புதன், 4 ஏப்ரல், 2018

1024. சங்கீத சங்கதிகள் - 150

சேமிக்க வேண்டும் ஐயா..!
ஜே.எஸ்.ராகவன்

சங்கீதம் தொடர்புள்ள நகைச்சுவைக் கதைகள் தமிழில் மிகக் குறைவு.  இதோ அவற்றுள் ஒன்று.
=====

பாட்டு வாத்தியார் பட்டு, காபிக்கு அப்புறம் வெத்தலை சீவல் போட்டுக்கலாம் என்ற முக்கிய முடிவு எடுத்தார்.

காபி கொண்டுவந்த பார்வதி மாமி, ‘‘சாமளா இதோ அஞ்சு நிமிஷத்திலே வந்துடுவா. தலையைப் பின்னிண்டு இருக்கா’’ என்றாள்.

‘‘மொள்ள வரட்டும். எப்படி இருக்கேள் மாமி?’’

‘‘அமோகமா இருக்கேன். அப்புறம்... உங்களை ஒண்ணு கேக்கணுமே!’’

‘‘சாமளா எப்படிப் பாடறான்னுதானே? ஜோராப் பாடறாளே! உங்க காதிலேதான் விழுந்துண்டு இருக்குமே!’’

‘‘அதில்லை. உங்களை வேற ஒண்ணு கேக்கணும். சாமளா ஸ்கூல்லே அவளுக்கு ஒரு வேலை குடுத்திருக்கா. சிறு சேமிப்பு பத்தி இவ ஒரு பாட்டுப் பாடணுமாம். நீங்கதான் ஒண்ணு எழுதி, மெட்டமைச்சுக் குடுக்கணும். அவ அப்பாக்கு பாட்டெல்லாம் எழுத வராது. ஆபீஸ் கணக்கைத்தான் லெட்ஜர்ல எழுதுவார். எனக்குக் கறிவேப்பிலை கொத்தமல்லி கணக்குகூட சரியா எழுத வராது!’’'

‘‘மாமி, நான் பாட்டு வாத்தியார். பெரியவா எழுதி மெட்டமைச்ச பாட்டுக்களைப் பாடுவேன். அவ்வளவுதான்! ஏதோ பகவான் படி அளந்துண்டு இருக்கார்.’’

‘‘அப்படிச் சொல்லிடக்கூடாது. சாமளா சரின்னு அவ டீச்சர்கிட்டே சொல்லிட்டாளாம். ஒரு வாரம்தான் டயமிருக்கு!’’

‘‘நான் என்ன சொல்றதுன்னு புரியலே...’’

‘‘நீங்க புதுசா எழுத வேண்டாம். ஏற்கெனவே யாராவது பாடின பாட்டு ஒண்ணை எடுத்து, வார்த்தைகளைக் கூரைக்கு ஓடு மாத்தற மாதிரி மாத்திக் கொடுத்தாகூடப் போதும்!’’

சூடான காபியை ஒரு வாய் தொண்டைக்கு இதமாக முழுங்கியதும் சுறுசுறுப்பு பிறந்தது பட்டுவுக்கு. பளிச்சென்று பல்லவியைப் பிடித்த வாக்கேயக்காரர் மாதிரி அவருடைய முகம் பிரகாசித்தது.

‘‘சேவிக்க வேண்டும் ஐயா... அதையே, ‘சேமிக்க வேண்டும் ஐயா...’னு மாத்தறேன். இது எப்படி இருக்கு?’’

‘‘சூப்பர்’’ என்றாள் பார்வதி மாமி.

அடுத்த மாதம், முதல் வாரம் வீட்டில் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் பட்டு.

‘‘டியூஷனுக்குக் கிளம்பலியா?’’ என்றாள் மனைவி.

‘‘சியாமளா வீட்டுக்குத்தானே? அந்த டியூஷன் நின்னாச்சு!’’

‘‘ஏன்... என்ன ஆச்சு? ஏதோ பாட்டுகூட எழுதிக் குடுத்து அந்தப் பொண்ணு ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கித்துன்னு சொன்னீங்களே?’’

‘‘அதனாலே வந்த வினைதாண்டி! சும்மா இல்லாத தவளை கொர கொரன்னு கத்தி பாம்பு வாயிலே ஆப்புட்டுக்குமாம். அந்த மாதிரி... அந்தப் பொண்ணோட அம்மா கேட்டுண்டா ளேன்னு உசுரைக் குடுத்து வார்த்தைகளைத் தேடித் தேடிப் போட்டு சேமிப்போட அவசியத்தைப் பத்தின அந்தப் பாட்டை எழுதினேன்...’’

‘‘அதனாலே என்ன?’’

‘‘என்னவா..? அந்தப் பொண்ணு திருப்பித் திருப்பி ‘சேமிக்க வேணும் ஐயா’ன்னு பாடினதைக் கேட்ட அவளோட அப்பா பொண்ணோட கல்யாணத்துக்கு சேமிக்கணும்னு நெனைச்சு, முதல் ஸ்டெப்பா மாசம் 700 ரூபா சேமிக்கலாமேனு என்னோட டியூஷனை நிறுத்திட்டார்!’’

[ நன்றி: விகடன் ]

 தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

7 கருத்துகள்:

  1. கதை/கட்டுரைகளை
    சேமிக்க வேண்டும் என்று உற்சாகத்துடன் செயல்படும் நீங்கள் ஒரு சங்கீத உ.வே.சா
    -ஜே.எஸ்.ராகவன்

    பதிலளிநீக்கு
  2. நீண்ட கால இடைவெளிக்குப் பின் கல்கி ஸ்டைலில் ஒரு சங்கீத நகைச்சுவைக் கதை படிக்க முடிந்தது. அருமை

    பதிலளிநீக்கு
  3. A real story
    Ariyakkudi was waiting for a train back to Madras in the waiting room at Tiruchi. The Secretary of the local Sabha who was with him asked Ariyakkudi whether
    " Edavadu pazham kizham kondu varava"

    Ariyakkudi replied " Naan than oru pazaham kizham irukkene ! Edavadhu Pudhu kizham irunda vara chollungo pesindu irukkalam "

    பதிலளிநீக்கு
  4. சுப்புடு எழுதினவை கிடைக்குமா சார்??!!

    பதிலளிநீக்கு
  5. @ basu சுப்புடு நூல்கள் உள்ளன. என் ‘ சுப்புடு’ பதிவுகளைப் படிக்கவும்.

    பதிலளிநீக்கு