புதன், 1 மார்ச், 2017

ஏ.என்.சிவராமன் - 1

"பத்திரிகை உலகின் ஜாம்பவான்' ஏ.என்.சிவராமன்
இரா.நல்லையாராஜ்



மார்ச் 1. ஏ.என்.சிவராமன் அவர்களின் பிறந்த தினம்.

தினமணி நாளிதழில் 43 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அரும்பெரும் சாதனையாளர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; குறிப்பாக "பத்திரிகை உலகின் ஜாம்பவான்' எனப் போற்றப்பட்டவர் - ஏ.என்.எஸ். என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ஏ.என்.சிவராமன்.

 நெல்லை மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த சிவராமன், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1904-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி பிறந்தார். ஆம்பூர் நாணுவையர் சிவராமன் என்பதே ஏ.என்.சிவராமன் என்றானது. இவர் ஆரம்பக் கல்வியை எர்ணாகுளத்தில் பயின்றார். பின்னர் தம் சொந்த ஊரான ஆம்பூரில் (நெல்லை) குடிபெயர்ந்து, உயர்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியில் பயின்றார்.

 1917-ல் அன்னிபெசண்ட் விடுதலையான செய்தி நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதை தம் பள்ளி ஆசிரியர் மூலம் கேட்டறிந்து ஹோம்ரூல் இயக்கத்தை உணர்ந்தார். இதன் பிறகே தேசிய இயக்கம் பற்றிய உணர்வு இவருக்குள் எழுந்தது.

 சிவராமன் 1921-களில் நெல்லை இந்துக்கல்லூரியில் படித்தார். இத்தருணத்தில், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொள்வதற்காகக் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். மேலும், சுதந்திரவேட்கை மிகுதியால் கல்லூரியிலிருந்து பெட்டி படுக்கையுடன் நேராகக் கல்லிடைக்குறிச்சி டாக்டர் சங்கரய்யர் இல்லத்துக்குச் சென்று விட்டார்.

 அங்கு சங்கரய்யர், அவரது மனைவி லெட்சுமி அம்மாள், யக்ஞேஸ்வர சர்மா, கோமதி சங்கர தீட்சிதர் முதலியோரைச் சந்தித்து நல்ல ஆலோசனைகளைப் பெற்றார். இந்நால்வரும் அக்காலத்தில் நெல்லை மாவட்டத்தில் மாபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளாவர். மேலும், இவர்களே சிவராமனின் குருவாகத் திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், சரியான களம் கிடைத்த மகிழ்ச்சியில் சொந்த ஊரான ஆம்பூர் சென்றார். அங்கு தம் வீட்டில் படிப்பை நிறுத்திய செய்தியைக் கூற, ஊரெங்கும் பரவியது. பின்னர் உறவினர்களின் தொடர்ச்சியான அறிவுரையிலிருந்து விடுபட மாமனார் ஊரான தென்காசி சென்றுவிட்டார். இத்தருணத்தில்தான் சொக்கலிங்கம் (தினமணி-முன்னாள் ஆசிரியர்) நட்பு இவருக்குக் கிடைத்தது. இதன் பிறகு ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தூத்துக்குடி மகாதேவ ஐயரின் எழுத்தராக சில காலம் பணியாற்றினார். அப்போது ஐயருடன் பல பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார்.

 இதற்கிடையில், டாக்டர் சங்கரய்யர் வேண்டுகோளுக்கிணங்க கல்லிடைக் குறிச்சி திலகர் வித்யாலயா பள்ளியில் (ஜார்ஜ் மன்னர் மிடில் ஸ்கூல்) ஆசிரியராகப் பணியிலமர்ந்தார். இப்பணிக்காலத்தில் (1921-1929) சங்கரய்யர் வீட்டிலுள்ள பொருளாதாரம், அரசியல் சம்பந்தப்பட்ட சிறந்த நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக்கொண்டார். தினமும் சுமார் 6 மணி நேரம் புத்தகம் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பள்ளி விடுமுறை நாள்களில் தியாகி கோமதி சங்கர தீட்சிதர், தென்காசி சொக்கலிங்கம் போன்றோருடன் இணைந்து சுற்றுப்புற கிராமங்களில் விடுதலைப் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டார். பின்னர் எதிர்பாராத விதமாக பத்திரிகை உலகுக்கு வந்தது குறித்து அவரே சிலாகித்து எழுதியுள்ளார்.

 நெருங்கிய நண்பர் சொக்கலிங்கத்தின் ஆலோசனைப்படி "தமிழ்நாடு' இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் சிவராமன். 1930-இல் காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தின்போது வேதாரண்ய யாத்திரையில் கலந்துகொள்ள "தமிழ்நாடு' இதழிலிருந்து விலகினார். மேலும், இப்போராட்டத்தால் 20 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார். இதன்பிறகு சொக்கலிங்கத்தின் "காந்தி' பத்திரிகையில் ஆசிரியரானார்.

 "தினமணி' நாளிதழ் 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி தொடங்கப்பட்டு சொக்கலிங்கம் ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது சிவராமன் துணை ஆசிரியரானார். தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்குகொண்டு சொக்கலிங்கம் 1940-இல் சிறை சென்றபோது, அச்சமயத்தில் சிவராமனே ஆசிரியராக இருந்தார். பின்னர் 1943-இல் "தினமணி' நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியர் பொறுப்பிலிருந்து சொக்கலிங்கம் விலகியவுடன் சிவராமன் ஆசிரியரானார்.

 குறிப்பாக, 1943-இல் தொடங்கி 1987-இல் தனது 83-ஆவது வயது வரை 43 ஆண்டுகள் "தினமணி' ஆசிரியராக இருந்து சாதனை படைத்துள்ளார். விடுதலைக்கு முன்னும் பின்னும் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகப் பத்திரிகை உலகில் பணி புரிந்து நாற்பத்து மூன்று ஆண்டுகள் ஆசிரியராகத் தனி முத்திரை பதித்தது இக்காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அரும்பெருஞ் சாதனையாகும்.

 தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். நான்கு வேதங்களையும் ஆராய்ந்திருந்தார். படிப்பு என்பதை உயிர் மூச்சாகக்கொண்டு வாழ்நாள் முழுவதிலும் கற்பதிலும், கற்றதை எழுதுவதிலும் பொழுதைச் செலவிட்டார்.

 குறிப்பாக இவர் பெங்களூர், தில்லி, சண்டீகர், விஜயவாடா, மதுரை ஆகிய இடங்களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிப்புகளைத் தொடங்கும் பணிகளைச் செய்துள்ளார். மேலும், சில காலம் இந்தியன் எக்ஸ்பிரஸின் பொறுப்பாளராகவும், தினமணி வெளியிட்ட நூல் பிரசுரங்களுக்குப் பதிப்பாசிரியராகவும், தினமணி நாளிதழ் வெளியீட்டாளராகவும் இருந்துள்ளார்.

 மத்திய அரசு தமக்கு வழங்கப்படவிருந்த "பத்மஸ்ரீ' விருதை வாங்க மறுத்ததுடன், "பத்திரிகை ஆசிரியர்கள் விருதுகளை ஏற்பது நல்லதல்ல' எனக்கூறிவிட்டார். இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றியதற்காக அரசு இவருக்குத் தாமிரப் பத்திரத்தை வழங்கி கெüரவித்துள்ளது. மேலும், பகவன் தாஸ் கோயங்கா விருதையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் "அறிவியல் தமிழ் ஆக்கப் பணி' விருதையும் பெற்றுள்ளார். குறிப்பாக, 1979 முதல் 1981 வரை இந்திய பிரஸ் கவுன்சிலின் உறுப்பினராக இருந்த சிறப்புப் பெருமை இவருக்கு உண்டு.

 வாசகர்களின் பொழுதுபோக்குக்குத் தீனி போடாமல், செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், மக்களுக்கு விழிப்புணவு ஊட்டியும், வெற்றிகரமாகப் பத்திரிகை நடத்தமுடியும் என்பதை நிரூபித்தவர் சிவராமனே. குறிப்பாக "தினமணி' என்றாலே தரமான, நம்பகமான செய்தித்தாள் என மக்கள் மத்தியில் பரவியதற்கு அக்காலத்தில் சொக்கலிங்கம், சிவராமன் ஆகிய நெல்லை மைந்தர்கள் போட்ட அடித்தளமே காரணம் எனலாம்.

 பத்திரிகைகளில், ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி, குமாஸ்தா, கணக்கன், வக்கீல் வீட்டு மாப்பிள்ளை முதலிய பல புனைபெயர்களில் இவர் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது பல கட்டுரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. இவருடைய முதல் நூலான "மாகாண சுயாட்சி' நவயுக பிரசுராலயத்தின் முதல் வெளியீடாக வந்தது.

 சிவராமன் எழுதிய நூல்களில், சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயம், ரஷ்யப்புரட்சி 17 ஆண்டு அனுபவம், இந்தியாவின் வறுமை பற்றி கணக்கன் ஆராய்ச்சி, அப்பல்லோ கண்ட விண்வெளி விஞ்ஞானம். சுதந்திரப் போராட்ட வரலாறு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் இவர், சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்தி நடத்திய "ஹரிஜன்' இதழின் தமிழ்ப் பதிப்பாசிரியராக இருந்துள்ளார். மணிக்கொடி இதழ் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு இவருக்குண்டு. இவருடைய சிறுகதைகள் மணிக்கொடி, காந்தி இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கும் இவர் அரிய தொண்டாற்றியுள்ளார்.

 இவர், பத்திரிகையாளராக இரண்டாம் உலகப் போரின்போது பல நிகழ்வுகளை ஈரான், இத்தாலி, லிபியா உள்ளிட்ட மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் சென்று நேரில் கண்டுள்ளார். மேலும், ஐ.நா. சபை உருவானபோது சான்பிரான்சிஸ்கோ (1945) மாநாட்டிலும், நியூயார்க் (1946) மாநாட்டிலும் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபராகச் சென்று செய்திகளை அனுப்பியுள்ளார்.

 இந்திய அரசியல் சரித்திரத்தில் நெருக்கடி மிக்க ஆண்டான 1942-இல் "தினமணி' கோயங்காவுடன் இணைந்து இவர் ஆற்றிய புரட்சிகர செயல்கள் போற்றத்தக்கது. இந்தியாவை ஆள்வது இனி கடினமான செயல் என்பதை இந்தியாவுக்கு உணர்த்த, 1942-இல் தமிழகத்தில் பல்வேறு இரயில் பாதைகளில் ஜெலிக்னைட் வெடிகுண்டுகளை (வெடிக்காத) வைத்தனர். ஆங்கிலேயர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திய இச்செயல்களில் தீரர் கோயங்கா, சிவராமன் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானதாகும்.

 தம் வாழ்நாள் முழுவதையும் இதழியல் பணிக்கு அர்ப்பணித்த சிவராமன், தம் 97 வயதில் 2001-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி (தன் பிறந்த நாளன்றே) காலமானார்.

 [ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஏ.என்.சிவராமன்

2 கருத்துகள்:

  1. Was he the author of ‘ Why the Vietnam War? ‘ written by him? Sir.

    பதிலளிநீக்கு
  2. I could not find that Book in a Google Search. Are you sure of the title? ( I doubt if he wrote any English books. Most of his writings were in Tamil ) Sorry could not help more.

    பதிலளிநீக்கு