வியாழன், 6 ஆகஸ்ட், 2015

நேற்று, இன்று, நாளை : கவிதை

நேற்று, இன்று, நாளை



நேற்று

பனிசூழ் கனடாப் பகுதியிலே 
. . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன்.

தனிமைத் துயரத் தழலதனைத் 
. . தாங்கச் சற்றுஞ் சக்தியிலை.

இனிமை எட்டும் வழியொன்றை 
. . ஈசன் எனக்குக் காட்டிவிட்டான்.

'மனித வருத்தம் மகிழ்வெல்லாம் 
. . மனத்தின் மாயம் ' எனவுணர்ந்தேன்.

இன்று:

கையிற் கணினி விசையுண்டு; 
. . கருத்திற் கன்னித் தமிழுண்டு ;

பையிற் பண்டை யாப்புண்டு; 
. . பாட்டுக் கோர்வா னொலியுண்டு;

வைய வலையில் நட்புண்டு; 
. . மலரும் மரபுக் கவியுண்டு;

ஐயன் முருகன் அருள்கிட்டின் 
. . அண்டர் உலகம் வேறுண்டோ ?

நாளை :

அச்சம் வருதல் இயற்கைதான்;
. . அதுவும் இரவு நெருங்குகையில் .

இச்சை மிகுந்தால் இன்னல்தான்;
. . இனிமேல் தமிழே வழிகாட்டும்.

உச்சம்  அடைதல் அவள்கையில்;
. . உயிரின் பயனை உணர்த்திடுவாள்.

மிச்சக் கிணறு தாண்டிடுவேன்;
. . மீதிக் கனவும் நனவாகும்.



பசுபதி

தொடர்புள்ள பதிவுகள்:

6 கருத்துகள்:

  1. நேற்று இன்று நாளை
    நினைவில் வரும் வேளை
    மாயைகளைக் கண்டு நானும்
    மயக்கம் கொண்டு இருந்தேன்
    அய்யா கவிதை படித்து
    மெய்யாய் விழித்துக் கொண்டேன்
    தெய்வம் துணைதான் என்றும்
    தெளிந்து கொண்டேன் இன்று

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்.

    நேற்றில் இன்றில் வருநாளில்
       நிழலில் உண்மைப் பெருவெளியின்
    ஆற்றில் அகப்பட் டெதிர்காணும்
       அனைத்தும் இழந்தே போனாலும்
    போற்றும் செயல்கள் மரபினுயிர்
       பேணிக் காக்கும் நல்வினையின்
    ஊற்றில் தமிழை ஊட்டுகின்ற
       உங்கள் விதையின் உயிர்ப்பிருக்கும்.



    பணிந்து தொடர்கிறேன்.


    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. வண்ணப் பாக்கள் வடித்திடவே
    வலிகள் தாழும் பலமுறுமே
    வேண்டும் கனவு பலித்திடுமே
    வேதனை அகல வழிவிடுமே
    இன்று நாளை என்றில்லை
    என்றும் நன்மை எதிர்வருமே
    எண்ணிச் செய்யும் கருமங்கள்
    இனிதாய் யாவும் ஈடேறும்.

    நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  4. பனிசூழ் கனடா என்று தொடங்கிவிட்டு, உடனேயே தனிமைத் தழலையும் சொன்னதைப் பார்த்தால், "வெயிலுக்கேற்ற நிழல்" என்பது போல், பனியும் கரைந்து போயிருக்க வேண்டுமே!

    பதிலளிநீக்கு
  5. நேற்றும் இனிமையே, இன்றும் இனிமையே, நாளையும் இனிமையே! சிந்திக்கத் தெரிந்தவருக்குத் துயர் ஏது? அழகான கவிதைக்கு நன்றி! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு

  6. தன்னம்பிக்கை கவிதை. யாப்பு என வரும்போது வார்த்தைகள் மேலதிகம் தேவைப்படுவதை உணரவில்லையா நீங்கள்? சுண்டக் காய்ச்சி வெளியிட்டால் அதன் வீர்யம் அதிகம் என காலத்தின் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கவிதைகளில் அது தற்காலத்தில் ஆட்சி செய்கிறது.... அல்லவா? வாழ்த்துக்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு