செவ்வாய், 2 ஜூன், 2015

டாக்டர் ஜெயபாரதி

நாஸ்டால்ஜியா
ஜெயபாரதி 



இன்று ( 2 ஜூன் 2015 )  மறைந்த மருத்துவர், மலேசியா தமிழறிஞர், நண்பர் ஜெயபாரதியின் பன்முகங்களைப் பற்றிப் பல மடல்கள் எழுதலாம்.

அகத்தியர் குழுமம் மூலமாய் அவர் புரிந்த தமிழ்த் தொண்டு காலமெல்லாம் அவர் புகழ் பேசும்.

தயங்காமல் அகத்தியராய்த்  தகவல்கள் வழங்கிவந்தார்;
சுயமான நகைச்சுவையின் துணைகொண்டே எழுதிவந்தார்;
நியமங்கள் பலபயின்று நித்தசக்தி பதம்பணிந்த
ஜெயபாரதி எனுமியக்கம் செகத்தினிலே வாழ்ந்திடுமே..

உதாரணம்: 
டாக்டர் ஜேபியின்ஏடும் எழுத்தாணியும்உரை
இதை 2012-இல் பார்த்ததும் அன்று நான் அகத்தியர்குழுவில் எழுதியது:

கருத்துக் கொளிகூட்டும் காணொளிகள் காட்டி
அருந்தமிழ்த் தொண்டுகள் ஆற்றும் -- குரவர்,
அரியபல செய்திகளை ஆற்றொழுக்காய்க் கூறும்
மருத்துவர் ஜேபிக்கெம் வாழ்த்து.


அவருடைய வேறுபட்ட ஒரு முகத்தைக் காட்ட ஒரு காட்டு: 

அவருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள், விருப்பங்கள்  உண்டு. உதாரணமாய், சிறுவயதில் இருவருமே சில ஆங்கில காமிக்ஸ் படித்தவர்கள்! அவற்றை விரும்பினவர்கள் ! இருவருக்கும் ‘நாஸ்டால்ஜியா’ உண்டு!  

சில ஆண்டுகளுக்கு முன்  ‘அகத்தியர்’ யாஹூ குழுவில் டாக்டர் ஜேபி சிறுவயதில், தான் படித்த (Beano) பீ’னோ காமிக்ஸ்
 போன்ற பல ஆங்கிலச் சிறுவர் காமிக்ஸ் இதழ்களைப் பற்றி எழுதினார்.
  நானும் அவற்றைப் படித்தவன் என்பதால், என் நினைவுகளையும் அம்மடல்  கிளறிவிட்டது.
50/60-களில் சென்னையில் எல்லா இடங்களிலும் Beano கிடைக்காது. மௌண்ட் ரோடில், பழைய ந்யூ எலிபின்ஸ்டோன் தியேட்டர் அருகே இருந்த  ஒரு சிறு புத்தகக் கடையில் அதை  நான் வாடிக்கையாக வாங்குவேன்! பிறகு மூர் மார்கெட்டில் தேடல்! இப்படி நூற்றுக் கணக்கில் பீ’னோக்களைச் சேர்த்திருந்தேன். ( யாரோ ஒரு புண்ணியவான் அவற்றை எல்லாம் எடுத்துச் சென்று, திரும்பித் தர ‘மறந்து விட்டான்” என்று என் குடும்பத்தார் சொல்கின்றனர்:-((
 பீ’னோவில் வந்த பாத்திரங்கள் யாவரும் மிக அலாதி! ஒவ்வொருவரையும் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.
 எடுத்துக் காட்டாக, டெ’ன்னிஸ் ( Dennis the Menace)  என்ற வாண்டுப் பயல்  . பீ’னோ பாத்திரங்களில் மிகப் பிரபலமானவன் இவன். பின்னர் அதே பெயரில் அமெரிக்காவிலும்  டெ'ன்னிஸ் காமிக்ஸ் வரத் தொடங்கியது.
  ஒரு திரைப்படம் கூட 1993-இல் வந்தது.
 ஆனால்,  பீ’னோவின் டெ’ன்னிஸ் தான் ’நிஜம்’; அவனுடைய  விஷமத்திற்குமுன்  அமெரிக்க டெ’ன்னிஸ் வெறும் நிழல் தான்!  அந்த வருடம் (2011)  மணி விழா கொண்டாடிய  டெ’ன்னிஸுக்கு அகத்தியரில்  ஒரு வாழ்த்துப் பா எழுதினேன்!

 அறுபதாண் டைக்கடந்த அடங்காப் பிடாரியவன்
துறுதுறு  குறும்புசெயத்  துடிதுடிக்கும்  அவதாரம்
பரட்டைமுடி  யன்துணைக்கோ  ‘பைரவராய்’ நாயொன்று.
சிரிப்பிதழ் Beano-வின்  Dennis-ஐ மறப்பேனோ? 

இதோ மாதிரிக்கு ஒரு பீ’னோ அட்டை:


என் “கவிதை”யைப்  படித்ததும் ஜெயபாரதி எழுதியது:
===========
Nostalgia. நாஸ்டால்ஜியா
  
 by  டாக்டர் ஜெயபாரதி
[ நன்றி: அகத்தியர் குழுமம் ]


இந்த Nostalgia எனப்படுகிற விஷயம் இருக்கிறதே......
அது ஒரு தனி அலாதியான சமாச்சாரம்.
முப்பது நாற்பது வயது ஆசாமிகளுக்குக்கூட இந்த நாஸ்டால்ஜியா என்னும் ஏக்கநிலை இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது அறுபது மேற்பட்டவர்களுக்கு எப்படி எந்த அளவுக்கு இருக்கும்!

இது ஒரு மனோநிலை.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், நாம் எந்த இடத்தைப் பற்றி, எந்த காலகட்டத்தைப் பற்றி நினைத்துப் பெருமூச்சு விடுகிறோமோ, அது சம்பந்தமான இனிய நினைவுகளே நாஸ்டால்ஜியாவில் தோன்றும்.
அதான்.....
இந்த Beano, Dandy.....

பாருங்கள்.... Dennis The Menace என்னும் காமிக்ஸ் நாயகன்...... அவன் பெயருக்கு ஏற்ப ஒரு Menaceதான்.
அவனை நாயகனாகக் கொண்ட இன்னொரு காமிக்ஸ் ஸ்ட்ரிப்கூட இருக்கிறது. Walter Mathau-வை வைத்து ஒரு சினிமாகூட வந்துவிட்டது. அந்த ஆசாமி தாம் போட்டுக்கொள்ளவேண்டிய மாத்திரையை மறந்துவிடுவார். ஆகவே அவருக்கு உதவும் வண்ணம், அவர் வாயைத் திறந்துகொண்டு குறட்டை விட்டுத் தூங்கும்போது, டென்னிஸ் மாத்திரையைத் தன்னுடைய கேட்டப்பல்ட்டில் வைத்து இழுத்துக் குறிபார்த்து வால்ட்டரின் உள்நாக்கைப் பார்த்து அடிப்பான், பாருங்கள். இதற்கே வால்ட்டருக்கு ஓர் ஆஸ்க்கார் கொடுக்கலாம். ஆனால் இதில் வரும் டென்னிஸ¤க்கு அந்த Menacing Look கிடையாது. நியூஸன்ஸாக இருக்கிறானே ஒழிய வேறு இல்லை.

ஆனால் Beanoவின் நாயக டென்னிஸ், தன்னுடைய உருவத்தில் பார்வையில் நடவடிக்கையில் Menace என்பதன் உருவகமாகவே தோன்றுவான். அந்த கறுப்புக் குறுக்குப் பட்டை போட்ட சிவப்பு டீ ஷர்ட். கலைந்த அடங்காத பரட்டைத்தலை. மாறாத scowling முறைப்பு. இடுப்புவரை படத்தை எடுத்து தேமுதீக-வின் சின்னமாகக்கூட வைத்துக்கொள்ளலாம். கேப்டனுக்குக்கூட அந்த Look இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் இமேஜின் பண்ணிப் பாருங்கள். சரியாக இருக்கும்.

விஷயத்துக்கு வருவோம். அப்பேற்பட்ட டென்னிஸை ஒரு பாட்டுடைத் தலைவனாக மாற்றக்கூடிய தன்மையும் வன்மையும் படைத்தது....?

நாஸ்ட்டால்ஜியா!

அன்புடன்

ஜெயபாரதி
========== 
அமரர் ஜெயபாரதிக்கு என் அஞ்சலி! 

தொடர்புள்ள பதிவுகள்:




1 கருத்து:

  1. நல்ல நண்பர். சுவையான செய்திகள் சொல்லுவார். ஆண்முகம், அரசியல்,
    திரைப்படம், இலக்கியம் , மருத்துவம், சுவடி ஆய்வு என்று பலமுகம் கொண்டவர்.
    அவரது அகால இழப்பு வருத்தம் தருகிறது.

    பதிலளிநீக்கு