திங்கள், 2 அக்டோபர், 2017

859. ஏ.எஸ்.ராகவன் - 3

 உம்மாச்சி
 ஏ.எஸ்.ராகவன்

1965-இல் விகடனில் வந்த ஒரு முத்திரைக் கதை.
====

விடி விளக்கு குழறிற்று. சன்னலைத் திறந்தால் விளக்கு அவிந்துவிடும். வெளியே அத்தனை பேய்க் காற்று!

மாடிக் குடித்தனக்காரர் சன்னலை அறைந்து மூடினார். அவரது சகதர்மிணியின் குரல் சன்னலை அறைந்து கொண்டு பாய்ந்து வந்தது. அந்த அம்மாளின் கோபத்துக்குக் காரணமாக விளங்கிய கைக்குழந்தை தனது முழு பலத்தையும் பிரயோகித்து, 'வராட், வராட்' என்று அலறிற்று.
வெளியே புயலோடு மழையும் கை கோத்துக்கொண்டுவிடவே, எங்கள் இருப்பிடமான இரண்டு மாடிக் கட்டடமே ஆடுவது போலிருந்தது. அதி லிருந்த ஏழு குடித்தனக்காரர் களின் முப்பத்திரண்டு ஜீவன்களின் உயிர்களும் ஆடுவது போலிருந்தன.

மாடியிலிருந்து முற்றத்தின் ஓரமாய் நீட்டிவிடப்பட்டிருந்த ஜலதாரைக் குழாய் சாதாரண மழைக்கே லொட லொடவென்று ஆடும். இப்போதோ காற்றோடும் தானும் ஓடுவது போலக் கதறிற்று.

மொட்டு மொட்டென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். தூக்கம் பிடிக்கவில்லை. தூக்கத்துக்கும் என்னைப் பிடிக்கவில்லை.
விடி விளக்கு குமுறினாலும் இந்தச் சின்ன அறைக்கு அதன் ஒளி போதும். பழக்கப்பட்ட இடத்துக்குப் பழக்கமில்லாத இருள் கூடத் துணைதான்; இல்லையா?


என்னவோ! சமாதானங்கள் இல்லாவிட்டால் வாழ்நாளை உருட்ட முடியாதே! பழக்கப்பட்ட இடம், பழக்கமில்லாத இருள் என்பதெல்லாம் சும்மா.

என் கட்டிலின் கீழ் மஞ்சு தூங்கிக் கொண்டிருந்தாள்; பிஞ்சுக் கைகளைக் கால்களுக்குள் இடுக்கிக்கொண்டு. அவளுக்கு அருகில் தலைமாடு, கால்மாடு தெரியாமல் தூக்கத்திலும் விரல் சூப்பிக்கொண்டு படுத்திருக்கிறான் பாலு. சுவர் அருகே என் மேசையின் மீது மஞ்சுவின் தமிழ்ப் புத்தகமும், பாலுவின் கரும்பலகையும் தெரிந்தன. பாலுவுக்கு இன்னமும் நாலு வயதுகூட ஆக வில்லை. ஆனால், அக்கா பள்ளிக்கூடம் போகிறாளே என்பதற்காக வீம்புக்குக் கரும் பலகை வாங்கிக்கொண்டிருந் தான். அதில் அவன் எழுதுகிற எழுத்தெல்லாம் அழகான குண்டலங்கள்தான்.

ஆமாம், குண்டலங்கள்தாம்!

இந்த இரண்டடுக்கு வீட்டில் ஏழு குடிகளில் ஒரு குழாய், இரண்டே இரண்டு சிற்றறைகளில் இருபத்தைந்து ரூபாய் வாடகைக்குப் போராடிக் கொண்டு, இந்த இரண்டு உயிர்களுக்காக உயிரைப் பிடித் துக் கொண்டிருக்கிறேனே, இந்த வாழ்வே ஒரு பெரிய குண்டலம்தான்!

நெஞ்சு பொருமிற்று. மஞ்சு புரண்டு படுத்தாள். நல்ல சிவப்பு அவள்... கமலியைப் போல. முகம் அதே அச்சு. பேச்சுக்கூட அம்மாவைப் போலவே.
பாலு காலை விலுக்கென்று உதைத்துக்கொண்டு பல்லை நறநறவென்று கடித்தான்.

தூங்கும்போது குழந்தைகள் பல்லைக் கடித்தால் அது வியாதியின் கூறு என்பாள் கமலி. சிரித்தால், கடவுள் குழந்தைகளோடு விளையாடுகிறார் என்று அர்த்தமாம். ஓர் ஓலைப்பெட்டி நிறைய வசம்பு, அரத்தை, கடுக்காய் என்று மருந்துச் சரக்குகளை வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு மருந்து கொடுத்துக் கொண்டிருப்பாள் அவள். ஓமவாட்டர் தயாராக இருக்கும் எப்போதும். அவளுடைய அப்பா ஒரு நாட்டு வைத்தியரானதால், கமலிக்குப் பல மூலிகைகளின் பெயரும் குணமும் தெரியும்.

''கமலி, என் உடம்பு ரொம்ப ஒல்லியாக இருக்கிறதே, பருத் துக் கொழுக்க ஏதாவது மருந்து சொல்லேன்?'' என்பேன்.

''மனசிலே வஞ்சனை இல்லாவிட்டால் உடம்பு தானே பெருக்கும்'' என்பாள் அவள் சிரித்தபடியே.

''அடி கள்ளி! நான் வஞ்சனை உள்ளவனா, என்ன?''

''மனசிலே கவலை இருந்தால் கூட உடம்பு இளைத்துப் போகும்'' என்று திருப்புவாள்.

''நீ வந்த பிறகு எனக்கு ஏதடீ கவலை?''

முகமெல்லாம் பூரித்துப் போய்விடும் அவளுக்கு. ''நீங்க ஒண்ணும் ஒல்லியாக இல்லை. அளவாகத்தான் இருக்கிறீர்கள். இதற்கு மேலே பெருத்தால் நன்றாக இருக்காது. அப்புறம் மாடி வீட்டு சுப்பராயர் மாதிரி தசக்கா புசக்கா என்று...'' மீதிப் பேச்சு சிரிப்பில் புதைந்து போகும்.
இப்படித்தான் சிரிப்பிலேயே எல்லாவற்றையும் புதைத்து விட்டுப் போய்விட்டாள் அவள். புதைகுழிக்குள்ளிருந்து எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் நான்.

மஞ்சு புரண்டு படுத்தாள். அவளுக்கு இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லை. வரட்டு இருமலாக இருமிக்கொண்டுஇருந்தாள். பக்கத்துப் போர்ஷன் பிச்சுமணி அய்யரின் குடும்பத்தாரின் ஒத்தாசையோடு அரத்தைக் கஷாயம் வைத்துக் கொடுத்ததில் சற்றுத் தேவலை.
ஆயிற்று. விடிந்தால் போராட்டம்தான். காபி போட்டு, சமையல் செய்து வைத்துவிட்டு, குழந்தைகளைக் குளிப்பாட்டிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு, நான் புறப்படவேண்டும்.

என்ன வாழ்க்கை இது!

''ஓய்... எத்தனை நாளைக்கு இப்படித் திண்டாடுவீர்? பேசாம ஒருத்தியைக் கொண்டு வந்து குடும்பத்தை ஒழுங்கு செய்யு மேன்!'' - பிச்சுமணி அய்யர்.

''நீங்க சொல்றது எனக்குப் புரியறது. ஆனா மஞ்சுவும் பாலுவும் இருக்காளே..?''

''இருக்கட்டுமே! அவர்களை உத்தேசித்துத்தான் நீர் மறு கல்யாணமே செய்து கொள்ளணும்!''

''அவர்களை உத்தேசித்துத்தான் என்றால், பெண்ணையும் அவர்களேதான் தேர்ந்தெடுக்கணும்... இல்லையா? அதாவது, அவர்களுக்குத் தாயார் வேணும். அதானே?'' என்றேன்.

பிச்சுமணி அய்யர் செய்தித்தாளைப் பட்டென்று மூடினார். என்னை அவர் பார்த்த பார்வையில் ஆயிரம் ஊசிகளின் கூர்மை இருந்தது. ''ஓய்... நீர் என்ன சொல்றீர்?'' என்றார்.

''இனி எனக்கென்று எதுவும் இல்லை, பிச்சுமணி சார்! நான் இதை எல்லாம் யோசித்துப் பார்த்துட்டேன். என் குழந்தைகளை உத்தேசித்தால் இப்படியே இருக்கிறதுதான் மேல்னு பட றது. மறு கல்யாணம் எனக்கு வேண்டாம். அது என் குழந்தைகளைப் பாதிக்கும். அவர்களைப் பாதிக்காத கல்யாணமும் இருக்கலாம்.. அது என் அதிகாரத்தில் இல்லை. அவர்கள் செய்ய வேண்டிய முடிவு, தீர்ப்பு அது!''

இப்படி எந்தத் தந்தையும் பேசியிருக்க மாட்டான். நான் பேசினேன். எனக்கல்லவா தெரியும் என் குழந்தைகளின் அருமை!

''சார்..!'' - குரல் கேட்டது.

''யாரது?'' என்றேன்.

அசட்டுச் சிரிப்புடன் ஒருவர் உள்ளே வந்தார். ''உங்க அத்தைகிட்டேந்து உங்க ஜாதகம் வந்திருந்தது. உங்க விலாசத்தையும் எழுதியிருக்கார்...''

''ஓ... அதுவா?'' என்றேன். அத்தையிடமிருந்து எனக்கும் கடிதம் வந்திருந்தது, இரண்டு நல்ல சம்பந்தம் இருப்பதாக.

''பெண் நல்ல சிவப்பு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிருக்கு. பாட்டும் பாடுவாள்...''

''சமைப்பாளா?''

''என்ன இப்படிக் கேட்கிறயள்? நளபாகம்தான் சமையல். நம்ம குடும்பங்களிலே முதல்லே கத்துத் தரது அதுதானே?''

''ஓஹோ..!''

''இதோ இருக்கு விலாசம். நாளைக்குப் பெண் பார்க்க...''

''ஹை! நாளைக்கு இவாத்துக்கு நாம போகப் போறோமாப்பா?'' என்று கேட்டது மஞ்சு.

''போகலாம்ப்பா!'' என்றான் பாலுவும். ''சரி'' என்றேன்.

அவர் போன சிறிது நேரத்துக்கெல்லாம் இன்னொரு பெரியவர் வந்தார். அவரை யார் என்று நான் கேட்கவேண்டிய அவசியமில்லையே! அத்தை யின் இரண்டாவது சிபாரிசு!

எல்லாம் ஒரு நாடகம் போலத்தான் இருந்தது. என்னை விடத் துடிப்பாக இருந்தனர் மஞ்சுவும் பாலுவும். எதற்காக அந்த மாமாவின் வீட்டுக்கும், இந்தத் தாத்தாவின் வீட்டுக்கும் போகிறோம் என்பது தெரிந்தால் இவர்கள் இப்படித் துள்ளுவார்களா?

முதலில் வந்தவரின் பெண் நல்ல சிவப்புதான். பார்க்க லட்சணமாக இருந்தாள். ஓர் ஆண்மகன் விரும்புவதற்குரிய அழகியான அந்தப் பெண்ணை மணக்க நான் தயாராகக்கூட ஆகிவிட்டேன். அடுத்து வந்த வரின் வீட்டுக்குப் போகவேண் டுமா என்றும் யோசித்தேன்.

''நேத்திக்கு இன்னொரு தாத்தா வந்தாரே, அவர் ஆத்துக்குப் போகலம்பா'' என்றார் கள் பாலுவும் மஞ்சுவும் ஞாபகமாக.

இந்தக் குழந்தைகளை நம்பிப் பெண் பார்க்க ஒருவன் புறப்படுவானா? ஆயாசத்தோடு இரண்டாமிடம் சென்றேன்.

அந்தப் பெண் நல்ல கறுப்பு. குனிந்த தலை நிமிரவில்லை.

குழந்தைகள் அந்தப் பெரியவரிடம் ஒட்டிக்கொண்டு விட்டன. அவர் என்ன மாயம் செய்தாரோ, தெரியவில்லை. குழந்தைகள் சொன்னார்கள். அவள்தான் உம்மாச்சியாம் - அந்தக் கறுப்புப் பெண்! சொல்லை மீறிய ஏதோ ஒரு அனுபவத்துக்கு, உண்மைக்கு, உணர்ச்சிக்கு அவர்கள் வைத்த பெயர் - உம்மாச்சி!

நான் தலையசைத்துவிட் டேன்.

பிச்சுமணி அய்யர் பெருமூச்சு விட்டார். ''ஓய்... என்ன காரியம் பண்ணியிருக்கீர்? வாழ்க்கை என்பது பெரிய விஷயம். சின்னக் குழந்தைகளின் அசட்டுப் பிரியத்துக்கு எதைப் பலி கொடுத்திருக்கிறீர் என்று தெரியவில்லையா?'' என்றார்.

இருக்கலாம். ஆனால், அவர்களின் 'உம்மாச்சி' இந்தப் பெண்ணை எனக்குத் தந்திருக் கும்போது நான் என்ன செய்ய?

குதிரை வண்டியில் பெண் பார்க்கப்போன எங்கள் கோஷ்டி மௌனமாகவே திரும்பிற்று. இரண்டு மைல் தொலைவும் சந்திரனை நோக்கி ராக்கெட்டில் போவது போன்ற விபரீத, விசித்திர, அந்நியமான புழுக்கப் பெருவெளிக்குள் நீள்வது போலிருந்தது. இது சரி தானா என்பது புரியவில்லை. என் மனத்தளவுக்கு இது சரிதான். மஞ்சுவுக்கும் பாலுவுக்கும் இதுவே சரி!

வண்டி ஒரு தெரு முனையில் திரும்பிற்று.

அதோ... முனிசிபல் லாந்தரின் கீழ் இரு உருவங்கள் நிற்கின்றனவே, அவர்கள் யார்? விலாவைப் பொத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தது என் நெஞ்சு. ஆம்... அந்த உருவங்களில் ஒன்று, நான் முதலில் பார்த்துவிட்டு வந்த பெண். மற்றொன்று, என்னைப் போல முன்புற வழுக்கையும், கன்னக் குழிவும் கொண்ட நடுத்தர வயதினன் அல்ல; ஓர் இளைஞன்! இருவரின் நிலையும் எனக்கு விளங்கிவிட்டது.

பாலு கேட்டான்... ''ஏம்பா, அந்த முனிசிபல் விளக்கு இருக்கே, அது மாதிரித்தான் இருப்பாரா உம்மாச்சி?''

நான் பதில் சொல்லவில்லை. அவனை வாரி அணைத்தேன். கண்களில் வழிந்தோடிய நீரில் என் புன்மையைக் கரைத்தேன். உம்மாச்சி இந்தக் குழந்தைகளுக்குத்தான் விளையாட்டுக் காட்டுகிறார்; சிரிக்க வைக்கிறார்.
அவர்கள் மூலம் அந்த உம்மாச்சியை நாம் காண்பது தவிர, நமக்கு வேறு வழி இல்லை; இல்லையா?


===============

தொடர்புள்ள பதிவு:

ஏ.எஸ்.ராகவன்

1 கருத்து:

  1. என் தந்தையின் கதையை இங்கு காணும் பொழுது மகிழ்ச்சியாகவும் அவர் இப்போது இல்லையே என்று ஏக்கமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு