன்று ரவிவர்மா 'பரமசிவம்'.



வேணு நாய்க்கர், "இன்னும் பாடு சுப்பு" என்றார்.

நான், "தொன்று நிகழ்ந்த தனைத்தும்" என்ற பாட்டைப் பாடினேன்.

சபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது பேர் இருக்கும். 30 பேர்வழிகளில் சுமார் 25 பேர்கள், நான் பாடும் போது, அந்த ரவிவர்மா பரமசிவத்தையே பார்க்கிறார்கள். அந்த பரமசிவத்தின் பெயர், விலாசம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு குறிப்பிடத் தக்கவராக இருக்கலாம் என்று தோன்றிற்று.



என்னை மேலும் பாடச் சொன்னார் வேணு நாய்க்கர். பாடினேன்.

அப்போது வேணு நாய்க்கர், "அவுங்க யார் தெரியுமில்ல?" என்று கேட்டார்.

தெரியாது என்று கூட நான் சொல்லி முடிக்கவில்லை. ரவிவர்மா படம்: "நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ?" என்று என்னைக் கேட்டார்.

நான்: "கொஞ்சம்."

'படம்': "உணர்ந்து பாடுகிறீர்கள்."

வேணு நாய்க்கர், அப்போது, "அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்களே?" என்று 'பரமசிவப் படத்தை' எனக்கு அறிமுகப்படுத்தினார்.

எனக்கு நாணம். சந்தோசம். பயம். அப்போது என் மூஞ்சியை நான் கண்ணாடி எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நான் ஓர் அசல் இஞ்சி தின்ற குரங்கு. பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார், நான் அப்போது என்ன பதில் சொன்னேன் என்பவைகளைக் கேட்டால் அப்போதே என்னால் சொல்ல முடியாது. இப்போது என்னால் சொல்ல முடியுமா?

கடைசியாக பாரதியார் சொல்லிய வார்த்தையை மாத்திரம் நான் மறந்து போகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன் என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி விடக் கூடும் என்று அதன் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.

அவர் கூறிய வார்த்தைகளாவன:

"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே?"

நான் வீதியில் அடிக்கடி பார்த்து, "இவர் ரவிவர்மா படத்தில் காணும் பரமசிவம் போல் இருக்கிறார்" எனறு ஒப்புக் கூட்டி நினைத்த மனிதர் பாரதியார் என்று தெரிந்து கொண்டது ஒன்று. அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று. அவர் எங்கள் ஊர் பிரபலஸ்தர் பொன்னு முருகேசம் பிள்ளை முதலியவர்களால் பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று -- அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச் சந்தோஷமயமாக்கிவிட்டன. மறு நாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன் பாரதியார் வீட்டுக்குப் போகப் போகிறேன். மறுநாள் என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான் கவலையாய்க் கிடந்தது.

நானும் வேணு நாய்க்கரும் பாரதியார் வீட்டு மாடியில் ஏறிப் போகிறோம்... வீணையின் தொனி. ஆனால் அதில் எழுத்துக்களின் உச்சரிப்பு என் காதில் கேட்கிறது. நான் மாடியின் கூடத்தில் பாரதியாரை, அவர் பக்கத்தில் பாடிக் கொண்டிருக்கும் சிவா நாயகரை, வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் தம்பி சாமிநாத ஐயரை, கோவிந்த ராஜுலு நாயுடுவைப் பார்த்தேன். நாயகர் பாட்டுக்கு பாரதியார் 'ஆஹா' போடும்போது நான் கும்பிட்டேன். பாரதியார் கும்பிட்டு, "வாருங்கோ, உட்காருங்கோ. வேணு உட்கார். குயில் பாடுகிறது. கேளுங்கோ" என்றார். சிவா நாயகருக்குப் பாரதியார் 'குயில்' என்று பெயர் வைத்திருந்தார்.

பிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு. அதன் பிறகு என்னைப் பற்றிய விவரம் நடந்தது. கொஞ்ச நேரம். "எனக்கு உத்தரவு கொடுங்கள்" என்று பாரதியார் அதே கூட்டத்தில் ஒரு புறமாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார். மீதியுள்ள நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். எனக்குப் பேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அங்கு ஒரு மூலையில் கிடந்த கையெழுத்துப் புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே என் எண்ணம் சென்று மீண்ட வண்ணமிருந்தது. மெதுவாக நகர்ந்து அந்தப் புத்தகத்தின் பக்கத்தில் உட்கார்ந்தேன். பிறகு அதைக் கையில் எடுத்தேன், விரித்தேன்... வசமிழந்தேன்.

நான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே என் காலத்தைக் கடத்தியிருந்தவன். என் ஆசிரியரும், புதுச் சேரியில் பிரபல வித்துவானுமாகிய பங்காரு பத்தர், மகாவித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை இவர்களால் நடத்தப்படும் கலைமகள் கழகத்தின் அங்கத்தினன். பழந்தமிழ்ச் செய்யுட்கள் போலவே யாருக்கும் புரியாதபடி எழுதுவதுதான் கவிதை என்ற அபிப்பிராயமுள்ளவன். கடிதம் எழுதும்போதுகூடக் கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கௌரவம் என்ற தப்பெண்ணமுடையவன்.

பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர் உலகில் சேர்த்தது.

நானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள கையெழுத்துப் புத்தகமும் ஒரு பக்கம்; என் அறிவும் அதனுட் புகுந்து அதை விரிவுபடுத்தும் விஷயமும் ஒரு பக்கம். என் உள்ளமும் அதில் இனிப்பைச் சேர்க்கும் சிறு சிறு முடிவுள்ள எளிய சொற்களும் ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன. பாரதியாரை, அங்கிருந்த மற்றவர்களை, அவர்கள் வார்த்தைகளைக் கவனிக்க என்னிடம் மீந்திருந்த உறுப்புக்கள் ஒன்றுமில்லை. இப்படி வெகு நேரம்.

இதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த ராஜுலு நாயுடு பீடி பிடித்தாயிற்று. பாரதியாரும் சிவா நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று. மணியும் 11 ஆயிற்று. கடைசியாக, சிவா நாயகர் என்னைப் பாரதியாருக்குச் சுட்டிக்காட்டி, "இவர் தமிழ் வாசித்தவர் சுவாமி" என்றார். அதற்குப் பாரதியார், "இல்லாவிட்டால் என் கையெழுத்துப் புத்தகத்தில் அவருக்கு என்ன இருக்கிறது?" என்றார், அன்புடன், நல்லெண்ணத்துடன்.

அதன் பிறகு நான், "போய் வருகிறேன், சுவாமி" என்றேன். பாரதியார், "சரி, நேரமாகிறதா? நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும்" என்று குறிப்பிட்டார். அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட முடியவில்லை. "நமஸ்காரம், நமஸ்காரம்" என்று துரிதமாய்ச் சொல்லிப் பிரிய எண்ணமில்லாது பிரிந்தேன். என்னுடன் மற்றவர்களும் எழுந்தார்கள்.


நாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி முழுவதும் பாரதியாரின் குணாதிசயங்களை விவரித்தார்கள். நான் பாரதியாரின் விழிகளில் சற்று நேரத்தில் தரிசித்தவைகட்குமேல் அவர்கள் நூதனமாக ஒன்றும் கூறவில்லை!

[ நன்றி: “பாரதியைப் பற்றி நண்பர்கள்” , தொகுத்தவர்: ரா.அ.பத்மநாபன், வானதி பதிப்பகம், 1982. ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாரதிதாசன்

ரா.அ.பத்மநாபன்

பாரதி மணிமண்டபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக