ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

1034. காந்தி - 22

16. பஞ்சாப் படுகொலை
கல்கி 


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’( பகுதி 2)  என்ற நூலில் வந்த  16-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தேசீய வாரம் என்பதாக இந்தியா தேசமெங்கும் கொண்டாடுகிறோம். இதற்குக் காரணம் 1919-ஆம் வருஷத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் இந்த நாட்டில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள் தான்.

அந்த வாரத்தில் காந்தி மகாத்மா இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு புதிய வழியைக் காட்டினார். இந்திய மக்கள் நீண்ட கால உறக்கத்திலிருந்து விழித்து எழுந்தனர். ஆத்ம சக்தியாகிய ஆயுதத்தின் பெருமையை உணர்ந்தனர்.

அதே வாரத்திலேதான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் அசுரத்தன்மை அதன் உச்ச நிலைமையை அடைந்தது. ஜாலியன்வாலாபாக் படுகொலையும் மற்றும் பஞ்சாபில் ஆரம்பமான இராணுவச் சட்டக் கொடுமைகளும் பிரிட்டிஷ் அதிகார வர்க்க ஆட்சிக்கு என்றும் மாறாத அபகீர்த்தியை உண்டு பண்ணின.

அந்தக் கொடுமைகளிலிருந்தே இந்தியாவின் விடுதலை இயக்கம் முன்னெப்போதுமில்லாத பலம்பெற்று வளர்ந்தது. அதற்குப்பிறகு பலவருஷகாலம் தேசபக்தர்கள் பதினாயிரக் கணக்கான பொதுக்கூட்டங்களில் "பஞ்சாப் படுகொலை" யைப்பற்றி ஆவேசமாகப் பேசினார்கள். மக்கள் கொதித்து எழுந்து "பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்தே தீருவோம்" என்று உறுதி கொண்டார்கள்.

காந்தி மகாத்மா அடுத்த ஆண்டில் தொடங்கிய ஒத்துழையாமை என்னும் மாபெரும் இயக்கம் பஞ்சாப் கொடுமைக்குப் பரிகாரம் கோருவதை முக்கிய காரணமாகக்கொண்டு எழுந்தது. அந்த இயக்கம் நாடெங்கும் பரவி நாளுக்கு நாள் வலுப்பெற்று வளர்ந்து 1921-ஆம் வருஷக் கடைசியில் வைஸ்ராய் லார்ட் ரெடிங், "நான் செய்வதறியாமல் திகைக்கிறேன்; திணறுகிறேன்" என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும்படி செய்தது. இவ்வளவு முக்கியமான விளைவுகளுக்கெல்லாம் மூல காரணமாயிருந்த பஞ்சாப் நிகழ்ச்சிகளைப்பற்றி இந்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம்.

பாஞ்சாலதேசம் சீக்கியர்களுடைய தாயகம். பொதுவாக வீரத்துக்குப் பெயர் போனது. 1914 முதல் 1918 வரையில் நடந்த முதலாவது உலக மகா யுத்தத்தில் பஞ்சாப்பியர் அடங்கிய பட்டாளங்கள் பல பிரிட்டனுக்கு உதவியாகச் சென்றிருந்தன. பிரிட்டிஷ் கட்சியின் வெற்றிக்குப் பஞ்சாப் பட்டாளங்கள் செய்த உதவியை ஆங்கில இராஜ தந்திரிகள் பெரிதும் பாராட்டினார்கள். அந்தக் காலத்தில் பிரிட்டிஷார் இந்தியாவில் உள்ள மக்களை இரண்டு விதமாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். போர்க்குணம் படைத்த சாதியார் என்றும் போர்க்குணம் இல்லாத சாதியார் என்றும் பிரித்தார்கள். பஞ்சாப்பிலுள்ளவர்கள் போர்க்குணம் படைத்தவர்கள். ஆகையால் இந்திய சைன்யத்துக்குப் பஞ்சாப்பியிலிருந்து அதிகமாக ஆள் திரட்டுவது வழக்கம். இதே காரணத்தினால் பஞ்சாப் மாகாணத்தைத் தேசீயக் காற்றுப் படாமல் காப்பாற்றுவதில் பிரிட்டிஷ் அதிகாரவர்க்கம் அதிகமான கவலை கொண்டிருந்தது.*

_______ * இம்மாதிரி இந்தியர்களைப் போர்க்குணம் உள்ளவர்கள், போர்க்குண மில்லாதவர்கள் என்று பிரிப்பது எவ்வளவு பிசகானது என்பது இரண்டாவது உலக மகா யத்தத்தின் போது நன்கு வெளியாயிற்று. உலகத்துப் போர்முனைகளிலும் சமீபத்தில் காஷ்மீரிலும் சென்னை வீரர்களின் போர்த் திறமை சுடர் விட்டுப் பிரகாசித்தது.

அப்போது பஞ்சாப் மாகாணம் ஸர் மைக்கேலே ஓட்வியர் என்னும் லெப்டினெண்ட் கவர்னரின் ஆட்சியில் இருந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் பொறுக்கி எடுத்த 'இரும்பு மனிதர்'களுக்குள்ளே ஸர் மைக்கேலே ஓட்வியர் ஒருவர்.'இந்திய சுதந்திரம்' என்ற பேச்சுக் காதில் விழுந்தால் அவருடைய கண்கள் சிவக்கும். 'வந்தேமாதரம்' என்ற மந்திரம் காதில் விழுந்தால் அவருடைய இரத்தம் கொதிக்கத் தொடங்கும். அந்தக் காலத்து இந்திய தேசீயத் தலைவர்களுடைய பெயர்களைக் கேட்டால் அவருடைய நரம்புகள் புடைத்துக் கொள்ளும். இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டும் என்று சொல்லும் தேசீயத் தலைவர்களையெல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பரம விரோதிகள் என்று அவர் கருதினார். பொதுவாக இந்திய அரசியல் வாதிகளையே அவருக்குப் பிடிப்பதில்லை. மிதவாதிகள், அமிதவாதிகள், காங்கிரஸ் வாதிகள், வெடிகுண்டு வாதிகள் -யாராயிருந்தாலும் இவருக்கு ஒன்றுதான்.

இத்தகைய அபூர்வ மனிதரின் ஆட்சியில் அப்போது பஞ்சாப் மாகாணம் இருந்தது. இவருக்குக் கீழே இருந்த பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினரும் அதே மனோபாவம் கொண்டவர்களாயிருந்தார்கள்.

அந்த 1919-ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் அமிருதஸரஸில் காங்கிரஸ் மகாசபையை நடத்துவது என்று தீர்மானமாகி யிருந்தது. இந்தச் செய்தி ஸர் மைக்கேல் ஓட்வியரின் ஆங்காரம் சுடர் விடுவதற்குக் காரணமாயிற்று.

இத்தகைய நிலைமையிலேதான் பஞ்சாப்பில் பல நகரங்களில் மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி யன்றும் ஏப்ரல் 6-ஆம் தேதி யன்றும் மகாத்மாவின் கோரிக்கைப்படி ஹர்த்தால்கள் நடந்தன. இந்த ஹர்த்தால்களின்போது பொது ஜனங்களுக்கும் சர்க்கார் அதிகாரிகளுக்கும் தகராறுகள் ஏற்பட்டு விட்டன. போலீஸார் கலையச் சொன்னதும் ஜனங்கள் கலையவில்லை. சில இடங்களில் கல்லெறிதல்கள் நடந்தன; பதிலுக்குத் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடந்தன. ஆயினும் ஜனங்களுடைய வேகமும் உற்சாகமும் குன்றவில்லை. அதிகமாகி வருவதாகக் காணப் பட்டது. இதையெல்லாம் ஸர் மைக்கேல் ஓட்வியர் பார்த்தார். நிமிஷத்துக்கு நிமிஷம் அவருடைய ஆத்திரம் பொங்கிற்று. "பஞ்சாப்பில் பிரிட்டிஷ் அதிகாரத்தை மக்கள் அலட்சியம் செய்வதா? அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா?" என்று அவருடைய உள்ளம் கொதித்தது. "இந்த ஜனங்களுக்குச் சரியான பாடங் கற்பிக்காவிட்டால் நான் ஸர் மைக்கேல் ஓட்வியர் அல்ல; இந்தப் பொதுஜன உத்வேகத்தை அடக்கா விட்டால் நான் இரும்பு வர்க்கத்தைச் சேர்ந்த லெப்டினெண்ட் கவர்னர் அல்ல" என்று உறுதி கொண்டார்.


உடனே தம் கீழிருந்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கெல்லாம் "உங்களுடைய கைவரிசையைக் காட்டுங்கள்!" என்று உத்தரவு அனுப்பி வைத்தார்.

அதே சமயத்தில்தான் அமிருதஸரஸிலிருந்து மகாத்மா காந்திக்கு அழைப்புப் போயிருந்தது. காந்திஜியும் வருவதாகச் செய்தி அனுப்பியிருந்தார். இதையறிந்த ஸர் மைக்கேல் ஓட்வியர் "காந்திஜி பஞ்சாப்புக்குள் நுழையக்கூடாது" என்று உத்தரவு போட்டார். அந்த உத்தரவை ரயிலிலேயே காந்திஜியிடம் சேர்ப்பித்து அவரை வழிமறித்துத் திருப்பி அழைத்துச் செல்ல போலீஸ் உத்தியோகஸ்தரையும் அனுப்பினார்.

ரயில் வண்டியிலேயே காந்திஜிக்குத் தடை உத்தரவைக் கொடுத்து அவரை டில்லி ரயிலிலிருந்து இறங்கிப் பம்பாய் ரயிலில் ஏற்றித் திருப்பி அழைத்துக் கொண்டு போனார்கள் அல்லவா?

அதே தினத்தில் அதாவது ஏப்ரல் 10-ஆம் தேதி அமிருதஸரஸில் ஒரு முக்கியமான சம்பவம் நேர்ந்தது. அமிருதஸரஸில் அப்போது ஜனத் தலைவர்களாயிருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் டாக்டர் சத்தியபால் என்னும் பிரபல வைத்தியர். இன்னொருவர் டாக்டர் ஸைபுடீன் கிச்லூ என்னும் பிரபல பாரிஸ்டர். இந்த இரு தலைவர்களும் அச்சமயத்தில் அமிருதஸரஸின் 'முடிசூடா மன்னர்' களாக விளங்கினார்கள். ஏப்ரல் 10-ஆம் தேதி காலையில் மேற்கூறிய இரு தலைவர்களையும் அமிருதஸரஸ் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் தம்முடைய வீட்டுக்கு வந்து போகும்படி சொல்லி அனுப்பினார். நகரத்தில் அமைதி காப்பதன் சம்பந்தமாகக் கலந்து ஆலோசிக்க அழைப்பதாக அவர்கள் நினைத்து உடனே புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் வந்ததும் ஜில்லா மாஜிஸ்ட்ரேர் "உங்களைக் கைது செய்திருக்கிறேன்!" என்றார். மூடிய போலீஸ் வண்டிக்குள் அவர்களை ஏற்றி யாருக்கும் தெரியாத இடத்துக்கு அனுப்பி விட்டார்.

ஜில்லா மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்குச் சென்ற தலைவர்கள் திரும்பி வரவில்லை என்ற செய்தி அமிருதஸரஸ் நகரத்தில் அதிவிரைவாகப் பரவிவிட்டது. ஜனங்கள் சிறு சிறு கூட்டமாகச் சேர்ந்து கடைசியில் ஒரு பெருங்கூட்டமானார்கள். "எங்கள் தலைவர்களை என்ன செய்தீர்கள்?" என்று கேட்பதற்காக ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டின் வீடு நோக்கிச் சென்றார்கள். ஜனங்கள் வசித்த அமிருதஸரஸ் நகரத்துக்கும் உத்தியோகஸ்தர்கள் வசித்த 'ஸிவில் லைன்ஸ்' என்னும் பகுதிக்கும் நடுவில் ரயில்பாதை கேட் ஒன்று இருந்தது. அங்கே இராணுவப்படை வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். ஜனங்களை மேலே போகக்கூடாது என்று அவர்கள் தடுத்தார்கள். உடனே கற்கள் பல வந்து விழத்தொடங்கின. பொது ஜனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இம்மாதிரி 'லடாய்' ஏற்படும் போதெல்லாம் கூட்டத்தில் உள்ளவர்களில் சில உற்சாகிகள் கல்லெறிவதைக் கையாளுவது அந்தநாளில் சாதாரணமாயிருந்தது. ஜனங்களிடம் வேறு ஆயுதம் கிடையாது. காந்தி மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தைப் பற்றியும் இன்னும் ஜனங்கள் சரியாக அறிந்து கொள்ள வில்லை. ஆகவே யாரேனும் சிலர் கல்லெறிய ஆரம்பித்து விடுவது வழக்கம். அவ்வளவுதான்; வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு அவல் கிடைத்தாற்போல் ஆகிவிடும். போலீஸாரும் இராணுடத்தாரும் கல்லுக்குப் பதில் ஜனங்கள்மீது குண்டு எறிய ஆரம்பித்து விடுவார்கள்.

அநேக இடங்களில் நடந்த துப்பாக்கிப் பிரயோகங்களுக்குக் 'கல்லெறி' ஒரு வியாஜமாகவே இருக்கும் 'கல்லெறிதல்' சில இடங்களில் பொய்யாகக் கற்பிக்கப்படுவதும் உண்டு. அதிகாரிகளே ஜனக் கூட்டத்தில் சில கையாள்களை நியமித்துக் கல்லெறியச் செய்வதும் உண்டு. துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஏதேனும் காரணம் வேண்டும் அல்லவா?

அமிருதஸரஸ் ஜனங்கள்மீது ரயில்வே கேட்டில் நின்ற பட்டாளத்தார் சுட்டதில் இரண்டு பேர் செத்து விழுந்தார்கள். செத்தவர்களின் உடல்களைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெருங்கூட்டம் நகரத்தை நோக்கித் திரும்பியது. திரும்பிப் போகும்போது வெறி கொண்ட மக்கள் பல அட்டூழியங்களைப் புரிந்தார்கள். ஒரு பாங்கியையும் ரயில்வே கூட்ஸ் கொட்டகையையும் இன்னும் சில சர்க்கார் காரியாலயங்களையும் கொளுத்தினார்கள். அந்த கலாட்டாவில் ஐந்து ஐரோப்பியர்கள் கொல்லப் பட்டார்கள்.

அன்றைய சாயங்காலமே அமிருதஸரஸ் நகரத்தின் நிர்வாகத்தை ஸிவில் உத்தியோகஸ்தர்கள் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஒரு பிரதேசத்தில் கலகமும் குழப்பமும் அதிகமானால் அந்தப் பிரதேசத்தில் ஸிவில் சட்டங்களையும் சாதாரண ஆட்சி முறையையும் நிறுத்தி வைத்து இராணுவச் சட்ட ஆட்சியை அமுலுக்குக் கொண்டுவருவது வழக்கம். இராணுவச் சட்டம் அமுலில் இருக்கும்போது சாதாரண கோர்ட்டுகளுக்கு அதிகாரம் ஒன்றும் கிடையாது. இராணுவ அதிகாரிகள் இட்டதுதான் சட்டம். இராணுவ அதிகாரிகளின் உத்தரவை மீறினால் உடனே கடுந் தண்டனை. சாதாரண சட்டம் அமுலில் இருக்கையில் ஒருவன் குற்றம் செய்தால் அவனைக் கைது செய்வது, ரிமாண்டில் வைப்பது, ஜாமீனில் விடுவது, வக்கீல் வைத்து கேஸ் நடத்துவது, விசாரணை, தீர்ப்பு, அப்பீல், இப்படியெல்லாம் நியாயம் பெறுவதற்குப் பலமுறைகள் உண்டல்லவா? இராணுவச் சட்ட அமுலின் கீழ் இதெல்லாம் ஒன்றுமில்லை. இராணுவ உத்தரவை மீறுவோர் உடனே தண்டனைக்குள்ளாவார்கள். உத்தரவை மீறும்போதே சுட்டுக் கொல்லப்படலாம். அதில் தவறினால் இராணுவக் கோர்ட்டு களில் உடனுக்குடன் 'விசாரணை' நடக்கும். கசையடி, தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்பீல் கிடையாது.

ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி அமிருதஸரஸ் ஸிவில் அதிகாரிகள் நிலைமையைத் தங்களால் இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி இராணுவச் சட்ட அமுலைக் கோரினார்கள். இராணுவச் சட்ட அமுலுக்கு இந்திய சர்க்காரின் அநுமதி தேவையா யிருந்தது. இந்த அநுமதி ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதிதான் வந்தது. ஆனால் இந்திய சர்க்காரின் அநுமதி வரும் என்று எதிர்பார்த்து ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதியே அமிருத ஸரஸை இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டு விட்டார்கள். இந்தக் காரியத்துக்கு பஞ்சாப் லெப்டினெண்ட் கவர்னர் ஸர் மைக்கேல் ஓட்வியரின் ஆதரவு பரிபூரணமாக இருந்தது. அதிகாரிகளுக்கு வேறு என்ன கவலை?

ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி தமிழ்நாட்டில் புது வருஷப் பிறப்பு தினம் வருவது வழக்கம் அல்லவா? வட இந்தியாவில் பல மாகாணங்களில் ஏப்ரல் 13-ஆம் தேதி ஹிந்துக்களுக்கு வருஷப் பிறப்பு தினம். அமிருதஸரஸில் அன்றைக்கு ஒரு பெரிய பொதுக் கூட்டம் கூடும் என்று காலையில் விளம்பரம் செய்யப்பட்டது. கூட்டம் நடக்கும் இடம் ஜாலியன் வாலாபாக் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் ஜாலியன் வாலாபாக் என்றும் அழியாத பெருமை பெற்றதாகும். ஆகையால் அந்தப் பெயரை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

'பாக்' (Bagh) என்னும் ஹிந்தி வார்த்தைக்குத் 'தோட்டம்' என்று பொருள். ஆனால் ஜாலியன் வாலாபாக்கில் அப்போது தோட்டமே இல்லை; மரமே கிடையாது. அது வெறும் வெட்ட வெளியான மைதானமாயிருந்தது. அதைச் சுற்றிலும் மூன்று பக்கங்களில் உயரமான மச்சு வீடுகள் இருந்தன. அந்த மச்சு வீடுகளின் பின்புறத்து நெடுஞ் சுவர்கள் மைதானத்தைச் சுற்றிக் கோட்டைச் சுவர்களைப்போல் நின்றன. ஒரே ஒரு பக்கத்தில் மாத்திரம், ஒரு ஆள் உயரமான மதில் சுவர் இருந்தது.

மைதானத்துக்குள் ஜனங்கள் வருவதற்கும் திரும்பிப் போவதற்கும் வழி ஒன்றே ஒன்றுதான். அந்த ஒரு வழியும் மிகக் குறுகலானது. ஒரே சமயத்தில் ஏழெட்டுப் பேருக்கு மேல் அதன் வழியாக மைதானத்துக்கு உள்ளே வரவோ வெளியே போகவோ முடியாது.

இப்படிப்பட்ட ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அன்று பிற்பகலிலிருந்தே ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். வயதானவர்கள், வாலிபர்கள், ஸ்திரீகள், குழந்தைகள் எல்லோருமாகப் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது. டாக்டர் சத்தியபாலும் டாக்டர் கிச்சுலுவும் என்ன ஆனார்கள் என்று ஜனங்களுக்கு இன்னமும் தெரியவில்லை. காந்திஜியை டில்லிக்கு அப்பால் பால்வால் ஸ்டே ஷனில் இறக்கிக் கைது செய்துகொண்டு போய்விட்டார்கள் என்ற செய்தி வந்திருந்தது. டில்லியில் சுவாமி சிரத்தானந்தர் தலைமை வகித்து நடத்திச் சென்ற ஊர்வலத்தின் பேரில் போலீஸார் 'துப்பாக்கிப் பிரயோகம் செய்வோம்' என்று சொன்னபோது சுவாமி சிரத்தானந்தர் தமது மார்பை மூடியிருந்த சட்டையை எடுத்து விட்டுச் "சுடுங்கள்!" என்று சொன்ன செய்தியும் வந்திருந்தது. 10-ஆம் தேதியிலிருந்து அமிருதஸரஸில் நடந்துவந்த இராணுவ அதிகார அமுல் மக்களின் உள்ளத்தில் கொதிப்பை உண்டு பண்ணியிருந்தது. ஆகவே ஜாலியன் வாலாபாக்கில் இருபதினாயிரம் ஜனங்களுக்கு மேல் கூடிவிட்டார்கள். அங்கே கூட்டம் போடுவது சட்ட விரோதம் என்றோ, அதிகாரிகள் கூட்டத்தைத் தடுக்கிறார்கள் என்றோ, அந்த ஜனங்கள் அறிந்திருக்கவில்லை.

கூட்டம் அமைதியாகவே ஆரம்பமாயிற்று. சிறிது நேரம் நடந்தது. ஹன்ஸ்ராஜ் என்னும் தொண்டர் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று படைகள் வரும் சத்தம் கேட்டது. நூறு இந்தியவீரர்களும் ஐம்பது ஐரோப்பிய சோல்ஜர்களும் அடங்கிய படை மைதானத்துக்குள் பிரவேசித்தது. இந்தப் படைக்கு ஜெனரல் டையர் என்பவர் தலைமை வகித்தார். இவர் கவசம் பூண்ட இயந்திர பீரங்கி ஒன்றும் கொண்டு வந்திருந்தார். ஆனால் குறுகிய நுழை வாசல் வழியாக அதை மைதானத்துக்குள்ளே கொண்டுவர முடியவில்லை. ஆகையால் கவச பீரங்கியை வெளியிலே நிறுத்தி விட்டுத் தம்முடன் வந்த வீரர்களுடன் ஜெனரல் டையர் மைதானத்துக்குள் பிரவேசித்தார். அவர் பிரவேசித்த இடத்துக்குப் பக்கத்திலேயே கொஞ்சம் உயரமான மேடை ஒன்று இருந்தது. அந்த மேடையில் வீரர்களை நிறுத்தினார். இந்திய வீரர்களை முன்னாலும் ஐரோப்பிய வீரர்களைப் பின்னாலும் நிறுத்தினார். "உடனே கலைந்து போங்கள்" என்று ஜனங்களைப் பார்த்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு போட்டு இரண்டே இரண்டு நிமிஷம் பொறுத்துவிட்டுச் "சுடுங்கள்" என்று வீரர்களுக்கு உத்தரவிட்டார்!

இருபதினாயிரம் பேர் அடங்கிய அந்தப் பெருங்கூட்டத்தில் சோல்ஜர்கள் வந்திருக்கிற விஷயம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்தது. ஜெனரல் டையரின் உத்தரவு யாருக்குமே காதில் விழவில்லை. ஆனால் துப்பாக்கிகள் வெடி தீர்க்கும் சத்தம் ஏக காலத்தில் இருபதினாயிரம் பேரின் காதிலும் விழுந்தது. உடனே ஜனங்கள் எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் எங்கே ஓடுவது? மைதானத்துக்குள் வரும் குறுகிய பாதை வழியாக அவ்வளவு பேரும் ஓடமுடியாது. குறைந்தது அதற்கு இரண்டு மணி நேரம் வேண்டும். சுற்றிலும் மூன்று பக்கம் நெடுஞ்சுவர்கள் நின்றன. ஒரு பக்கத்தில் மட்டும் தாழ்ந்த மதில் சுவர் நின்றது. அதை நோக்கி ஜனங்கள் ஓடி மதில் மேல் ஏறிக் குதிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குட்டையான மதில் சுவரை நோக்கியே துப்பாக்கிக் குண்டுகளும் அதிகமாக வந்தன. ஏறிக் குதிக்க முயன்றவர்களில் பலர் குண்டு பட்டுச் செத்து விழுந்தார்கள்! அந்த மதில் சுவர் ஓரமாகப் பிணங்கள் குவிந்தன!!

ஜெனரல் டையரின் வீரர்கள் அரை மணி நேரம் சுட்டார்கள். மொத்தம் 1600 குண்டுகள் சுட்டார்கள். கொண்டு வந்திருந்த தோட்டாக்கள் எல்லாம் தீர்ந்து போன பிறகுதான் சுடுவதை நிறுத்தினார்கள்!

"ஜனங்களைக் கலைப்பதற்காக மட்டும் நான் சுடவில்லை. ஜனங்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காகச் சுட்டேன்! எத்தனை பேரைக்கொல்லலாமோ அவ்வளவு பேரையும் கொல்லுவதற்குச் சுட்டேன்! அப்போதுதான் மறுபடியும் ஜனங்கள் என்னுடைய உத்தரவை மீறத் துணிய மாட்டார்கள் என்பதற்காகவே அம்மாதிரி செய்தேன்! இன்னும் அதிக தோட்டாக்கள் கைவசம் இருந்திருந்தால் இன்னும் அதிக நேரம் சுட்டிருப்பேன்!" என்று ஜெனரல் டையர் சொன்னார்.

ஜெனரல் டையர் அன்று சுட்டதில் மொத்தம் 400 பேர் உயிரை இழந்தார்கள். ஆயிரம் பேருக்கு மேல் காயம் பட்டு விழுந்தார்கள். தோட்டாக்கள் தீர்ந்தவுடனே ஜெனரல் டையர் தம் வீரர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார்.

செத்தவர்களின் உடல்கள் இரவெல்லாம் அந்த மைதானத்திலேயே கிடந்தன. காயம்பட்டு விழுந்தவர்கள் இரவெல்லாம் அங்கேயே முனகிக்கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் கிடந்தார்கள். அவர்களில் பலர் "தாகம்!தாகம்!" என்று தவித்தார்கள். ஒரு வாய் தண்ணீர் கொடுப்பதற்கும் அங்கே யாரும் இல்லை. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் கதிகலங்கிப்போய் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டார்கள். இந்தமாதிரி ராட்சதச் செயல் நடக்கக்கூடும் என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

காயம்பட்டவர்களுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதற்கோ அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கோ சிகிச்சை செய்வதற்கோ ஜெனரல் டையர் எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை.

மறுநாள் காலையில் ஜெனரல் டையருக்கு ஒரு தந்தி வந்தது. "சரியான காரியம் செய்தீர். லெப்டினெண்ட் கவர்னர் உம்முடைய செயலை அங்கீகரிக்கிறார்!" என்று அந்தத் தந்தி கூறியது.

ஜெனரல் டையருடைய பயங்கர லீலைகள் ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் முடியவில்லை. கற்பனைக்கெட்டாத பல கொடுமைகளை அவர் நிகழ்த்தினார். அமிருதஸரஸ் நகரத்துக்குக் குழாயில் ஜலம் வருவதையும் தீபங்களுக்கு மின்சார சக்தி கிடைப்பதையும் நிறுத்திவிட்டார். வீதிகளிலே இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து நடக்கக்கூடாது என்று உத்தரவுபோட்டார். கடைகளைக் கட்டாயமாகத் திறக்கச்செய்து இராணுவ அதிகாரிகள் சொன்ன விலைக்குச் சாமான்களை விற்கும்படி செய்தார். பைசைக்கிள்களையும் வண்டிகளையும் கட்டாயமாகக் கைப்பற்றினார். தெரு முனைகளில் முக்கோணங்களை நாட்டி, இராணுவ உத்தரவுகளை மீறி நடப்பவர்களை யெல்லாம் சவுக்கினால் அடிக்கும்படி செய்தார்.

ஜெனரல் டையருடைய உத்தரவுகளுக்குள்ளே யெல்லாம் மிகப் பயங்கரமானது, 'வயிற்றினால் ஊர்ந்துசெல்லும்' உத்தரவு (Crawling order). மிஸ் ஷெர்வுட் என்னும் ஐரோப்பிய ஸ்திரீ ஒரு சந்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்த போது இராணுவச் சட்டக் கொடுமைகளினால் வெறி கொண்டிருந்த சில மக்கள் அவளைத் தாக்கினார்கள். ஆனால் அதே சந்தில் வசித்த நல்ல மனிதர்கள் ஓடிவந்து அந்த ஐரோப்பிய ஸ்திரீயைக் காப்பாற்றி விட்டார்கள்.

இந்தச் செய்தி ஜெனரல் டையருக்குத் தெரிந்ததும் அவர் உடனே இரணிய கசிபுவாக மாறினார்! அந்தச் சந்தின் முனைக்கு வந்து " இனி இந்தச் சந்துக்குள் போகிறவர்கள் எல்லோரும் வயிறு தரையில் படும்படி ஊர்ந்து போகவேண்டும்" என்று கட்டளையிட்டார். அந்தச் சந்தில் குடியிருந்த ஜனங்கள் அனைவரும் வெளியில் போக வேண்டுமானாலும் மறுபடி திரும்பி வீட்டுக்கு வரவேண்டுமானாலும் வயிற்றினால் ஊர்ந்து செல்ல வேண்டியதாயிற்று!

அமிருதஸரஸில் ஜெனரல் டையர் ஏற்படுத்திய இராணுவக் கோர்ட்டார் இராணுவ உத்தரவை மீறியதற்காக 298 பேரை விசாரணை செய்தார்கள். அவர்களில் 51 பேருக்கு மரண தண்டனையும் 49 பேருக்கு ஆயுள்பரியந்தம் தீவாந்தர தண்டனையும் 79 பேருக்கு 7 வருஷ தண்டனையும் கிடைத்தன!

அமிருதஸரஸில் ராட்சத ஆட்சி நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் பஞ்சாப்பின் இன்னும் பல இடங்களிலும் ஜெனரல் டையரின் அண்ணன்மார்களும் தம்பிமார்களும் அவரவர்களுடைய சக்திக்கு இசைந்தபடி அசுர லீலைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

லாகூர் நகரில் கர்னல் ஜான்ஸன் ஆட்சிபுரிந்தார். இரவு எட்டுமணிக்கு மேலே வெளியே கிளம்புகிறவர்கள் சுடப்படுவார்கள் என்று அவர் உத்தரவு போட்டார். இந்த உத்தரவு அடங்கிய விளம்பரங்கள் வீட்டுச் சுவர்களில் ஒட்டப்பட்டன. அந்த விளம்பரங்கள் கிழிக்கப்படாமல் காப்பாற்றுவது வீட்டுக்காரர் பொறுப்பு. இரவெல்லாம் கண் விழித்துக் காக்கவேண்டும். காக்கத் தவறினால் மரணதண்டனை, அல்லது கசையடி, அல்லது சிறைவாசம்.

லாகூர் கலாசாலைகளில் படித்த மாணாக்கர்கள் அனைவரும் நகருக்கு நாலு மைல் தூரத்திலிருந்த இராணுவத் தலைமைக் காரியாலயத்துக்குத் தினம் நாலு தடவை வந்து ஆஜர் கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். அப்போது கடுங் கோடைக்காலம். லாகூரில் உஷ்ணத்தின் டிக்ரி அப்போது 108. இந்த வெயிலில் மாணாக்கர்கள் தினம் பதினைந்து மைல் நடக்க வேண்டியதாயிற்று. பலர் சாலையிலேயே மூர்ச்சையடைந்து விழுந்தார்கள். கேள்விப்பட்ட கர்னல் ஜான்ஸன், "ரொம்ப நல்லது. விழுந்த மாணாக்கர்கள் விஷமம் செய்யாமல் இருப்பார்கள் அல்லவா?" என்றார்.

ஒரு காலேஜ் வாசல் சுவரில் ஒட்டியிருந்த இந்த உத்தரவு விளம்பரம் கிழிக்கப்பட்டது. இதற்காக அந்தக் கலாசாலை பிரின்ஸ்பால், ஆசிரியர்கள் எல்லாரையும் கைது செய்து வீதி வழியாக நடத்தி அழைத்துச் சென்று கோட்டையில் ஒரு மூலையில் மூன்றுநாள் அடைத்து வைத்திருக்கும்படி உத்தர விட்டார். இவ்வாறே குஜர்ன்வாலாவில் கர்னல் ஒப்ரியனும் ஷேக்புராவில் மிஸ்டர் பாஸ்வொர்த் ஸ்மித்தும் காஸூரில் காப்டன் டவ்டனும் அசுர ஆட்சி நடத்தினார்கள்.

குஜர்ன்வாலாவில் ஆகாய விமானத்திலிருந்து குண்டு போடும் முறையும் கையாளப்பட்டது. லெப்டினண்ட் டாட்கின்ஸ், மேஜர் கார்ப்பி ஆகியவர்கள் ஆகாய விமானத்திலிருந்து கீழே ஜனக் கூட்டத்தைக் கண்டவுடனே வெடி குண்டு எறிந்தார்கள். அல்லது இயந்திர பீரங்கியினால் சுட்டுக் கலைந்தார்கள்.

இம்மாதிரி ஒரு கலியாண ஊர்வலத்தின்மீது ஆகாய விமானத்திலிருந்து குண்டுகள் எறியப்பட்டன.

கர்னல் ஒப்ரியன் என்பவர் ப்ரிட்டிஷ் அதிகாரிகளை இந்தியர்கள் கண்டவுடனே சலாம் போடவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்தியர்கள் வண்டியில் ஏறியிருந்தால் உடனே இறங்கிச் சலாம் போடவேண்டும் என்றும், குடை பிடித்திருந்தால் உடனே குடையை இறக்கி மூடவேண்டும் என்றும் கட்டளையிட்டார். இந்த உத்தரவை மீறியவர்களுக் கெல்லாம் கசையடி கொடுக்கப்பட்டது.

காப்டன் டவ்டன் என்பவர் காஸூர் பட்டணத்தில் ஒரு முக்கியமான நாற்சந்தியில் ஒரு பெரிய தூக்குமேடை கட்டினார். அத்துடன், நூற்றைம்பது பேர் கொள்ளக்கூடிய ஒரு பெரிய இரும்புக் கூண்டு தயாரித்து ரயில்வே ஸ்டே ஷனுக்குப் பக்கத்தில் நாட்டினார். கலகத்தில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகத்துக்கு உள்ளவர்களைக் கொண்டுவந்து அந்தக் கூண்டில் அடைத்து வைத்தார். ரயிலுக்குப் போகிறவர்கள், ரயிலிலிருந்து வருகிறவர்கள் எல்லாரும் கூண்டில் அடைக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொண்டு போகுமாறு ஏற்பாடு செய்தார்!

பஞ்சாப் முழுவதிலும் பொது வாழ்வில் பிரமுகர்களாயிருந்தவர்கள் அனைவரும் இராணுவச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு கடுந்தண்டனைக்கு உள்ளானார்கள். லாகூரில் ஹரிகிருஷ்ணலால் பிரபல காங்கிரஸ் வாதி. பெரிய செல்வந்தர். அவருக்கு 40 லட்ச ரூபாய் சொத்து இருந்தது. அவரைக் கைது செய்து ஆயுள் பரியந்தம் தீவாந்தர தண்டனை விதித்ததுடன் இவருடைய சொத்து முழுவதையும் பறிமுதல் செய்யவும் உத்தரவு போட்டார்கள். லாகூரில் அப்போது பிரபலமாயிருந்த பண்டிதராம் போஜி தத்தர், பண்டித கே. சந்தானம், 'டிரிப்யூன்' பத்திரிகை ஆசிரியர் பாபு காளிநாத் ராய் முதலியவர்களும் அதே கதிக்கு உள்ளாயினர்.

பஞ்சாபில் இவ்விதம் ராட்சத ராணுவ ஆட்சி நீடித்துக் கொண்டே போயிற்று. ஆனால் பஞ்சாப்புக்கு வெளியில் உள்ளவர்களுக்கு அங்கே நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றி ஒன்றுமே அப்போது தெரியவில்லை. ஏனெனில் செய்திகள் எல்லாம் தணிக்கை செய்து அனுப்பப்பட்டன. வெளி மாகாணங்களிலிருந்து பஞ்சாப்புக்குள் வரவோ பஞ்சாப்பிலிருந்து வெளியில் போகவோ யாரும் அனுமதிக்கப் படவில்லை.

பூஜ்யர் ஆண்ட்ரூஸ் பஞ்சாப் சம்பவங்களைப் பற்றி ஓரளவு கேள்விப்பட்டு அங்கே போய் விசாரணை செய்ய விரும்பி மே மாதத்தில் பஞ்சாபுக்குப் போனார். அவரை அமிருதஸரஸில் கைது செய்து ஒரு நாள் ரிமாண்டில் வைத்திருந்து திருப்பி அனுப்பி விட்டார்கள். லாலா ஹரிகிருஷ்ண லாலின் சார்பாக இராணுவக் கோர்ட்டில் வழக்காடுவதற்காக பிரசித்த பாரிஸ்டரான மிஸ்டர் எர்ட்லி நார்ட்டன் பஞ்சாப் சென்றார். அவரும் திருப்பி அனுப்பப் பட்டார்.

ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் ஒரு மாதிரியாகப் பஞ்சாப் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கின. அந்த மாதத்தில் கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடிய போது பிரபல காங்கிரஸ் தலைவர்களிடம் இரகசியமாகப் பஞ்சாப் பயங்கரங்களைப் பற்றி செய்தி சொல்லப்பட்டது. சொன்னவர்கள், "இதெல்லாம் இரகசியமாக இருக்கட்டும். எங்களைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டாம்" என்று வேண்டிக் கொண்டார்கள்.

அப்போது வைஸ்ராய் செம்ஸ்போர்டின் நிர்வாக சபையின் அங்கத்தினரா யிருந்தவர்களில் ஸர் சங்கரன் நாயர் ஒருவர். பஞ்சாப்பில் மேலும் இராணுவச் சட்டம் நீடிப்பதைக் கண்டித்து ஜூலை 19-ஆம் தேதி அவர் ராஜினாமா செய்தார். பஞ்சாப்பை மூடியிருந்த இரும்புத்திரை அகன்று உண்மையான செய்திகள் வர ஆரம்பித்துக் காந்தி மகாத்மாவின் காதிலும் விழுந்தன. பயங்கரக் கொடுமைகளுக்கு உள்ளான பாஞ்சாலத்துக்குப் போகவேண்டும் என்று காந்தி மகானின் உள்ளம் துடி துடித்தது.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக