வெள்ளி, 2 டிசம்பர், 2016

மு.கு.ஜகந்நாதராஜா -1

பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா
 கொ.மா.கோதண்டம்     

டிசம்பர் 2.  பன்மொழிப் புலவர் ஜகந்நாதராஜாவின் நினைவு தினம்.
இவருடைய ஒரு நூலைத்தான் ( கீழே உள்ளது படம் ) நான் படித்திருக்கிறேன்... பார்த்திருக்கிறேன் என்பது சரியானதாய் இருக்கும். தமிழக அரசின் பரிசு பெற்ற அந்த நூலின் ஒவ்வொரு இயலையும் ஆதாரமாய் வைத்து, இன்னொரு ஆய்வு நூல் எழுதும் அளவிற்கு பிரமிக்கத் தக்க தகவல்கள் உள்ளன.

இன்று இத்தகைய பன்மொழிப் புலவர்களை ... இத்தகைய ஆய்வில் நாட்டமுள்ளவர்களை.... நான் பார்ப்பதில்லை.

====

தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர். ராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவைப் பற்றி, "ஜகந்நாதராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை'' என்று காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன் கூறியுள்ளார்.

  1933-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி, ராஜபாளையத்தில், குருசாமிராஜா - அம்மணியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த அவர், மிக மிக எளிமையானவர்; அனைவரிடமும் குழந்தை மனத்துடன் பழகும் தன்மை கொண்டவர்.

  சுயமாகவே தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், ஹிந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்று அனைத்திலும் இலக்கிய, இலக்கணப் புலமை பெற்று கவி எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

  திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த திருக்குறளையும், புறநானூற்றையும் தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. மேலும், முத்தொள்ளாயிரம் நூலை தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆக்கம் செய்து ஜகந்நாதராஜாவே வெளியிட்டுள்ளார்.

  புவிப்பேரரசரும் கவிப்பேரரசருமான கிருஷ்ணதேவராயர், நமது ஆண்டாள் வரலாற்றை "ஆமுக்த மால்யதா' என்று தெலுங்கில் காவியம் செய்தார். அக்காவியத்தை தமிழாக்கம் செய்ததற்காக, சாகித்ய அகாதெமி முதன் முதலில் தனது மொழிபெயர்ப்புக்கான விருதை ஜகந்நாதராஜாவுக்கு அளித்துச் சிறப்பித்தது.

  தென்காசியில் பணிசெய்தபோது, ரசிகமணி டி.கே.சி.யுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக இலக்கியங்களைப் படித்து, தன்னை மேன்மேலும் வளர்த்துக்கொண்டார்.

  சாகித்ய அகாதெமிக்காக தெலுங்கு நாவல் "சேரி'யைத் தமிழாக்கம் செய்துள்ளார். "வடமொழி வளத்திற்கு தமிழரின் பங்கு' என்ற ஆய்வு நூல் செய்துள்ளார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்று "தமிழக, ஆந்திர வைணவத் தொடர்புகள்' என்ற ஆய்வு நூலையும் எழுதினார்.



  பிராகிருத மொழிப் பேரிலக்கியம் "காதாசப்தசதி'. இவ்விலக்கியத்தைக் குறுந்தொகை போலவே பாடல்களாக மொழியாக்கம் செய்துள்ளார் ஜகந்நாதராஜா.

  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக "தமிழும் பிராகிருதமும்' என்ற ஆய்வு நூல் எழுதினார். மேலும் வஜ்ஜாலக்கம், தீகநிகாயம், நாகானந்தம், கலாபூர்ணோதயம், வேமனா பாடல்கள், சுமதி சதகம், மகாயான மஞ்சரி, தேய்பிறை குந்தமாலா, காந்தியின் குருநாதர் ஆகிய நூல்களையும் மொழியாக்கம் செய்துள்ளார்.

  தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய, "பாரதி காலமும் கருத்தும்' என்ற நூலை சாகித்ய அகாதெமிக்காக தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் தரிசனம், காவிய மஞ்சரி, கற்பனைப் பொய்கை ஆகிய நூல்களுடன் ஆபுத்திர காவியம் என்ற பெரிய காவியத்தையும் எழுதியுள்ளார். இவை தவிர அவர் எழுதிய பல நூல்கள் இன்றும் கையெழுத்துப் படிகளாவே உள்ளன. இவை வெளிவந்தால் தமிழ் இலக்கியம் மேலும் வளம் பெரும் என்பது உண்மை.

  இவரைப் போல ஒரு பன்மொழி ஆய்வாளர், இலக்கிய அறிஞர், தத்துவ மேதை, தென்னிந்தியாவிலேயே இல்லை என்று பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். படைப்புலகப் பிதாமகன், பல எழுத்தாளர்களின் செவிலித்தாய், பலரையும் உருவாக்கிய பண்பாளர் என்றெல்லாம் பலவாறு பாராட்டப்பட்டவர் ஜகந்நாதராஜா.

  "ஆதர்ஸ் கில்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் மாநாடுகள், புதுதில்லி, லக்னெü, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடந்தபோது, அங்கிருந்த தமிழ்ச் சங்கங்களில் பங்கேற்று பல ஆய்வுரைகளை நிகழ்த்தினார். இதனால் பல்கலைக் கழகங்கள் ஜகந்நாதராஜாவை அழைத்துச் சிறப்பித்தன.

  1958-ஆம் ஆண்டு, பூவம்மா என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். அவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

  மணிமேகலை இலக்கியத்தில் ஜகந்நாதராஜாவுக்கு இருந்த ஈடுபாடு காரணமாகப் பல ஆய்வுகளைச் செய்தது மட்டுமல்லாமல், 1958-இல் மணிமேகலை மன்றம் ஒன்றைத் தோற்றுவித்தார். அம்மன்றம், ஆக்கப்பூர்வமான பல இலக்கியப் பணிகளைச் செய்து, சென்ற ஆண்டு பொன்விழாவும் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

  இலக்கிய ஐயப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல அறிஞர்கள் ஜகந்நாதராஜாவைக் காண வருவார்கள். அவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகி, அவர்களின் ஐயப்பாடுகளை நீக்கி அனுப்பிவைப்பார்.

  தன்னிடம் இருந்த நூல்களை (பல்வேறு மொழி இலக்கிய ஆய்வு மற்றும் தத்துவ நூல்கள்) தனி நூலகமாக ஆக்கினார். "ஜகந்நாதராஜா இலக்கியத் தத்துவ ஆய்வு நூலகம்' என்ற பெயரில் இன்றும் அந்நூலகம் அவரது மருமகனார் டாக்டர் ராதாகிருஷ்ண ராஜாவால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் அனைத்து நூல்களும் இடம்பெற்றிருக்கும். ராமாயணம் எத்தனை மொழிகளில் வெளிவந்ததோ அவை அனைத்தையும் இந்நூலகத்தில் காணலாம். இந்நூலகத்தின் மூலம் தொடர்ந்து பல ஆய்வறிஞர்கள் பலன் பெற்றுச் செல்கின்றனர்.

  80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, குடியரசுத் தலைவர் பரிசு மற்றும் மலேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

  பன்மொழிப் புலவராகத் திகழ்ந்த ஜகந்நாதராஜா, 2008-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி இயற்கை எய்தினார். அவர் எழுதியுள்ள பல நூல்களை வெளிக்கொணர்வதே தமிழ் இலக்கிய உலகம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும்.


[ நன்றி : தினமணி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

மு. கு. ஜகந்நாதராஜா : விக்கிப்பீடியாக் கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக