வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

988. சங்கு சுப்பிரமணியம் - 1

"காலணா இதழ்" - சங்கு சுப்பிரமணியம்
சு.இரமேஷ்


[ நன்றி: தளவாய் சுந்தரம் ] 


பிப்ரவரி 15. ‘சங்கு’ சுப்பிரமணியத்தின் நினைவு தினம்.
===

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காந்தியத்தையும், தேசியத்தையும் தமிழ்நாட்டு மக்களிடையே பரப்பி, விடுதலை வேட்கையைத் தூண்டிய இதழ்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று "சுதந்திர சங்கு". தொடங்கப்பட்டபோது வாரம் இருமுறையாக வந்த சுதந்திர சங்கு, மக்களிடம் கிடைத்த பரவலான ஆதரவைக்கொண்டு வாரம் மூன்று முறையாக வலம் வந்தது. ஒரு இதழின் விலை, காலணா. அதனால் இவ்விதழை "காலணா இதழ்" என்று அழைத்தனர். "சுதந்திர சங்கு" என்ற காலணா இதழைத் தொடங்கி மக்களிடம் சுதந்திர தாகத்தைத் தூண்டியவர் சுப்பிரமணியம். இப்பத்திரிகையை நடத்தியதால் இவர் சங்கு சுப்பிரமணியம் என்றே அழைக்கப்பட்டார்.

[ நன்றி:  thamizham.net ] 


1905ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், தேரழுந்தூரில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, வடமொழி எனப் பன்மொழி புலமை மிக்கவராக விளங்கினார். பக்தியும், தேசியமும் இவருக்கு இரு கண்களாக இருந்தன.

1930ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி சுதந்திர சங்கு ஆரம்பிக்கப்பட்டது. எட்டு பக்கங்களைக் கொண்டு, பாரதியாரின் "எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே", என்ற இரண்டு வரிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் சுதந்திர சங்கு. "சங்கு கொண்டே வெற்றியூதுவோமே, இதைத் தரணிக்கெல்லா மெடுத்தோதுவோமே", என்பதுதான் சுதந்திர சங்கின் பெயருக்குக் கீழ் அமைந்த வாசகங்கள்.

அக்காலகட்டத்தில் வேறெந்த இதழும் செய்யாத அளவுக்கு தேசிய உணர்ச்சியை இவ்விதழ் தூண்டியது. அக்காலத்தில் சுதந்திர சங்கின் தலையங்கங்களைப் படிப்பதற்கென தனி வாசகர் வட்டமே இருந்தது. ஆங்கிலேயருக்கெதிரான எழுத்தாயுதமாக, நாட்டுப்பற்றையும் விடுதலை உணர்வையும் மக்களுக்கு எழுத்து வாயிலாக ஊட்டியது. மிகச்சிறந்த தேசபக்தரான சங்கு சுப்பிரமணியம், பாரதியார், வ.வே.சு.ஐயர் ஆகியோரைத் தமது இலட்சிய குருவாகக் கொண்டவர். அவர்களின் தாக்கம் இவரின் எழுத்திலும் வெளிப்பட்டது. தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு இலட்சம் பிரதிகள்வரை சுதந்திர சங்கு விற்பனையாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணமாக இருந்த சங்கு சுப்பிரமணியத்தின் எழுத்தாற்றலும் இவருடைய கட்டுரைகளுக்குத் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளும் சுதந்திர சங்குக்கு ஒரு வசீகரத்தை ஏற்படுத்தின.

சுதந்திர சங்கில் 3.6.1933இல் "அஞ்ஞாதவாசம்" எனும் தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியானது. "அஞ்ஞாதவாசம்" என்றால் தலைமறைவு வாழ்க்கை என்று பொருள். இத்துடன் இதழ் நிறுத்தப்பட்டது. மீண்டும் சிறிது காலத்துக்குப் பிறகு சுதந்திர சங்கு வார இதழாக வெளிவந்தது. 24 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழின் விலை ஓரணா. மணிக்கொடியின் தாக்கத்தால் இம்முறை இதழின் உள்ளடக்கத்தில் நிறைய மாறுதல்களைச் செய்திருந்தார் சங்கு சுப்பிரமணியன். சிறுகதை, கவிதை, இலக்கியக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனாலும் 28 இதழ்களுக்குப் பின்பு 1934இல் மீண்டும் நாட்டு விடுதலைக்குச் சுதந்திர சங்கு பாடுபடும் என்ற அறிவிப்போடு இதழ் நிறுத்தப்பட்டது.

[ நன்றி: thamizham.net ]

இரண்டாவது காலகட்டத்தில் வெளிவந்த சுதந்திர சங்கு இதழில் 65 கதைகள், 150 கட்டுரைகள், 25 கவிதைகள் வெளியாகியுள்ளன. மணிக்கொடி இதழுக்கு இணையாக சுதந்திர சங்கும் சிறுகதை வளர்ச்சிக்கு உதவியது. மணிக்கொடியில் கதை எழுதுவதற்கு முன்பே கு.ப.ரா. சுதந்திர சங்கில் எழுதினார். இவரின் மிகச்சிறந்த கதைகளுள் ஒன்றான "நூர் உன்னிசு" சுதந்திர சங்கில்தான் வெளிவந்தது.

சங்கு சுப்பிரமணியம்தான் சி.சு.செல்லப்பாவை சிறுகதை ஆசிரியராக்கினார். " அன்றைய இளம் படைப்பாளியான நான் அனுப்பிய முதல் சிறுகதையைப் படித்துவிட்டு சங்கு சுப்பிரமணியம் எழுதிய தபால் கார்டு வரிகள் இதோ:-

இளம் தோழ,

தங்கள் கதை கிடைத்தது.

புதிய கை என்று தெரிகிறது. எழுதி எழுதிக் கிழித்து எறியுங்கள். தங்கள் கதையைத் திருத்தி வெளியிடுகிறேன் என்று எழுதியிருந்தார் சங்கு சுப்பிரமணியம்.

அடுத்த என் கதையை அவர் ஒரு எழுத்துகூடத் திருத்தாமல் வெளியிட்டார். நான் சிறுகதாசிரியன் ஆனேன். இப்படி இன்னும் வேறு யாராருக்கு அவர் செய்திருக்கிறாரோ, எனக்குத் தெரியாது. என் அஞ்சலி அவருக்கு என்றைக்கும் (இலக்கியச் சுவை) " என்று சங்கு சுப்பிரமணியம் குறித்த தன் மனப்பதிவை சி.சு.செல்லப்பா வெளிப்படுத்துகிறார்.

வ.ரா., பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, நாமக்கல் கவிஞர் முதலியோர் சுதந்திர சங்கில் தொடர்ந்து எழுதியிருக்கின்றனர். சங்கு சுப்பிரமணியம் பத்திரிகையாசிரியர் மட்டுமன்றி சிறந்த சிறுகதை ஆசிரியரும்கூட. மணிக்கொடி, கலைமகள் போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். மணிக்கொடி கதைப் பதிப்பின் முதல் இதழில் "வேதாளம் சொன்ன கதை" என்ற புராணக் கதையம்சம் கொண்ட சிறுகதையை எழுதினார். அவருடைய "சிரஞ்சீவிக்கதை" என்ற சிறுகதை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சங்கு சுப்பிரமணியம் தன்னை சிறந்த பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்திக் கொண்டாரே தவிர, சிறுகதையாசிரியராக அல்ல.

சுதேசமித்திரன், மணிக்கொடி, ஹனுமான், தினமணி முதலிய இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீராத ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். காந்தியின் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றினார். தீண்டாமையை ஒழிக்க தம்முடைய எழுத்தைப் பயன்படுத்திக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டிய சரஸ்வதி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். காந்தியடிகளின் ஆரோக்கிய வழி, இல்லற மகாரகசியம், ஹரிஜன சேவை ஆகிய மூன்று நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காகவும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காவும் பல முறை சிறையும் சென்றுள்ளார்.

கதர்த் துணிகளைத் தலையில் சுமந்தபடி, மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடியபடி ஊர்ஊராக நடந்து சென்று தேசிய சிந்தனையையும், சுதந்திர உணர்வையும் வளர்த்தவர் சங்கு சுப்பிரமணியம்.

ஜெமினி ஸ்டுடியோவில் சிலகாலம் பணி புரிந்துள்ளார். 1948ஆம் ஆண்டு கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த "சக்ரதாரி" என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியிருக்கிறார். சந்திரலேகா, இராஜி என் கண்மணி போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். ஒரு சில திரைப்பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

"தினமணி"யில் பாகவதக் கதைகள் எழுதினார். இந்தக் காலகட்டத்தில் ஜயதேவரின் "கீதகோவிந்தம்" நூலை தமிழில் மொழிபெயர்த்தார். இன்றும் இம் மொழிபெயர்ப்பு கையெழுத்துப் பிரதியாகவே வலம் வருகிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த இவர், 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி மண்ணுலக வாழ்வை நீத்தார்.

சுதந்திர சங்கு என்ற இதழின் மூலமாக விடுதலை வேட்கையை விதைத்து, பல எழுத்தாளர்களை உருவாக்கி, காந்தியத்தையும் பக்தியையும் தம் எழுத்துகள் வழியாக மக்களிடம் கொண்டு சென்ற சங்கு சுப்பிரமணியத்தின் பங்களிப்பையும், தியாகத்தையும் அடுத்த தலைமுறை முழுமையாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் இருப்பது வேதனை. ஆனால், தமிழ்ப் பத்திரிகை உலகில் சங்கு சுப்பிரமணியத்தின் பங்களிப்பை ஒருநாளும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது!


[ நன்றி:- தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்

சங்கு சுப்பிரமணியம்

3 கருத்துகள்:

  1. எலிமெண்டரி ஸ்கூல் படிக்கிற வயசில் சங்கு சுப்பிரமணியம் அவர்களைப் பார்த்திருக்கிறேன். மதுரையில் அன்னக்குழி மண்டபம் என்கிற பள்ளி. மேலக் கோபுரம் எதிர்த்தாற்போல இருக்கும். அங்கு வந்து பாரதியாரைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவு மூலமாகவே சங்கு சுப்பிரமணியம் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு