வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

814. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 1

தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை
முனைவர் அ.கா.அழகர்சாமி

ஆகஸ்ட்  25. தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்களின் நினைவு தினம்.



தணிகைமணி, ராவ் பகதூர், வ.சு.செ. என்று பலவாறு அழைக்கப்படும் வ.சு.செங்கல்வராய பிள்ளை, தமிழுக்குச் செய்த தொண்டுகள் அளவிடற்கரியன. திருப்புகழ் பதிப்பாசிரியரான சிவஞானச் செல்வர், வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையின் இளைய மகனான இவர், அன்றைய தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிறந்தார்.

1888-1891-ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியரான இவரின் தந்தையார் நாமக்கல்லில் பணியாற்றியதால், அங்குள்ள கழகப் பள்ளிக் கூடத்தில் தணிகைமணி மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு கும்பகோணம், திருவாரூர் மதுரை ஆகிய ஊர்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். 1901-ஆம் ஆண்டில் சென்னை மில்லர் கல்லூரியில் பி.ஏ.,தத்துவம் பயின்றார். பின்னர் அதே கல்லூரியில் எம்.ஏ., தமிழ் பயின்றார்.

தணிகைமணி, மாணவப் பருவத்தில் சாதனையாளராகவே திகழ்ந்தார். 1892-இல் நடந்த அரசு துவக்கப்பள்ளித் தேர்வு, 1896-இல் நடந்த அரசு உயர் துவக்கப் பள்ளித் தேர்வு, 1899-இல் நடந்த மெட்ரிகுலேஷன் தேர்வுகளிலும் முதல் வகுப்பில் தேறினார். இவை தவிர, சீனியர் எம்.ஏ., வகுப்பில் நடைபெற்ற தமிழ்த் தேர்வில் முதலாவதாகத் தேறினார்.

இதற்காக இவர் இராமநாதபுரம் மகாராணியார் வழங்கிய தமிழ்க் கல்வி உதவித் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 4.50 என்ற அளவில் பெற்றார். இதே போல் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றார். ஊழ்ஹய்ந்ப்ண்ய் எங்ப்ப் எர்ப்க் ஙங்க்ஹப் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தையும், கல்லூரி அளவில் வழங்கப்பட்ட சேதுபதி தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.

1902-இல் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு ரூ.50 பரிசாகப் பெற்றார். இவ்வாறு கல்வியில் சாதனையாளராக விளங்கிய தணிகைமணி, அலுவலகப் பணியிலும் தனது முத்திரையைப் பதித்தார். இவரது பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு ராவ் சாகிப், ராவ் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தது.

மரபான சைவக் குடும்பப் பின்னணியாலும், இவருக்குத் தமிழ் கற்பித்த தமிழாசிரியர்களான பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், கோபாலாசாரியார் ஆகியோரின் தாக்கத்தாலும், இவர் தமிழ்ப் பணியின்பால் தம்மை இணைத்துக் கொண்டார். 1905-இல் அரசுப் பணியில் சேர்ந்த இவர், அலுவலகப் பணியையும், தமிழ்ப் பணியையும் ஒருங்கிணைத்துச் செய்தார்.

சிறுவயதிலேயே தனது தமையனாரிடம் யாப்பிலக்கணங்களைக் கற்றுக்கொண்ட இவர்,

""கண்ணனும் வேதனும் போற்றுமுருகா கவின் மணியே
விண்ணவர் கோன்தான் பதம்பெறச் செய்த செவ்வேலவனே
பெண்ணோடு பாகன் அளித்த குமரா பெருநிதியே
தண்ணருளே பொழி தேவே தணிகைத் தயாநிதியே''

என்று முருகனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடியுள்ளார். திருத்தணிகை முருகனைப் போற்றும் பாங்கிலான இப்பாடல், தணிகைமணியின் தொடக்ககாலப் பாடல்களில் ஒன்று எனலாம். இவ்வாறு தனது குடும்பப் பின்னணி சார்ந்து தமிழார்வம் கொண்ட தணிகைமணி உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர் எனப் பல தளங்களில் தமிழுக்காகத் தொண்டாற்றியுள்ளார். தணிகைமணி தாம் வாழ்ந்த காலத்தில் ஏறத்தாழ நாற்பது நூல்களைப் படைத்துள்ளார்.

இவை பெரும்பாலும் முருகனைப் பற்றியனவாகவும், தேவாரத்தைப் பற்றியனவாகவும் உள்ளன.
தணிகைமணியின் படைப்புகளில் முன்னிற்பவை அவரின் முருகனைப் பற்றிய ஆக்கங்களாகும். திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ், தணிகைப் பதிகம், தணிகைத் தசாங்கம், வேல்ப்பாட்டு, சேவல்பாட்டு, கோழிக்கொடி, தணிகைக் கலிவெண்பா, திருத்தணிகேசர் எம்பாவை, திருத்தணிகேசர் திருப்பள்ளியெழுச்சி, மஞ்சைப் பாட்டு, வள்ளி திருமணத் தத்துவம், வள்ளி-கிழவர் வாக்குவாதம் முதலிய பல நூல்களைச் செய்துள்ளார்.

இவை தவிர, முருகனைப் பற்றிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து, "முருகவேள் பன்னிரு திருமுறை' என்ற தொகுப்பையும் தந்துள்ளார். இதனுள் திருப்புகழ் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு, சேய்த்தொண்டர் புராணம் முதலியன உள்ளன.

தணிகைமணி, திருப்புகழுக்கு மிக எளிமையான உரையை எழுதிப் பதிப்பித்துள்ளார். 1951-ஆம் ஆண்டு முதல் இவரின் திருப்புகழ் உரை வெளிவரத் தொடங்கியது. இதை அவர், இதழ் போன்றே பகுதி பகுதியாக வெளியிட்டுள்ளார்.

இவரின் இம்முயற்சி பற்றித் தமது மதிப்புரையில் குறிப்பிடும் செந்தமிழ் இதழ், ""தேவஸ்தானங்களும், மடாலயங்களும் போன்ற செல்வ நிலையங்கள் மேற்கொள்ள வேண்டிய மிகப் பெரிய இந்நன் முயற்சியை, இதன் பதிப்பாளர் உலையாவூக்கமொடு இடையூறின்றி இனிது நிறைவேற்ற முருகப்பிரான் திருவருள் முன்னிற்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளது. (செந்தமிழ்-48,பகுதி 9-10, ப.239) எனவே, அவரின் திருப்புகழ் பதிப்பு முயற்சியானது தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது எனலாம்.

இவர் தமது திருப்புகழ் பதிப்பை, இடது பக்கம் பாடல் வரிகள், வலது பக்கம் பொழிப்புரை என்ற வகையில் பதிப்பித்துள்ளார். இவை தவிர, பாடல் வரிகளின் கீழ் முக்கியமான சொற்களுக்குக் குறிப்புரையையும் தந்துள்ளார். எண்கள், உடுக்குறிகள் முதலியவற்றைப் பயன்படுத்தி இந்தக் குறிப்புரைகளை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அமைத்துள்ளார். ""தம்மைப் பூசை செய்திருந்த மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த கூற்றைச் சிவபிரான் மாளும்படி உதைத்தனர். கந்தபுராணம் மார்க்கண்டேய படலம் பார்க்க'' (தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ், ப.2, 22) என்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தியுள்ளார். இதனால், இவரின் திருப்புகழானது படிப்பதற்கு மிக எளிமையானதாகவும், ஆய்வாளர்களுக்குப் பயன்படுவதாகவும் உள்ளது.

தணிகைமணியின் மற்றுமொரு சிறந்த முயற்சி, தேவார ஒளிநெறி, தேவார ஒளிநெறிக் கட்டுரைகள், திருவாசக ஒளிநெறி, திருவாசக ஒளிநெறிக் கட்டுரைகளாகும். தேவாரத்திலுள்ள சொற்கள், தலங்கள், அரிய சொல்லாட்சிகள், அடியவர்கள் முதலியவற்றுக்கு அகர வரிசையில் விளக்கம் தந்துள்ளார். ""திருத்தணிகேசனது திருவருளையே துணையாகக் கொண்டு தேவார ஒளிநெறி என்னும் பெயரோடு தேவாரத்துக்குப் பெரியதொரு ஆராய்ச்சி எழுத விரும்பினேன்.

தேவாரத்தில் உள்ள பல பொருள்களையும், அவ்வப்பொருளின் வழியே அகராதி முறையாகத் தொகுத்து விளக்கிக் காட்டும் ஆராய்ச்சியே எனது சிற்றறிவுக்குத் தக்கதொண்டு எனக் கருதினேன்.
அத்தகைய கருத்துடன் சம்பந்தப் பெருமானது தேவாரத்தை ஆய்ந்து, நானூற்று அறுபத்து ஆறு தலைப்புகளின் கீழ் விரிந்ததொரு ஆராய்ச்சி அகராதி எழுதி முடித்தேன்'' என்று தனது தேவார ஒளிநெறி பற்றி தன்னடக்கத்துடன் குறிப்பிடும் தணிகைமணி, தான் எடுத்துக்கொண்ட பணியை மிகவும் விரிவாகவே செய்துள்ளார்.

இவரின் தேவார ஒளிநெறியானது 466 தலைப்புகளில் மூன்று பாகங்களாகவும், அப்பர் தேவார ஒளிநெறி 190 தலைப்புகளில் இரண்டு பாகங்களாகவும், சுந்தரர் தேவார ஒளிநெறி 261 தலைப்புகளில் ஒரே நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தர் ஒளிநெறியில் "பதிகப் பாகுபாடு' என்னும் தலைப்புக்கு விளக்கம் தரும் தணிகைமணி ""இராவணனை அடர்த்தது எட்டாவது பாடலிலும், பிரமன், மால் இவர்களுக்கு அரியவராய்ச் சிவபிரான் நின்றது (இருவர்கருமை) ஒன்பதாவது பாடலிலும், சமணர் முதலிய புறச்சமயத்தாரைப் பற்றிப் பத்தாவது பாடலிலும் சுவாமிகள் தமது பதிகங்களில் ஓதியுள்ளார். இந்த முறையில் வராத பதிகங்களின் விளக்கங் கீழ்க்காட்டுவன. ராவணன் (8-ஆம் பாடலில் சொல்லப்படாதது) 9-ஆம் பாடலிற் சொல்லப்பட்ட பதிகங்கள் (17) 39, 45, 57, 78, 90, 117, 127, 138, 142, 156, 204, 209, 210, 253, 316, 330, 368'' என்று செறிவானதொரு விளக்கத்தைத் தருகிறார். இவ்வாறு ஒவ்வொரு தலைப்புக்கும் செறிவானதும், நுட்பமானதுமான விளக்கங்களைத் தந்துள்ளார் தணிகைமணி. இதுபோல விளக்கவுரை தந்தவர் எவருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது உரைநடையைப் பொறுத்தவரையில் அவை மிகவும் எளிமையானவை. வாசகனை அரவணைத்துச் செல்பவை. படிப்பார்வத்தைத் தூண்டக் கூடியவை. இவரது உரைநடை பற்றிக் கருத்துரைக்கும் கு.கதிரேசன், ""உரைநடையில் இவருக்கு ஒப்பான செறிவு, இனிமை, தெளிவு, நயம் ஆகியவற்றின் இணைவை வேறு எவரிடத்தும் காண இயலாத அளவுக்குச் சிறந்த மொழி நடையைப் பெற்றவர்'' என்று குறிப்பிடுகிறார். எனவே, தனித்துவம் மிக்க மொழிநடையின் மூலம் ஒரு செறிவார்ந்த உரைநடையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் தணிகைமணி எனலாம்.
இவ்வாறு தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட தணிகைமணி, 1971-ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

இப்பூவுலகில் 88 ஆண்டுகள் வாழ்ந்த தணிகைமணி, தமது இளமைக்காலம், பணிக்காலம், ஓய்வுக்காலம் என அனைத்திலும் தமிழுக்காக, தமிழாகவே வாழ்ந்தவர். எனவே, வழிவழியாக வரும் தமிழ்ச் சான்றோர் மரபில் அவருக்கான இடம் ஓர் ஒளிநெறியாகவே இருக்கும் எனலாம்.
  ======
[ நன்றி: தினமணி ]


தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக