புதன், 21 மார்ச், 2018

1017. தினமணிக் கவிதைகள் -3

புதுமைப் பொங்கல் (11)  முதல்  ஏழ்மையின் எதிர்பார்ப்பு   (15 ) வரை

பசுபதி

11. புதுமைப் பொங்கல்

தொன்மைத் திருநாள் பொங்கலின்முன்
 . . தொல்லை களைதல் முறையன்றோ?
இன்னல் கக்கும் வன்முறையை
. . எரித்து மகிழ்வோம் போகியன்று;
இன்பத் தையை வரவேற்போம்
. . எல்லோன் அறத்தைக் கும்பிட்டே!
பொன்னார் வையம் சமைத்திடுவோம்!
. . புதுமைப் பொங்கல் படைத்திடுவோம் !

பதக்கு வாய்மை அரிசியுடன்
. . பண்பாம் அன்புப் பால்சேர்த்து
மதநல் லிணக்கச் சீனியுடன்
. . வாழ்க்கைப் பானை தனிலிடுவோம்!
முதியோர் நூல்கள் பருப்புடனே
. . மொழியில் ஆர்வத் திராட்சையிட்டுப்
புதுமைப் பொங்கல் படைத்திடுவோம் !
. . பொருந்தாப் பழமை தவிர்த்திடுவோம்!


18-01-2016 

12. தொலைந்து போன கடிதம்

பாரதி அகத்தியருக்கு எழுதிய மடல்:

இலக்க ணத்தின் தந்தையே! - முன்பு
. . இலங்கை ஆண்ட மன்னனை
இசையில் வென்ற முனிவரே! - இதோ
. . இங்கென் ஓலை காண்கவே!

சேமம் கேட்டு வணங்குகிறேன்ஓர்
. . சிறிய உதவி வேண்டுகிறேன் 
நாமம் எனக்குச் சுப்பய்யா இங்கு
. . நானோர் எளிய மாணாக்கன்

சங்கத் தமிழைப் போற்றுகின்றார்  -- இங்கே
. . சாமி நாத அய்யரென்பார்
பொங்கும் ஆசை ஒன்றுளது ! – பல
. . புதிய நூல்கள்  கற்றிடவே!   

தொல்காப் பியமெனும் சொல்லார் நிதியும்
தெட்பம் கொண்ட எட்டுத் தொகையும்
வித்தகம் உடைய பத்துப் பாட்டும்
கீழ்க்க ணக்குச்சொல் வாழ்க்கை நீதியும்
இலக்கியக் கடலென என்முன் விரியுதே!
எஞ்சிய வாழ்வினில் எப்படிப் பருகுவேன்?

கடல்நீர் முழுதும் கையிலே ஏந்திக்
குடித்து முடித்த கும்ப முனியே!என்
முன்விரி நூற்கடல் மொண்டு குடித்திடும்
வித்தை ஒன்றை விரைவில் சொல்லுக!
உம்மையே நம்பினேன், உதவி புரிவீரே!


25-01-16 

13. எந்தேசம் என்சுவாசம்

நேசர் போல்நு ழைந்து நாட்டில்
. . நின்று போன ஆட்சியைப்
பூச லின்றி அன்பு வழியில்
. . போக வைத்த புண்ணியர்;
தேச மென்சு வாச மென்று
. . சேவை செய்த தியாகிநற்
சீலர் காந்தி அண்ணல் முன்பென்
. . சென்னி என்றும் தாழுமே       (1)

இந்தி யாவின் விடுத லைக்கு,
. . இம்மை வாழ்வை ஈந்தவர்;
எந்த சமய மென்றில் லாமல்
. . இறையின் உண்மை ஏற்றவர்;
சிந்தை முழுதும் வாய்மை என்ற
. . செஞ்சொல் தீபம் கொண்டவர்;
சீலர் காந்தி அண்ணல் முன்பென்
. . சென்னி என்றும் தாழுமே       (2)

எள்ளி நின்ற ஆங்கி லேயர்
. . இதயம் நிற்க வைத்தவர்;
வெள்ளை யான புன்சி ரிப்பு
. . மிளிரும் வதன சந்திரர்;
தெள்ளு தமிழின் வள்ளு வத்தின்
. . தெட்பம் நன்க றிந்தவர் ;
சீலர் காந்தி அண்ணல் முன்பென்
. . சென்னி என்றும் தாழுமே        (3)

01-02-16

14. காதல் எனும் ஒருவழிப் பாதை

காதலர் நாளும்பி றந்ததடி -- நம்
. . கண்ணியம் பண்பாடி றந்ததடி!
மேதினி போகுமிப் பாதைதனை, -- பார்த்து
. . வெட்கியே வானம் சிவக்குமடி! (1)

ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு,  --அது
. . அன்றாட வாழ்விலோர் அங்கமடி!
வேண்டாப் பொருள்களை அங்காடிகள் -- சேர்ந்து
. . விற்கவே செய்திடும் சூழ்ச்சியடி!  (2)

நேர்மை இலாதது காதலன்று -- வெறும்
. . நேரம் கழிப்பது காதலன்று !
ஈர்க்கும் உடையும், உடற்பசியும் -- பருவ
. . ஏக்க விளைவுகள் காதலன்று !     (3)

கொச்சைப் படுத்துதல் காதலன்று -- பூங்காக்
. . கொட்டம் அடிப்பது  காதலன்று !
இச்சை உணர்வைப் புனிதஞ்செய்து -- பின்
. . ஈருயிர்ச் சங்கமம் காதலடி !      (4)

காதல் ஒருவழிப் பாதையடிஅதில்
. . கடுகும் சுயநலம் இல்லையடி !
கோதில்லா அன்பதன் ரூபமடிஅதைக்
. . கொடுப்பதே உண்மையில் காதலடி!  (5)

15-02-16

15. ஏழ்மையின் எதிர்பார்ப்பு

என்னை நம்பி வந்த மனைவி
. . ஏக்கத் துடனே பார்க்கிறாள்
சின்னஞ் சிறிய பெண்ணும் பசியில் 
. . தேம்பித் தேம்பி அழுகிறாள்        (1)

மேட்டுக் குடியின் சொகுசு வாழ்வின்
. . மேலே ஆசை எனக்கிலை
வீட்டுப் பசியை விரைவில் போக்கும்
. . வேலை கிட்டின் போதுமே!          (2)

உண்ண உணவும் இருக்க இடமும்
. . உடுக்க உடையும் வேணுமே
பண்ணும் வேலை நேர்மை யான
. . பாதை போக வேணுமே              (3)


பள்ளிக் கூடம் பெண்ணை அனுப்பப்
. . பணத்தைச் சேர்க்க முடியணும்
மெள்ள என்றன் மனைவி யார்க்கும்
. . வேலை ஒன்று கிட்டணும்!            (4) 



22-02-16 

தொடர்புள்ள பதிவுகள் :


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக