வியாழன், 19 ஜனவரி, 2017

ஜி.சுப்பிரமணிய ஐயர் - 1

பத்திரிகை உலகின் பிதா



ஜனவரி 19, 1855. ஜி.சுப்பிரமணிய ஐயரின் பிறந்த தினம். 1955-இல் அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. அப்போது
ஆனந்த விகடனில் ( 1955-இதழ் ஒன்றில்)  ‘லோக சஞ்சாரம்’ என்ற பகுதியில் வந்த ஒரு சிறு குறிப்பு இதோ.
====

காங்கிரஸ் வைர விழா தமிழ் நாட்டில் நடந்த இந்த சந்தர்ப்பத்தில் முதல் காங்கிரஸில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் ஒரு தமிழர் என்பது பெருமையுடன் நினைத்துப் பார்க்கவேண்டிய விஷயம். இந்தியாவில் வெள்ளைக் காரர் புரியும் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமான தேசியத் தீர்மானத்தைக் கொண்டு வந்த தேசபக்தர் ஸ்ரீ ஜி.சுப்பிரமணிய அய்யர்தான். அவர் தமிழ்நாட்டில் பத்திரிகை உலகின் தந்தை என்ப தையும் ஞாபகப்படுத்திக் கொள்வது அவசியம்.

உலகிலேயே சிறந்த தினசரிப் பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கும் 'ஹிந்து' பத்திரிகையையும் சுதேசமித்திரன் பத்திரிகையையும் ஆரம்பித்து, அதன் மூலம் தேசிய உணர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார் ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர். 1885-வது வருஷம், முதன் முதலில் ஸ்தாபகமான பம்பாய் காங்கிரஸில் கலந்துகொண்ட அவர், தமது இளம் பிராயத்திலேயே (வயது 30) எல்லோர் கவனத்தையும் கவர்ந்துவிட்டார். இன்று நாட்டுக்குப் பூர்ண சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்ததோடன்றி, அதை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பிரமாண்ட ஸ்தாபனமாக காங்கிரஸ் விளங்குகிறது என்றால், ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர் போன்ற மகான்கள் அமைத்த அஸ்திவாரமே அதற்குக் காரணம். சிறந்த தேச பக்தராகவும், அரசியல் அறிவாளியாகவும், பத்திரிகாசிரியராகவும் விளங்கிய இப்பெரியார் தோன்றி 100 வருஷமாகிறது. தேச மக்கள் அனைவரும் அவர் ஞாபகத்தைப் போற்றி வளர்க்கவேண்டியவர்கள் ஆவார்கள்.

[ நன்றி ; விகடன் ]

தொடர்புள்ள பதிவு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக