வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சங்கீத சங்கதிகள் - 73

நினைவில் நீங்காத தோடி!

வீயெஸ்வி

ஏப்ரல் 22. லால்குடி ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்.



2013-இல் அவர் மறைந்தவுடன்  இசை விமர்சகர், எழுத்தாளர் ‘வீயெஸ்வி’ விகடனில்  எழுதிய கட்டுரை இதோ!
=======


பல வருடங்களுக்கு முன்  ஒரு மாலை வேளை. மாக்ஸ்முல்லர் பவனில் லால்குடி ஜெயராமனின் வயலின் ஸோலோ. நிசப்தமான  சூழலில், லால்குடியின் வயலி னில் இருந்து தவழ்ந்து வந்த தோடியில் அந்த ராகத்துக்கு உண்டான அத்தனை நெளிவு சுளிவுகளும் குழைவுகளும் அடுத் தடுத்து அணிவகுத்து வந்து, அவையோரை மெய்ம்மறக்கச் செய்தன. மறக்கவே முடியாத அற்புதமான தோடி அது.

இன்னொரு கச்சேரி... சென்னை- திருப்பதி தேவஸ்தானத்தில். மகனும் மகளும் இரு பக்கமும் அமர்ந்திருக்க, பிருந்தாவன சாரங்கா ராகத்தை வாசிக்க ஆரம்பித்தார் லால்குடி. கோயிலுக்குப் பெருமாளைச் சேவிக்க வந்த பக்தர்கள்,  அந்த ராகப் பிரவாகத்தில் அமிழ்ந்துபோனார்கள். சற்றே வட இந்தியச் சாயல்கொண்ட இந்த ராக தேவதையைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தி, 'ரங்கபுர விஹார’ பாடலை வாசித்தபோது, ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் தரிசனம் கொடுத்தது நிஜம்.ஸ்வரங்களின்போது லால்குடி என்கிற மேதையின் முழு ஆற்றலும் அன்று வெளிப்பட்டது. வயலின் வாசிப்பில் உன்னதம் தொட்ட லால்குடி ஜெயராமனின் மரணம் சங்கீத உலகத்துக்குப் பேரிழப்பு!



ஸோலோ வாசிப்புக்கு வருவதற்கு முன்னால், இளம் வயதிலேயே பக்கவாத்தியக் கலைஞராக அறிமுகமாகி, அந்த நாள் சங்கீத சிம்மங்களுக்குச் சமமாக மேடையில் அமர்ந்து, அவர்களுக்கு ஈடுகொடுத்தது லால்குடியின் இன்னொரு சாதனை. ஜி.என்.பி - லால்குடி, செம்மங்குடி - லால்குடி என்று பலருடன் ஜமா சேர்ந்து, தன்னுடைய வாசிப்புத் திறனால் கச்சேரி மேடையைக் கலகலப்பு ஆக்கியவர். ஆலத்தூர் சகோதரர்கள் பல்லவி பாடியபோது எல்லாம் லால்குடி கொடுத்த பதிலடியைக் கேட்டவர்கள், இன்றும் வியந்து பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படித் தன்னுடை வாசிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்து அவர்களைத் தன் மீது வெறிகொள்ளச் செய்த லால்குடியின் இன்னொரு பரிமாணம், அவர் இயற்றிய வர்ணங்களும் தில்லானாக்களும். இசைக் கலைஞர்கள் மட்டுமின்றி, நடன மணிகளும் அவருடைய இந்தப் படைப்புகளைப் பயன்படுத்திப் பலன் அடைந்துவருகிறார்கள். நளினகாந்தி, நீலாம்பரி, சாருகேசி மாதிரி யான ராகங்களில் அமைந்த வர்ணங்களும்... மதுவந்தி, ரேவதி, தேஷ் போன்ற ராகங்களில் இயற்றப்பட்ட தில்லானாக்களும் காலத்துக்கும் லால்குடியின் புகழ் பாடிக்கொண்டே இருக்கும்.

லால்குடி எனும் சிறு கிராமத்தை ஊரறியச் செய்து, உலகம் முழுவதும் அதைப் பரவச் செய்த ஜெயராமன் விட்டுச் சென்றிருக்கும் சங்கீதச் சொத்து, இன்னும் பலப்பல தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் கலங்கரை விளக்கமாகவும் திகழும்!

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

1 கருத்து:

  1. I have seen Lalgudi in the 1950s as a lean figure with tuft and playing to
    all vidwans in the 100 pillared mandapam on the way to uchipillayar kovil in
    Tiruchi..He used to be there from morning to evening playing to all musicians
    His dedication to music is awesome

    பதிலளிநீக்கு