புதன், 5 ஜூலை, 2017

760. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் - 1

அரங்கன் நடத்திய நாடகம்!
 பி.என்.பரசுராமன்



ஜூலை 5. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் நினைவு தினம்.
===

‘தெய்வங்கள் பல இருக்கலாம். ஆனால், பேதங்கள் இருக்கக் கூடாது’ என்று உணர்ந்தவர்; மற்றவர்களுக்கும் உணர்த்தியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். செந்தமிழ் பாடல்களால் அனைத்து தெய்வங்களையும் போற்றி துதித்தவர். முருகப்பெருமான் குறித்த இவரது பாடல்கள் கந்தக்கோட்டத்தில் அரங்கேறியபோது, முருகப்பெருமான் குழந்தை வடிவில் வந்து இவர் மடியில் தவழ்ந்து விளையாடிய பேறு பெற்ற மகான். இவரது வாழ்வில் நிகழ்ந்த தெய்வீக சம்பவங்கள் நிறைய!
தண்டபாணி சுவாமிகள், 1839-ஆம் வருடம் - விகாரி வருடம் - கார்த்திகை மாதம் 16-ஆம் தேதியன்று திருநெல்வேலியில் பிறந்தார். பெற்றோர் செந்தில் நாயகம் - பேச்சிமுத்து அம்மை, குழந்தைக்குப் பெயர் சூட்டியதே ஓர் அற்புத நிகழ்ச்சி.

பிறந்த குழந்தை ஆடவில்லை; அசையவில்லை; அழுகுரல் எழுப்பவில்லை. பார்த்தவர்கள் பதறினர். ‘‘பிறந்த குழந்தை பிழைக்குமோ, பிழைக்காதோ தெரியவில்லையே!’’ என்றனர். தந்தையின் கனவில் சிவபெருமான் தோன்றினார். திருநீற்றையும், செவ்வந்திப் பூ ஒன்றையும் தந்து, ‘‘குழந்தைக்கு சங்கரலிங்கம் என பெயர் சூட்டு! குழந்தை சீரும் சிறப்புமாக இருக்கும்’’ என்று சொல்லி மறைந்தார். கனவு கலைந்த செந்தில் நாயகத்தின் கைகளில் திருநீறும், பூவும் இருந்தன. குழந்தைக்கு திருநீற்றை அணிவித்தவர், சிவனார் தனது கனவில் வந்து கூறியபடி, ‘சங்கரலிங்கம்’ என்றே பெயரிட்டார். பள்ளியில் சேர்ந்த குழந்தை, தமிழ்ச் சுவையுடன் பண்பாட்டுச் சுவையையும் உணர்ந்து அனுபவித்தது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டைக்கு அருகில் ஓர் அம்மன் கோயில். அங்கு விமரிசையாகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில், தண்டபாணி சுவாமிகளும் கலந்து கொண்டார்.

 அங்கிருந்தவர்களிடம், ‘‘இந்த அம்மனின் பெயர் என்ன?’’ என்றார்.
‘‘பூமி காத்தாள்’’ என்று பதில் வந்தது.

‘‘பூமி காத்தாள் என்கிறீர்களே... இந்தப் பெயர் எதனால் வந்தது?’’ எனக் கேட்டார் சுவாமிகள். கூடியிருந்த கும்பலில், ஒருவரிடமிருந்து கூட இதற்கு பதில் வரவில்லை. கொஞ்சம் இடைவெளி விட்டு, சுவாமிகளே பதில் சொன்னார்.

‘அமுதம் கடையுநாள் ஆலம் வெடித்துத் 
திமுதமெனத் தீயெரித்துச் சென்ற - தமுதமெனத் 
தீக்கடவுள் உண்டார் திருக்கண்டத் தைப்பிடித்துக் 
காத்ததனால் பூமிகாத் தாள்’’

இந்தப் பாடலின் கருத்து: பாற்கடல் கடைந்தபோது, ஆல கால விஷம் எழுந்தது. அதை அமுதம் போல் எடுத்து உண்டார் சிவனார். ‘இந்த ஆலகால விஷத்தால், எங்கே பூமியில் உள்ள மக்கள் எல்லோரும் அழிந்து விடுவார்களோ?’ என்ற எண்ணத்தில் சிவனாரின் கழுத்தை மென்மையாகப் பிடித்து, பூமியைக் காத்தாள் அம்பிகை. அதனால், ‘பூமி காத்தாள்’ என பெயர் பெற்றாள்.

பாடலைக் கேட்ட அனைவரும் பரவசமடைந் தனர். இந்தச் செயல் நிகழ்ந்தபோது, தண்டபாணி சுவாமிகளுக்கு எட்டரை வயதுதான்!
ஒ ரு முறை தண்டபாணி சுவாமிகள், தாம் ஏற்கெனவே பாடிய ‘திருவரங்கத் திருவாயிரம்’ என்ற பாடல் தொகுப்புடன் ஸ்ரீரங்கம் சென்றார்.
அங்கு, ஆயிரம் பாடல்களையும் அரங்கேற்ற அவருக்கு அருள் புரிந்த அரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் உள்ள தன் பக்தர்களின் கனவில் தோன்றி, ‘‘திருவரங்கத் திருவாயிரத்தை இங்கே அரங்கேற்றம் புரிவதற்கு வேண்டியதைச் செய்யுங்கள்!’’ என்று கட்டளையிட்டு மறைந்தார். ஏற்பாடுகள் தடபுட லாகச் செய்யப்பட்டன. தண்டபாணி சுவாமிகள் பாடிய ‘திருவரங்கத் திருவாயிரம்’ பாடல்கள், தினந்தோறும் சீரும் சிறப்புமாக அரங்கேற்றப்பட்டன. ஏராளமானோர் வந்து கேட்டு இன்புற்றனர். நாளாக நாளாக கூட்டம் அதிகரித்தது. அப்போது, கருடனின் பெருமையையும், தண்டபாணி சுவாமிகள் தம் மீது கொண்டுள்ள பக்தியையும் உலகுக்கு உணர்த்த திருவரங்கன் திருவுளம் கொண்டார் போலும்.

ஒரு நாள் அரங்கேற்றத்தில் பெரும் பங்கு வகித்து தொண்டு செய்த பக்தர் ஒருவரின் மகளை, பாம்பு தீண்டியது. இந்தத் தகவல், மேடையில் இருந்த தண்ட பாணி சுவாமிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் எழுந்து வந்து, கருடன் சந்நிதி முன் நின்று,

அரங்கன் திருமுன் பமருங் கருடா
இரங்கிரங்கிப் பார்ப்பனப்பெண் ஏங்க - சிரங்கொண்ட 
பொல்லா விடத்தைப் பொடியாக்கிப் பூவுலகோர் 
நல்லானென் றோதஅருள் நல்கு’

_ என்ற வெண் பாவைப் பாடினார். பிறகு, ‘‘பாம்பின் விஷம் இறங்கி அந்தப் பெண் உயிர் பிழைத்த பிறகே, அரங்கேற்றத்தைத் தொடர்வேன்!’’ என்று அங்கு கூடி இருந்தவர்களிடம் கூறிவிட்டு, தன் இருப்பிடத்தை அடைந்தார்.

அப்போது கருட பகவான், அந்தணர் வடிவில் தண்டபாணி சுவாமிகளிடம் வந்தார். அவரிடம், ‘‘உங்கள் பெயர் என்ன?’’ எனக் கேட்டார் சுவாமிகள். ‘‘கருடாச்சாரி’’ என்று பதில் சொன்ன அந்தணர், சிறிது நேரம் தண்டபாணி சுவாமிகளுடன் பேசிவிட்டுத் திடீ ரென மறைந்தார். அதன் பிறகே, ‘வந்தது கருட பகவான்’ என உணர்ந்தார் தண்டபாணி சுவாமிகள்.

ஓதும் கருடன் ஒருமனிதன் போல்உருக்கொண்(டு)
ஏதும் அறியான் எனத்தோன்றிப் - பேதமற 
நம்மோடு உறவாடி நான்கருடா சாரியென்றது
அம்மா! நலஅதிச  யம் 

என இந்த நிகழ்ச்சியை தண்ட பாணி சுவாமிகள் பாடலால் தெரிவித்துள்ளார். பின்னர், பாம்பு தீண்டிய பெண் உயிர் பிழைத்தாள். அரங்கேற்றம் மீண்டும் தொடர்ந்து, சிறப்பாக நடந்து முடிந்தது.
இது மட்டுமல்ல, தமிழின் அருமையும், இனிமையும் விளங்கும் படியாக லட்சத்துக்கும் மேலான பாடல்களை தண்டபாணி சுவாமிகள் பாடியுள்ளார்.

[ நன்றி: சக்தி விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக