சனி, 22 ஏப்ரல், 2017

703. கந்தர்வன் -1

இலக்கியப் போராளி இனிய கந்தர்வன்
 முனைவர் சி.சேதுபதி  


ஏப்ரல் 22. எழுத்தாளர், கவிஞர் கந்தர்வனின் நினைவு தினம்.
===
காந்தியவாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான சிக்கல் கணேசன் - கனகம்மாள் தம்பதியருக்கு 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி பிறந்தவர் நாகலிங்கம். நாகலிங்கத்துக்கும் முற்போக்குத் தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பு பலர் அறியாதது.

 மாடு மேய்த்து, ஜவுளிக்கடை, மளிகைக் கடை, டீக்கடைகளில் வேலை பார்த்து, பிறகு எப்படியோ படித்து, அரசாங்க வேலைக்கு வந்து, பணிநிமித்தம் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து, இறுதியாய் தென் சென்னைக்கு வந்து சேர்ந்த க.நாகலிங்கம் என்கிற தொழிற்சங்கவாதியின் புனைபெயர் சொன்னால் அனைவர்க்கும் புரிந்துவிடும். அவர்தான் கந்தர்வன்.

 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர். கரிசல் இலக்கிய முன்னோடி கி.ரா.வை, "நைனா' என்றும், இளங் கவிஞர்களைத் "தம்பிகள்' என்றும் பாசத்தோடு அழைத்த இனிய தோழர். இலக்கிய உறவையும் இயக்கத்தையும் சுற்றமாய்க் கொண்டு இறுதிவரையிலும் இயங்கிய படைப்பாளி. 70-களின் தொடக்கத்தில் உருவான "மக்கள் எழுத்தாளர் சங்க'த் தோற்றத் தூண்களுள் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர்.


 கிழிசல்கள், மீசைகள், சிறைகள், கந்தர்வன் கவிதைகள் ஆகிய 4 கவிதைத் தொகுப்புகளையும், சாசனம், பூவுக்குக் கீழே, கொம்பன், ஒவ்வொரு கல்லாய், அப்பாவும் மகனும் ஆகிய 5 சிறுகதைத் தொகுதிகளையும், இன்னும் முழுமையாகத் தொகுக்கப்பெறாமல் இருக்கும் பல்வேறு இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அணிந்துரைகள் ஆகியவற்றையும் முற்போக்கு முகாமில் இருந்து தமிழுக்கு நல்கிய இலக்கியவாதி இவர். கவிஞர் எனப் பரவலாய் அறியப்பட்டாலும் தேர்ந்த கதைசொல்லி. அவர்தம் கவிதைகளுக்குள்ளும் கதைத் தன்மையே மிகுந்திருப்பது கண்கூடு.

 பேசுவதுபோலவே எழுதுவதும், எழுதுவதுபோலவே வாழ்வதும், இயக்கத்திற்காகவே இவை அனைத்தையும் அர்ப்பணித்து இறுதிவரைக்கும் இயங்கிய கந்தர்வன், இலக்கியப் போராளியாக என்றும் மிளிர்பவர்.

 பள்ளிப் பருவத்திலேயே கணக்குப்போட வைத்திருந்த சிலேட்டில், வெண்பா யாப்பில் கவிதை எழுதக் கற்றிருந்த நாகலிங்கத்தைக் "கந்தர்வன்' என்று அறிமுகப்படுத்தியது "கண்ணதாசன்' இதழ். திருலோகசீதாராம் எழுதிய "கந்தர்வ கானம்' படித்த உணர்வில் அவருக்குள் உதயமான பெயர் அது. உண்மையிலேயே, காண்போரை வசீகரிக்கும் கந்தர்வத் தோற்றம். நல்ல படைப்பொன்றை வாசித்துவிட்டால் குதூகலித்துக் கொண்டாடும் தீவிர ரசிகர்.

 ஒரு விமர்சகராகத் தமிழ் இலக்கிய உலகிற்குள் அறிமுகமாகிக் கவிஞராகி, இறுதியில் சிறுகதையாளராக நிலைத்துவிட்டவர் கந்தர்வன். சி.சு.செல்லப்பாவுடன் ஏற்பட்ட பரிச்சயமும், "எழுத்து' இதழில் படித்த ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளும் ஏற்படுத்திய தாக்கத்தில் மரபில் எழுத விரும்பாமலும், புதுமை வடிவம் பிடிபடாமலும் தவித்த கந்தர்வனைப் பரமக்குடியில் ஏற்ற கவியரங்கத் தலைமை, மக்களுக்கான மொழியில் கவிதை எழுதக் காரணமாயிற்று. அன்று தொடங்கி இறுதிவரையிலும் அவர் எழுதிய கவிதைகள் அலங்காரமற்ற, எளிய கவிதைகளாக உலவிவந்தன. "பிரசாரக் கவிதைகள்' என்றும் கூறப்பட்டன.

 ""என் கவிதைகள் மிகுந்த இலக்கியத் தரம் வாய்ந்தவை என்றோ, அவை இலக்கியமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றோ நான் கவலைப்படுவதில்லை. எளிய மொழியில், மக்களுக்குக் கருத்துகளை எடுத்துச் சொல்கின்ற கருவியாகத்தான் நான் கவிதையைப் பயன்படுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார் கந்தர்வன்.

 பாதிக்கப்பட்ட மக்களின், துயரப்பட்ட பெண்களின் உணர்வுகளை உள்வாங்கி, கவிதைகளாகவும் களத்தில் கற்ற அனுபவங்களைக் கதைகளாகவும் வடிக்கத் தெரிந்த கந்தர்வனின் "கயிறு' கவிதை, பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

 எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மகேந்திரன் இவரது "சாசனம்' சிறுகதையைத் திரைப்படமாக்கவும் முனைந்தார்.

 கந்தர்வன் கதைகளில், கி.ரா., வண்ணதாசன்; கவிதைகளில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்ஒளி, தணிகைச் செல்வன் ஆகியோரின் தாக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்றாலும், தன் காலத்துப் பதிவாகத் தனித்தன்மையோடு தன் குரலில் சொல்லப் பழகியிருந்தார் அவர்.

 சொந்த மண்ணை விட்டு உத்தியோக நிமித்தமாய் எந்த ஊர் போனாலும் அந்த ஊர் மண்ணின் வாசமும் மனிதர்களின் நேசமும் மறைந்துவிடுவதில்லை. யாதும் ஊராக யாவரும் கேளிராக அமைவதும் கூடச் சொந்த ஊரின் நினைவுப் படிமங்களில்தான். அந்தப் படிமங்களை எழுத்தில் இறக்கி எல்லோர்க்கும் பொதுவாக்கி, மனிதம் பேணிய இலக்கியப் போராளி கந்தர்வன்.

 சொந்த வாழ்வில் கண்ட உண்மைகளை, உணர்ந்த உறவின் வலி(மை)களைத் தமக்கே உரிய பாணியில் எழுத்தில் வார்த்த இவருடைய சிறுகதைகளுள் ஒன்று, ஒவ்வொரு கல்லாய். அப்படிப் பார்த்துப் பார்த்துப் புதுக்கோட்டையில் அவர் கட்டிய வீட்டைப் பூட்டிவிட்டு, மகளின் அன்பு வற்புறுத்தலுக்கு இணங்கித் தமது மனைவி சந்திராதேவியோடு இறுதிக்காலத்தில் சென்னையில் வாசம் புரிந்த கந்தர்வன், சில இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றுக் கட்டுரைகள் படித்தார். உடல்நலக் குறைவால் படுக்கையில் விழுந்தபோதும் வீட்டாருக்குத் தெரியாமல் இடையிடையே எழுதி வந்த கந்தர்வன், 22.4.2004 அன்று காலமானார்.

 கலை இலக்கிய இரவுகளில், இயக்கக் கவியரங்குகளில் கம்பீரமாக ஒலித்த கந்தர்வ கானம், நிரந்தரமாக உறைந்துகிடக்கும் நூல்களை எடுத்துப் படிக்கும் எவர்க்குள்ளும் அவரது இதயத்துடிப்பு கவிதைகளை நிரப்பும்; கதைகளை விரிக்கும். காரணம் அவரது வாழ்வியல் சாசனம் அவரது இலக்கியக் களஞ்சியம்!

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கந்தர்வன் : விக்கிப்பீடியாக் கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக