புதன், 2 நவம்பர், 2016

பரிதிமாற் கலைஞர் -2

செந்தமிழ் நடைகொண்ட திராவிட சாஸ்திரி’ - பரிதிமாற் கலைஞர்

 பி.தயாளன்


நவம்பர் 2. பரிதிமாற் கலைஞரின் நினைவுதினம்.
====
               
தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராச்சியாளர்! தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு இயல், இசை, நாடக அணிகளைச் சூட்டி அழகு பார்த்தவர்! தன்னால் தமிழ் வாழ வேண்டும் என்ற உணர்வாளர்! தாய்மொழித் தமிழிலேயே கல்வி கற்க வலியுறுத்தியவர்! இம்மண்ணில் முப்பத்தி மூன்று ஆண்டுகளே வாழ்ந்தாலும், தமிழ்-தமிழர் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்! சூரிய நாராயண சாஸ்திரிஎன்னும் தமது வடமொழிப் பெயரை முதன் முதலில் 'பரிதிமாற் கலைஞன்' எனத் தனித் தமிழ்ப் பெயராக்கிக் கொண்டவர். நாடகத் தமிழுக்கு நயத்தகு இலக்கணம் வகுத்தவர். நவீனத் தமிழிலக்கிய வரலாற்றாராய்ச்சிக்கு வித்திட்டவர். 'சூரிய நாரா யணர்'‍,'பரிதிமாற்கலைஞர்எனப் பெயர்கொண்ட பின்னரும், `திராவிட சாஸ்திரிஎன விடாது புகழப்பட்டவர்!!

                மதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரி என்னும் சிற்றூரில் கோவிந்த சாஸ்திரி-இலட்சுமி அம்மாள் வாழ்விணையருக்கு 06.07.1870 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் பரிதிமாற் கலைஞர்.

                தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து அன்னைத் தமிழும் ஆரம்பக் கணிதமும் கற்றார். தம் தந்தையாரிடம் வடமொழியையும் முறையாகப் பயின்றார். பின்னர் மதுரை, பசுமலைக் கல்லூரியில் சேர்ந்து (ஆரம்பக்கால அமெரிக்கன் கல்லூரி) கல்வியைத் தொடர்ந்தார். அக்கல்லூரித் தமிழாசிரியர் மூலம், தமிழ் இலக்கணம் நன்குக் கற்றார். மதுரை நகரிலிருந்த உயர்நிலை பள்ளியில் சேர்ந்து தமது கல்வியை மேலும் தொடர்ந்தார். மதுரைக் கலாசாலைத் தமிழாசிரியர் மகாவித்துவான் சு. சபாபதி முதலியாரிடம் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களையும் மறுவறக் கற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் எஃப்.ஏ தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வழங்கிய உதவித் தொகையையும் பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். பரிதிமாற் கலைஞர் கல்லூரியில் பயிலும் போதே விவேக சிந்தாமணிஎன்னும் இதழில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். தமிழிலும் வேதாந்த சாத்திரத்திலும் பல்கலைக் கழக அளவில் 1892ஆம் ஆண்டு நிகழ்ந்த பி.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேறினார். தமிழில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதையொட்டி மன்னர் பாஸ்கர சேதுபதி பெயரால் நிறுவப்பட்ட பொற் பதக்கத்தையும் பரிசாகப் பெற்றார்.

                யாழ்ப்பாணத் தமிழறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் வாழ்ந்து வந்தார். பல்கலைக் கழக அளவில் தமிழில் முதலிடம் பெற்ற பரிதிமாற் கலைஞரைத் தமது இல்லத்திற்கு அழைத்தார். ஒரு வினாத்தாள் கொடுத்து விடை எழுதித் தருமாறு கூறினார். பரிதிமாற் கலைஞர் அரைமணி நேரத்தில் விடை எழுதி அளித்தார். உமது விடைகள் உயரிய செந்தமிழ் நடையில் புதுக்கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றன. உம்மைத் `திராவிட சாஸ்திரிஎன்று அழைத்தலே சாலப் பொருந்தும்" என்று பாராட்டி, தாம் பதிப்பித்த இலக்கண, இலக்கிய நூல்களைத் தம் கையெழுத்திட்டு அன்பளிப்பாக வழங்கினார்.

                அக்காலத்தில் பிற துறை ஆசிரியர்களைவிட தமிழாசிரியர்களுக்கு ஊதியம் குறைவு. பரிதிமாற் கலைஞர், தமிழ் மீது உள்ள ஆறாக்காதலால், ஊதியம் குறைவானாலும் தமிழாசிரியர் பணியையே, தாம் பயின்ற சென்னைத் கிறித்துவக் கல்லூரியில் ஏற்றார். அக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் மில்லர், பரிதிமாற் கலைஞரின் தமிழார்வத்தைக் கண்டு வியந்து, பிற துறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உயர் ஊதியத்தை இவருக்கும் வழங்கினார். கல்லூரி அளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்றுக் கொண்ட முதல் பட்டதாரி இவரேயாவார்.

                பரிதிமாற் கலைஞர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமை படைத்தவர். மாணவர்களுக்கு இலக்கணத்தையும், இலக்கியத்தையும் சுவையுடன், மேலும் கற்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்படியாகக் கற்பிப்பார். சமகாலக் கருத்துக்களைப் பண்டைய இலக்கியம் கொண்டும், தமிழர் பண்பாடு, நாகரிகம், மொழி வரலாறு முதலியவற்றை ஆராய்ச்சி நோக்கிலும், வரலாற்றுச் சான்றோடு விளக்குவார்.

                கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் இயல்பாகவே தமிழறிவும், தமிழார்வமும் உடைய மாணவர்களைத் தமது இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு, தொல்காப்பியம், நன்னூல், இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனலங்காரம், தண்டியலங்காரம் முதலியவற்றையும், சைவ சமய சாத்திர நூல்களையும் கற்பித்தார். ஆண்டுக்கு ஒருமுறை தேர்வும் நடத்தினார். அம்மாணவர்கள் `இயற்றமிழ் மாணவர்கள்என்று அழைக்கப்பட்டனர்.

                பரிதிமாற் கலைஞர், `சென்னைச் செந்தமிழுரைச் சங்கம்என்ற சங்கத்தை நிறுவி, அதன் மூலம் கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதி அளித்தார்.

                கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து தமிழை வில‌க்குவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகம் 1902 ஆம் ஆண்டு முடிவெடுத்தது. அதை அறிந்த பரிதிமாற் கலைஞர், மு.சி.பூரணலிங்கம் பிள்ளையுடன் இணைந்து அம்முடிவை முறியடித்தார். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியும் தொடர வழிவகுத்தார் என்பது வரலாற்றுப் பதிவு.

                மதுரையில் தமிழ்ச் சங்கம் 1901ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15ஆம் நாள் தொடங்கப் பெற்றது. அத்தொடக்க விழாவில் பரிதிமாற் கலைஞர் கலந்து கொண்டு தமிழ்ச் சங்கம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவரித்தார். தமிழ்ச்சங்கம் நடத்திய `செந்தமிழ்இதழில், தமிழின் சிறப்புக் குறித்து `உயர்தனிச் செம்மொழிஎன்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். தமிழைச் செம்மொழி என்று முதன் முதலில் மெய்ப்பித்து நிறுவியவர் பரிதிமாற் கலைஞரேயாவார்.

                மேலும், “தமிழ், தென்னாட்டில் வழங்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலியவற்றுக்கெல்லாம் தலைமையானது. எனவே, தமிழ் உயர் மொழியாகும். தான் வழங்கும் நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழி. தமிழ் தனித்து இயங்கவல்லதால் தனிமொழியாம்என்று விளக்கினார். திருந்திய பண்புஞ், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூயமொழியே, செம்மொழியாம்என்பது செம்மொழிக்கான இலக்கணம். தமிழ் மொழி, செம்மொழிக்கான இலக்கணத்தைக் கொண்டுள்ளது என்பதை நூறாண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்தவர் பரிதிமாற் கலைஞர்!

                தமிழைக் கற்ற பிறகே ஆங்கிலம் கற்க வேண்டும் என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நேரிதாய் விளக்கியவர். தாய்மொழியாம் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி, “ஐந்து வயதாகுமுன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றவர், தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து கண்பூத்து மனமிற்று நாளடைவில் யமனுக்குணவாகின்றனர்என்று கூறுகிறார் பரிதிமாற் கலைஞர். குழந்தைகள் பன்னிரெண்டு வயது வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க வேண்டுமென்று ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே முழங்கியவர்.

                `மதிவாணன்என்ற நாவல், ரூபாவதிஅல்லது `காணாமற் போன மகள்’, `கலாவதிமுதலிய உரைநடை நாடகங்கள், `மானவிஜயம்என்ற செய்யுள் நாடகம், `தனிப்பாசுரத் தொகை’, `பாவலர் விருந்து’ `சித்திரகவி விளக்கம்முதலான கவிதை நூல்கள், `தமிழ் மொழியின் வரலாறுஎன்ற ஆய்வு நூல், `ஸ்ரீ மணிய சிவனார் சரித்திரம்என்ற வாழ்க்கை வரலாற்று நூல், `நாடகவியல்என்ற நாடக இலக்கண நூல் ஆகிய நூல்களை எழுதி உலகுக்கு அளித்துள்ளார் பரிதிமாற் கலைஞர்.

                `தமிழ்ப்புலவர் சரிதம்என்ற கட்டுரை நூலில், செயங்கொண்டார், புகழேந்திப் புலவர், வைத்தியநாத நாவலர், சுப்பிரமணிய தீட்சதர், மயிலேறும் பெருமாள் பிள்ளை, சுவாமிநாத தேசிகர், அருணாசலக் கவிராயர், கடிகை முத்துப் புலவர், சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகிய ஒன்பது புலவர்களுடன் தமிழறிஞர்கள் பலரின் வரலாற்றை எழுதியுள்ளார்.

                சபாபதி முதலியார் இயற்றியுள்ள `திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத் தமிழ்’, `மதுரைமாலைஆகிய நூல்களையும், `கலிங்கத்துப் பரணி’, `நளவெண்பாஆகிய நூல்களையும், `திருவுத்திரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழ்’, மழவை மகாலிங்க அய்யரின் `இலக்கணச் சுருக்கத்தையும், தாண்டவராய முதலியாரின், `பஞ்ச தந்திரத்தையும் பதிப்பித்தார். சுமார் 67 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இயற்றமிழ் மாணவர்களும் தாமும் இயற்றிய, `நாமகள் சிலம்பு’, `தமிழ் மகள் மேகலை’, `இன்பவல்லி’, `ஞான தரங்கினி’, `கலாநிதிஆகிய தலைப்புகளில் அரும்பெரும் நூல்களை வெளியிட்டுள்ளார். பரிதிமாற் கலைஞர் எலும்புருக்கி நோயால் தாக்குண்டு 02-11-1903 ஆம் நாள், தமது முப்பத்து மூன்றாம் வயதில் மறைந்தார் என்பது முத்தமிழுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.

                “பரிதிமாற் கலைஞரால் இயற்றப்பட்ட நூல்கள் யாவும், தமிழ் அன்னைக்கு ஏற்ற அணிகள். அவைகளுள் ஒன்று `தமிழ் மொழியின் வரலாறு; தமிழ் நாட்டில், தமிழ் மொழி வரலாற்றுக்கு வழிகாட்டியவர் பரிதிமாற் கலைஞரே. அவர் நீண்ட நாள் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் ஏறி அமர்ந்திருப்பாள். முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும்என்று புகழ்ந்துரைத்துள்ளார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

முத்தமிழ் வல்லவன் பரிதிமாற் கலைஞன்

நாடகத் தமிழ் இலக்கணம் மறைந்ததே

நாடகத் தமிழ் இலக்கியம் மறைந்ததே

ஈடுசெய் வேனோ என்று துடித்தான்

இயன்ற மட்டும் சிற்சில கொடுத்தான்”.

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

                சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் 1970 ஆம் ஆண்டு பரிதிமாற் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

                `தமிழைச் செம்மொழிஎன்று நடுவண் அரசு அதிகாரப் பூர்வமாய் அறிவித்து உள்ளது. பரிதிமாற் கலைஞரின் அன்றைய முயற்சிக்குக் கிடைத்த இன்றைய வெற்றியாகும் இது.

                கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பரிதிமாற் கலைஞரின் பிறந்த ஊரான விளாச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்கிப் புதுப்பிக்கச் செய்துள்ளார். அவரது நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கி அறிவித்தும், பெருமை சேர்த்துள்ளார்.


                `பேசுந் தமிழ் கூடப் பைந்தமிழாக இருக்க வேண்டும். தமிழ், மேலும் உலகம் எல்லாம் நிலைபெற வேண்டும். தமிழர்கள் உயிர்த் தமிழ் மீது உயரிய நாட்டம் கொள்ள வேண்டும். தமிழ் அரியாசனம் ஏறிச் சரியாசனம் கொள்ள வேண்டும்" - என்றெல்லாம் விரும்பியவர்; தமிழே தன் இறுதி மூச்சாக வாழ்ந்தவர் பரிதிமாற் கலைஞர்! அவர் புகழ் `செம்மொழித் தமிழ்உள்ளவரை சீரோடும் சிறப்போடும் நிலைத்து நீடு நிற்கும்.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவு :

பரிதிமாற் கலைஞர் 

ஒரு காணொளி ;


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக