வியாழன், 20 அக்டோபர், 2016

ராஜம் கிருஷ்ணன் - 1

கள ஆய்வுத் துறையில் ஒரு நட்சத்திரம்! 
திருப்பூர் கிருஷ்ணன்


அக்டோபர் 20. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நினைவு தினம்.

====

வீட்டில் அமர்ந்தே குடும்பக் கதைகளைப் பலர் எழுதிவந்த கால கட்டத்தில், கள ஆய்வு இலக்கியம் என்ற புதிய மரபைத் தோற்றுவித்தவர் ராஜம் கிருஷ்ணன். தமிழ்ச் சமூகத்தில் ஆண்களுக்குள்ள பல வசதி வாய்ப்புகள் பெண்களுக்கில்லை. தனி நபராகப் பற்பல இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்துக் கள ஆய்வு இலக்கியத்தைப் படைக்க வேண்டியிருந்தது. ஆனால் அயராமல் அந்தப் பணியில் ஈடுபட்டார் அவர்.

பொறியியலாளரான கணவர் கிருஷ்ணன் பணிநிமித்தம் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் உடன்சென்ற அவர், அந்தந்தப் பிரதேச மக்களின் வாழ்வை நேரில் ஆராய்ந்தார். ஏராளமான ஏழை மக்களைப் பேட்டி கண்டார். கிடைத்த தகவல்களை உள்ளடக்கி, ஒரு கதையைப் புதிதாக சிருஷ்டித்தார். ஊடும் பாவும்போல கதையும் அதில் வரும் மாந்தர்களும் அவர் சேகரித்த தகவல்களும் பின்னிப் பிணைந்தன. அற்புதமான கள ஆய்வு இலக்கியம் தமிழில் ஒரு தனித்துறையாக வளரத் தொடங்கியது.


ஊட்டி மலைவாழ் படுகர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் குறிஞ்சித்தேன், கோவா விடுதலைப் போரை மையமாகக் கொண்ட வளைக்கரம், உப்பளத் தொழிலாளர்களின் பிரச்னைகளைப் பேசும் கரிப்பு மணிகள்”, தஞ்சை விவசாயிகளைப் பற்றிப் பேசும் சேற்றில் மனிதர்கள் என்றிப்படி அவரது ஒவ்வொரு நாவலும் தடம் பதித்தவை தான். வாழ்க்கை வரலாற்று வரிசையில் அவர் எழுதிய டாக்டர் ரங்காச்சாரியும் குறிப்பிடத்தக்கது. எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களால் தற்கால இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவர் அவர்.


தினமணி கதிரில், தினமணி முன்னாள் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் கேட்டுக் கொண்டதன் பேரில் இரண்டு நாவல்களைத் தொடராக எழுதினார். ஒன்று பாதையில் பதிந்த அடிகள். இன்னொன்று  மண்ணகத்துப் பூந்துளிகள். ஒவியர் கோபுலு தம் எழுத்துகளுக்குச்  சித்திரம் வரைந்ததே இல்லை என  ஆதங்கப்பட்ட ராஜம் கிருஷ்ணன், கோபுலுவின் சித்திரங்களுடன் தம் எழுத்து தினமணிகதிரில் பிரசுரமானால் சிறப்பாயிருக்கும் எனக் கேட்டுக் கொண்டார். தாம் அவர் எழுத்துக்குச் சித்திரம் வரையாமல் போனது தற்செயலாக நேர்ந்ததுதான் என்று சொன்ன கோபுலு, அவர் எழுத்துக்கு ஓவியம் தீட்டுவது தனக்குக் கிடைத்த பாக்கியம் எனச் சொல்லி மகிழ்ச்சியுடன் ஓவியம் வரைந்தார். ராஜம் கிருஷ்ணனின் எண்ண ஓவியமும் கோபுலுவின் வண்ண ஓவியமும் தினமணிகதிரைப் பெருமைப்படுத்தின. இவ்விரு நாவல்களையும் பின்னர் புத்தகமாக வெளியிட்ட தமிழ்ப் புத்தகாலயம் அகிலன் கண்ணன், இயன்றவரை கோபுலுவின் ஒவியங்களையும் நாவலில் இடம்பெறச் செய்தார்.




பாதையில் பதிந்த அடிகள்எவ்விதம் மணலூர் மணியம்மை என்ற பெண்மணி ஆண்களைப் போல் வேட்டி சட்டை அணிந்து விவசாயிகளின் நலனுக்குப் பாடுபட்டு இறுதியில் ஒரு மானால் கொம்பின்மூலம் தாக்கப்பட்டு மரணமடைந்தார் என்பதையும், அந்த மரணத்தின் பின்னணியில் இருந்த அரசியலையும் விளக்கி எழுதப்பட்டது. பிரபல பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி உள்ளிட்டோர் இந்நாவல் எழுதுவதற்கு ராஜம் கிருஷ்ணனுக்குத் தகவலுதவி செய்தார்கள்.


மண்ணகத்துப் பூந்துளிகள் பெண்சிசுக் கொலையை எதிர்த்து எழுதப்பட்ட நாவல். (தினமணி முன்னாள் துணையாசிரியர் சிகாமணி போன்றோர் இந்நாவல் பொருட்டான அவரது கள ஆய்வுப் பணிகளுக்கு உசிலம்பட்டி போன்ற இடங்களுக்கு உடன் சென்று உதவினார்கள்.) பின்னாளில் டாக்டர் ஷ்யாமா பெண் சிசுக்கொலை தொடர்பாக ஆய்வு செய்யவும் அவரே ஹொசூரில் அநாதரவான பெண்சிசுக்களைப் பராமரித்து வளர்க்க கெளதமன் என்ற அன்பர் மூலம் மையம் அமைக்கவும் இந் நாவலே முன்னோடியாக இருந்தது. ராஜம் கிருஷ்ணனின் சமூகப் பார்வையுடன் கூடிய கள ஆய்வு இலக்கியம் நேரடியாக சமூகத்தில் பல நல்ல விளைவுகளை  ஏற்படுத்தியது.

1950 இல், அமெரிக்கப் பத்திரிகையான நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூன் என்ற இதழின் பாரிஸ் பதிப்பகத்தின் பொறுப்பாளராயிருந்த பாட்ரிக் தாம்சன் என்பவர் ஏற்பாடு செய்து, உலக அளவில் ஒரு சிறுகதைப் போட்டி நடைபெற்றது. போட்டியில் 23 நாடுகள் பங்கேற்றன. இந்தியாவில் அந்தப் போட்டியின் நிர்வாகத்தை ஏற்றது டில்லி ஹிந்துஸ்தான் டைம்ஸ். அது பல்வேறு பிராந்திய மொழிப் பத்திரிகைகளுக்கு தன் பணியைப் பங்கிட்டுக் கொடுத்தது. அவ்வகையில் தமிழ் மொழிக்கு கல்கி வார இதழ் பொறுப்பேற்றது. உலக அளவில் பிரெஞ்ச் சிறுகதை முதல் பரிசுபெற்றது. தமிழில் ராஜம்கிருஷ்ணனின் ஊசியும் உணர்வும் என்ற சிறுகதைக்குப் பரிசு கிட்டியது. தமிழ்ச் சிறுகதைப் போட்டி நடுவர் குழுவில் பிரபல காந்தியவாதி கே. சுவாமிநாதன், பெரியசாமித்தூரன், நாணல் சீனிவாசராகவன் ஆகியோர் செயல்பட்டார்கள். இந்தப் பரிசுதான் ராஜம் கிருஷ்ணனுக்குத் தொடக்கத்தில் பெரிய அங்கீகாரம் பெற்றுத் தந்தது.

பிறகு பற்பல பரிசுகளை வாங்கிக் குவித்தார். சாகித்ய அகாதமி பரிசு பெற்ற அவரது வேருக்கு நீர், காந்தியவாதியான கதாநாயகி, பொதுவுடைமைவாதியான கதாநாயகனைக் காதல் மணம் செய்துகொண்டு வாழும் வாழ்வில் நேரும் சம்பவங்களை விவரிப்பது. ஆனந்த விகடன் பரிசு, கலைமகள் பரிசு, சோவியத் லாண்ட் விருது, திரு.வி.க. விருது, சரஸ்வதி சம்மான் விருது, பாஷா பரிஷத் விருது, போன்ற பல பெருமைகளைத் தொடர்ந்து பெற்றார் அவர். மூன்று முறை இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்றார்.

குழந்தைப் பேறில்லாத அவரின் இறுதிக் காலம் கணவர் இறந்த பிறகு, அவ்வளவு நிம்மதி தருவதாக அமையவில்லை. அவரது பொருளாதாரம் முற்றிலும் எதிர்பாராத சில கசப்பான நிகழ்வுகளால் நிலைகுலைந்தது. இருக்க இடமில்லாதிருந்த அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனை பராமரித்தது. மனித நேயம் நிறைந்த மருத்துவர் மல்லிகேசனின் பாசத்தால் அவரின் இறுதிக் காலம் சற்று நிம்மதி கண்டது. தவிர அவரின் நிராதரவான நிலை குறித்துக் கனிவுகொண்ட தமிழக அரசு, அவர் உயிரோடிருக்கும்போதே அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்கியது. சிறிதுகாலம் முன்பு எழுத்தாளர் கே. பாரதி முயற்சியால், ராஜம் கிருஷ்ணனுக்கு அவர் முன்னிலையிலேயே பெரிய அளவில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. தொண்ணுறு வயதில் அண்மையில் காலமான ராஜம் கிருஷ்ணன் மறையவில்லை. தமது சமூக உணர்வு நிறைந்த உன்னத எழுத்துகளில் வாழ்கிறார்.

[ நன்றி: அமுதசுரபி, டிசம்பர் 2014 ]

தொடர்புள்ள பதிவுகள்:

ராஜம் கிருஷ்ணன்: விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக