திங்கள், 6 நவம்பர், 2017

895. காந்தி - 12

5 . சபர்மதி ஆசிரமம்

கல்கி





கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்)  நூலில் ஐந்தாம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
கும்பகோணத்தில் மாமாங்கம்(மகாமகம்) என்னும் திருவிழா பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நடைபெறுகிறதல்லவா? அதுபோல வடக்கே இமயமலைச் சாரலில் உள்ள ஹரித்வாரம் என்னும் ஷேத்திரத்தில் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை 'கும்பமேளா' என்னும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.1915ஆம் வருஷத்தில் 'கும்பமேளா' உற்சவம் வந்தது. அந்த உற்சவத்திற்கு லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருவது வழக்கம். அவர்களுக்குச் சேவை செய்வதற்காக இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஒரு சேவைப்படை அனுப்பப்பட்டது. இதையறிந்த மகாத்மா தாமும் போனிக்ஸ் கூட்டத்தாருடன் ஹரித்வார உற்சவத்திற்குப் போக விரும்பினார். உற்சவத்தைப் பார்ப்பதும் யாத்ரீகளுக்குச் சேவை செய்வதும் தவிர, ஹரித்வாரத்துக்குப் பக்கத்தில் ஸ்ரீ முன்ஷிராம் நடத்தி வந்த குருகுலத்தைப் பார்க்கவேண்டும் என்ற நோக்கமும் மகாத்மாவுக்கு இருந்தது.

சுவாமி சிரத்தானந்தர் என்ற புனிதமான பெயரை கேள்விபடாதவர் யார்? கிலாபத் இயக்கம் நடந்த காலத்தில் டில்லியில் உள்ள புகழ் பெற்ற ஜும்மா மசூதிக்குள் சென்று அங்கு கூடியிருந்த திரளான முஸ்லிம்களுக்குப் பிரசங்கம் செய்தவரும் அவர்தான். சில காலத்துக்குப் பிறகு வெறி கொண்ட முஸ்லிம் ஒருவனால் குத்தி கொல்லப்பட்டவரும் அவரே தான். அந்த சுவாமி சிரத்தானந்தர் சந்நியாசியவதற்கு முன்னால் ஸ்ரீ முன்ஷிராம் என்ற பெயர் தாங்கி கொண்டிருந்தார். ஹரித்வாரதுக்குப் பக்கத்தில் காங்ரி என்னுமிடத்தில் ஸ்ரீ முன்ஷிராம் நடத்திவந்த குருகுலம் அந்த காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. 

கும்பமேளா உற்சவத்தில் போனிக்ஸ் ஆசிரமவாசிகள் மிகச் சிறந்த தொண்டு செய்தார்கள். ஆனால் மகாத்மா அந்தத் தொண்டில் அதிகமாக ஈடுபடவில்லை. ஏனெனில் மகாத்மா தென்னாப்ரிக்காவில் நடத்திய போராடத்தின் வரலாறு இதற்குள்ளே பலருக்குத் தெரிந்து போயிருந்தது. எனவே உற்சவத்துக்கு வந்த யாத்ரீகர்கள் பலர் மகாத்மா காந்தியையும் பார்க்க வந்தார்கள். அவர்களுடன் பேசுவதற்கும் மதம், சமூகம், அரசியல் முதலிய விஷயங்களைப் பற்றி விவாதிப்ப தற்குமே நேரம் சரியாயிருந்தது. 

கும்பமேளாவில் காந்திஜி பார்த்த பல காட்சிகள் அவருக்கு வெறுப்பை அளித்தன. 'சாதுக்கள்' என்று சொல்லப்பட்ட சந்நியாசி வே ஷதாரிகளின் நடவடிக்கைகள் காந்திஜிக்குப் பிடிக்கவே இல்லை. மதத்தின் பெயரால் பல ஏமாற்றுகள் நடப்பதையும் காந்திஜி கவனித்தார். உதாரணமாக, ஐந்து கால் உள்ள பசுமாடு ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டிருந்தது. பசுவைப் போற்றுகிற ஹிந்துக்கள் பலர் மேற்படி ஐந்து கால் பசுவைத் தெய்வ அம்சம் உள்ளதாகக் கருதி அதை வழிபட்டு அதன் சொந்தக்காரனுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் போனார்கள். ஐந்து கால் பசு முதலில் காந்திஜிக்கு வியப்பு அளித்தது. பிறகு, விசாரித்து்ப பார்த்ததில், உண்மையில் அந்தப்பபசுவுக்கு ஐந்து கால் இல்லை என்றும், ஒரு கன்றுக் குட்டியின் காலை வெட்டி ஒட்ட வைத்திருக்கிறது என்றும் தெரிந்து கொண்டார்! இந்தக்கொடூரமான செயல் மகாத்மாவின் கருணை நிறைந்த உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது. 

மொத்தம் பதினேழு லட்சம் ஜனங்கள் அந்த வருஷத்துக் கும்பமேளா உற்சவத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களில் மிகப் பெரும்பாலோர் உண்மையான பக்தியுடனே புண்ணியந் தேடிக் கொள்வதற்காகவே வந்திருந்தார்கள் என்பதைக் காந்திஜி அறிந்திருந்தார். ஆனால் சில மோசக்காரர்கள் அக்கிரம தந்திரங்களைக் கையாண்டு பக்தியுள்ள பாமர மக்களை ஏமாற்றி வந்தார்கள். இதற்குப் பிராயச்சித்தமாகத் தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று காந்திஜிக்குத் தோன்றியது. ஒருநாளில் தாம் சாப்பிடும் உணவில் ஐந்து பொருள்களுக்கு மேல் சேர்த்துக்கொள்வதில்லை யென்றும், இருட்டிய பிறகு எதுவும் சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டார். இந்த விரதத்தை மகாத்மா தம் அந்திய நாள் வரையில் நிறைவேற்றினார். 


கும்பமேளா உற்சவம் முடிந்த பிறகு காந்திஜி ஸ்ரீ முன்ஷிராமின் குருகுலத்துக்குச் சென்றார். காந்திஜியின் வரலாற்றைத் தெரிந்து கொண்டிருந்த ஸ்ரீ முன்ஷிராம் அங்கேயே காந்திஜியும் அவருடைய சகாக்களும் தங்கிவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் காந்திஜியின் மனதில் இதற்கு முன்னாலேயே தம்முடைய இலட்சியங்களை நிறைவேற்றுவதற்குரிய தனி ஆசிரமம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமாகி யிருந்தது. அத்தகைய ஆசிரமத்தை ஆமதாபாத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார். ஏனெனில், தாம் பிறந்த நாடாகிய குஜராத்திலே தான் தம்முடைய தொண்டைச் சரிவரச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஆமதாபாத்தோ குஜராத்தின் தலைநகரம். கைத்தறி நெசவுக்குப் பெயர்போன இடம். எனவே, இராட்டைக்கும் கைத்தறிக்கும் புத்துயிர் தரவேண்டும் என்னும் காந்திஜியின் நோக்கம் ஆமதாபாத்தில் நிறைவேறக்கூடும். மேலும் அந்நகரில் வசித்த குஜராத்தி செல்வர்களிடமிருந்து தாம் ஆரம்பிக்கும் ஆசிரமத்துக்குப் பணஉதவி பெறவும் கூடும். ஆரம்ப காலத்தில் எந்த ஆசிரமந்தான் பண உதவி இல்லாமல் நடக்க முடியும்.? 


எனவே, காங்ரி குருகுலத்தைப் பார்த்ததும் மகாத்மா நேரே ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். அங்கே பல நண்பர்கள் காந்திஜிக்கு ஆசிரமம் ஸ்தாபிப்பதில் உதவி செய்வதாகச் சொன்னார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தீண்டாமையைப் பற்றிப் பேச்சு வந்தது. "நான் நடத்தும்ஆசிரமத்தில் தீண்டாமையை அனுசரிப்பது நினைக்கவும் முடியாத காரியம்" என்று காந்திஜி கூறினார். "மற்ற அம்சங்களில் தகுதியுடைய தீண்டா வகுப்பினர் ஒருவர் ஆசிரமத்தில்சேர முன் வந்தால் அவசியம் அவரைச் சேர்த்துக் கொள்வேன்" என்றும் உறுதியாகச் சொன்னார். ஆனால், அந்த நண்பர்கள், "ஆசிரமத்தில் சேரக்கூடிய தகுதியுடைய தீண்டாதவர் எங்கிருந்து வரப்போகிறார்!" என்று சொல்லித் திருப்தி அடைந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவர் அகப்படவே மாட்டார் என்பது அவர்களுடைய நம்பிக்கை. 

ஆமதாபாத்திலேயே ஆசிரமம் ஸ்தாபிப்பது என்று முடிவாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆமதாபாத்துக்குப் பக்கத்தில் கோச்ராப் என்ற கிராமத்தில் ஸ்ரீ ஜீவன்லால் தேசாய் என்னும் பாரிஸ்டருக்கு ஒரு பங்களா இருந்தது. அதை வாடகைக்குக் கொடுக்க மேற்படி பாரிஸ்டர் சம்மதித்தார். அந்தப் பங்களாவிலேதான் முதன் முதலில் ஆசிரமம் ஸ்தாபிக்கப்பட்டது. 

ஆசிரமத்துக்குப் பெயர் என்ன கொடுப்பது என்ற கேள்வி எழுந்தது. "சேவாசிரமம்" "தபோவனம்" என்னும் பெயர்களைச் சில நண்பர்கள் குறிப்பிட்டார்கள். "தபோவனம்" என்பது அதிக டாம்பீகமான பெயர் என்று காந்திஜிக்குத் தோன்றியது. "சேவாசிரமம்" பிடித்திருந்தாலும் பூரணதிருப்தி அளிக்கவில்லை. கடைசியாக இந்தியாவின் விடுதலைக்கு மகாத்மா எந்த வழியைக் கையாண்டு காட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தாரோ, அந்த வழியைக் குறிப்பிடும் பெயராக இருக்க வேண்டும் என்று "சத்தியாக்கிரஹ ஆசிரமம்" என்னும் பெயர் இடப்பட்டது. 

ஆரம்பத்தில் இருபத்தைந்து ஸ்திரீ புருஷர்கள் ஆசிரமத்தில் இருந்தார்கள். இவர்களில் சிலர் போனிக்ஸ் ஆசிரமத்தில் காந்திஜியோடு இருந்தவர்கள். மற்றவர்கள் இந்தியாவில் புதிதாகச் சேர்ந்தவர்கள். அந்த ஆரம்ப ஆசிரமத் தொண்டர்கள் இருபத்தைந்து பேரில் பதின்மூன்றுபேர் தமிழர்கள் என்று காந்தி மகாத்மா தமது சுயசரிதத்தில் எழுதி வைத்திருக்கிறார். தமிழர்களுக்கு இது எவ்வளவு பெருமையான விஷயம் என்று சொல்லவும் வேண்டுமோ? 

ஆசிரமம் ஆரம்பித்துச் சிலமாதங்களுக்குள்ளே நேர்ந்த ஒரு பெருஞ் சோதனையைப் பற்றியும் மகாத்மா எழுதியிருக்கிறார். தகுதியுள்ள தீண்டா வகுப்பினர் எவரும் ஆசிரமத்தில் சேர்வதற்கு வரப்போவதில்லை யென்று ஆமதாபாத் நண்பர்கள் கருதினார்கள் அல்லவா? அவர்களுடைய எண்ணத்துக்கு மாறாக ஒரு காரியம் நிகழ்ந்தது. இந்திய ஊழியர் சங்கத்து அங்கத்தினரில் மகாத்மாவிடம் மிகுந்த அபிமானம் கொண்டவர் ஸ்ரீ அமிருதலால் தக்கர். (இன்றைக்கும் ஹரிஜனத் தொண்டில் மனப்பூர்வமாக ஈடுபட்டுள்ள தக்கர் பாபா அவர்கள் தான்.) அவரிடமிருந்து காந்திஜிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தக்கர் பாபா, "தீண்டா வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் தங்கள் ஆசிரமத்தில் சேர விரும்புகிறார்கள். ஒழுக்கமும் அடக்கமும் படைத்தவர்கள். அவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?" என்று கேட்டிருந்தார். இவ்வளவு சீக்கிரத்தில் இத்தகைய சோதனை ஏற்படும் என்று மகாத்மா எதிர்பார்க்கவில்லை. ஆசிரமத்துக்கு உதவி செய்து வந்த ஆமதாபாத் நண்பர்களுக்கு இது பிடிக்காது என்பது தெரிந்தே இருந்தது. ஆயினும் அதற்காக மகாத்மா தம் வாழ்க்கை தர்மத்தின் அடிப்படையான கொள்கையை மாற்றிக் கொள்வதென்பது நினைக்கக்கூடிய காரியமா? 

கடிதத்தை மற்ற ஆசிரமவாசிகளுக்குக் காந்திஜி படித்துக் காட்டினார். அவர்களும் உற்சாகமாக அதை வரவேற்றார்கள். எனவே தீண்டா வகுப்புக் குடும்பத்தினரை அனுப்பும்படி மகாத்மா கடிதம் எழுதினார். சில நாளில் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். மூன்றே பேர் அடங்கிய குடும்பம். குடும்பத் தலைவரின் பெயர் துதா பாய்; அவர் மனைவியின் பெயர் தனி பென்; அவர்களுடைய புதல்வியின் பெயர் லக்ஷ்மி. அப்போது லக்ஷ்மி தவழும் பிராயத்துக் குழந்தை. துதாபாய் பம்பாயில் ஆரம்பப் பாடசாலையில் உபாத்தியாயராயிருந்தவர். சத்தியாக் கிரஹ ஆசிரமத்தின் விதிகளையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டு அந்த விதிகளின்படி நடப்பதாக ஸ்ரீ துதாபாய் ஒப்புக் கொண்டார். அதன்பேரில் அக்குடும்பத்தார் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு நடந்தவற்றைக் குறித்து மகாத்மா எழுதியுள்ள வரலாறு பின்வருமாறு:- 

"ஆசிரமத்துக்கு உதவி புரிந்து கொண்டிருந்த நண்பர்களிடையே இது பெருங் கிளர்ச்சியை உண்டு பண்ணிற்று. முதலில் கிணறு விஷயமாகக் கஷ்டம் ஏற்பட்டது. கிணற்றைப் பங்களாவின் சொந்தக்காரரும் உபயோகித்து வந்தார். ஏற்றம் இறைத்து வந்த மனிதன் எங்களுடைய தொட்டியிலிருந்து தண்ணீர்த் துளிகள் சிந்துவதால் தனக்குத் தீட்டு ஏற்பட்டு விடுமென்று கூறி ஆட்சேபித்தான். ஆதலின் எங்களைத் திட்டவும், துதாபாயைத் தொந்தரவு செய்யவும் தொடங்கினான். வசவுகளைப் பொறுத்துக் கொண்டு தண்ணீர் இழுத்துவரும்படி நான் அனைவருக்கும் சொன்னேன். நாங்கள் திரும்பத் திட்டாததை அந்த மனிதன் கண்டபோது வெட்கமடைந்து எங்களைத் தொந்தரவு செய்வதை நிறுத்தி விட்டான். 

பண உதவியெல்லாம் நிறுத்தப்பட்டது. ஆசிரம விதிகளை அனுசரிக்கக் கூடிய தீண்டாதார் எங்கே கிடைப்பர் என்று கேள்வி கேட்ட நண்பர், அத்தகைய ஒருவர் வருவார் என எதிர்பார்க்கவேயில்லை. 

சமூக பகிஷ்காரத்தைப் பற்றிய வதந்திகளும் ஏற்பட்டன. இவற்றிற்கெல்லாம் நாங்கள் ஆயத்தமாயிருந்தோம். எங்களைப் பகிஷ்காரம் செய்து சாதாரண வசதிகள் அளிக்கவும் மறுத்த போதிலும் ஆமதாபாத்தை விட்டுப் போகக்கூடாதென்றும், அதைக் காட்டிலும் தீண்டா வகுப்பினர் வசிக்குமிடஞ் சென்று அங்கே உடலுழைப்பினால் கிடைக்கும் பொருளைக் கொண்டு காலட்சேபம் செய்தல் நலமென்று என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். 

நிலைமை கடைசியில் நெருக்கடியாயிற்று. ஒருநாள் மகன்லால் காந்தி வந்து, "கையில் இருந்த பணமெல்லாம் ஆகிவிட்டது. அடுத்த மாதச் செலவுக்குப் பணமே கிடையாது!" என்று தெரிவித்தார். 

"அப்படியானால் நாம் தீண்டா வகுப்பாரின் இருப்பிடம் செல்வோம்" என்று அமைதியாகப் பதிலளித்தேன். இத்தகைய சோதனை எனக்கு நேர்ந்தது இது முதல் முறையன்று. சோதனை நேர்ந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆண்டவன் கடைசி நிமிஷத்தில் எனக்கு உதவி அனுப்பியே வந்தார். ஆசிரமத்தின் பொருளாதார நிலைமையைப் பற்றி மகன்லால் எச்சரிக்கை செய்து அதிக காலம் ஆவதற்குள் ஒரு நாள் காலை ஆசிரமக் குழந்தைகளில் ஒரு குழந்தை ஓடி வந்து, ஸேத் ஒருவர் வாசலில் மோட்டார் வண்டியில் காத்திருப்பதாகவும் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் கூறியது. அவரைப் பார்க்கச் சென்றேன். "ஆசிரமத்துக்குக் கொஞ்சம் பொருளுதவி செய்ய விரும்புகிறேன்; ஏற்றுக்கொள்வீர்களா?" என்று அவர் கேட்டார். 

"நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். தற்போது எங்கள் பணமெல்லாம் செலவழிந்து வெறுங்கையுடன் இருக்கிறோம்" என்றேன். "நாளை இந்த நேரத்திற்கு இங்கே வருகிறேன். தாங்கள் இருப்பீர்களா? என்று அவர் கேட்டார். "ஓ, இருக்கிறேன்" என்றேன். அத்துடன் அவர் புறப்பட்டுச் சென்றார். 

மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்குச் சரியாக வண்டி வாசலில் வந்து நின்றது. குழல் ஊதிற்று. குழந்தைகள் செய்தி கொண்டு வந்தார்கள். ஸேத் உள்ளே வரவில்லை. அவரைப் பார்க்க நான் வெளியே வந்தேன். அவர் என் கையில் 13,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு வண்டியை விட்டுக் கொண்டு சென்றார். 

இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே யில்லை. அதிலும் எவ்வளவு புதிய முறையில் உதவி! அந்தக் கனவான் அதற்கு முன் ஆசிரமத்துக்கு வந்ததேயில்லை. அவரை அதற்கு முன் ஒரே ஒரு முறைதான் பார்த்திருப்பதாக எனக்கு ஞாபகம். அவர் ஒருவித விசாரணையும் செய்யவில்லை. ஆசிரமத்தைப் பார்வையிடவும் இல்லை. வந்து பணங் கொடுத்துவிட்டு உடனே போய் விட்டார்! இந்த உதவியின் காரணமாக, தீண்டாதார் இருப்பிடத்துக்கு நாங்கள் குடிபோக வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. இன்னும் ஓராண்டுக்குப் பணத்தைப் பற்றிய கவலையில்லையென்று தைரியமடைந்தோம். 

துதாபாய் குடும்பத்தைச் சேர்த்துக் கொண்டது ஆசிரமத்துக்கே ஒரு நல்ல படிப்பினையாயிற்று. ஆரம்பத்திலேயே ஆசிரமத்தில் தீண்டாமை பாராட்ட மாட்டோமென்று உலகுக்குப் பகிரங்கமாய் அறிவித்து விட்டோம். ஆசிரமத்துக்குஉதவி செய்ய விரும்பியவர்களை எச்சரித்தவர்களானோம். இத்துறையில் ஆசிரமத்தில் வேலையும் பெரிதும் எளிதாயிற்று. இவையெல்லாம் நன்கு தெரிந்தும், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்த ஆசிரமச் செலவுகளை வைதிக ஹிந்துக்களே பெரும்பாலும் கொடுத்து வந்தார்கள். தீண்டாமையின் அடிப்படை ஆட்டங் கொடுத்துப் போய்விட்டது என்பதற்கு இது அறிகுறியல்லவா?..." 

பின்னரும் சிலகாலம் கோச்ராப்பில் ஆசிரமம் நடந்து வந்தது. பிறருடைய வாடகைக் கட்டடத்தில் நெடுங்காலம் ஆசிரமம் நடத்த முடியாது என்றும் சொந்த இடம் சம்பாதித்து ஆசிரமத்தை நிலைப்படுத்த வேண்டும் என்றும் மகாத்மா கருதினார். இந்தச் சமயத்தில் கோச்ராப் கிராமத்தில் பிளேக் நோய் பரவியது. கிராமத்து ஜனங்களைச் சுகாதார விதிகளை அனுஷ்டிக்கும்படி செய்வதற்கான சக்தியும் செல்வாக்கும் ஆசிரம வாசிகள் அப்போது பெற்றிருக்க வில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீ புஞ்சா பாய் ஹீராசந்து என்னும் வியாபாரி ஆசிரமம் ஸ்தாபிக்கத் தகுந்த நிலம் சம்பாதித்துக் கொடுப்பதற்கு முன் வந்தார். அவரும் காந்திஜியும் ஆமதாபாத்தைச் சுற்றித் தக்க நிலம் தேடி அலைந்தார்கள். ஆமதாபாத்துக்கு நாலு மைல் தூரத்தில் சபர்மதி நதிக்கரையில் அத்தகைய இடத்தைக் கண்டுபிடித்தார்கள். ஒரு வாரத்திற்குள் அந்த நிலம் வாங்கப் பட்டது. நிலத்தில் கட்டடமோ, மரமோ ஒன்றும் இல்லை. ஆயினும் ஆசிரமத்தை உடனே அவ்விடத்துக்கு மாற்றிவிட வேண்டும் என்று மகாத்மா தீர்மானித்தார். ஆசிரமவாசிகள் வசிப்பதற்க்குக் கித்தான் கூடாரங்கள் போடப்பட்டன. அப் போது ஆசிரமவாசிகள் ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளு மாக நாற்பது பேர் இருந்தார்கள். எல்லாரும் கித்தான் கூடாரங்களுக்கு வந்து சேர்ந்தார்கள். 

இவ்விதமாக, மகாத்மாவின் வாழ்க்கைச் சரிதத்தில் மிகப் பிரசித்திபெற்ற சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமம் ஆரம்பமாயிற்று. 

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக