திங்கள், 18 ஜூலை, 2016

வாலி -1

நினைவு நாடாக்கள் -1 
வாலி 
ஜூலை 18. கவிஞர் வாலியின்  நினைவு தினம்.

விகடனில் வந்த அவருடைய  “நினைவு நாடாக்கள்” தொடரிலிருந்து இரு பகுதிகள்:
============

எழுதுகோலை ஏந்துவதற்கு முன்னால், என் கை - தூரிகையைத் தூக்கிய கை!
பிள்ளைப் பிராயத்தில் - கலர் கலராய்ப் படம் வரைந்துவிட்டு, கலர்ச் சாயம் போகக் கை கழுவுவேன்; பின்னாளில், அந்தக் கலையையே கை கழுவுவேன் என்று - நான் கனாக்கூடக் கண்டதில்லை!
பாட்டுதான் பிழைப்பு என்று ஆன பிற்பாடும்கூட -
பல்வேறு சித்திரக்காரர்களின் படங்களின் மாட்டு - என்னை இழந்து நின்ற தருணங்கள் ஏராளம்!
அடியேனுக்குக் கொஞ்சம் அரசியல் பித்தும் உண்டு; ஆதலால், கார்ட்டூன்கள் பால் கவனத்தை அதிகம் செலுத்துவேன்.
அத்துணை பக்கங்களையும் கார்ட்டூன் களே அடைத்துக்கொண்டு - ஓர் ஆங்கில வார ஏடு, அற்றை நாளில் வெளியாகி...
அனேகப் பிரமுகர்களின் அடிவயிற்று அமிலத்தை அதிகப்படுத்தியது.
பத்திரிகையின் பெயர் 'SHANKER'S WEEKLY!’
அதன் ஆசிரியரும் அதிபரும் ஒருவரே. அவர்தான் மிஸ்டர் ஷங்கர். சிறந்த கார்ட்டூனிஸ்ட்.
கேரளாக்காரர். அவரது கேலிச் சித்திரங் கள், நேந்திரம் பழம் முழுக்க - நீள நெடுக நோகாமல் ஊசியேற்ற வல்லவை!
நேருவின் மந்திரி சபையில் - ஒருவர் உணவு மந்திரியாக இருந்தார். பெயர் நினைவில்லை. ஆனால், அவர் PERSONALITY   ஆவி படர்ந்த ஆடிபோல் - மங்கலாக என் மனத்துள் நிற்கிறது; தொந்தி பருத்தும், தலை சிறுத்தும் இருப்பார் அவர்!
கேள்வி கேட்பதில் மிகச் சமர்த்தராக விளங்கிய திரு.காமத், இன்றளவும் எல்லோராலும் கொண்டாடப்படுகிற ஒரு PARLIAMENTARIAN!
உணவு மந்திரியைப் பார்த்துப் பாராளுமன்றத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார்  -
'தற்போது நம் தேசத்தில் - உணவு தானியங்களின், DEFICIT AREA எது? SURPLUS AREA எது?’ என்று.
உடனடியாக பதிலிறுக்க உணவு மந்திரியால் ஏலவில்லை.

இதுபற்றி -
மறுநாள் கார்ட்டூனிஸ்ட் ஷங்கர் ஒரு கார்ட்டூன் வரைந்தார்.
உணவு அமைச்சரின் உடலமைப்பில் - தலை சற்று சிறியதாகவும் - தொந்தி சற்றுப் பெரியதாகவும் இருக்குமென்பதை ஓர்ந்து-
அவரது படத்தைப் போட்டு -
தலைப் பகுதியில், DEFICIT AREA  - என்றும்; தொந்திப் பகுதியில் SURPLUS AREA என்றும் எழுதினார் ஓவியர் ஷங்கர்!
உலகு சிரித்தது ஒருபுறம் இருக்கட்டும். உணவு அமைச்சரே விலா நோகச் சிரித்து, திரு.ஷங்கரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியதாகச் சொல்வார்கள்!
பின்னாளில் - என் மனதைப் பெரிதும் கவர்ந்த கார்ட்டூனிஸ்ட்  மிஸ்டர். மதன்!
அப்போதெல்லாம் - புதன் கிழமையில் 'விகடன்’ வந்துகொண்டிருந்தது.
'புதன் வந்தால், மதன் வருவார்!’ என்று நான் வேடிக்கையாகச் சொல்லி, விகடனைப் புரட்டுவேன்.
நக்கலும் நையாண்டியுமாய்ப் படங் கள் வரைந்து - சமூக அவலங்களைச் சாடியதில் -
மதன், மற்றவரிடமிருந்து தனித்து நின்றார் என்பேன்.
சுருங்கச் சொன்னால் -
'செவ்வாய்க்குப் பின் புதன்;
ஷங்கருக்குப் பின் மதன்!’ எனலாம்.
மதன் அவர்கள் -
நல்ல CARTOONIST மட்டுமல்ல;
நல்ல COLUMNIST கூட!
கேள்வி பதில் பகுதியே - அதற்குக் கண்கூடு.
அவ்வளவு ஏன்? என்னுடைய 'விகட’னில் வெளியான ராமாயணத் தொடருக்கு -
அவர்தான் வைத்தார் 'அவதார புருஷன்’ என்னும் தலைப்பை!
புடவைகளுக்கு மட்டுமல்ல; புதினங்களுக்கும் -
தலைப்பு என்பது தலையாய விஷயம். புடவைத் தலைப்பு, வாங்க வைக்கும்; புதினத் தலைப்பு, வாசிக்கவைக்கும்!
 *   *    *    *    *
கண்ணதாசனுடைய எழுத்துப் பணி புதுக்கோட்டையில்தான் கன்னி முயற்சி யாக ஆரம்பம் ஆனது.
என்னுடைய எழுத்துப் பணியும் புதுக் கோட்டையில்தான் ஆரம்பம் ஆனது.
புதுக்கோட்டை இராமச்சந்திரபுரத்தில் இருந்து பூத்துக் கிளம்பித் தமிழ் வளர்த்த பதிப்பகங்கள் அற்றை நாளில் அனேகம் உண்டு.
பல சிற்றேடுகள் தோன்றி, பின்னாளில் பிரபலமான பல எழுத்தாளர்களுக்கு நாற்றங்காலாக விளங்கிய ஊர் புதுக்கோட்டை!
நான் என் இளமைக் காலத்தில் கவிதைப்பித்து தலைக்கேறித் திரிந்தேன். நிறைய நிறைய - சின்னச் சின்னக் கவிதைகள் எழுதி, சிற்றேடுகள் அதிகம் வெளியாகிக்கொண்டிருந்த புதுக்கோட்டைக்கு அனுப்புவதுண்டு.
அச்சில் என் கவிதை வராதா என நாவில் எச்சில் ஊற நின்ற காலம் அது!
புறப்பட்ட வேகத்திலேயே, புதுக்கோட்டையிலிருந்து என் கவிதைகள் திரும்பி வந்தன. அச்சு வாகனம் ஏற அருகதையற்றவையாக என் படைப்பு கள் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் -
நான் சோரவில்லை. 'என் கவிதையைவிட மட்டமான கவிதையெல்லாம் ஏற்கப் படுகின்றனவே’ என்று - பெட்டைப் புலம்பல்களில் ஈடுபட்டு, பிறரது எழுத்துகளைப் பரிகசிக்கும் பாவத்தைப் பண்ணவில்லை.
'என் குஞ்சு பொன் குஞ்சு’ எனக் காக்கைபோல் எண்ணாமல் - நான், செப்பு கவிதை செப்பு என ஓர்ந்தேன்; அது, செம்பொன் அல்ல எனத் தேர்ந்தேன்!
வேதாளம் முருங்கை மரம் ஏற ஏற - நான் விக்கிரமாதித்தன்போல் விடாக்கண்டனாயிருந்தேன்.
ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது - 'உங்கள் கவிதை பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டது’ என்று!
கடிதத்தை அனுப்பிய பத்திரிகையின் பெயர் 'கலைவாணி’; புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மாதம் இருமுறை ஏடு.
திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் உண்டு.'கலைவாணி’ பத்திரிகை ஆசிரியரை நேரில் சந்தித்து, நன்றி சொல்வதோடு அல்லாமல் அவர்பால் என் நட்பை நீட்டித்துக்கொள்ள வும் நினைந்து -
நான் புறப்பட்டேன் புதுக்கோட்டைக்கு. 'கலைவாணி’ ஆசிரியரைக் கண்டு கும்பிடு போட்டேன்.
உட்காரச் சொன்னார். கவிதையைப் பாராட்டினார். தன் வாயால் என் கவிதையைப் படித்து அதன் நயங்களை வெகுவாக சிலாகித்து, அடிக்கடி எழுதச் சொன்னார்.
கவிதை இதுதான்:
'நிலவுக்கு முன்னே
நீ வர வேண்டும்;
நீ வந்த பின்னே
நிலவெதற்கு வேண்டும்?’
- இப்படிப் போகும் அந்தக் கவிதை; ஒரு கப் காபி வரவழைத்துக் கொடுத்து என்னை கவுரவப்படுத்தினார் 'கலைவாணி’ ஆசிரியர்.
கதர்ச் சட்டை; கதர் வேட்டி; நெற்றியில் திருநீறு; நேர்கொண்ட பார்வை; காந்தியடிகளின்பால் மாளாக் காதல்!
நெடுநாளைய நண்பனோடு அளவளாவுதல்போல் என்னோடு அளவளாவினார்.
திருச்சி தேவர் ஹாலில், தான் எழுதிய நாடகம் அடுத்த வாரம் நடக்க இருப்பதையும், அதற்கு நான் வர வேண்டும் என்பதையும் உறுதிபடச் சொன்னார்.
நான் அந்த நாடகத்திற்குப் போயிருந்தேன். அற்புதமான நாடகம். உரையாடல்கள் எல்லாம், சமூகத்தைச் சாட்டையெடுத்து விளாசுதல்போல் வெறியும் நெறியும் சார்ந்ததாயிருந்தன.
அந்த நாடகத்தை அரங்கேற்றியது - முத்தமிழ்க் கலா வித்வ ரத்ன டி.கே.எஸ். சகோதரர்கள்!
நாடகம் முடிந்ததும், நாடக ஆசிரியரைச் சந்தித்து, என் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். மெல்லப் புன்னகைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.
என் முதல் கவிதையைத் தன் பத்திரிகையில் வெளியிட்ட அவர்தான் -
பின்னாளில், எம்.ஜி.ஆர். படத்தில் - நான் முதல் பாட்டு எழுதும் வாய்ப்புப் பெறக் காரணமாவார் என்று, நான் கனவிலும் கருதினேனில்லை!
'கலைவாணி’ ஏட்டில் கவிதை எழுதிவிட்டால்கூட -
'பொன்னி’யில் என் எழுத்து இடம் பெறவில்லையே என்று நான் ஏங்கிக்கிடந்தேன்.
திரு.முருகு.சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராய்க்கொண்டு - புதுக்கோட்டையிலிருந்து அந்நாளில் வெளியான மாத இதழ்தான், 'பொன்னி’!
திராவிட இயக்கத்தினர் கரங்களில் அது தவழும் அளவு - தமிழ் ஆர்வலர் நெஞ்சங்களில் அதற்கொரு நிலைபேறு இருந்தது!
'பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்’ என்னும் வரிசையன்று -
'பொன்னி’ ஏட்டில் இடம் பெற்று, இறவாப் புகழ் பெறும் கவிதைகளை யாத்தருளும் புலவர் பெருமக்களை - இருந்தமிழ்நாட்டோர்க்கு இனம் காட்டியது.
இன்று நம்மிடையே மூத்த கவிஞராய் வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியவர் -
திரு. சாமி.பழனியப்பன் அவர்கள், 'பொன்னி’ ஏடு சுட்டிய, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் தலையாயவர்.
கவிஞர் பெருமான் திரு.பழனியப்பன் அவர்களின் தந்தையார் பெயரும் - தமிழ்த் தாத்தாவின் பெயரும் ஒன்றாயிருப்பதே - இவர், தமிழ் வளர்க்கும் தலைமுறையைச் சேர்ந்தவர், என்பதை உறுதிப்படுத்துகிறது!
ஆம்; கவிஞர் சாமி.பழனியப்பன் தந்தையார் பெயர் -
திரு. உ.வே.சாமிநாதன்!
திருச்சி வானொலி நிலையத்தில் நான் தற்காலிகக் கலைஞராகப் பணியாற்றிய நாளில் -
எனக்கு நெருங்கிய நண்பராயிருந்த திரு.என்.ராகவன் அவர்களின் உறவினர் திரு.சாமி.பழனியப்பன்.
வானொலி நிலையக் கவியரங்கத்தில் திரு.பழனியப்பன் பாடியபொழுது - நானும் கூட்டத்தில் ஒருவனாய் நின்று கேட்டவன்!
அவருடைய கவிதைகளை நான் - என் ஆரம்ப நாள்களில் நிறையப் படித்துப் பிரமித்துப்போயிருக்கிறேன் -
''பாரதிதாசனின் இன்னொரு புனை பெயரோ பழனியப்பன் என்பது’ என்று!
பழனியப்பனால் தமிழ் பெற்ற தகவு பேசத் தரமன்று; அவ்வளவு என்றால் அவ்வளவு!
என்னுள் இருக்கும், எள் முனையளவு தமிழும் பழனியப்பனார் பாக்களை என் இளமைக் காலத்தில் படித்ததனாலான பயனே!
சாமி.பழனியப்பன் பல கவிதைகளை இப்பசுந்தமிழ்நாட்டுக்கு வழங்கியிருப்பினும் -
அவர் யாத்த கவிதைகளிலெல்லாம் மேலான பெருங்கவிதை ஒன்று உண்டு!
அந்தக் கவிதையின் பேர்:
'பழநிபாரதி’!
என் முதல் கவிதையைப் பிரசுரித்த  -
புதுக்கோட்டை 'கலைவாணி’ ஏட்டின் ஆசிரியரும் -
என் முதல் பாட்டு - எம்.ஜி.ஆருக்கு நான் எழுத வாய்ப்பு வழங்கிய பெருமகனாரும், ஒருவரே என்றேனல்லவா?
அவர்தான் -
அதிக எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய திரு. ப.நீலகண்டன் அவர்கள்!
திரு. ப.நீலகண்டன் எழுதியதுதான் - திருச்சி தேவர் ஹாலில் டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றிய நாடகம்; நாடகத்தின் பெயர்:
   'முள்ளில் ரோஜா!’
====

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவு :

வாலி

3 கருத்துகள்:

  1. புதுக்கோட்டை கவிகளுக்குப் புகுந்த வீடு
    சந்தவசந்தம் கவிகளுக்குத் தாய் வீடு

    பணிவுடன்வணக்கம் சிரம்தாழ்த்திநன்றிஅய்யா பேராசிரியர் Pas Pasupathy அவர்களே

    பதிலளிநீக்கு