செம்பை செய்த அற்புதம்
' கல்கி’
[ ஓவியம்: மாலி ] |
‘கல்கி’ அவருடைய தமிழிசைக் கச்சேரியை ( 40 -களில்?) கேட்டு எழுதின கட்டுரை இதோ!
======
சென்னையில் நடந்த சங்கீத விழாக்களில் இந்தத்தடவை எல்லாவிதத்திலும் சந்தேகமறச் சிறந்து
விளங்கியது தமிழிசை விழாவாகும்.
கச்சேரி வரிசையின் அமைப்பிலும்,
கச்சேரிகள்
நடந்த சிறப்பிலும், ரஸிகர் கூட்டப் பெருக்கிலும், அவர்களுடைய உபசரிப்பிலும், இன்னும் எல்லாவற்றிலும் தமிழிசை மேன்மை பெற்றிருந்தது.
தமிழிசையை இந்தத் தடவை ரேடியோக்காரர்கள் ஒலிபரப்பினார்கள். தமிழிசை மண்டப வாசலில்
ஆயிரக்கணக்கான ஜனங் கள் நின்று ஒலிபெருக்கியின் மூலம் தமிழிசையைக் கேட்டு ஆனந்தித்தார்கள்.
தமிழிசை விழாவில் முதல் கச்சேரி செம்பை வைத்தியநாத பாகவதரின்
கச்சேரிதான். அது முதல்தரக் கச்சேரியாகவும் எல்லா விதத்திலும் முதன்மையான கச்சேரியாகவும்
அமைந்துவிட்டது.
கேதாரத்தில் "சகல புவன நாயகா" என்று எடுத்து கார்வை கொடுத்து ஜம்மென்று
மேலே நிறுத்தியபோதே சபையில் கலகலப்பு உண்டாகி விட்டது. கச்சேரி இன்றைக்கு 'ஒண்ணாம் நம்பர்’ என்று தீர்மானம் ஆகிவிட்டது.
அப்புறம் கல்யாணி, மோகனம், ஸாவேரி, ஹம்ஸானந்தி ஆகிய ராகங்களில்,
இதுவரை
நாம் கேளாத அழகிய தமிழ்க் கீர்த்தன்ங்களைப் பொழிந்தார். ஒவ்வொரு பாட்டுக்கும் சபையோர்
கரகோஷத்தைப் பொழிந்தனர்.
மேற்படி அருமையான தமிழ்க் கீர்த்தனங்கள் செம்பையின் மூதாதையாகிய லலிதா தாஸரால்
இயற்றப்பட்டவை யென்று அறிகிறேன்.
கச்சேரிகளின்போது அழுது வடியும் சுபாவம் எப்போதுமே செம்பையிடம் கிடையாது. அவருடைய
கச்சேரிகளில் எப்போதும் குதூகலமும் கலகலப்புமாகவே இருக்கும். ஆனால், இந்தத் தமிழிசைக் கச்சேரியில் அவருக்கும் சபையோருக்கும்
ஏற்பட்ட குதூகலம் மாதிரி இதற்குமுன் நான் பார்த்ததேயில்லை.
மோகன ராகத்தில் "இத்தினனே சுதினம்" என்னும்
அழகான கீர்த்தனத்தைச் செம்பை அழுத்தந் திருத்தமாய்ப் பாடி முடித்தபோது, சபையோரும், "இத்தினமே சுதினம்" என்பதை
அழுத்தந் திருத்தமாய்க் கரகோஷம் செய்து ஆமோதித்தனர்.
ஒரு விஷயத்தில் செம்பை வைத்தியநாத பாகவதர் நம்மை அடியோடு
ஏமாற்றி விட்டார்.
"செம்பையின் தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் மலையாள பாணியாயிருக்கலாம்"
என்று நாம் எச்சரித்திருந்தோம்.
இது விஷயத்திலேதான் சங்கீத சாம்ராட் நம்மை ஏமாற்றிவிட்டார்.
( இந்த மாதிரி ஏமாற்றங்கள் எத்தனை நேர்ந்தாலும் நாம் ஆனந்தமாய் வரவேற்கிறோம் என்று சொல்ல வேண்டியதில்லை.)
தமிழ் நாட்டிலே பிறந்து வளர்ந்த வித்வான்களைக் காட்டிலும்
செம்பை தமிழ் வார்த்தைகளைச் சுத்தமாகவும் தெளிவாகவும் கணீரென்றும் உச்சரித்துச் சபையோரைப் பிரமிக்கச் செய்து விட்டார்.
தமிழ் நாட்டின் பிரபல வித்வான்களில், "காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே என்னைக் - காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே!"
என்று பாடுகிறவர்கள் இருக்கிறார்கள்.
"ஆடின தேபடியோ! - நடானம் - ஆடினதே
ஏபடியோ" என்றும், "எப்போ வாருவாரோ - எந்தன் - காலி
தீர" என்றும் பாடுவதைக் கேட்டிருக்கிறோம்.
எனவே, செம்பை பாகவதர் தமிழ்ப் பாட்டுக்களை
அப்பழுக்கில்லாமல் சுத்தமாய் உச்சரித்து பாடியதைக் கேட்டபோது சபையோர் அதை ஒரு அற்புதமாகவே
கருதியதில் சிறிதும் வியப்பில்லையல்லவா?
ஏழு தமிழ்க் கீர்த்தனங்கள் பாடி, தோடி ராக ஆலாபனம் "தானம்பல்லவி எல்லாம் முறையாகப்பாடி, சில்லரை உருப்படிகள் பாடி, கடைசியில் "பூரீ ராமச்சந்திரனுக்கு
ஜயமங்களம்" பாடி முடித்தபோது, "தமிழிசைக்கு இசை அளிக்கக் கூடியவர்
செம்பை வைத்தியநாத பாகவதர்தான்" என்று சொல்லும்படி ஆகிவிட்டது.
தமிழிசை இயக்கத்தின் சரித்திரத்தில் மேற்படி காயன கந்தர்வரின்
கச்சேரி ஒரு முக்கிய சம்பவம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தமிழிசை இயக்கம் செம்பை அவர்களின் தொண்டினால் இன்னும்
பிரமாதமான சிறப்பும் மேன்மையும் அடையுமென்றும் எதிர்பார்க்கிறேன்.
[ நன்றி: அமரர் கல்கியின் “ கட்டுரைக் களஞ்சியம்” , 2, சாரதா பதிப்பகம். ]
தொடர்புள்ள பதிவுகள்:
அருமை
பதிலளிநீக்குமிகவும் அருமையான பதிவு. தயவு செய்து இம்மாதிரி,அருமையான
பதிலளிநீக்குபழமையான செய்திகளை அளிக்கும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
@Nagarajan Natesa நன்றி . என் எல்லாப் பதிவுகளுமே இப்படித்தான்! மற்றவற்றையும் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு