சனி, 4 ஜூன், 2016

வ.வே.சு.ஐயர் -2

கண்ணன் பாட்டு : முன்னுரை 
வ.வே.சு ஐயர் 

ஜூன் 3. வ.வே.சு. ஐயரின் நினைவு தினம்.



பாரதியாரின் கண்ணன் பாட்டு , இரண்டாம் பதிப்பிற்கு , அவர்  1919-இல் எழுதிய முன்னுரை இதோ!
==============

நம் காலத்துத் தமிழ்க் கவிகளுள் பிரதம ஸ்தானத்தை வகிக்கும் ஸ்ரீமான் சுப்ரஹ்மண்ய பாரதியின் நூல்களுக்கு முன்னுரை வேண்டுவதே யில்லை. இருப்பினும், 'பாயிர மல்லது பனுவ லன்றே என்னும் முதுமொழியை நினைத்தோ அல்லது வேறு என்ன எண்ணியோ, பதிப்பாசிரியர் இக்கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்புக்கு என்னை ஒரு முன்னுரை எழுதித் தரவேண்டுமெனக் கேட்டார்; சிறிதளவேனும் சாத்தியமாயிருக்கிற ஒரு காரியத்தை நட்புரிமை பூண்டோர் செய்யும்படி வேண்டினால் மறுத்தல் அழகன்று என நினைத்துச் சம்மதித்தேன்.

பாரத நாட்டின் குலதெய்வமாகிவிட்ட கண்ணனுக்குப் பாமாலை சூட்டாத கவிகள் அருமை. தன்னை நெடு நாட்களாக மறந்திருந்த பாரத நாடு திடீரென விழித்துக்கொண்டதும், அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி, கீதா சாஸ்திரத்தைக் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை வெற்றிபெற ஒட்டிய கண்ணபிரானுடைய உருவமே. அந்த உருவமானது நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது.

பத்து வருஷங்களுக்கு முன் அவர் பதிப்பித்த ஜன்ம பூமியிலேயே ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் என்று இரண்டு செய்யுட்கள் காணப்படுகின்றன. ஆனால், பிற்பட்டுத்தான் கண்ணனுடைய செயல்களும் திருவிளையாடல்களும் அவர் மனத்தைப் பூரணமாக ஆகருஷித்தன. இவ் ஆகருஷணத்திற்கு நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பாசுரங்களின் அனுசந்தானம் முக்கிய காரணமாக  இருந்திருக்கிறது. இக் கண்ணன் பாட்டானது பாவ விஷயத்தில் அப்பாசுரங்களின் வழியையே தழுவியதாக இருக்கிறது.

இஷ்ட தெய்வத்தைப் பல பாவங்களால் வழிபடலாகும் என்று நமது பக்தி சாஸ்திரங்கள் கூறுகின்றன, நமது ஆசிரியரும் இதை அனுசரித்துக் கண்ணனைத் தாயாகவும், தந்தையாகவும், எஜமானனாகவும், குருவாகவும், தோழனாகவும், நாயகியாகவும், நாயகனாகவும் பாவித்துப் பாடுகிறார்.
இவற்றுள், நாயக நாயகி பாவத்தைப்பற்றி இங்குச் சில மொழிகள் கூறாது விட முடியவில்லை. இப் பாவத்தால் பகவானை வழிபடும் முறை தொன்றுதொட்டுப் பக்தர்களாலும் கவிகளாலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ரோமன் கத்தோலிக் மதத்திலே கூட அடியார் வர்க்கத்தை நாயகியாகவும் கிறிஸ்துவை நாயகனாகவும் பாவித்து எழுதிய ஸ்தோத்திரங்கள் பல உள. நமது பாகவதத்தில் கோபிகைகளின் உபாக்கியானங்களெல்லாம் இப் பாவத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளனவே. மகா பக்திமதியான மீராபாய் உலகத்திலுள்ள ஜீவகோடிகள் அனைத்தும் ஸ்திரீப்பிராயம் என்றும் பகவான் ஒருவனே புருஷன் என்றும் பாவித்துப் பக்தி செய்திருக்கிறார். பரமஹம்ஸ ஸ்ரீராமகிருஷ்ண தேவரும் தம்முடைய அனுபவங்களுள் நாயகி  அனுபவத்தையும் அனுபவிக்க எண்ணி சேலை தரித்துக்கொண்டு, ராதை என்கிற பாவத்தால் கண்ணனை வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. திருக்கோவையாரையும், ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பாவையும் அனுபவித்த தமிழருக்கு இவ்விதம் வழிபடும் முறை புதிதாகப் படாது.

ஆனால் இந்த பாவத்தை ஆளுவது கத்தியின் கூர்ப்பக்கத்தின்மீது நடப்பதைப் பொன்ற கஷ்டமான காரியம். ஒரு வரம்பு இருக்கிறது; அதற்கு இப்புறம் அப்புறம் போய்விட்டால், அசந்தர்ப்பமாகிவிடும். ஸ்ரீபாகவதத்திலுங்கூட கோபிகா உபாக்யானங்களில் சுக பகவான் இவ்வரம்பை அங்கங்கே கடந்துவிட்டிருக்கிறார் என்பது எனது தாழ்ந்த அபிப்பிராயம்.

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும், 
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் 

என்று தொடங்கும் திருவாய் மொழிகளையும், (5, 6, 1)

கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ? 
திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ? 

என்று தொடங்கும் ஆண்டாளுடைய பாசுரங்களையும் (7, 1) போலச் செயிரின்றி இப்பாவத்தைப் பாடுவது அநேகமாய் அசாத்தியம்.

நமது கவியும் இப் பாவத்தை விரிக்கையில் பரபக்தியை விடச் சரீரமான காதலையே அதிகமாக வர்ணித்திருக்கிறார் ஆனால், சுகப் பிரம்மமே நிறுத்த முடியாததான தராசு முனையை நம் ஆசிரியர் நிறுத்தவில்லை என்று நாம் குறை கூறலாமா?

இந்தக் கீர்த்தனங்களைப் பரபக்திக்குப் பேரிலக்கியமாகக்கொள்ள வேண்டுவதில்லை. ஆசிரியர் இந்நூலில் கவி என்கிற ஹோதாவில்தான் நம்மிடம் வருகிறார் என நினைக்க வேண்டும். கவிதா ரீதியாகப் பார்க்கும்போது, இக் கீர்த்தனங்களுள் பெரும்பாலவையிலுள்ள சுவை தேனினும் இனிதா யிருக்கிறது. இன்னொன்று: கவிதை யழகை மாத்திரம் அனுபவித்துவிட்டு, இந் நூலின் பண்ணழகை மறந்துவிடக்கூடாது.

இதிலுள்ள பாட்டுக்களிற் பெரும்பாலவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையா யிருக்கின்றன. கடற்கரையில், சாந்தி மயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும் மோஹ வயப்படுத்தி நீலக்கடலையும் பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலிலுள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்.

இந் நூலைத் தமிழுலகம் ஆதரித்துத்தான் இரண்டாவது பதிப்பு வெளிவருகிறது. ஆனால், ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயர் எழுதிய ஆங்கிலக் கீர்த்தனங்களின் விலை மூன்று ரூபாயாக இருக்க, அளவில் அந்நூலில் குறையாததும், சுவையில் அதற்கு இணையாக இருப்பதுமான இந் நூலின் முதற் பதிப்புக்குக் காகித விலை ஏறிவிற்ற காலத்தில் பதிப்பாசிரியர் விலை கால் ரூபாயாகக் குறைக்க வேண்டி யிருந்தது என நினைக்கும்போது நாட்டில் தமிழபிமானம் வெளிப்படையாக விளங்கவில்லை யென்றாவது ஒப்புக்கொள்ள வேண்டும். முன் காலத்தில், ஆசிரியர்களுக்கு அரசர்கள் ஏராளமான பொருள் உதவி செய்து அவர்கள் மனத்தைச் சிறிய விசாரங்கள் பீடிக்காமல் காத்து வந்து அவர்களுடைய ஆற்றல் நாளுக்கு நாள் அதிகரிக்கும்படி செய்து வந்தார்கள். தற்காலத்தில் கல்வியபிமானமுள்ள பொது ஜனங்கள் தாம் அக்காலத்து அரசரின் ஸ்தானத்தை வகிக்கிறார்கள். இவர்கள் தங்கள் அபிமானத்தை, விலையைப் பொருட்படுத்தாமல் நூல்களின் யோக்கியதையைக் கருதி ஆதரித்துத்தான் காட்டமுடியும். நமது ஆசிரியரின் நூல்களை நம் நாட்டவர் சரிவர ஆதரிக்காததனாலே.

'சுற்றி நில்லாதே போ, பகையே; துள்ளி வருகுது வேல்' 

என்றும்,

'கைதனில் வில்லும் உண்டு; 
காண்டீவம் அதன் பேர்'

என்றும் உள்ள அக்ஷர லக்ஷம் பெறுமான பாக்களை எழுதியிருக்கும் அவருடைய உற்சாகம் குன்றிப்போயிருக்கிறது. தமிழபிமானிகள் இப் பதிப்பை ஆதரித்து வாங்கி ஆசிரியனுடைய உற்சாகத்தை உயர்த்தி அவரால் தமிழில் புதிய இலக்கியங்கள் பிறக்கும்படி செய்வார்கள் என நம்புகிறேன்.

புதுச்சேரி: சித்தார்த்தி ,
ஆவணி 22உ.

( ஆகஸ்ட், 1919 )

தொடர்புள்ள பதிவுகள்:

வ.வே.சு.ஐயர்

1 கருத்து: