கண்ணீரில் எழுதிய காட்சி
கி.வா.ஜகந்நாதன்
கி.வா.ஜகந்நாதன்
ஏப்ரல் 11. வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களின் பிறந்த தினம்.
அவர் எழுதிய ஓர் அரிய கட்டுரை இதோ!
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை,
அவர் எழுதிய ஓர் அரிய கட்டுரை இதோ!
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை,
அவருடைய சீடர் உ.வே.சா,
உ.வே.சா. வின் சீடர் கி.வா.ஜ .....
உடல் நலிவுற்ற நிலையிலும் தாம் எழுதி வந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. சொல்லச் சொல்ல, எழுதி வந்தவர் கி.வா.ஜகந்நாதன். உ.வே.சா. பற்றிய நினைவுகளை 'கண்ணீரில் எழுதிய காட்சி' என்னும் தலைப்பில் உ.வே.சா நூற்றாண்டாகிய 1955-இல் ஓர் உருக்கமான கட்டுரையாக விகடனில் வடித்தார் கி.வா.ஜ.
===========
வழக்கம் போல் தியாகராஜ
விலாசத்துக்குக் காலையில் போனேன். எங்கள் ஆசிரியப் பிரான் கூடத்தில்
படுத்திருந்தார்கள். எப்போதும் மேல் மாடியில் இருந்து தமிழ்த் தொண்டு புரிபவர்கள்
அவர்கள். அன்று கீழே கூடத்தில் படுத்திருந்தார்கள். அது அவர்களுக்கு வழக்கம் இல்லையாதலால், நான் உள்ளே புகுந்து
அவர்களைக் கண்டவுடன் சற்றுத் திடுக்கிட்டேன். அருகில் சென்று, ”ஏன் இப்படி?” என்று கேட்டேன். ”ராத்திரி கீழே விழுந்து விட்டேன் ” என்றார்கள். ஐயரவர்களுடைய குமாரர் ஸ்ரீகல்யாணசுந்தாம் ஐயரவர்கள்
உள்ளே யிருந்து வந்தார்.
“ராத்திரி தொப்பென்று ஏதோ சத்தம் கேட்டது. நான்
விழித்து எழுந்து வந்து பார்த்தேன். மாடிப் படியின் கீழ் இவர்கள் விழுந்து
விட்டார்கள். ஒருவரையும் எழுப்பாமல் தாமே எழுந்திருக்கப் பார்த்தும் முடியவில்லை. கால் சுளுக்கிக் கொண்டது
போல் இருக்கிறது. எழுந்து காலை ஊன்ற முடியவில்லை. நான் எடுத்துக் கூடத்திலேயே படுக்கச்
செய்தேன் ” என்றார்.
" இது சாதாரணச் சுளுக்குத் தான்.
விளக்கெண்ணெய் போட்டு நீவினால் சரியாகிவிடும். ஒன்றும் கவலைப்பட வேண்டாம் “ என்று படுத்தபடியே ஐயரவர்கள் சொன்னார்கள்.
இரவில் கீழே இறங்கி
வந்தால் நிதானமாக எழுந்து வருவார்கள். யாருக்கும் தொந்தரவு கொடுக்க
விரும்புவது இல்லை. அன்றும் அப்படியே வந்திருக்கிறார்கள். கடைசிப் படிக்கட்டிலிருந்து தரையில் கால்
வைக்கும்போது நிதானம் தவறி விழுந்து
விட்டார்கள்.
பாதம் வீங்கி யிருந்தது. சுளுக்காக இருக்குமென்று எண்ணெய்
தடவி நீவினார்கள். வலி வாங்க வில்லை. பிறகு ஏதேதோ மருந்து தடவினார்கள். வீக்கம் வடியவில்லை. வர வர அதிகமாயிற்று. அதோடு ஜூரமும் வந்து விட்டது. வழக்கமாகக் கவனிக்கும் குடும்ப டாக்டர் வந்து பார்த்தார்.
மருந்து போட்டார். வீக்கம் தணிந்த பாடில்லை. ஜூரமும் குறையவில்லை. ஜூரம் அதிகமாக ஆக, உடலில் மெலிவும்
வேதனையும் அதிகமாயின.
’ஆபரேஷன்’ செய்ய வேண்டும் என்ற நிலை வந்து
விட்டது. அப்போது அவர்களுக்கு எழுபத்தாறு வயசு. 1930-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் நடந்தது இது. ஒரு நாள்
ஐயரவர்களுக்கு நினைவே இல்லை. ஜூரம் அவ்வளவு கடுமையாக
இருந்தது.
தம்முடைய உடம்பு அசெளக்கியமாக இருந்தும் அவர்களுக்குத்
தமிழ் வேலையிலே ஞாபகம். அப்போது அவர்கள் தம்முடைய ஆசிரியராகிய பிள்ளையவர்களுடைய சரித்திரத்தை எழுதிக்கொண்டிருந்த காலம். நாற்பத்தைந்து
ஆண்டுகளாகத் தொகுத்து வைத்த குறிப்புக்களை யெல்லாம் ஒழுங்கு படுத்தி, வருஷ வாரியாகப் பிரித்துப் பதிந்து கொண்டு சரித்திரத்தை
எழுதி வந்தார்கள். அதை எழுதும்போது அவர்களுக்கு மீட்டும் இளமை வந்துவிட்டது போன்ற
ஊக்கம் உண்டாயிற்று. தமிழ்ப் பாடம் சொல்வதற்கு ஏற்ற தமிழறிவையும் பாடம் சொல்லும்
திறமையையும், கவி பாடும்
ஆற்றலையும் தம் முடைய ஆசிரியரிடமிருந்து ஐயரவர்கள் கற்றுக் கொண்டார்கள். அந்த மகா
வித்துவான் 1815-ஆம் வருஷம் முதல் 1876-ஆம் ஆண்டு வரையில் இவ்வுலகில் வாழ்ந்திருந்தார். 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐயரவர்கள் தம்முடைய பதினாறாம் பிராயத்தில்
பிள்ளையவர்களிடம் மாணாக்கராகச் சேர்ந்தார்கள். அது முதல் அப்புலவர் பெருமானுடைய
இறுதிக் காலம் வரையில் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார்கள். ஆறு வருஷ காலம்
அவரிடம் பாடம் கேட்டார்கள்.
ஐயரவர்களுடைய குரு பக்திக்குச் சமானமாகத் தம் ஆசிரியரிடம்
பக்தி யுடையவர்களை இனிமேல் தான் காண வேண்டும். ஐயரவர்களிடம் நேரில்
பழகியவர்களுக்கு அவர்களுடைய குரு பக்தியின் ஆழம் நன்றாகத் தெரிந்திருக்கும். எப்போதும் பிள்ளையவர்கள், பிள்ளையவர்கள் என்றே
சொல்வார்கள். பெயர் முழுவதையும் சொல்ல மாட்டார்கள்.
ஐயரவர்களுக்குத் தம் ஆசிரியரிடம் இருக்த பக்திக்கு ஒரு
சிறிய உதாரணம் சொல்ல விரும்புகிறேன். பிள்ளையவர்கள் சரித்திரத்தில் சில இடங்களில்
தான் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
என்று குறிப்பிடுகிறார்கள். மற்ற
இடங்களிலெல்லாம் பிள்ளையவர்கள், புலவர்பெருமான், கவிஞர் சிகாமணி, கவிஞர்பிரான், இச் சரித்திரத் தலைவர், மகாவித்துவான், புலவர் கோமான், எங்கள் ஆசிரியர் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஒரிடத்தில் இந்த முறைக்குச் சிறிது மாறுபாடு அவசியமாக
இருந்தது. பிள்ளையவர்களுடைய இளமைக் காலத்தைப் பற்றி எழுதிக் கொண்டு வந்தார்கள். ” மீனாட்சிசுந்தாம் பிள்ளைக்கு ஐந்து பிராயமானவுடன் சிதம்பரம் பிள்ளை வித்தியாரம்பஞ் செய்வித்துத்
தம் பள்ளிக்கூடத்திலேயே கல்வி பயிற்றத் தொடங்கினார் ” என்று எழுதினார்கள். ஒர் அடையும் இன்றி, மீனாட்சிசுந்தாம்
பிள்ளையென்று எழுதியது இந்த ஒரே முறைதான்.
அப்படி எழுதும் போது அவர்கள் மனம் சமாதானம் பெறவில்லை. ஏதோ தவறு செய்தது போலத்
தோன்றியது. உடனே அடிக்குறிப்பு ஒன்றை அங்கே சேர்த்தார்கள். 'பிள்ளையவர்களை, இவ்வாறு பெயர் குறித்தெழுதுவதற்கு அஞ்சுகிறேன். என்று அந்தக் குறிப்பு இருப்பதை இப்போது பிள்ளையவர்கள் சரித்திரத்தின் முதற் பாகத்தில் இரண்டாவது அத்தியாயத்தில் பார்க்கலாம்.
பிள்ளையவர்கள் சரித்திரம் பெரும்பாலும் எழுதி முடிந்தாயிற்று. இறுதிப் பகுதி மாத்திரம் பாக்கியாக நின்றது. ஒரு வழியாகச்
சரித்திரத்தை முற்றும் எழுதி விட்டு, இடையிலே சேர்க்க வேண்டியதைச்
சேர்க்க எண்ணினார்கள், எங்கள் ஆசிரியப்பிரான். எத்தனை குறிப்புகள், எத்தனை பேர் சொன்ன செய்திகள், எத்தனை கடிதங்கள் ! ஒரு பீரோ
நிறையச் சரித்திரத்துக்கு வேண்டிய
குறிப்புகள் இருந்தன. யார் என்ன சொன்னாலும் எழுதி வைத்தார்கள்.
அந்தக் குறிப்புகளை நாற்பத்தைந்து ஆண்டுகளாகச் சேகரித்து வந்தார்கள். என்றால், எவ்வளவு இருக்கும்
என்பதை ஊகித்து உணரலாம். அவ்வளவையும், ஒரு முகப்பட்ட சிந்தையோடு: பார்த்தார்கள். எங்களையும்
பார்க்கச் செய்தார்கள். ஆயிற்று, சரித்திரம் நிறைவேறப் போகிறது என்ற சமயத்தில் அவர்கள் கீழே விழுந்து விட்டார்கள்.
அவர்கள் மனத்தில் இளமை இருந்தாலும் உடம்பில் முதுமைத் தளர்ச்சி இருந்தது. அதனால், வந்த ஜூரம் நன்றாகப் பற்றிக் கொண்டது.
புறங்காலில் உள்ள வீக்கமே ஜூரத்துக்கும் அதனால் உண்டாகும் ஞாபகப்
பிசகு முதலியவற்றிற்கும் காரணம்
என்று தெரிய வந்தது. அந்த வீக்கம்
வடியும் நிலையைக் கடந்து நின்றது ; ஆபரேஷன் செய்யாமல் இதற்கு மாற்றில்லை என்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்தார்கள். ' இந்த வயசில் ஆபரேஷன் செய்தால் உடம்பு தாங்குமா?’ என்று யோசித்தார்கள்
.
ஐயரவர்களுக்குத் தெளிவு பிறந்த போதெல்லாம் பிள்ளையவர்களுடைய சரித்திர ஞாபகமே
இருந்தது. “ அதை இங்கே கொண்டு வா; கொஞ்சம் எழுதலாம்” என்பார்கள். கவலைக்கு இடமான அந்த நிலையிலா அதை
எழுதுவது? எழுதத்தான்
முடியுமா? ஏதோ ஆவலால் அப்படிச் சொல்லுகிறார்கள் என்று நாங்கள் எண்ணினோம்.
" என்ன செய்வது ?” என்ற கவலை ஐயரவர்கள் குமாரராகிய கல்யாணசுந்தரம் ஐயருக்கு உண்டாயிற்று. மற்றவர்களும் வழி தெரியாமல்
திகைத்தார்கள். அப்பொழுது சிலர், டாக்டர் ரங்காசாரியார் வந்து
பார்த்தால் எதாவது வழி பிறக்கும் ' என்றார்கள். ரங்காசாரியார் ஐயரவர்களிடம் அன்புடையவர். அவருடைய கை பட்டாலே நோய் தீரும் என்று பலர் நம்பினர்கள். அதற்கு ஏற்றபடியே அவர் தம்மிடம்
வந்தவர்களைக் காலன் வாயிலிருந்து மீட்டார்.
டாக்டர் ரங்காசாரியார் வந்து பார்த்தார். தம்முடைய வீட்டுக்கு ஐயரவர்களின் குமாரரை வரச் சொன்னார். ”இது பற்றி நீங்கள் கவலைப்பட
வேண்டாம். ஆபரேஷன் செய்து விடலாம். உங்கள் வீட்டிலேயே அதை நடத்துகிறேன்.” என்று அபயம் அளித்தார்.
ஆபரேஷனுக்கு நாள்
குறிப்பிட்டாயிற்று. பிற்பகல் இரண்டு மணி யளவுக்கு அது நடைபெற இருந்தது. டாக்டர் ரங்காசாரியாரவர்கள் வருகிறார் என்று ஆறுதல்
இருந்தாலும் கத்தியினால் சீவுவது என்றாலே பயந்தானே? ஐயரவர்களோ பழுத்த பழம். வேறு விதமாக ஆகி விட்டால்-? அதை நினைக்கவே பயமாக இருந்தது.
ஐயரவர்களுக்கும் ஆபரேஷன் நடக்கப்
போகிறது என்பது தெரியும். இறைவன் காப்பாற்றுவான் என்று உறுதியான நம்பிக்கை
அவர்களுக்கு இருந்தது. ஆனாலும் இடையிடையில் சற்றே சலனம் உண்டாகும்.
” நிச்சயமாக எனக்கு நரகம் இல்லை. மறுபடியும்
தமிழ் நாட்டில்தான் பிறப்பேன். பல காலமாகச் சேகரித்து வைத்திருக்கும் இந்த
எடுகள், நான் பிறக்கும் இடத்தில் கிடைக்குமா ? நான் படித்த புத்தகங்களில் எல்லாம் மார்க்' பண்ணி யிருக்கிறேனே. அந்தப்
புத்தகங்களை அடுத்த பிறவியில் நான் காண முடியுமா? இவற்றை நினைக்கும்போது தான்
எனக்குத் துயரம் உண்டாகிறது. எல்லாவற்றையும் விடப் பெரிய துக்கம் ஒன்று
இருக்கிறது. பிள்ளையவர்களுடைய சரித்திரத்தை முடிக்காமல் போய் விடுவேனே என்று
நினைக்கும்போது என் மனசு தவிக்கிறது. ஈசுவான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறானோ?” என்று தமிழ் வழங்கிய தந்தையார் அவர்கள் சொல்வார்கள்.
டாக்டர் வந்து விட்டார். ஐயரவர்கள்
அஞ்சலி செய்தார்கள். '' இந்தச் சரீரம் இன்னும் கொஞ்ச
காலத்துக்கு இருந்தால் அரையும் குறையுமாக இருக்கிற சில காரியங்களை நிறைவேற்ற
முடியும்’ என்று சொன்னார்கள். டாக்டர் புன்னகை பூத்தார். ” இது என்ன, சின்ன ஆபரேஷன் தான். நீங்கள் இன்னும் பல பெரிய காரியங்களைச் செய்யப் போகிறீர்கள் ” என்று சொல்லிப் பரபர வென்று தம் காரியத்தில் கண்ணாக வேலை செய்யத் தொடங்கினார்.
நான் அருகில் நின்றிருந்தேன். அந்த மேதாவி, மகான், அவதார புருஷர் விறுவிறு வென்று தம் வேலையை நடத்தினார். என்ன வேகம்! என்ன நுட்பம்! உடம்பைப் படைத்த பிரம தேவனுக்குக் கூட இந்த உடம்பில்
இன்ன இடத்தில் இன்னது இருக்கும் என்பது மறந்து போயிருக்கும். அவருக்கோ ஒவ்வொரு
மயிரிழையும் தெரிந்திருந்தது. அவர் சஸ்திர சிகிச்சையில் கலைஞர். கர கர வென்று அறுத்தார். ஐந்தே நிமிஷத்தில் தம்
வேலையை முடித்துக் கட்டுக் கட்டி விட்டார். அவர் மனிதப் பிறவி அல்ல, தேவ புருஷர் என்று எண்ணி வியந்தோம்.
ஐயரவர்கள் மெல்ல மயக்கம் தெளிந்து
கண்ணை விழித்தார்கள். என்ன இது, மருந்து நெடி வீசுகிறதே!” என்றார்கள். ” எப்படி இருக்கிறது?’ என்று டாக்டர் ரங்காசாரியார் கேட்டார்.
” ஆபரேஷன் செய்யவில்லையா?”
”ஆபரேஷன் ஆகிவிட்டது” என்று டாக்டர் சொன்னதை அவர்கள் நம்ப வில்லை. ”' அதற்குள்ளேயா? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே?” என்றார்கள்.
” இன்னும் ஒரு வாரம் ஜாக்கிரதையாக இருங்கள் சரியாகப்
போய்விடும்” என்று . சொல்லி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார் டாக்டர் ரங்காசாரியார். அதற்குப் பிறகு ஒரிரு முறை அவர் நேரே வந்து
பார்த்தார். குடும்ப டாக்டரையே கவனித்துக் கொள்ளச் சொன்னார்.
ஆபரேஷன் செய்த பிறகு, ஜுரம் வராமல் இருக்க வேண்டுமென்று, கடுமையான நிபந்தனைகளை டாக்டர் விதித்தார். ஆகாரத்தில் நியமம் : உண்டு. “அதிகமாகப் பேசக் கூடாது, வேலையையும் கவனிக்கக் கூடாது. மூளைக்கு வேலையே கொடுக்கக் கூடாது” என்று கண்டிப்பாக டாக்டர் சொன்னார். அப்படியே கவனித்துக் கொண்டோம்.
ஐயரவர்களுடைய குமாரர் கல்யாணசுந்தரம் ஐயர் ஹை கோர்ட்டில்
உத்தியோகம் பார்த்தார். தம் தந்தையாரின் உடல் நிலை காரணமாக அவர் லீவு பெற்றுக்
கொண்டிருந்தார். லீவு முடிந்தவுடன் தம் உத்தியோகத்துக்குப் போய் வந்தார். காலையிலும் மாலையிலும் வீட்டில்
இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார். மற்ற நேரங்களில் இன்னது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போய்விடுவார். நான் எப்போதும் உடனிருந்து கவனித்துக் கொள்வேன்.
எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலை உண்டாயிற்று. பகல் நேரங்களில் ஐயரவர்கள், ” அந்தச் சரித்திரத்தை எடுத்துக் கொண்டு வா; முடித்து விடலாம்” என்பார்கள். மூளைக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று திட்டமாக டாக்டர் சொல்லி யிருக்கிறபோது, ஐயரவர்கள் கட்டளையை எப்படி நிறைவேற்ற முடியும்? நான் எதாவது காரணம் சொல்வேன். டாக்டர் சொன்னதைச் சொன்னால், ”அவர் அப்படித் தான் சொல்வார். நான்
ஆபரேஷனில் பிழைத்து வந்ததே இதற்காகத்தானே? நான் இனிமேல் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்வதற்காகவா பிழைத்திருக்கிறேன்!” என்று கேட்பார்கள். இந்த நிலையிலும் ஹாஸ்யமாகப் பேசுவதை அவர்கள் மறக்கவில்லை. மீட்டும் ஏதாவது துன்பம் வந்தால்
என்ன செய்வது? உடம்பை அலட்டிக் கொண்டால் ஜூரம் வந்து விடும் என்று டாக்டர் சொன்னார் ” என்று நான் சொல்வேன்.
” ஜூரம் வரட்டுமே ! அதைச்
செய்து ஜூரம் வருவதற்கு முன் அதைச் செய்ய வில்லையே என்ற ஏக்கத்தினால் எனக்கு உண்டாகும் வேதனையை டாக்டர் அறிவாரோ ? நான் திடீரென்று போய் விட்டால் அந்தச் சரித்திரம் முற்றுப் பெறாமல் நின்று விடுமே! ஜூரம் வந்தாலும் குற்றம் இல்லை. பிள்ளையவர்கள் சரித்திரத்தை முடித்து விட்டேன் என்ற நினைவோடு இறந்து போனால் சாந்தியோடு இறப்பேன்”
“ இந்த வார்த்தைகளெல்லாம் இப்போது எதற்கு?”
” ஆமாம். என்னைப் பிழைக்க
வைக்க எண்ணி நீங்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு என்னைக் கொல்லாமல் கொல்கிறீர்கள். எனக்கு வேண்டியதைச் செய்ய விடாமல் என்னை
உயிர்க்கழுவில் வைத்துச் சித்திரவதை செய்கிறீர்கள். சோறு தின்னவும் பணம் சம்பாதிக்கவும் பட்டம் வாங்கவும்
நான் பிறக்கவில்லை. என் வேலையை நான்
செய்யாமல் இருப்பதைவிட இறந்து விடுவதே மேல்......”
செய்யாமல் இருப்பதைவிட இறந்து விடுவதே மேல்......”
வார்த்தைகள் கோபக் கனலில் தெறித்து விழும்
சுடர்ப்பொறிகளாக வந்தன. அவர்களுடைய உள்ளத்தின் அடித்தளத்தில் உள்ள வேகம் - பிள்ளையவர்கள் சரித்திரத்தை முடித்துவிட வேண்டும் என்ற வேகம் - எவ்வளவு
மிகுதியாக இருக்கிறதென்பதை உணர்ந்தேன். அவர்களுடைய வார்த்தைகள் என் கண்ணில் நீரை வருவித்தன. நான்
என்ன செய்வது ? கடவுள் காப்பாற்றுவார் என்ற
உறுதியோடு பிள்ளையவர்கள் சரித்திரம் எழுதிய கட்டை எடுத்து வந்தேன்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தேக அசெளக்கிய
மடைந்திருந்த செய்தியைச் சொல்லும் பகுதி வரையில் சரித்திரம் உருவாகி யிருந்தது.
அதற்கு மேல் நிகழ்ந்தவற்றை ஐயரவர்கள் சொல்லத் தொடங்கினர்கள். நான் எழுதிக் கொண்டு வந்தேன்.
திருவாவடு துறை மடத்தில் குருபூஜை சமீபித்துக் கொண்டிருந்தது. அதற்காகப் பலர் வெளியூர்களி
லிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது பிள்ளையவர்களுடைய நோய் அதிகமாகிக்
கொண்டே வந்தது ” - இந்தப் பகுதிகளை அன்று : எழுதி முடித்தேன்.
மறுநாளும் தொடர்ந்து எழுதச் சொன்னார்கள். டாக்டர் வராத நேரம் பிற்பகல். அப்போது
ஐயரவர்களுடைய குமாரரும் காரியாலயத்துக்குப் போய் விடுவார். அந்த நேரத்தில் பிள்ளையவர்கள்
சரித்திர கைங்கரியம் திருட்டுத்தனமாக நடந்து வந்தது ; வேகமாகவே நடந்தது.
தனுக்கோடி என்ற வைத்தியன், பிள்ளையவர்கள் கையைப் பிடித்துப் பார்க்கிறான். ” இன்னும் மூன்று பொழுதிலே தீர்ந்து விடும்’ என்று ’ வெட்டென’ ச் சொல்லி விட்டுப்
போகிறான். அப் புலவர் பெருமான் சில கடிதங்களை எழுதச் செய்கிறார். அக்கினிலிங்க சாஸ்திரிகள் என்ற
வடமொழி வித்துவான் அவரைப் பார்க்க வருகிறார். அவர் ஒரு சுலோகத்தைச் சொல்கிறார். சங்கராசாரியார் செய்த
சிவானந்த லஹரியி லுள்ள ”ஸதாமோஹாடவ்யாம்' என்ற சுலோகம் அது. அதைச் சொல்லிப் பொருளையும் சொல்கிறார். அந்தக் கவிஞர் அதை அப்போதே
செய்யுளாக மொழி பெயர்க்கிறார்.
இப்படி வரும் நிகழ்ச்சிகளை ஐயரவர்கள் சொல்லச் சொல்ல நான் எழுதினேன். பிள்ளையவர்கள்
வாழ்க்கையின் இறுதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரக்ஞை தவறுகிறது. மறுபடியும்
சிறிது தெளிவு ஏற்படுகிறது. அப்போது அவர், ”திருவா” என்று மாத்திரம் குறிப்பிக்கிறார். அதைக் கேட்டவுடன்
மாணாக்கராகிய ஐயரவர்கள் திருவாசகத்தை எடுத்து வந்து அடைக்கலப் பத்தை வாசிக்கிறார்கள்.
'கண்ணை மூடிக்கொண்டே இவர் கேட்டு
வந்தார். அப்பொழுது இவருக்கு உடலில் ஒர் அசைவு உண்டாயிற்று. உடனே நாங்கள்
சமீபத்திற் சென்றபொழுது வலக் கண்ணைத் திறந்தார். அதுதான் ஸ்ரீ நடராஜ மூர்த்தியினுடைய குஞ்சித
சரணத்தை இவர் அடைந்த......”
சொல்லிக் கொண்டே வந்தவர்களுக்கு
மேலே பேச முடியவில்லை. துக்கம் கப்பிக் கொண்டது. அவர்கள் அப்போது தியாகராஜ விலாசத்தில் இருக்க
வில்லை. திருவாவடுதுறையில் பிள்ளை யவர்களின் நல்லுடலத்துக்கு அருகில் இருந்தார்கள்.
நினைவுலகத்தில் எத்தனை வருஷங்களுக்கு முன்னே வேண்டுமானலும் பிரயாணம் செய்யலாம்
அல்லவா ?
சிறிது நோம் கழித்து அவர்கள்
மேலும் சொல்லிக்கொண்டு போனார்கள்.
பிள்ளையவர்கள் சடலத்தை எடுத்துச்
செல்கிறார்கள். அப்போது நிகழ்ந்தவற்றைச் சொல்லும்போது ஐயரவர்கள் கண்ணீர் விட்டது மாத்திரம் அன்று ; விம்மி விம்மி அழுதார்கள். நடுநடுவே நிறுத்தி நிறுத்திச் சொன்னார்கள்.
' வடமொழி வித்துவான்களாகிய அந்தணர்களின்
கூட்டத்திலிருந்து 'தமிழ்க் காளிதாஸா! தமிழ்க் காளிதாஸா
! என்ற சப்தமும், தமிழ் வித்துவான்கள்
வாக்கிலிருந்தும், அயலூரிலிருந்து வந்திருந்த இவர் மாணாக்கர் கூட்டத்திலிருந்தும், கவிச் சக்கரவர்த்தியே! தமிழ்க் கடலே !
எங்களுக்கு அரிய விஷயங்களை இனி யார் அன்புடன் சொல்வார்கள்; யாரிடத்தில் நாங்கள் செல்லுவோம்? எங்களைக் கவனிப்பார் யார்?' என்ற ஒலியும், வேறொரு சாராரிடத்திருந்து, குணக் கடலே! சாந்த சிரோமணி ! என்ற சப்தமும் உண்டாயின. உடன் சென்ற அபிஷிக்தர்கள் திருவாசகம் சொல்லிக் கொண்டு போகையில், இனி மேல் திருவாசகத்திற்கு மிகத் தெளிவாகவும் அழகாகவும் யார்
பொருள் சொல்லப் போகிறார்கள்?’ என்று என் தந்தையார் முதலியோர் பலர் சொல்லி மனம் உருகினார்கள்.
இந்தப் பகுதியை எழுதியபோது எனக்கே துயரம் தாங்க
முடியவில்லை. கண்ணீர் என் எழுத்தைக் கலைத்தது. பிள்ளையவர்கள் சரித்திரத்தின் இரண்டாம் பாகத்தில் 10-ஆம் அத்தியாயமாகிய தேக அசெளக்கிய நிலை : என்னும் பகுதியில்
கடைசியிலுள்ளவற்றை யார் படித்தாலும் நிச்சயமாகக் கண்ணீர் துளிக்காமல் இருக்கமுடியாது. எழுதுகிறவர்
துக்கத்தில் அமிழ்ந்து அமிழ்ந்து எழுதியதாதலின் படிக்கிறவர்களுக்கும்
அந்த உணர்ச்சி மிகுகிறது.
அந்த அத்தியாயத்தை எழுதி முடித்தவுடன்
ஐயரவர்களுக்கு உண்டான, திருப்தியை அளவிட முடியாது.
அப்போது விட்ட கண்ணீரால் அவர்களுடைய நோய் கழுவப் பெற்றதுபோல் தோன்றியது. ஆறுதலுடன் பெருமூச்சு விட்டார்கள்.
தம் ஆசிரியருடைய வாழ்க்கை வரலாற்றை முடிக்காமல் வாழ்க்கை . முடியக் கூடாது
என்று அவர்கள் எண்ணியது
எண்ணியபடி நிறைவேறியது. சரித்திரம் மேலும் பல தடவை மெருகூட்டப்பெற்று, 1933-ல் முதற் பாகமும், 1934-ல் இரண்டாம் பாகமும் வெளியாயின.
இப்போதும் அந்தச் சரித்திரத்தில் மேலே குறிப்பிட்ட பகுதியைப் படிக்கும்போது, ' அது மையில் தோய்த்து எழுதியது அன்று, கண்ணீரில் தோய்த்து எழுதியது என்ற எண்ணம் எனக்கு உண்டாகிறது:
[ நன்றி: விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
இப்போது இங்கு இரவு மணி ஒன்று. உறக்கம் வராததால் எடுத்து, கண்ணீர் மல்க மனமுருகிப் படித்தேன்.
பதிலளிநீக்குநன்றி பல.
இன்னம்பூரான்
1966-இல் 9-ஆம் வகுப்பில் படிக்கும்போது சென்னை மயிலை பெ சு இடைநிலைப்பள்ளித் தலைமைத்தமிழாசான் திரு கே ஆர் செயராமனார் நூலக வகுப்பில் இந்நூலை எனக்குப்படிக்கக் கொடுத்ததே என் தமிழ்ப்பற்றிற்குக் காரணம்.
பதிலளிநீக்கு