வெள்ளி, 7 ஏப்ரல், 2017

687. கே.சுப்ரமணியம் -1

"தேசாபிமான” இயக்குநர் கே.சுப்ரமணியம்



ஏப்ரல் 7. முன்னோடி இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களின் நினைவு தினம்.

திரைப்படங்களின் ஆரம்ப காலத்தில் எவரும் எடுத்திராத புதுமைக் கருத்துகள் கொண்ட கதையைத் தேர்வுசெய்து படமாக்கி வெற்றி கண்டவர்களுள் கே.சுப்ரமணியம் குறிப்பிடத்தக்கவர்.

 ÷தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞர் கிருஷ்ணசுவாமி ஐயருக்கு 20.4.1904-இல் பிறந்தார். சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார்.

 ÷தமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரான ஆர்.பத்மநாபன் மூலம், பழம்பெரும் இயக்குநரும், தமிழ்த் திரையில் தக்கக் காரணத்துடன் முத்தக்காட்சியை முதன் முதலில் பதிவு செய்தவரும், திரையில் காண்பிக்கப்படும் பெயர்ப் பட்டியலில் உதவியாளர்களின் பெயர்களும் இடம்பெறும் வழக்கத்தைத் துவக்கி வைத்த கலை விற்பன்னருமான ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார்.

÷அநாதைப்பெண் (1930), ராஜேஸ்வரி (1931), உஷாசுந்தரி (1931) ஆகிய ஊமைப் படங்களில் ராஜா சாண்டோவுக்குக் கீழ் பணியாற்றியபடியே கதை, லேப் எடிட்டிங், தயாரிப்பு நிர்வாகம், வெளியீடு என்று எல்லா விஷயங்களையும் கற்றுத்தேர்ந்தார். பிறகு, பாலயோகினி, சேவா சதனம், தியாக பூமி, பக்த சேதா, பவளக்கொடி, கச்ச தேவயானி, ஆனந்த சயனம், கீதா காந்தி ஆகிய புகழ்பெற்றப் படங்களை இயக்கினார். சமூகப் பிரச்னைகளை மையமாகக் கொண்டதால் இவருடைய படங்கள் துவக்க கால தமிழ்த் திரை வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.



 ÷"பாலயோகினி' குழந்தைகள் நடித்த முதல் படம். "சேவா சதனம்' (பங்கிம் சரத் சட்டர்ஜியின் கதை) 1938-இல் வெளிவந்தது. "பக்த சேதா' (1940) மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்கு வலுவூட்டும் வகையில் அமைந்த படம்.

 ÷"மான சம்ரட்சணம்' (1945) இந்திய மக்களின் மனிதாபிமானத்தை மிகச் சிறப்பாக சித்திரித்துக் காட்டிய படம்.

÷"தியாக பூமி' (1939) - நாவலைப் படமாக்குவது புதுமையாக இருந்த காலகட்டம். கல்கியும், கே.சுப்ரமணியமும் நல்ல நண்பர்கள். கல்கியின் "தியாக பூமி' நாவலை, அது ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்தபோதே படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் கே.சுப்ரமணியம். ஆனந்த விகடனில் படக்காட்சிகள் தொடர்கதையுடன் பிரசுரமானது.


 ÷விடுதலை வேட்கையை மக்களிடையே தூண்டிவிடும் காட்சிகளும், கருத்துகளும் உள்ளடக்கிய படம் என்பதால், பிரிட்டிஷ் அரசு அப்படத்துக்குத் தடை விதித்தது. 1947 - இல் சுதந்திரம் பெற்ற பின்னரும் தடைநீக்கம் பெறாமலிருந்தது. 1952-இல்தான் தடை நீங்கி, படம் வெளிவந்து வெற்றியின் உச்சத்தைத் தொட்டது.

 ÷"பவளக்கொடி' ஊமைப்படக் காலத்திலேயே புகழ் பெற்றிருந்தவர் கே.சுப்ரமணியம். இவருடைய இயக்கத்தில் ஒரு பேசும்படம் தயாரிக்க வேண்டும் என்று அழ.ராம.அழகப்ப செட்டியாரும், லெட்சுமணன் செட்டியாரும் விரும்பினார்கள். மூவரும் "பவளக்கொடி' நாடகம் பார்க்கக் காரைக்குடி சென்றனர். நாடகத்தைப் பார்த்துவிட்டு கே.சுப்ரமணியம், ""இளைஞன் நன்றாக பாடுகிறான்; இளம் பெண்ணும் நன்றாக வசனம் பேசி நடிக்கிறாள். இவர்களையே புதுமுகங்களாக வைத்து "பவளக்கொடி'யைப் படமாக்குவோம்'' என்றார். கே.சுப்ரமணியத்துக்கு இந்தப் படம் பெரும் புகழைத் தேடித்தந்தது.


 ÷அந்தப் புதுமுகங்களுள் ஒருவர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும், "ஏழிசை மன்னன்' என்றும் தமிழகம் கொண்டாடிய தியாகராஜ பாகவதர். மற்றொருவர், சங்கீத கலையரசி எஸ்.டி.சுப்புலட்சுமி. இவரைப் பின்னாளில் கே.சுப்ரமணியம் திருமணம் செய்துகொண்டார். இசைக்குயில் - பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமியை "சேவா சதனம்' படத்தில் அறிமுகம் செய்தார்.

 "கச்ச தேவயானி' படத்தில் டி.ஆர்.ராஜகுமாரியை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தின் மூலம்தான் டி.ஆர்.ராஜகுமாரி தமிழக கனவுத் தாரகையாக திரைவானில் வலம் வந்தார். மற்றும் ஜி.சுப்புலெட்சுமி, பி.எஸ்.சரோஜா, பி.ஏ.பெரியநாயகி, டி.வி.ரத்னம், பி.சரோஜாதேவி ஆகிய உச்சத்திலிருந்த நட்சத்திரங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் கே.சுப்ரமணியம்.

 ÷"ஆனந்த சயனம்' படத்தில் அவரே கதாநாயகனாக நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். மகத்தான லட்சியங்கள், கனவுகளுடன் சில தயாரிப்பாளர்களின் கூட்டு முயற்சியுடன் "மோஷன் பிக்சர் புரொடியூசர்ஸ்' என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். வட இந்தியாவிலிருந்து தொழில் நுட்பவாதிகளை வரவழைத்துப் பணியாற்ற வைத்தார். சினிமா உலகின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும், தயாரிப்பு சிரமங்களைத் தவிர்ப்பதிலும் பெரும் முயற்சிகள் செய்தார். "தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' தோன்றுவதற்கு இடைவிடாது பாடுபட்டார்.

 ÷கே.சுப்ரமணியம், 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி காலமானார்.

÷அரசாங்கம் கே.சுப்ரமணியத்தை கௌரவித்து, அவர் உருவம் பதித்த தபால் தலை வெளியிட்டு, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இடம்பெறத்தக்கப் படைப்பாளி கே.சுப்ரமணியம் என்பதை உணரவைத்தது.

÷படைப்பிலக்கியத்தை காகிதத்திலிருந்து செல்லுலாய்டுக்கு எடுத்துச்சென்ற மாமேதை கே.சுப்ரமணியம் என்பதும், சமூகப் பிரக்ஞையுடன் திரைப்படங்களை எடுத்த முன்னோடி இயக்குநர் என்பதும் காலத்தால் அழிக்க முடியாத இவரது பெருமைகள்.

[ நன்றி: தினமணி ]

 தொடர்புள்ள பதிவு:

கே.சுப்ரமணியம்

கே. சுப்பிரமணியம்: விக்கிப்பீடியாக் கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக