சனி, 4 பிப்ரவரி, 2017

சங்கச் சுரங்கம்: மோக முல்லை

மோக முல்லை 
பசுபதி 

[ சங்கச் சுரங்கம் - 2 என்ற என் புதிய நூலிலிருந்து ஒரு கட்டுரைக்கதை/கதைக்கட்டுரை! நூலை LKM Publication, 10, Ramachandra Street, T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241  கைபேசி : 99406 82929.  - இலிருந்து வாங்கலாம் ] 





                                        




சார், சென்னையிலிருந்து ஒருகன்ஸல்டிங்வேலை வந்திருக்கிறது. தமிழ் இளைஞருக்குப் பிடித்த மாதிரி ஒரு வாசனைத் திரவம்கொலோன் அல்லது பெர்ஃப்யூம்  – தயார் செய்ய வேண்டுமாம். ஏதேனும் ஓர்ஐடியாகொடுங்கள் ! ‘ என்றான் என் தமிழ் மாணவன், இளைஞன் விந்தன். விந்தன் வேதியல் ஆய்வில் நிபுணன். சங்கத் தமிழிலும் அலாதியான  ஆர்வம்.

நிச்சயம் சொல்கிறேன். கேள். நேற்றுக் குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றைப்  படித்துக் கொண்டிருந்தேன். அவற்றுள் ஒன்றில் உனக்கு வேண்டிய விஷயம் புதைந்திருக்கிறது என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. அதன் அடிப்படையில்  ஒருபெர்ஃப்யூமை நீ தயாரித்தால்  இளைஞர் என்ன - எல்லாத் தமிழர் மார்கெட்டையுமே பிடித்துவிடலாம்! அதற்கு ஓர் அழகான பெயரையும் வைத்திருக்கிறேன். சொல்லட்டுமா? “ என்றேன்.

 “ஐடியா இருக்கட்டும், சார்! முதலில் அந்தப் பாடலைச் சொல்லுங்கள்! சங்கப் பாடல் கேட்டு ரொம்ப நாளாச்சு! ’ என்றான் விந்தன்.

சமர்த்துடா, நீ! “ என்று அவனை மெச்சிவிட்டுச் சொன்னேன்.

”  இந்தப் பாடல் , இன்பமாய் இல்லறம் நடத்தும் ஒரு மனைவியிடம் அவள் தோழி கேட்ட கேள்விக்கு அம்மனைவி சொல்லும் பதில் போல் அமைந்துள்ளது. ‘மணம் ஆவதற்கு முன் எப்படி நீ மனம் தளராமல், காதலனைப் பிரிந்த உன் துக்கத்தைப்  பொறுத்துக் கொண்டிருந்தாய் ? உன் மனவலிமை பெரிதே!என்று தோழி சொல்ல, தலைவி, “ மனவலிமை ஒன்றுமில்லை! காதலன் என்னை ஒருமுறை சந்தித்த அந்த இனிய நினைவே எனக்குத் தொடர்ந்து  ஆறுதல் அளித்துக் கொண்டிருந்ததுஎன்று சொல்கிறாள். அந்த நிகழ்வை மிக அழகாக இப்பாடலில் விவரிக்கிறாள்.

என் காதலன் தலைவனாக இருந்த நாட்டில், சிறு சுனைகள் இருக்கும். கள்ளை ஊற்றி வைக்கும் நீல நிறக் குப்பிகள் போல் சிறிய வாயுள்ளவை அச் சுனைகள். அச் சுனையில் , பிளந்த வாயுடைய தேரைகள், கிளி, குருவிகளை ஓட்டப் பெண்கள் பயன்படுத்தும் தட்டை என்ற கருவியைப் போல் ஒலிக்கும்.

அப்படிப்பட்ட நாட்டுத் தலைவனான என் காதலன் நிலா வீசும் ஓர் இரவில் என்னைத் தழுவினான். அதனால், இன்றும் அவன் மேனியிலுள்ள முல்லை மணம் என் தோளில் வீசுகிறதுஎன்கிறாள்.
பாடல் இதோ:

மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை,
தட்டைப் பறையின், கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன் மன் நெடுந் தோளே  
இன்று முல்லை முகை நாறும்மே.

- அரிசில் கிழார்.   ( குறுந்தொகை, 193 )

[ மட்டம்கள்; மணிக்கலம்நீல நிறக் குப்பி; இட்டுஇடுங்கிய ; பகுவாய்பிளந்தாற் போன்ற வாய்; கறங்கும்ஒலிக்கும்; மணந்தனன்தழுவினான்; முகைஅரும்பு ]

அப்படியா! “ என்று வாய் பிளந்தான் விந்தன்.

ஆமாம், இந்தக் கடைசி வரியில்ஆண்களின் மேனி முல்லை மணம் உடையதுஎன்கிறார் கவிஞர். இதைப் போலவே பின்பு கம்பன், குமரகுருபரர் தங்கள் பாடல்களில் கூறியுள்ளதை உ.வே.சாமிநாதையர் தன் குறுந்தொகை உரையில் சுட்டியுள்ளார். அதனால், நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! நீ தயாரிக்கும் ஆடவர் பெர்ஃப்யூமில் முல்லை மணம் சேர்; அதற்குமோகமுல்லைஎன்று பெயர் கொடு! இந்தச் சங்கப் பாடலை விளம்பரத்தில் சேர்த்து,

மோக முல்லை அணியுங்கள்! –
முகூர்த்த நாளைக் கணியுங்கள்!

என்று முழங்கு! மார்க்கெட் உங்கள் கையில்என்றேன்.

உங்களுக்குக் கோடானுகோடி நமஸ்காரம்என்று சொல்லிச் சென்றான் விந்தன். பிறகு அவன்  “மோகமுல்லையைத் தயாரித்ததாகவும், அது தமிழ்நாட்டில் வெற்றிகரமாய் விற்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால், எனக்கு ஒரு பெர்ஃப்யூம் குப்பியாவது இலவசமாய்க் கிட்டவில்லை. கடைசியில், கோபமும், எரிச்சலும் தாங்காமல், விந்தனைக் கூப்பிட்டுத் திட்டினேன்.

சார், தப்பாய் நினைக்காதீங்க! நான் ஒரு பெரிய 200 மில்லி  மோகமுல்லைபாட்டிலுடன் ஒருநாள் வீட்டிற்கு வந்தேன். மாமி என்னைப் பார்த்து, கையிலே என்ன என்று கேட்டார். அதட்டினார் என்றே சொல்லலாம்!  நான் சொன்னதும், “ ஓகோ! அப்படியா விஷயம்? இவருக்கு இந்த வயதில் என்னமோகமுல்லை: வேண்டியிருக்கிறது? ஆதி சங்கரர்மோகமுத்கரம்என்ற நூலை எழுதியிருக்கிறார். அதை உங்கள்சாரிடம்கொடுத்துப் படிக்கச் சொல்! என்ன, முழிக்கிறாய்? அதுதான், “பஜகோவிந்தம்என்று சொல்லப்படும் நூலின் சரியான பெயர். மோகத்தை உடைக்கும் சம்மட்டி என்று பொருள். என்ன, உன்மோகமுல்லையை எடுத்துக் கொண்டு, இங்கிருந்து போ! “கோவிந்தா! “ என்று சொல்லிவிட்டார் மாமி. ” என்று அழுதான்.

:ஐயகோ! என் பெர்ஃயூம் கோவிந்தாவா? ” என்று நினைத்துக் கொண்டே தொலைபேசியைக் கீழே வைத்தேன்.

~*~o0O0o~*~  

தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக