ஞாயிறு, 18 மார்ச், 2018

1015. காந்தி - 19

12. ரவுலட் அறிக்கை
கல்கி



கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ (பகுதி 2) நூலின்  12-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக அந்த நாட்களில் பலவித முயற்சிகள் நடைபெற்று வந்தன. மிதவாதிகள் சட்டத்துக்கு உட்பட்ட முறைகளில் கிளர்ச்சி செய்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட சுயாட்சியைப் பெறுவதற்கு முயற்சி செய்தார்கள். தீவிர வாதிகள் பலாபலன்களைக் கவனியாமல் பொது ஜன உணர்ச்சியை எழுப்பிப் பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து விரட்டிவிட எண்ணினார்கள். இந்த இரு வகுப்பாரையும் தவிர, புரட்சி வாதிகள் அல்லது பயங்கர வாதிகள் என்று சொல்லப்பட்ட ஒரு கூட்டத்தார் இருந்தனர். இவர்கள் இரகசிய சதியாலோசனைகளைச் செய்தும் வெடிகுண்டு துப்பாக்கி முதலிய ஆயுதங்களைக் கையாண்டும் பிரிட்டிஷார்- பிரிட்டிஷ் பக்தர்கள் இவர்களைக் கொன்று பயமுறுத்தி இந்தியாவின் விடுதலையைப் பெறுவதற்கு முயன்றார்கள். தீவிரவாதிகள் ஓரளவுக்குப் பயங்கர வாதிகளிடம் அநுதாபம் கொண்டிருந்தார்கள்.

காந்தி மகாத்மா மேற்கூறிய மூன்று கூட்டத்தில் எதையும் சேர்ந்தவரல்ல. ஆனால் ஒவ்வொரு விதத்தில் மூன்று சாராரையும் அவர் தனித்தனியே ஒத்திருந்தார். மிதவாதிகளைப் போல் பிரிட்டிஷாரின் நல்ல எண்ணத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. எந்தக் காரியத்தையும் ஒளிவு மறைவு இன்றிப் பகிரங்கமாகச் செய்ய அவர் விரும்பினார். தீவிர வாதிகளையும் காந்திஜி ஒரு விதத்தில் ஒத்திருந்தார். எப்படியென்றால், பொது ஜனங்களின் உணர்ச்சியை எழுப்பிக் கிளர்ச்சி செய்து அவர்களைக் கொண்டு காரியம் செய்வதில் மகாத்மாவுக்கு நம்பிக்கை இருந்தது. புரட்சி வாதிகளையும் மகாத்மா இன்னொரு விதத்தில் ஒத்திருந்தார். தாம் நல்லதென்று கருதும் கட்சிக்காக உயிரையும் கொடுத்துப் போராடுவதற்கு அவர் சித்தமாயிருந்தார்.

மேலே சொன்ன மூன்று கூட்டத்துக்கும் பொருந்தாத ஒரு பெருங் குணம் மகாத்மாவிடம் இருந்தது. அதுதான் அஹிம்சா தர்மத்தில் அவர் கொண்டிருந்த பரிபூரண நம்பிக்கை. இலட்சியம் எவ்வளவு நல்லதாயிருந்த போதிலும் பலாத்கார முறைகளின் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ள மகாத்மா விரும்பவில்லை. சத்தியம் அஹிம்சை இவற்றின் மூலமாக எவ்வளவு மகத்தான காரியத்தையும் சாதித்துக் கொள்ள முடியும் என்று காந்திஜி பரிபூரணமாக நம்பினார். அந்த நம்பிக்கையைச் சோதனை செய்வதற்கு இப்போது ஓர் அரிய பெரிய சந்தர்ப்பம் கிட்டியது.

இந்தியாவில் புரட்சி இயக்கத்தாரின் நடவடிக்கைகளைப் பற்றி விசாரித்து அந்த இயக்கத்தை அடக்குவதற்குச் சிபார்சுகளைச் செய்வதற்காக இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் சர்க்கார் ஒரு கமிட்டி நியமித்திருந்தார்கள். இந்தக் கமிஷனுடைய தலைவர் நீதிபதி ரவுலட் என்னும் வெள்ளைக்காரர். ஆகையால் இந்தக் கமிட்டிக்கு ரவுலட் கமிட்டி என்றும், இந்தக் கமிட்டியார் வெளியிட்ட அறிக்கைக்கு ரவுலட் அறிக்கை என்றும் பெயர் ஏற்பட்டது.

காந்திஜி மரணத்தின் வாயிலிலிருந்து மீண்டு கொஞ்சங் கொஞ்சமாகக் குணமடைந்து வந்த காலத்தில் ரவுலட் கமிட்டியின் சிபார்சுகள் வெளியாயின. தினப் பத்திரிகைகளில் காந்திஜி ரவுலட் அறிக்கையைப் படித்தார். அதன் சிபார்சுகள் காந்திஜியைத் திடுக்கிடச் செய்தன. ஏனென்றால், அந்தச் சிபார்சுகள் பயங்கர இயக்கத்தை ஒடுக்குவது என்ற பெயரால் இந்தியாவின் சுதந்திரக் கிளர்ச்சியையே அடியோடு நசுக்கிவிடும் தன்மையில் அமைந்திருந்தன. ரவுலட் கமிட்டி சிபார்சுகளின்படி சட்டம் பிறந்துவிட்டால் இந்தியாவில் சர்க்காரை எதிர்த்து எந்தவிதமான கிளர்ச்சியும் செய்யமுடியாமல் போய்விடும் என்று மகாத்மா கண்டார். சர்க்கார் அதிகாரிகள் எந்தத் தனி மனிதனுடைய சுதந்திரத்தையும் பறித்து விடுவதற்கும், வழக்கு - விசாரணை எதுவும் இல்லாமல் ஒருவனைச் சிறையில் தள்ளி விடுவதற்கும் அந்தச் சிபார்சுகள் இடம் கொடுத்தன.

காந்திஜி நோயாகப் படுத்திருந்தபோது தினந்தோறும் ஸ்ரீ வல்லபாய் படேல் வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போவது வழக்கம். ஒரு நாள் ஸ்ரீ வல்லபாய் வந்திருந்தபோது காந்திஜி ரவுலட் கமிட்டி சிபார்சுகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். "இந்தச் சிபார்சுகளின்படி சட்டம் பிறந்து விட்டால் இந்தியாவில் எந்தவிதக் கிளர்ச்சியையும் நடத்த முடியாமல் போய்விடுமே?" என்றார். "உண்மைதான்; ஆனால் அதை எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும்? பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் இஷ்டப்படி சட்டம் செய்யக்கூடியவர்களா யிருக்கிறார்கள். நாம் எப்படித் தடுப்பது?" என்றார் ஸ்ரீ வல்லபாய் படேல்.

"சத்தியாக்கிரஹ முறை இருக்கவே இருக்கிறது. சத்தியாக் கிரஹத்துக்கு ஆள் கூட்டம் அவசியம் இல்லை. உத்தேச சட்டத்தை எதிர்த்து நிற்பதாக ஒரு சிலர் உறுதியுடன் முன் வந்தாலும் போதும். இயக்கத்தைத் தொடங்கி விடலாம். நான் மட்டும் இப்படி நோயுடன் படுத்திராவிட்டால் தன்னந் தனியனாகவே போராட்டத்தைத் தொடங்கிவிடுவேன். என்னைப் பின் பற்றப் பலர் முன் வருவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது" என்றார் காந்திஜி.

அதன்பேரில் ஸ்ரீ வல்லபாய் படேல் காந்திஜியிடம் ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்த நண்பர்கள் சிலரை ரவுலட் கமிட்டி அறிக்கையைப் பற்றி யோசிப்பதற்காக அழைத்தார். இந்தக் கூட்டம் சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தில் நடந்தது. சுமார் இருபது பேர் தான் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களில் ஸ்ரீ வல்லபாய் படேல், ஸ்ரீமதி சரோஜினிதேவி, ஸ்ரீ ஹார்னிமான், ஜனாப் உமார் ஸோபானி, ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீமதி அநுசூயாபென் ஆகியவர்கள் முக்கியமானவர்கள்.

காந்திஜியின் அபிப்பிராயத்தைக் கேட்டபிறகு, ரவுலட் சட்டம் செய்யப்பட்டால் அதை எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்வது என்று இந்தக் கூட்டம் ஏகமனதாகத் தீர்மானம் செய்தது. காந்திஜியின் யோசனைப்படி சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞை தயாரிக்கப்பட்டது. அதில் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் கையொப்பமிட்டார்கள். இந்த விபரங்கள் பம்பாய் தினப்பத்திரிகைகளில் வெளிப்பட்டன. உடனே இன்னும் பலரும் சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞையில் கையொப்பமிடுவதற்கு விருப்பம் தெரிவித்தார்கள்.

அப்போது தேசத்தில் நிலைபெற்றிருந்த காங்கிரஸ், ஹோம் ரூல் லீக் முதலிய ஸ்தாபனங்கள் தம்முடைய சத்தியாக்கிரஹ முறையை ஏற்றுக் கொள்ளும் என்று மகாத்மாவுக்குத் தோன்றவில்லை. ஆகையால் சத்தியாக்கிரஹ சபை என்று ஒரு புதிய ஸ்தாபனம் ஏற்படுத்த முடிவு செய்தார். சத்தியாக்கிரஹ சபையில் பலர் அங்கத்தினர்களானார்கள். இவர்களில் பெரும்பாலோர் பம்பாய்க்காரர்களா யிருந்தபடியினால் சத்தியாக்கிரஹ சபையின் தலைமைக் காரியாலயம் பம்பாயில் ஏற்படுத்தப்பட்டது. சத்தியாக்கிரஹ சபையின் கொள்கைகளை விளக்குவதற்காகப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. பொது மக்களின் உற்சாகம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

ரவுலட் சட்டத்தை எதிர்த்துப் பெரும் போர் நடத்த வேண்டியிருக்கும் என்று காந்திஜிக்குத் தோன்றியது. அதற்கு வேண்டிய உற்சாகம் தேசத்தில் பெருகிக்கொண்டு வந்தது. ஆனால் மகாத்மாவின் உடம்பு சரியாகக் குணமானபாடில்லை. மாதிரான் என்னும் இடத்துக்குப் போனால் விரைவில் குணமாகும் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அங்கே போய் ஒரு வாரம் இருந்ததில் பலவீனம் அதிகமாகி விட்டது. ஆகவே சபர்மதிக்கு மகாத்மா திரும்பி வந்தார்.

இந்த நிலைமையைக் குறித்து ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் யோசித்தார். காந்திஜியின் உடம்பு குணமாக வேண்டியதின் அவசியம் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. அந்தப் பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். டாக்டர் தலால் என்பவரை அழைத்துக்கொண்டு வந்து மகாத்மாவின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். டாக்டர் தலால் காந்திஜியை நன்கு பரிசோதித்து விட்டு "நீடித்த சீதபேதியினால் உங்கள் உடம்பிலுள்ள இரத்தம் பலமிழந்திருக்கிறது. நீங்கள் பால் அருந்தவும் இரும்புச் சத்தை இன்ஜக் ஷன் செய்து கொள்ளவும் சம்மதிக்க வேண்டும். இதற்கு இணங்கினால் முன்போல் உடம்பில் பலம் வந்து விடும். இல்லாவிடில் நான் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.

காந்திஜி, "இன்ஜக்ஷன் செய்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆயினும் தாங்கள் சொல்வதற்காக இணங்குகிறேன். ஆனால் பால் சாப்பிடுவதில்லையென்று நான் பிரதிக்ஞை செய்திருக்கிறேன். அந்தப் பிரதிக்ஞையை எப்படிக் கைவிட முடியும்?" என்றார். "அது என்ன? பால் சாப்பிடுவதில்லை என்று எதற்காகப் பிரதிக்ஞை செய்தீர்கள்?" என்று டாக்டர் கேட்டார்.

"கல்கத்தா முதலிய நகரங்களில் பசுமாடுகளையும் எருமை மாடுகளையும் இடையர்கள் அதிகப் பால் கறப்பதற்காகச் செய்யும் கொடுமைகளைப் பற்றி அறிந்தேன் அதனால் பால் சாப்பிடுவதையே வெறுத்துப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டேன். மேலும், பால் மனிதனுடைய இயற்கை உணவு அல்லவென்றும் கருதுகிறேன்" என்று மகாத்மா கூறினார்.

இந்தச் சம்பாஷணையைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீமதி கஸ்தூரிபாய், "பசும்பால், எருமைப்பாலை நினைத்துக் கொண்டுதானே விரதம் எடுத்துக் கொண்டீர்கள்? வெள்ளாட்டுப் பால் சாப்பிடுவதற்கு என்ன ஆட்சேபணை? என்றார். டாக்டரும் உடனே இதைப் பிடித்துக் கொண்டார். "ஆமாம்; வெள்ளாட்டுப் பால் நீங்கள் அருந்தினாலும் போதும். அதுதான் உங்கள் பிரதிக்ஞையில் சேரவில்லையே? வெள்ளாட்டுப் பால் சாப்பிடவும் நீங்கள் மறுத்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு உடம்பு குணமாகாது!" என்றார்.

அப்போது காந்திஜியின் உள்ளத்தில் ஒரு போராட்டம் எழுந்தது. அந்தப் போராட்டத்தைப் பற்றியும் அதன்முடிவைப் பற்றியும் மகாத்மா காந்தி எழுதியிருப்பதைக் கேளுங்கள்:-

"என் உறுதி குலைந்தது. சத்தியாக்கிரஹப் போர் நடத்த வேண்டுமென்னும் தீவிரமான அவாவினால் உயிர் வாழும் ஆசையும் எனக்கு உண்டாகி விட்டது. எனவே, விரதத்தின் கருத்தைக் கைவிட்டு அதன் எழுத்தைக் கடைப்பிடிப்பதுடன் திருப்தியடைந்தேன். நான் விரதமெடுத்துக் கொண்டபோது பசுவின் பாலும், எருமைப் பாலுமே என் மனதில் இருந்தனவாயினும், இயல்பாக அதனுள் எல்லா மிருகங்களின் பாலுமே அடங்கியதாகும். மற்றும், பால் மனிதனுடைய இயற்கை உணவு அல்ல என்பது என் கொள்கை. ஆகையால் நான் எந்தப் பாலையும் அருந்துவது முறையாகாது. இவையெல்லாம் தெரிந்திருந்தும் வெள்ளாட்டுப் பால் அருந்தச் சம்மதித்தேன். உயிர் வாழும் ஆசை சத்தியப் பற்றினும் வலிமை மிக்கதாகி விட்டது. எனவே சத்திய உபாசகனான நான், சத்தியாக் கிரஹப் போர் துவக்கும் ஆவல் காரணமாக, எனது புனித இலட்சியத்தைச் சிறிது விட்டுக் கொடுக்கலானேன். இதன் ஞாபகம் இன்றளவும் என் இதயத்தை ஓயாது வருத்திக் கொண்டிருக்கிறது. வெள்ளாட்டுப் பாலை விடுவதெப்படி என்று இடைவிடாமல் சிந்தித்து வருகிறேன். ஆனால், ஆசைகளுக்குள் மிக நுண்ணியதாகிய தொண்டு புரியும் ஆசை இன்னும் என்னைப் பற்றி நிற்கிறது. அதனின்றும் இன்னும் நான் விடுதலை பெறக் கூடவில்லை".
-----------------------------------------------------------

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக