ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பி.ஸ்ரீ. -12 :கம்பன் கண்ட சித்திரசாலை

சித்திர ராமாயணம்   
கம்பன் கண்ட சித்திரசாலை  
பி.ஸ்ரீ

ஏப்ரல் 16. பி.ஸ்ரீ. அவர்களின் பிறந்த நாள்.

அவர் நினைவில், இதோ அவர் விகடனில் எழுதிய ‘சித்திர ராமாயணம்’ தொடரின் முதல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: ( சித்திர ராமாயணம் 1944-இல் தொடங்கினது. முதலில் ஓவியங்கள் வரைந்தவர் ஏ.கே.சேகர்; பின்னர் ‘சித்திரலேகா’.]
=============
[  ஓவியம்: ஏ.கே.சேகர் ]

கும்பகோணத்திலுள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலின் உட்சுவர்களில் ராமாயணக் காட்சிகள் சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. அந்தக் கோயில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது என்றும், அந்த ராமாயணச் சித்திரங்கள் விஜயநகர மகாராஜ்ய காலத்துச் சித்திரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். ராமாயணக் கதை முழுவதும் 220 சித்திரங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கும்பகோணம் கோயிலில் உள்ள சித்திரங்கள் சில நூற்றாண்டுகளுக்குள்ளே ஒளி மழுங்கிப் போய்விட்டன. அவற்றைச் சமீப காலத்திலேதான் புதுப்பித்து வைத்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகள் கழிந்தும் ஒளி குன்றாத  அழகு மங்காத  சித்திரங்களும் உண்டு; அவை நமது நாட்டிலும் காணப்படுகின்றன. எனினும், எந்தச் சித்திரமும் எப்போதும் அப்படியே பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

ஆனால், ஒரு சித்திரக்காரன்  சுமார் 800 வருஷங்களுக்கு முன் இருந்தவன்   என்றும் அழியாத சித்திரங்கள் எழுத வேணுமென்று ஆசைப்பட்டான். அவன் அந்தச் சித்திரங்களை உண்மையில் எழுதிவைக்கவில்லை; பாடி வைத்தான்! ''ஓஹோ! கவிச் சித்திரங்களா!' என்று உடனே கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆம்; அவனுடைய சித்திரங்கள் 'பாடும்’ சித்திரங்கள்  'ஆடும்’ சித்திரங்கள் என்றும் சொல்லலாம். என்ன? அந்தச் சித்திரக்காரன் யார்?

மேடும் குளமும்
கும்பகோணத்திலிருந்து சுமார் பதினெட்டு மைல் தூரத்திலே தேரழுந்தூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. பெரிய கிராமந்தான்; கும்பகோணம்போல் பிரசித்தமான ஊரன்று. அதன் சரியான பெயர் திருஅழுந்தூர் அல்லது திருவழுந்தூர்; அழுந்தை என்று தேவாரத்திலே திருஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். அந்த ஊரைச் சேர்ந்தவன்தான் மேலே சொன்ன சித்திரக்காரன். அவ்வூரில் கம்பன் மேடு என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கேதான் கம்பன் வீடு இருந்தது என்கிறார்கள். ஆம்; அந்தச் சித்திரக்காரன் கம்பன்தான். சரி; ஊர் தெரிந்தது, பேர் தெரிந்தது; இன்னும் ஏதாவது தெரிகிறதா?

திருவழுந்தூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் விஷயமாகத் திருஞானசம்பந்தர் பாடியிருக்கும் தேவாரப் பதிகத்திலே, அது வேத கோஷம் நிரம்பிய ஊர் என்று வருணிக்கப்பட்டிருக்கிறது. கம்பன் காலத்திலே அவ்வூரில் வடமொழிப் பயிற்சியும் தமிழ்மொழிப் பயிற்சியும், வேத வேதாந்தங்களோடு கலைகளும் ஒருங்கே விளங்கின என்று கருதலாம்; சைவமும் வைஷ்ணவமும் சமரஸமாகச் சிறந்து வளர்ந்தன என்று ஊகிக்கலாம். திருவழுந்தூருக்கு வடக்கே சுமார் ஆறு மைல் தூரத்தில் வெண்ணெய் நல்லூர் என்ற ஊர் இருக்கிறது. அதைச் 'சடையப்ப பிள்ளை கிராமம்’ என்றும் சொல்லுகிறார்கள். கம்பனுடைய தோழனான சடையப்ப வள்ளலைத்தான் 'சடையப்ப பிள்ளை’யென்றும் 'சடையப்ப முதலியார்’ என்றும் சொல்லுகிறார்கள். அந்தக் கிராமத்திலே ஒரு குளம். அந்தக் குளத்தையும், அந்த ஊரையும், சடையப்ப வள்ளலையும் ஒருங்கே சேர்த்துச் சிறப்பித்துக் கம்பன் பாடியிருப்பதாக ஒரு பாட்டு.



மோட்டெருமை வாவிபுக, முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே:  நாட்டில்
அடையா நெடுங்கதவும், 'அஞ்சல்’ என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்.

(மோட்டெருமை  பருத்த எருமை மாடுகள்; வாவி  குளம்; முட்டுவரால்  முட்டுகின்ற வரால் மீன்; வெண்ணை  வெண்ணெய் நல்லூர். அஞ்சல் என்ற சொல்  'அஞ்சாதே’ என்ற அபய வாக்கு; சரராமன்  சடையப்பனுடைய புனைபெயர்.)

எருமை மாடுகள் குளத்துத் தண்ணீரில் கிடப்பது கிராமாந்தரங்களில் இன்றும் நாம் சாதாரணமாய்க் காணும் காட்சி! அழுக்கை உண்ண வரும் மீன்கள் அந்த எருமைகளின் உடம்பிலும் மடுக்களிலும் முட்டுவதும் யாரும் பார்த்திருக்கக்கூடியதுதான். ஆனால், மூன்று அல்லது நாலு அடி வளர்ச்சியுள்ள வரால் மீன்கள் வந்து மடுக்களில் முட்டியதும் அந்த எருமைகள் கன்றை நினைத்துக் கொண்டு அங்கேயிருந்து வீடுவரையிலும் பால் சொரிந்துகொண்டே போகுமென்று கவிஞர் கற்பனை செய்யும்போது, அவ்வூரின் பால் வளத்தை  பஞ்சத்தை அறியாத அவ்வூரின் உணவு வளத்தை  நாமும் மனக் கண்ணால் ஒருவாறு பார்க்க முடிகிறது. ஆம்; பொருள் என்பதே ஸாராம்சத்தில் உணவுப் பொருள்தானே? 'பால் சொரியும் வெண்ணையே’ என்று அந்த வளம்தான் எவ்வளவு சமத்காரமாய்க் குறிக்கப்படுகிறது!

வால்மீகி காட்டிய சித்திரசாலை

கம்பனும் சடையப்பனுமாகிய இரண்டு நண்பர்களும் இளமையிலேயே ராம கதையில் ஈடுபட்டிருக்க வேண்டும். சடையப்பனுடைய அரண்மனை போன்ற மாளிகையிலே அடிக்கடி வால்மீகி ராமாயண காலட்சேபங்கள் நடைபெற்றிருக்கும் என்று ஊகம் செய்யலாம். அந்தக் காலட்சேபங்களைக் கேட்டுக் கேட்டுக் கம்பன் ராம சரித்திரத்தில் ஆழ்ந்து ராம பக்தனானதுடன், வால்மீகியின் கவிதை அழகிலும் மூழ்கி மோகித்துப் போயிருக்கவேண்டும். அந்தக் கவியின்பத்தை உள்ளத்திலும், அந்த இசை வெள்ளத்தைச் செவிகளிலும் தேக்கிக் கொண்டான் என்றே சொல்ல வேண்டும். அந்தக் கதையும் கவிதையும் பக்தியும் கம்பனை வெறி கொள்ளச் செய்து, இந்த மண்ணுலகத்திலேயே லட்சிய பூமியாகிய ஒரு பொன்னுலகத்தையும் காணும்படி செய்துவிட்டன. இதனால்தான் கம்பன் சொல்லுகிறான்:

வாங்கரும் பாதம் நான்கும்
  வகுத்தவான் மீகி என்பான்,
தீங்கவி செவிகள் ஆரத்
  தேவரும் பருகச் செய்தான்!
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை
  அன்பெனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான்
  என்ன, யான் மொழிய லுற்றேன்.

(வாங்கரும்  (ஒன்றை) எடுத்துவிட்டு (வேறொன்று) போட முடியாத பாதம்  (சுலோகங்களின்) அடி. தீங்கலி  இனிய கலிகள், ஆரநிரம்பும்படி. ஆங்கவன்  ஆங்கு அவன். நறவம்  கள். மாந்தி  குடித்து (முங்கையான்  ஊமையன்.)

'மகாகவியாகிய மகரிஷி புகழ்ந்த ராம ராஜ்யத்தை (கோசல நாட்டை) நானும் புகழ்ந்து பேசத் தொடங்குகிறேனே, ஊமை பேசத் தொடங்குவது போலே!' என்று எவ்வளவோ அடங்கிப் பேசுகிறான் கம்பன்! ஊமை பேசத் தொடங்கினால், அது கேவலம் உளறலாகத்தானே வரும்? ''அப்படியானால் நீ ஏன் பேசத் தொடங்குகிறாய்?' என்ற கேள்வியும் வரக் கூடுமல்லவா? அதற்குத்தான், ''அன்பு என்ற கள்ளைக் குடித்துவிட்டு (நறவம்கள்) நான் பேசத் தொடங்கினேன்!' என்கிறான். கள்ளுக்குச் 'சொல் விளம்பி’ (அதாவது, பேசச் செய்வது) என்று ஒரு பெயர். 'பேசாமடந்தை’யையும்  பேச வைக்கும் அந்தச் 'சொல் விளம்பி’தான் ஊமையைப் பேச வைக்க முடியுமா?

வால்மீகியின் 'சப்த சித்திரங்கள்’ மூலமாகக் கம்பன் ஒரு சித்திரசாலையைப் பார்த்துவிட்டான் என்றே சொல்லவேண்டும். அந்தச் சித்திரசாலையிலே வால்மீகிக்குப் பின் ஏற்பட்ட ராமாயண வளர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்க விரும்பினான். தமிழோடு வளர்ந்த கலைப் பண்புகளுக்கும் இடம் அளித்தான். விசேஷமாக, ராமாயண பாத்திரங்களையெல்லாம் தமிழ்நாட்டிலே தமிழருள்ளங்களிலேயே கண்டு, அந்தக் காட்சிகளைத் தமிழ்மயமாகிச் சித்திரித்தான்.

என்றும் வாடாத கவிச் சித்திரங்கள் நிறைந்த கம்பனின் இந்தப் புதிய சிருஷ்டி, என்றும் புதுமை வாய்ந்த சித்திரசாலையாகவே இருக்கிறது. இதைத்தான் கம்ப ராமாயணம் என்றும், கம்ப நாடகம் என்றும் சொல்லுகிறோம். இந்தக் கம்ப நாடகத்துலே, பிரபஞ்ச நாடகத்தையெல்லாம் பார்க்கலாம்.

சித்திரசாலையாகவும் நாடகசாலையாகவும் ஒருங்கே காட்சிதரும் கம்ப ராமாயணத்தின் மூலமாகக் கவிதைப் பேரின்பத்தை அனுபவிப்பது தமிழராய்ப் பிறந்தவர்களுக்கெல்லாம் கடமையும் உரிமையும் பாக்கியமுமாகும்

[ நன்றி: சக்தி விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்;

1 கருத்து:

  1. ஆதி கவியாத்த அந்தமிகு செந்தமிழில்
    ஏத மிலாக்கம்ப சித்திரத்தைக் கூறுமிவர்
    சொல்லாக்க மென்னென்பேன் பாரதியும் சீயாரும்*
    நல்லோரும் வாழ்த்தும் பிஶ்ரீ!

    *ராஜாஜி - CR

    பதிலளிநீக்கு