வியாழன், 1 டிசம்பர், 2016

எல்லிஸ் ஆர். டங்கன் -1

பாதை அமைத்துத் தந்த அந்நிய மேதை

ஆர். சி. ஜெயந்தன்
[ பொன்முடி  படப்பிடிப்பில் ]


டிசம்பர் 1. எல்லிஸ் ஆர். டங்கனின் நினைவு தினம்.

“நாடக நடிகர்கள் சினிமாவுக்கு நடிக்க வரும்போது தங்களுடன் நாடக மேடையையும் தலையில் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். நடிகர்களின் முக பாவனைகளையும் உடல் மொழியையும் சினிமா கேமரா நுணுக்கமாக வெளிப்படுத்திக் காட்டுகிறது. இதனால் சினிமாவுக்கு நாடக பாணி நடிப்பு தேவையில்லை என்பதை வாய் வலிக்க அவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது”

- இப்படிக் கூறியவர் எல்லிஸ் ஆர் டங்கன். தமிழ் சினிமா பேசத் தொடங்கிய பிறகு அதைக் காட்சி மொழியின் கலையாக வளர்த்தெடுத்துத் தமிழர்களின் கையில் கொடுத்துச் சென்றவர்தான் டங்கன். தமிழ் மொழி அறியாத இந்த அமெரிக்கர், தமிழ்நாட்டில் தங்கியிருந்து வகுத்தளித்த பாதை தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது. காட்சிகளில் கதாபாத்திரங்களின் நுழைவையும் வெளியேறலையும் அழகுற அமைத்தார்.
கோணங்களால் கதாபாத்திரங்களின் உணர்ச்சியைப் பார்வையாளர்கள் உணரும்படி செய்தார். க்ளோஸ் அப் காட்சிகளை அதிக வலிமையுடன் பயன்படுத்தினார். கதாபாத்திரங்களுக்கும் நிலப்பரப்புகளுக்குமான வாழ்வியல் தொடர்பைத் தனது ‘மாஸ்டர் ஷாட்கள்’ மூலம் பிரதிபலிக்கவைத்தார். காதல் காட்சிகளில் எல்லை மீறாத நெருக்கத்தைத் துணிந்து காட்சிப்படுத்தினார். டங்கனின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

[ சகுந்தலை படப்பிடிப்பு ] 

கல்கத்தா டு சென்னை

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள பார்டன் என்ற சிறு நகரில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் 1909-ம் ஆண்டு பிறந்தவர் எல்லிஸ் ஆர். டங்கன். செயிண்ட் க்ளையர்வில்லி நகரில் உள்ள பள்ளியில் படித்து வளர்ந்த டங்கன் இளம் வயதில் கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு காட்டினார். ஆனால் அவருடைய தந்தை பிறந்த நாள் பரிசாக வாங்கித் தந்த பாக்ஸ் கேமரா அவரது வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது.
அந்தக் கேமராவைக் கொண்டு அவர் எடுத்த ஒளிப்படங்களைப் பார்த்து வியந்த டங்கனின் தலைமையாசிரியர் அவற்றைப் பள்ளியின் ஆண்டு மலரில் வெளியிட்டார். இதில் உற்சாகம் தொற்றிக்கொள்ள, பள்ளி விடுமுறை நாட்களில் கேமராவை எடுத்துக்கொண்டு தனது மிதி வண்டியில் அருகில் இருக்கும் ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்துவிடுவார்.
டங்கனின் ஆர்வத்தைக் கண்ட அவர் தந்தை, பள்ளிக் கல்வியை முடித்ததும் ஹாலிவுட்டின் மையமாக விளங்கிய தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் திரைப்படப் பள்ளியில் 1932-ம் ஆண்டு சேர்த்தார். அங்கே ஒளிப்பதிவுப் பிரிவில் மாணவராகச் சேர்த்தாலும். திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, படத்தயாரிப்பு நிர்வாகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் தனது மூக்கை நுழைத்துக் கற்றுக்கொண்டார். அதே பல்கலையில் சினிமா இயக்கம் பயின்ற மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் டங்கனின் திமிறிய திரைப்பட ஆர்வத்தைக் கண்டார். மும்பை நகரைச் சேர்ந்த டாண்டன் பெரிய செல்வந்தரின் மகன். பின்னாளில் ‘பாமா விஜயம்’, ‘ டம்பாச்சாரி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களை இயக்கியவர்.

திரைப்படப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் படிப்பு முடிந்த பிறகு டங்கனையும் மற்றொரு சக மாணவரான மைக்கேல் ஓமலேவ் என்பவரையும் 1935-ல் இந்தியாவுக்கு அழைத்துவந்தார். மகன் படிப்பை முடித்துத் திரும்பியதும் படங்களைத் தயாரிக்க எண்ணியிருந்த டாண்டனின் தந்தை அதிலிருந்து பின்வாங்கினார். இதனால் டங்கனும் ஓமலேவும் சோர்வடைந்தனர். ஆனால் டாண்டனுக்கு கே.பி.சுந்தராம்பாள் நடித்த ‘பக்த நந்தனார்’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கும் வாய்ப்பு உடனடியாகக் கிடைத்தது.

இதனால் நண்பர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு கல்கத்தாவுக்குத் கிளம்பினார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அசன்தாஸிடம் டங்கனையும் ஓமலேவையும் அறிமுகப்படுத்தி வைத்தார் டாண்டன். அந்தப் படத்துக்காகக் கங்கை நதியில் எடுக்கப்பட்ட சில காட்சிகளைத் தன் நண்பன் டாண்டனுக்காகப் படம்பிடித்துக் கொடுத்தார் டங்கன்.
அப்போது புதிய இயக்குநர்களைத் தேடி கல்கத்தா வந்திருந்தார் அன்றைய தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான ‘செல்லம்’ செட்டியார் (ஏ.என். மருதாசலம்). அவரிடம் டங்கன், ஓமலேவ் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார் டாண்டன். அவ்வளவுதான். டங்கனை உடனடியாக ஒப்பந்தம் செய்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்துவிட்டார் மருதாசலம்.
ஆனந்த விகடனில் எஸ். எஸ். வாசன் எழுதிவந்த தொடர்கதையைத் திரைப்படமாக எடுக்கும் உரிமையை வாங்கி வைத்திருந்த மருதாசலம், அதையே திரைப்படமாக இயக்கும்படி டங்கனை அமர்த்தினார். அதுவே 1936-ல் வெளியான ‘சதி லீலாவதி’ திரைப்படம். கதாநாயகனாக எம்.கே.ராதாவும், கதாநாயகியாக எம்.எஸ்.ஞானாம்பாளும் நடித்தனர். பின்னாளில் தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து புகழின் உச்சியைத் தொட்ட எஸ்.எஸ். வாசன், எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் இந்தப் படத்தில்தான் அறிமுகமாயினர். படம் வெளியானதும் பத்திரிகைகள் பாராட்டித் தள்ளின.

ஹாலிவுட் உத்திகள்

சதிலீலாவதி படத்தில் ஒப்பனை, கலை, இயக்கம், காட்சிப்படுத்தல், படத்தொகுப்பு என எல்லாவற்றிலும் ஹாலிவுட் உத்திகளைத் திறம்படப் பயன்படுத்தியிருந்தார் டங்கன். வந்தாரை வாழவைப்பதில் தயக்கம் காட்டாத தமிழகத்தில் “அமெரிக்கர் ஒருவர் தமிழ்ப் படம் ஒன்றை இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக எடுத்திருக்கிறார்” என்று பத்திரிகைகள் வியந்து பாராட்டி விமர்சனம் எழுதின.

என்றாலும் டங்கன் இயக்கிய முதல் படம் சுமாராகவே ஓடியது. ஆனால் கே.பி.கேசவன், எம்.ஜி.ஆர்., டி.எஸ். பாலையா, எம்.எம்.ராதாபாய் ஆகியோர் நடிப்பில் டங்கன் மூன்றாவதாக இயக்கிய ‘இரு சகோதரர்கள்’ அவருக்கு முதல் வெற்றியாக அமைந்தது.

நான்காவதாக அவர் இயக்கிய ‘அம்பிகாபதி’ ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. அம்பிகாபதியாக நடித்த எம்.கே.தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டார் ஆனார். சமஸ்கிருத வார்த்தைகளைக் குறைத்து இளங்கோவன் எழுதிய எளிய நறுக்கென்ற வசனங்கள் படத்துக்கு பலமாக அமைய, ‘ரோமியோ - ஜூலியட்’ காவிய பாணி உணர்வைப் படத்தின் காட்சி மொழியில் கொண்டுவந்தார் டங்கன். அம்பிகாபதியும் அமராவதியும் சந்தித்துக்கொள்ளும் நெருக்கமான காதல் காட்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தன.

ஒரு காட்சியின் ஷாட்களைப் பாத்திரங்களின் உணர்ச்சி மற்றும் நகர்வுகளை ஒட்டி அவர் பிரித்துப் படம்பிடித்து (shot divitions) தொகுத்த விதத்தில் அம்பிகாபதி ஒளிப்பதிவு இலக்கணம் மற்றும் படைப்பாற்றல் ஆகிய இரண்டின் சிறந்த கலவையாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
நான்காவதாக அவர் இயக்கிய ‘அம்பிகாபதி’ ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. அம்பிகாபதியாக நடித்த எம்.கே.தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டார் ஆனார். சமஸ்கிருத வார்த்தைகளைக் குறைத்து இளங்கோவன் எழுதிய எளிய நறுக்கென்ற வசனங்கள் படத்துக்கு பலமாக அமைய, ‘ரோமியோ - ஜூலியட்’ காவிய பாணி உணர்வைப் படத்தின் காட்சி மொழியில் கொண்டுவந்தார் டங்கன். அம்பிகாபதியும் அமராவதியும் சந்தித்துக்கொள்ளும் நெருக்கமான காதல் காட்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தன. ஒரு காட்சியின் ஷாட்களைப் பாத்திரங்களின் உணர்ச்சி மற்றும் நகர்வுகளை ஒட்டி அவர் பிரித்துப் படம்பிடித்து (shot divitions) தொகுத்த விதத்தில் அம்பிகாபதி ஒளிப்பதிவு இலக்கணம் மற்றும் படைப்பாற்றல் ஆகிய இரண்டின் சிறந்த கலவையாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

ஸ்டூடியோவுக்கு வெளியே

இதன் பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ (1940), ‘மீரா’ (1945) ஆகிய படங்களை இயக்கி அந்தப் படங்களின் ஒவ்வொரு பிரேமையும் சலன ஓவியம்போல் உருவாக்கினார். எம்.எஸ். எனும் இசையரசியின் முழுத் திறமையையும் இந்தப் படங்களில் பிரகாசிக்கச் செய்தார் டங்கன்.
டங்கனின் புகழ் தமிழகம் தாண்டிப் பரவியது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனத்துக்காக அவர் இயக்கிய ‘பொன்முடி’ படத்தைத் தொடர்ந்து, கருணாநிதியின் கதை, வசனத்தில் ‘மந்திரி குமாரி’ படத்தை இயக்கினார். அதுவே அவருக்குத் தமிழில் கடைசிப் படமாக அமைந்தது. தமிழகம் வந்து, ஸ்டூடியோவுக்கு வெளியே திறந்த வெளிகளுக்கு தமிழ் சினிமாவை அழைத்துச் சென்று தனித் தடம் பதித்த 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா திரும்பிச் சென்றார்.

ஆவணப் படங்களின் காதலர்

இந்தியாவில் எடுக்கப்பட்ட பல ஆங்கிலப் படங்களுக்குப் பணிபுரிந்த டங்கன் மீது “அந்நிய கலாச்சாரத்தை இந்தியப் படங்களில் திணிக்கிறார்’ என்ற கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதேபோல் இன்று இந்திய வணிக சினிமாவின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட ‘ஐட்டம் நம்பர்’ நடனத்தை அறிமுகப்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்படுகிறது.

ஆனால் ஆவணப் படங்களின் மீது தணியாத தாகம் கொண்ட இவர், 40 களில் தென்னிந்திய மக்களின் அன்றாட சமூக வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் பற்றிப் பெரும் ஆர்வத்துடன் எடுத்த ஆவணப் படம் இன்று முக்கிய ஆவணமாக இருக்கிறது. அமெரிக்கா திரும்பியதும் 30 ஆண்டுக் காலம் ஆவணப் படங்களைத் தயாரித்துக் கொடுப்பதிலேயே தன் வாழ் நாட்களை செலவிட்ட டங்கன் 91-வது வயதில் தன் இறுதி நாட்களில் ஆவலுடன் சென்னைக்கு வந்து மலரும் நினைவுகளில் மூழ்கித் திரும்பினார்.
படங்கள் உதவி: ஞானம்.

[ நன்றி: tamil.thehindu.com  ] 

                 


Inside India: Village Life in Southern India : A Film by Ellis R Dungan



An American in Madras - First Look

தொடர்புள்ள பதிவுகள்: 

எல்லிஸ் ஆர். டங்கன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக