அகாடமியில் முதல் நாள்
ஜே. எஸ். ராகவன்
“மாற்றம் ஒன்றே மாறாதது” என்பதன்
விதிவிலக்காக வருடக் கணக்காக மாறாமல் இருப்பது மியூசிக் அகாடமியின் டிசம்பர் மாத
சங்கீத நடன விழாக்களின் நிகழ்ச்சிகள்தான். ஒரு மாதத்திற்கு முன்னாலேயே அழைப்பிதழ், சீஸன் டிக்கெட், புது வருட பிரேக்
ஃபாஸ்ட் விருந்து. சுவனிர் கூப்பன்களைக் கூரியர் மூலமாக இந்த வருடமும் அனுப்பி
வைத்ததில் ஆச்சரியம் இல்லை. சூரியன் மேற்கே உதிக்கலாம். சந்திரன் அமாவாசை அன்று
கல் தோசை போலத் தோன்றலாம். ஆனால் அகாடமி மாறாது.
ஆரம்ப மாலையில் அகாடமியின் லாயத்தில் கார்களின் மேட்டுக்குடி
மாடல்கள் நிரம்பி வழிந்தன. நேராகக் கான்டீனுக்குப் போனோம். வழக்கம் போல்
பத்மநாபனின் உணவு உற்சவம். வருடா வருடம் பார்க்கும் அதே வெயிட்டர்கள். ஓரிரண்டு
பேர்கள் “ நமஸ்காரம் மாமா. இப்போதைக்கு ஆனியன் பக்கோடா, காபி மட்டும். ராத்திரிக்கு நிறைய ஐட்டங்கள் உண்டு” என்றார்கள்.
ஆடிட்டோரியத்தில் சுவாமிமலை மணிமாறன் பார்ட்டியின்
நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த ஒரு நொடிக்குள் சன்மானத்தை
கிடுகிடு என்று அம்மன் கோவிலில் தீ மிதிப்பவர் போல ஒடி வந்து கொடுத்தார்கள். இது
அகாடமி ஸ்டைல், சீஸனுக்கு நெடும் தூரத்திலிருந்து
பறந்து வரும் நாரைகள், கொக்குகள் போலத்
தவறாது வரும் ரெகுலர்கள் அவரவர் சீட்டில் மாறாது உட்கார்ந்து ஆண்டிராய்டு
செல்பேசிகளின் திரைகளைத் தம்புராவைப்போல் மீட்டிக் கொண்டிருந்தார்கள். தூணுக்கு
அருகே இருக்கும் இரட்டை சீட்டுகள் எங்களுடைய இரண்டு பேரைத் தவிர யார்
உட்கார்ந்தாலும் பழகாத குதிரை போலத் தள்ளிவிடலாம். எங்களுடைய ஆக்கிரமிப்பு அப்படி,
வருடா வருடம் சக்கர நாற்காலியில் வரும் வயோதிகரைக்
காணவில்லை. என்ன ஆச்சோ என்று பேசிக் கொண்டோம். வைரங்கள் ஜொலிக்க வாக்கருடன் நடந்து
வரும் மூதாட்டியையும் காணோம். சர்தார்ஜி ஒருவர் வருவார். வரணும். முகர் சிங் என்ற
பெயர் சூட்டியிருந்தோம். அன்றைக்குத் தென்படவில்லை.
சினிமா தியேட்டர்
போல பெல் அடிப்பார்கள். இந்த வருடம் மணி இல்லை. திரை விலகியவுடன் மூன்று இளம்
மாணவிகள் எலெக்டிரானிக் சுருதிப் பெட்டி வண்டுபோல் ரீங்கரிக்க, சித்தரஞ்சனி ராகத்தில் நாததனுமனிசம் கீர்த்தனையைக் கடவுள்
வாழ்த்தாகப் பாடினார்கள். தியாகராஜரே நேரில் தோன்றி "ஏம்மா? எத்தனை கிருதிகளை ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி
மேலே படைச்சிருக்கேன்! வருடா வருடம் இதே கிருதி தானா, ஏன்னு கேட்டாலும் "சம்பிரதாயம்' என்று பதில் வரலாம். வரவேற்புரை,
| குத்து விளக்கு ஏற்றுதல, அகாடமி தலைவரின் வரவேற்புரை போன்ற சம்பிரதாயங்களைத் தொடர்ந்து சங்கீத கலாநிதி பட்டம் பெறவிருக்கும் வயலின் விற்பன்னர்
கன்யா குமரியை சுதா ரகுநாதனும், சஞ்சய் சுப்ரமணியனும்
ரத்தினச் சுருக்கமாக முன், வழி மொழிந்தார்கள்.
ஏற்புரையை வாசிப்பது வயலினை வாசிப்பதைவிட சுளுதான் என்று சொல்லாமல் சொல்லி கன்யாகுமரி
அசத்தினார். சங்கீத கலாநிதி உயரத்துக்கு வளர்ந்திருந்தாலும் லெக்டர்ன் மைக்கின்
உயரத்துக்கு உயராதலால் சிறிய படியின் மேல் ஏறி நின்று படித்தார். 90வது விழாவைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் (நம்ம மதுரை
பக்கம்) திருமதி நிர்மலா சீதாராமன். தமிழை சுவாசித்த உ.வே. சாமிநாத ஐயர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி
போன்ற மஹான்களை மேற்கோள் காட்டி எக்ஸ்டம்போராக வெளுத்து வாங்கினார். வங்கிகளில்
பணம் இல்லாத கடும் வறட்சி இருக்கலாம். ஆனால் மோடியின் தலைமையில் இயங்கும் இந்த
அமைச்சரிடமிருந்து விஷயங்கள் அருவியாகக் கொட்டின.
கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது பூந்தமல்லி சாரியைப்
பார்த்தேன். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு ” ஒரு மேட்டரை கவனிச்சியா? இந்த வருஷ சாயங்கால ஸ்டார் கச்சேரிகளிலே ஒரு விசேஷம்
என்னன்னு சொல்லு பார்க்காலம்”னு கேட்டேன். தெரியலேன்னு சாரி உதட்டைப்
பிதுக்கினான். 'பிரசன்ன
வெங்கட்ராமன்லேயிருந்து ஆரம்பிச்சு செளம்யா, ரஞ்சனிகாயத்ரி, அருணா சாய்ராம், சுதான்னு நீண்டு
நித்யஸ்ரீ
மகாதேவன் வரை பதினாறு நாட்களிலும் சாயங்கால நாலு மணி ஸ்லாட்டிலே பாடப்போகிறவர்கள்
எல்லாமே லேடீஸ்தான்.
"ரியலி! இது உன் கண்டுபிடிப்பா?
“ இல்லேப்பா, புதிய தலைமுறை நாவலாசிரியர் இரா. முருகனோடது. அதோட சங்கீத
கலாநிதியாகப் போகிறவரும், விழாவுக்குத் தலைமை
தாங்கினவரும் லேடீஸ் தான்! அகாடமியின் எம்பவர் மென்ட் ஆஃப் விமன்"
"பாடப் போற கீர்த்தனைகளின் விவரங்களை அச்சிட்டுக்
கொடுத்தால் நன்றாக இருக்கும். அதை செய்ய மாட்டேங்கிறாங்க. ஆனா அகாடமிலேயும், பார்த்தசாரதி சுவாமி சபாலேயும் கேன்டீன் நடத்தற மின்ட்
பத்மநாபனும், 'மெளன்ட்பேட்டன்' மணி அய்யரும் புளியோதரை டிராவல்ஸ் வெப்சைட்டிலே போட்
டிருக்கும் நாளைய லஞ்ச் மெனு என்னன்னு சொல்லட்டுமா? கேட்டுக்கோ! 'பாலாஜி லட்டு (அதாவது திருப்பதி லட்டாக இருக்கணும் ) காபேஜ் வடை, லெமன் ரைஸ், ஆனியன் ரைத்தா, வெஜிடபிள் கூட்டு, பிரிஞ்சால் ரோஸ்ட், பொடெட்டோ சிப்ஸ், ரேடிஷ் சாம்பார், மணத்தக்காளி வத்தல் குழம்பு, டொமேட்டோ ரசம், சேமியா பால் பாயசம், மாங்காய் தொக்கு, மோர் மிளகாய், இலை. விலை ரூ. 230,
'உருப் போட்டுண்டு
வந்து ஒப்பிக்கறயா? என் பங்குக்கு
மெளன்ட் பேட்டன் மெனுவைச் சொல்றேன், கேட்டுக்கோ. 'கோதுமைப் பிரதமன், கேரட் தயிர் பச்சடி, வெற்றிலை சாதம், பிரிஞ்சால் ஃபிரைடு
காரக் கறி, அவரைக்காய் கோகோநட்
கறி, செளசெள கூட்டு, ரேடிஷ் சாம்பார், லெமன் ரசம், ஒயிட் பம்ப்கின்
மோர்க்குழம்பு, மாங்காய் தொக்கு, பருப்பு, நெய், தயிர். விலை ரூ. 300, ”
” இப்ப இலை போட்டால்கூட நான் ஒரு கட்டு கட்டுவேன். சாயந்திரப்
பாடகர்கள் எல்லாம் பெண்கள் என்கிற மாதிரி உன் பங்கிற்கு ஏதாவது கண்டுபிடிப்பு
உண்டா?”
'உண்டு, உண்டு. பத்மநாபனும், மணி அய்யரும் நாளைக்குப் பரிமாறப் போறதிலே ஒரு ஒற்றுமை. அது
என்ன தெரியுமா? ரேடிஷ், அதாவது முள்ளங்கி சாம்பார். ரைட்?"
செவிக்கு உணவு ஆயிற்று. வயிற்றுக்கு ஈயக் கேன்டீனை நோக்கி
நகர்ந்தோம்.
[ நன்றி: மாம்பலம் டைம்ஸ், 24-12-2016 இதழ் ]
ஆம், இந்த முறை அக்கடமியில் பெண் கலைஞர்களுக்கு அதிக சலுகைகள் கிடைத்தன என்றால் மிகையில்லை. இனிமேலாவது ஆண் குழந்தைகளை இசைத்துறையில் நுழைக்க நாம் முயலவேண்டும். இல்லையென்றால் பத்தாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் மட்டுமே இத்துறையில் இருக்கக்கூடும். - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
பதிலளிநீக்குபசுபதிவுகளுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஜே.எஸ்.ராகவன்