வியாழன், 22 செப்டம்பர், 2016

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 1

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் -1
அ.ச.ஞானசம்பந்தன்

                                   

      

செப்டம்பர் 22. ‘வெள்ளிநாக்கு’ வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியின் பிறந்ததினம். 

தான் படிக்கும்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் இருந்த சாஸ்திரியாரைப் பற்றி அறிஞர் அ.ச.ஞா அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி :

=======

இவ்வளவு எளிமையுடன் அனைவரிடம் பழகினார் என்றால், அதனால் அவரைத் தரம்குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. மாமனிதர்கள் குழந்தைபோல் பல நேரம் எளிதாக இருப்பார்கள். ஆனால், தேவை ஏற்படும் பொழுது அவர்களுடைய உண்மையான சொரூபத்தை அறிய முடியும். 

1936 ஆம் ஆண்டுக்குரிய பட்டமளிப்பு விழா மிகக் கோலாகலமாகவும் விமரிசையாகவும் தொடங்கிற்று. அன்றைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஸர் ஆர்ச்சிபால்ட் நை பட்டமளிப்பு விழாவுக்கு வருவதாக இருந்தது. மாணவர்களாகிய நாங்கள் மாடியின்மேல் ஏறிக்கொண்டு கவர்னர் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். புரவலர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் சாலையில் நின்றுகொண்டு கவர்னர் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். நியாயமாகத் துணைவேந்தரும் அவருடன் நின்று கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், துணைவேந்தரோ, சாலையின் வடகோடியில் நின்றுகொண்டு அங்கு வரும் வண்டிகளை 
” இங்கே நிறுத்து; அங்கே நிறுத்தாதே” என்று போக்குவரத்துக் காவல் துறைப் பணியைச் செய்து கொண்டிருந்தார். ராஜா ஸர் அவர்கள் கூப்பிடவும் முடியாமல், "கவர்னர் வருகின்ற நேரத்தில் எங்கோ போய் நிற்கிறாரே”  என்ற ஆதங்கத்துடன் சாலையைத் திரும்பிப் பார்ப்பதும் துணைவேந்தரைப் பார்ப்பதுமாகத் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாகக் கவர்னர் வண்டி வந்து நின்றது. புரவலர் ராஜாஸர் வண்டிக் கதவைத் திறக்க, கவர்னர் கீழே இறங்கினார். மிக பயபக்தியுடன் புரவலர் சற்று எட்டி நின்று கொண்டிருந்தார். ஆனால், துணைவேந்தர் வந்தபாடில்லை. கவர்னர் சாலையில் நின்றுகொண்டிருந்தார். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து, துணைவேந்தர் மிகச் சாவதானமாக நடந்துவந்தார்.

கவர்னர் மிக்க பணிவுடன் வளைந்து கொடுத்து, துணைவேந்தரை வணங்கினார். துணைவேந்தர், வளைந்து வணங்கிய கவர்னரின் முதுகில் படார் என்று ஓர் அடி கொடுத்து "இளைஞனே, எவ்வாறு இருக்கிறாய்?” என்று வினவினார். புரவலர் முதல் யாவரும் Your Excellency என்று நிமிடத்திற்கு மூன்று முறை போட்டுப் பேசும் அதே கவர்னரை முதுகில் தட்டி Young fellow என்று துணைவேந்தர் அழைப்பது, மாணவர்களாகிய எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கிற்று கவர்னர், துணைவேந்தர், படி ஏறி மாடி வர, புரவலர் பின்னே வந்தார். மேடையில் மூன்றே நாற்காலிகள், ஒரு புறம் புரவலர், மறுபுறம் துணைவேந்தர், நடுவிலே கவர்னர்.  துணைவேந்தர் சுருக்கமாக வரவேற்புரை கூறினார். கவர்னர் பேச எழுந்தார். ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. திடீரென்று ஆறடி உயரமிருந்த ர் ஆர்ச்சிபால்ட் நை வளைந்து, துணைவேந்தரின் பாதங்களை, ஒரு பழக்கப்பட்ட இந்தியனைப்போல் தொட்டு வணங்கினார். துணைவேந்தர் வடமொழியில் பெரியோர்கள் சொல்லும் ஆசீர்வாதத்தை அப்படியே சொன்னார். என்ன வியப்பு! அந்த ஸ்லோகம் முடிகின்றவரை வெள்ளைக்கார கவர்னர் வளைந்து வணங்கியபடியே நின்றார். 

அதன்பிறகு, தம் பேச்சைத் தொடங்கிய கவர்னர், பேசிய முற்பகுதியின் சுருக்கம் வருமாறு:- "மகாகனம் ஐயா அவர்களே, நான் சிறுவனாக இருக்கும்பொழுது என் தந்தையாரைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்திருந்தீர்கள். அப்பொழுது என் தந்தையார் தங்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார் என் வலக் காதைத் திருகிய நீங்கள் இளைஞனே நீ நன்கு படித்து, இந்தியாவில் ஒரு மாகாணக் கவர்னராக வர வேண்டும்”  என்று என்னை ஆசீர்வதித்தீர்கள். உங்களுடைய ஆசீர்வாதம் பொய்யாகாமல், உங்களுடைய மாகாணத்திற்கே கவர்னராக வந்துவிட்டேன். மறுபடியும் என்னை ஆசீர்வதியுங்கள்என்று தம் முன்னுரையை முடித்துவிட்டுப் பிறகுதான், "ராஜா ஸர் செட்டியாரவர்களே, துணைவேந்தர் அவர்களே!” என்று விளித்துப் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கினார்.

வெள்ளைக்காரன் என்றால், அவர்கள் தெய்வப் பிறவிகள்; வெள்ளைக்கார கவர்னர் என்றால், அவர்கள் உலாவரும் தெய்வம் என்று கருதி வழிபாடு செய்யப்பட்ட அந்தக் காலத்தில் வெள்ளைக்கார கவர்னரை முதுகில் தட்டி இளைஞனே, எவ்வாறு இருக்கிறாய்?” என்று கேட்ட ஒரு தமிழர் உண்டு என்றால், அவர்தான் மகாகனம் சீனிவாஸ சாஸ்திரியார் என்ற மாமனிதர்.


65 ஆண்டுகள் ஆகியும் இந்தக் காட்சி என் மனத்தை விட்டு மறையவே இல்லை. ஆம், மகாகனம் சாஸ்திரியார் அவர்கள் ஓர் மாமனிதர் என்பதில் ஐயமே இல்லை. இத்தனைக்கும் அவர் ஒரு காங்கிரஸ்காரர்கூட அல்ல. அப்படியிருந்தும், இந்த மாமனிதர்கள் தேவை ஏற்படும்போது விஸ்வரூபம் எடுத்துக் காட்சி தருகின்றனர். 

[ நன்றி: “நான் கண்ட பெரியார்கள்” அ.ச.ஞா ] 

தொடர்புள்ள பதிவுகள் :

3 கருத்துகள்:

  1. மகா கனம் பொருந்திய சாஸ்திரியார் பற்றி ஒரு சுவையான தகவல்.விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலை கழகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்தார் துணைவேந்தர் சாஸ்திரியார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரானபாலதண்டாயுதம் சாஸ்திரியாரை பற்றி சொன்னது,our vice chancellor is neither right nor honourable ,இதை சாஸ்திரியார் மிகவும் ரசித்தாராம்.

    பதிலளிநீக்கு
  2. மனிதர்கள் எவ்வளவு தராதரத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில்! ம்... பொற்காலம் தான் அந்தக் காலம்...

    பதிலளிநீக்கு