புதன், 12 ஜூலை, 2017

767. லா.ச.ராமாமிருதம் -13: சிந்தா நதி - 13

9. யுகமணம் 
லா.ச.ராமாமிருதம்

” காலத்துக்குத் தக்கபடி நியதி மாறுகிறது. நம் நியாயங்கள் இப்போ பொருந்தா. நாம் நம் முன்னோர்களின் வாரிசுகள் என்பது நம்முடைய தத்துவம். கொடு, கொடு. கொடுத்துக் கொண்டேயிரு-நம் கோட்பாடு கொடுப்பதற்கு அப்போ இருந்தது. கொடு என்பதில் நான் எல்லாவற்றையும்தான் சேர்த்துக்கொள்கிறேன்; அன்பு, பாசம், பிரியம், தியாகம், So on. “ 


இது நடந்து இன்று மூன்று வருடங்களாகியிருக்கும். கதையைப் பாராட்டி-கதிரில் வெளியான 'மேனகை' என்றே நினைக்கிறேன்- கடிதம் ஒன்று வந்தது. "வெகு நாட்களாகிவிட்டன. உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதோ இல்லையோ" என்கிற ரீதியில் முடிந்து 'பாஸ்கர்'

எழுதியிருந்த படியே நினைப்பு மழுப்பிற்று. பாஸ்கர்? எத்தனையோ பாஸ்கர்கள். பாஸ்கர், முரளி, ஸ்ரீகாந்த், குமார்-இட்ட பெயர் எதுவாயினும், அழைக்க இவை தான் இப்போது ஃபாஷன். கடைசியில் போயே பார்த்து விடுவதென........

வருகிற எல்லாக் கடிதங்களின் விலாசங்களையும் தேடிச் செல்வது சாத்தியமா? அல்ல. எனக்குத்தான் கெளரவமா? ஆனால் இதற்கு மட்டும் ஏன் இத்தனை நெஞ்சு முள் இடறல்? எதுவோ கட்டிப் பிடித்து இழுத்தது.

தெரு முனையிலேயே ஆசாமி பார்த்துவிட்டார். எதிர் கொண்டு வந்து என்னைத் தழுவிக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார். எனக்கும் அடையாளம் விடிந்து விட்டது.

வயதில் எங்கள் இருவருக்குமிடையே ஒரு தலைமுறையே முழுமையாக உருவாகியிருந்தது. அதே முகம், ஒரு சுருக்கம் கூடக் கிடையாது. பாஸ்கருக்குக் கண்கள் எப்பவுமே அழகு. மான் விழி. உடல்தான் தடித்து விட்டது. நெல்லுக்கு முனை கிள்ளி விட்டாற்போல், உச்சரிப்பில், அதே லேசான கொச்சைக் குரலில், பாஷையில் அதே மிருது. எங்கள் சந்தோஷத்திற்கும், பேச விஷயங்களுக்கும், பரிமாறல்களுக்கும் கேட்கணுமா?

கடல் போலும் வீடு. மூன்று பிள்ளைகளும், சம்சாரங்களும் தவிர, சுற்றம், போவோர், வருவோர் சந்தடிநாடி ஸ்வச்சமாகத் தெரிந்தது. பயணத்தின் வசதிகள் அனைத்தும் தெரிந்தன. இந்த தினப்படி உற்சவத்தில் அத்தனை வசதிகளும் தேவைதான் என்றும் தெரிந்தது.

வயிற்றுப் பாடின் எதிர் நீச்சலின், ஒரே சமயத்தில் பல லைன்களில் sales Representative ஆக, ஒரு தோல் பையைத் துக்கிக்கொண்டு, படிப்படியாக ஏறி இறங்கி வந்த அந்த நாள் பாஸ்கருக்கு இவர் எங்கே?

இப்போது பாஸ்கர் சொந்த பிஸினெஸ் பண்ணிக் கொண்டிருந்தார். அது சம்பந்தப்பட்ட வியாபாரி சங்கத்தின் காரியதரிசியும்கூட. வசதி, க்ஷேமம், பதவி மூன்றும் கூடிவிட்டன.

"உலகம் ஒரு பிரமாண்ட நரம்பு ஸிஸ்டம். எங்கே தட்டினாலும் விதிர் விதிர்ப்பு எவ்வளவு தூரம் பரவுகிறது! இல்லாவிட்டால், முப்பது வருடங்கள் கழித்து நாம் இப்படிச் சந்திக்க முடியுமா? விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் தொட்டுக்கொள்ள முடியுமா?" என் கையைப் பிடித்துப் பட்சத்துடன் அமுக்கினார். "இத்துடன் நான் சொன்ன வேரோட்ட பலம் இருக்கும் வரை, மற்ற மற்ற முரண்பாடுகள் எல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள், Time marches on."


"காலத்துக்குத் தக்கபடி நியதி மாறுகிறது. நம் நியாயங்கள் இப்போ பொருந்தா. நாம் நம் முன்னோர்களின் வாரிசுகள் என்பது நம்முடைய தத்துவம். கொடு, கொடு. கொடுத்துக் கொண்டேயிரு-நம் கோட்பாடு கொடுப்பதற்கு அப்போ இருந்தது. கொடு என்பதில் நான் எல்லாவற்றையும்தான் சேர்த்துக்கொள்கிறேன்; அன்பு, பாசம், பிரியம், தியாகம், So on. ஆனால் வாழ்க்கை ஒரு நீண்ட அவசரமாகி விட்ட பின், அவனவன் அவனவனுக்கே. பற்றிக்கொள்ள முடிந்தவரை பற்றிக்கொள்- இது வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்டது. மிஞ்சத் தக்கவன் தான் எஞ்ச முடியும் எனும் இந்த rat race இல் இளைய தலைமுறை என்னதான் செய்யும்! அவர்களுக்கு மனம் இல்லை என்று சொல்ல மாட்டேன். அவர்களால் முடிந்ததைக் கொடுக்கிறார்கள். கொடுக்கிறது என்பதில் நான் எல்லாவற்றையும்தான் மடக்குகிறேன். அன்பு, பாசம், பிரியம், நேசம் So on. ஆனால் நமக்குப் பங்கு குறைந்துபோய்விட்டது; குறையத்தான் செய்யும். பங்குதாரர்கள் கூடிவிட்டார்கள். சரக்கும் குறைந்து போச்சு. இந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் அத்துடன் நாம் சமாதானமானால் வாழ வழி. இல்லையேல் Generation Gap, குற்றம் குறை. கொடுப்பதென்றால் அதன் வீச்சு நம் பிள்ளைகளுக்குத் தெரியாது."

"ஏண்டா பாஸ்கர், வேட்டியை இன்னும் விழுத்துப் போடல்லியா? எப்போ தோய்ச்சு எப்போ காயறது?"

வாசற்படியில் ஒரு கிழவி நின்றாள். 70, 75. உடல் வற்றி புடவை கொம்புக் கிளையில் மாட்டினாற்போல் ஆங்காங்கே தொங்கிற்று.

பாஸ்கர் எழுந்து நின்றார். அமைதியாக, அன்பாக, "இதோ வந்துட்டேன் அம்மா."

அம்மாவா? இவளா? வேலைக்காரி என்று சொல்லாமலே தெரிகிறதே!

"இந்த மகன் யாரு?"

"இவரை உனக்குத் தெரியாது. ரொம்ப வேண்டியவர்.”

"சுருக்க விழுத்துப் போடுடா. பேச்சுக்கு ஆள் அகப்பட்டா போதும். தோச்சுப் போட்டுட்டு நான் கட்டையைச் சத்தே நீட்ட வேண்டாமா?"

பின்வாங்கி, வீட்டைச் சுற்றிக்கொண்டு, புழக்கடைப் பக்கம் சென்றாள்.

என் முகத்தின் திணறலுக்குப் பாஸ்கர் புன்னகை புரிந்தார். நாற்காலியில் சாயந்து கொண்டார்.

"இவளுக்குக் கலியாணமான கையுடன், வேலை செய்ய எங்கள் வீட்டுக்கு இவள் வந்தபோது, என் தாயார் என்னைக் கர்ப்பமாயிருந்தாள். அம்மா சமையல் பண்ணிக்கொண்டிருக்கையில், சமையலறையிலேயே திடீரென்று நான் அவதாரமாகி விட்டேன். இவங்க ரெண்டு பேரைத் தவிர வீட்டில் யாருமில்லை. கூடத்துக்குக் கூட்டிப் போகவோ, ஒரு விரிப்புக்கோகூட நேரமில்லை. ஆகவே என்னைப் பிரசவம் பார்த்தவளே இவள்தான். அத்தோடு நிற்கவில்லை. அடுத்து வந்த தம்பி, அப்புறம் தங்கை, மறுபடியும் தம்பி, மறுபடியும் தங்கை-அந்த நெருக்கடி நேராவிட்டாலும் இவள்தான் மருத்துவம். ஆகவே இவள் Status தனிப்பட்டது. அம்மா வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். ஆகவே இவள் தான் எங்களை வளர்த்தாள். என் மூக்கை எத்தனை தரம் சிந்திப்போட்டிருப்பாள். இவளிடம் எத்தனை உதை வாங்கியிருப்பேன். எத்தனை தரம் எடுத்து விட்டிருக்கிறாள்!" அவர் குரலில் பெருமிதம் ஒலித்தது. ஆம், இவளுக்கும் குழந்தை குட்டிகள் இருக்கிறார்கள், நிறைய.

"அப்புறம் அப்பா காலமானார். அடுத்த வருடமே அம்மா அவரைத் தொடர்ந்து விட்டாள். பிறகு இவளுடைய ப்ரசன்னம் எங்கள் உடலோடு, குடும்பத்தோடு ஊறிப்போன தன்மையாகி விட்டது.

"என் பேரக் குழந்தைகளுக்கு இவள் வைத்யம் சரிப்படுமா? காலத்துக்கேற்றபடி அவர்கள் நர்ஸிங் ஹோம் ப்ராடக்ட்ஸ்.

"வாட் நெள? இவள் எங்களோடயே தங்கிவிட்டாள். இவளுடைய பிள்ளைகள் விழுந்து விழுந்து அழைக்கிறார்கள். ஆனால் ஏனோ இவளுக்கு அங்கே பிடிப்பு இல்லை.

"இன்னும் பற்றுப் பாத்திரம் தேய்க்கிறாள். ஆனால் கை அழுந்தவில்லை. இவ்வளவு பெரிய குடும்பத்திற்கு வண்டிப் பாத்திரம் விழுகிறது. நீ தேய்க்க வேண்டாம். ஒன்னுமே செய்ய வேண்டாம் என்றால் கேட்க மாட்டேன்கிறாள். திருட்டுத்தனமாகச் சமயலறையில், மாமியாரும் நாட்டுப் பெண்களும் பாத்திரங்களை மறுபடியும் தேய்த்தாகிறது. ஏதோ ஒரு கட்டத்தில் தனக்குச் சம்பளம் வேண்டாம் என மறுத்து விட்டாள். ரேழியில் ஒரு கந்தல் பாயில் படுக்கிறாள். வேறு கொடுத்தாலும் மறுக்கிறாள்.

"டே பாஸ்கர்! (எப்பவுமே கொஞ்சம் தோரணைதான்) நான் செத்துட்டா, நீ கொள்ளி போட்டுடு. ஆனால் உன் ஜாதி புத்தியைக் காண்பிச்சாலும், செத்தப்புறம் எனக்கென்ன தெரியப் போவுது, தெரிஞ்சு என்ன ஆவணும்? நெருப்புக் குச்சி யார் கிழிச்சாலும் பத்திக்கும். ஆனால் வர வர இப்போ, கொஞ்சம் ஞாபகம் பிசகறது. அதனாலதான் வேளையில்லாத வேளையில் என் வேட்டியைக் கேட்கிறாள். இடம், வேளை, இங்கிதம் பிசகுகிறது. ஸோ வாட்? இப்பவும், இவள் எங்களுக்கு அரண்!"

மல்லிப் பந்தலை ஊடுருவிக் கொண்டு தென்றல் பாய்ந்தாற் போல், அவர் குரல் லேசாக நலுங்கிற்று.

திடீரென நாங்கள் இருந்த இடத்தையே- அந்த வேளையையே ஒரு மணம் சூழ்ந்தது.

சில மலர்கள் வதங்க வதங்க மணம் மிகுகிறது.

சிந்தா நதியில் ஒரு சந்தோஷமான துளையல்.
* * *

[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்:


1 கருத்து:

  1. காயக் காய மணக்கும் மகிழம்பூ! எங்க குடும்பத்திலும் இப்படி ஓர் வேலைக்காரி, சேச்சே, அம்மா இருந்தாள்.

    பதிலளிநீக்கு