செவ்வாய், 12 செப்டம்பர், 2017

832. சி.வை.தாமோதரம் பிள்ளை -1

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை
வளவ.துரையன்




செப்டம்பர் 12. தாமோதரம் பிள்ளையின் பிறந்த தினம். யாப்பிலக்கணம் தெரிந்தவருக்கு இவருடைய ‘கட்டளைக் கலித்துறை’ பற்றிய நூல்/கட்டுரை ஒரு முக்கியமான ஆவணம். இன்றும் நாங்கள் இதைக் குறித்து உரையாடுகிறோம்!
===

  ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும் அவர்கள் வகுத்துள்ளனர்.

 இவர்களில் ""சி.வை.தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு'' என்றும் "தமிழ்தந்த தாமோதரம் பிள்ளை' என்ற கட்டுரையில் சி.கணபதிபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

 பதிப்புத்துறையில் தொண்டாற்றிய மேற்கண்ட மூன்று அறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஆறுமுக நாவலர் 1868-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைத் தான் ஆய்வுசெய்து தாமோதரம் பிள்ளையைக் கொண்டு பதிப்பிக்கச் செய்துள்ளார்.

 ""ஆங்கில மோகம் அதிகரிக்க, தொல்காப்பியப் பிரதிகள் அருகி, தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதை தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்...தொல்காப்பியக் கடலில் இறங்கினார்'' என்று பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.


 தமது 33-ஆம் வயதில் உ.வே.சா., தாமோதரம் பிள்ளையைச் சந்தித்தார். அப்போது உ.வே.சா., சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் கொண்டு சுவடிகளை ஆய்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அப்போது அச்சுத்துறை மிகவும் புதியது. தாமோதரம் பிள்ளையின் சந்திப்புதான் உ.வே.சா.வுக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது. இதை உ.வே.சாவே, ""இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம்பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887-இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

 இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் கிராமத்தில் வைரவநாதபிள்ளை-பெருந்தேவி தம்பதியினர்க்கு மகனாக 1882-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பிறந்தார்.

 தாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார்.


 பிள்ளையவர்களின் ஆங்கிலக்கல்வி தெல்லிப்பிழை அமெரிக்க மிஷன் பள்ளியில் தொடங்கியது. மேலும் ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணம் பல்கலையில் கற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய்த் திகழ்ந்தார்.

 ஆங்கில உயர்தரக்கல்வியை எட்டு ஆண்டுகள் பயின்றபின் தமது 20-ஆம் வயதில் கோப்பாயிலிருந்த பள்ளியில் பிள்ளை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே நீதிநெறிவிளக்க உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 சென்னையில் இருந்த பார்சிவல் பாதிரியார் தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து "தினவர்த்தமானி' எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடத்தி அதில் தனியான ஒரு வசன நடையைக் கையாண்டார் பிள்ளை. மேலும் லஷ்சிஸ்டன்துரை போன்ற ஆங்கிலேயர்க்குத் தமிழும் கற்பித்து வந்தார். இதை அறிந்த அன்றைய அரசாங்கம், தாமோதரம் பிள்ளையை, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய "சென்னை இராசதானி' க்கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்து மகிழ்ந்தார்கள்.


 சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., தேறிய பிள்ளையை கள்ளிக்கோட்டை இராஜாங்க வித்தியாசாலை உதவியாசிரியராகப் பணியாற்ற அழைத்தது. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத்துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவு-செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் பதவியும் வந்து சேர்ந்தன. 1871-இல் தாமோதரம்பிள்ளை பி.எல்.தேர்வில் வெற்றி பெற்றார்.

 எப்பணியை மேற்கொண்ட போதிலும் தமது ஓய்வு நேரங்களில் தாமோதரம்பிள்ளை பழைய நூல்களை ஓலைச் சுவடிகளில் பயின்றுவந்தார். அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும் சீரழிந்து இருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தமது தலையாய பணி என்று பிள்ளை கருதினார். ஏற்கெனவே தம் 20-ஆம் வயதிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதால், பிள்ளைக்கு இப்பணி சுமையாகத் தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலரவர்கள் பரிசோதித்தலே நன்று என்று கருதி அவருக்கே பிள்ளை உதவி செய்து வந்தார்.

 இந்த நெருங்கிய தொடர்பினால் நாவலர் பரிசோதித்து அளித்த சொல்லதிகாரத்தைத் தம் பெயரினால் பிள்ளை முதன்முதல் 1868-இல் வெளியிட்டார். இந்நூல் வெளிவந்து பதினொரு ஆண்டுகள் கடந்தபின் 1879-இல் ஆறுமுகநாவலர் காலமானார். பிள்ளை மிகவும் மனம் வருந்தியதோடு நாவலரின் பணியைத் தாம் தொடர வேண்டுமென முடிவு செய்தார்.

 நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். அதன் பயனாய் வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891), தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892) முதலியவை தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன.

 இது மட்டுமன்றி, கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்ட பெருமை பிள்ளைக்கே உரியதாகும்.

 அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பிள்ளை, 1887-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 4 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார். மேலும் சென்னை திராவிடக் கிரந்த பரிபாலன சபை, நியாயப் பரிபாலன சபை போன்ற அமைப்புகளில் உறுப்பினராயும் இருந்து சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவர் என்ற பெருமையையும் பெற்றார் தாமோதரம்பிள்ளை.

 அன்றைய சென்னை அரசு இவருக்கு 1875-இல் ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவ்வாறு சிறந்த பதிப்புச் செம்மலாக விளங்கியதோடு தமிழ் ஆசிரியராக, கணக்காயராக, நீதிபதியாக, தான் தோன்றிய துறையில் எல்லாம் புகழோடு தோன்றிய பிள்ளை, 1901-ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல்நாள், வைகுந்த ஏகாதசித் திருநாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

 பல பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்று மகிழும் நாம், பல பண்டைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதை அறிந்து பெருமைப்பட வேண்டியது தமிழர் கடமை..

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
சி. வை. தாமோதரம்பிள்ளை : விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக