வெள்ளி, 27 ஏப்ரல், 2018

1043. காந்தி - 24

18. கிலாபத் கிளர்ச்சி
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பகுதி 2) என்ற தொடரில் எழுதிய  18-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
பாரத நாட்டின் சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தி ஆரம்பித்து நடத்திய முதலாவது பேரியக்கத்துக்கு ஒத்துழையாமை இயக்கம் என்று பெயர். இந்த இயக்கத்தின் வித்து 1919-ல் மகாத்மாவின் உள்ளத்தில் விதைக்கப்பட்டது. 1920-இல் அது முளைத்து வளர்ந்தது. அடுத்த 1921-ஆம் ஆண்டில் அந்த இயக்கம் மாபெரும் விருட்சமாகிப் பரவிப் படர்ந்து தழைத்தது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு முக்கிய காரணங்களாக உதவியவை 1. பஞ்சாப் படுகொலை முதலிய கோர நிகழ்ச்சி களும், 2. கிலாபத்துக்கு ஏற்பட்ட ஆபத்துமாகும்.

1919-ஆம் ஆண்டு முதல் 1921-ஆம் ஆண்டு வரையில் பாரத நாட்டின் சரித்திரத்தில் ஒரு மகோன்னதமான காலம். அந்த மூன்று வருஷத்திலும் இந்தியாவில் ஹிந்துக்களும் முஸ்லிம் களும் ஒற்றுமையாகச் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொண்டதுபோல் அதற்கு முன்னால் நடந்ததில்லை; இனிமேல் நடக்குமா என்றும் சொல்ல முடியாது. இத்தகைய ஹிந்து முஸ்லிம் சகோதர பாவத்துக்குக் காரணமாயிருந்தது கிலாபத்துக்கு வந்த ஆபத்துத்தான். கிலாபத்தைப் பற்றியும் அதற்கு வந்த ஆபத்தைப்பற்றியும் இப்போது தெரிந்து கொள்வோம்.

முதலாவது உலக மகாயுத்தத்தில் பிரிட்டனும் ஜெர்மனியும் போராடிக் கொண்டிருந்தபோது துருக்கி தேசம் ஜெர்மன் கட்சியைச் சேர்ந்தது. இதனால் இந்திய முஸ்லிம்கள் ஒரு சங்கடமான நிலைக்கு உள்ளானார்கள்.

துருக்கி சுல்தான் துருக்கி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மட்டுமல்ல; உலக முழுவதிலும் வசித்த முஸ்லிம்களின் மத குரு என்ற பதவியையும் வகித்து வந்தார். இந்தக் குரு பீடத்துக்குக் கிலாபத் என்று பெயர். கிலாபத் பதவியில் இருப்பவர் "கலீபா" என்று அழைக்கப்பட்டார்.

உலக முஸ்லீம்களின் குரு என்ற பதவியைத் துருக்கி சுல்தான் திறம்பட வகிப்பதற்கு அவர் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகார மன்னராகவும் இருக்க வேண்டுமென்றும் அப்போதுதான் குரு பீடத்தை நன்கு வகிக்க முடியும் என்றும் முஸ்லீம்கள் கருதினார்கள். அதோடு முஸ்லீம்களின் புண்ணிய க்ஷேத்திரங்கள் பலவும் அடங்கிய ஜஸ் ரதுல் அரப் என்னும் பிரதேசம் துருக்கி சுல்தான் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். 'ஜஸ் ரதுல் அரப்' பில் மெஸபடோமியா, அரேபியா, ஸிரியா, பாலஸ்தீனம் இவை சேர்ந்தவை.

பிரிட்டனுக்கு எதிர்க்கட்சியில் துருக்கி சேர்ந்த போது இந்திய முஸ்லீம்கள் தங்கள் மதகுருவை எதிர்த்து எப்படித் தாங்கள் யுத்தம் செய்ய முடியும் என்று வேதனைப்பட்டார்கள். யுத்த முடிவில் பிரிட்டன் ஜெயித்தால் 'கலீபா' வின் கதி என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டார்கள். துருக்கி சுல்தானுடைய சாம்ராஜ்யம் பிடுங்கப்பட்டுவிட்டால் அவர் 'கலீபா' பதவியை எப்படி வகிக்க முடியும்? 'ஜஸ் ரதுல் அரப்'பிலுள்ள முஸ்லீம் புண்ணிய க்ஷேத்திரங்களின் நிலைமை என்ன? - இந்த சந்தேகங்களை யெல்லாம் யுத்த ஆரம்பத்தில் வெளிப்படையாக எழுதியதற்காகவே அலி சகோதரர்கள் பல வருஷகாலம் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

யுத்தம் ஒரு நெருக்கடியான நிலைமையை அடைந்திருந்த போது அச்சமயம் பிரிட்டிஷ் பிரதம் மந்திரியாயிருந்த லாயிட் ஜார்ஜ் இந்திய முஸ்லீம்களுக்கு சில வாக்குறுதிகளைக் கூறினார். "துருக்கி சுல்தானுடைய அதிகாரத்துக்காவது, கலீபா பீடத்துக்காவது, எந்தவித பாதகமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என்று சொன்னார். 'சின்ன ஆசியா, திரேஸ் என்னும் பிரசித்தி பெற்ற செழிப்பான பிரதேசங்களையெல்லாம் துருக்கி சாம்ராஜ்யத்திலிருந்து அபகரிக்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது" என்று சொன்னார். இந்த வாக்குறுதி களை நம்பியே இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலோர் யுத்த முயற்சிகளில் ஒத்துழைத்தார்கள்.

ஆனால் முதலாவது உலக யுத்தம் 1918-ஆம் ஆண்டின் இறுதியில் முடிந்ததோ, இல்லையோ லாயிட் ஜார்ஜின் வாக்குறுதிகளைப்பற்றிய பிரஸ்தாபமே இல்லை. அந்த வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிட்டு விடப்படும் என்று தோன்றியது. இந்த விஷயம் 1919-ஆம் வருஷம் முழுவதிலும் இந்திய முஸ்லிம் தலைவர்களின் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தது. சின்ன ஆசியாவில் துருக்கியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ஸிரியா, பாலஸ்தீன் தேசங்களைப் பிரான்ஸும் பிரிட்டனும் கைப்பற்றித் தங்கள் மேலதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டன. திரேஸ் மாகாணம் கிரீஸுக்குக் கொடுக்கப்பட்டது. துருக்கி சுல்தான் ஒரு கைதியைப்போல் நடத்தப்படலானார். வெற்றி பெற்ற நேசக் கட்சியார், நியமித்த கமிஷன் துருக்கியை ஆட்சி செய்யத் தொடங்கியது.

இந்தச் செய்திகள் எல்லாம் வர வர இந்திய முஸ்லிம்களின் கொதிப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. 'கிலாபத்' பீடத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய முஸ்லிம்கள் ஒரு பெரும் போராட்டம் நடத்த விரும்பினார்கள். ஆனால் எந்த விதத்தில் அந்தப் போராட்டத்தை நடத்துவதென்று விளங்கவில்லை. இதைப்பற்றித் தீர்மானிப்பதற்காக அடிக்கடி முஸ்லிம் தலைவர்களின் மகாநாடுகள் நடந்தன. 1919-ஆம் வருஷக் கடைசியில் அலகாபாத்தில் நடந்த முஸ்லிம் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு மகாத்மா காந்தி போயிருந்தார். முஸ்லிம் தலைவர்கள் ஆத்திரமாகவும் ஆவேசமாகவும் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியில் அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டபோது, "பிரிட்டிஷ் சர்க்காருடன் எத்தனையோ விதங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைத்து வருகிறீர்கள். அப்படி ஒத்துழைத்துக்கொண்டே சர்க்காருடன் போர் நடத்துவதைப்பற்றிப் பேசுவது பொருத்தமில்லை. முதலில் பிரிட்டிஷ் சர்க்காரோடு ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டும்" என்றார் காந்திஜி. இப்பேச்சின்போது தான் மகாத்மா 'நான்-கோ-ஆபரே ஷன்' என்ற வார்த்தையை முதன் முதலில் உபயோகித்தார். அங்கே கூடியிருந்த முஸ்லீம்களும் மகாத்மாவின் யோசனையை ஒப்புக்கொண்டு பிரிட்டிஷ் சர்க்காரோடு படிப்படியாக ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டுமென்று தீர்மானித்தார்கள். ஆனால் ஒத்துழையாமை இயக்கம் குறிப்பான திட்டங்களுடன் அப்போது உருவாக வில்லை.

அமிருதஸரஸ் காங்கிரசுக்குப் பிறகு மௌலானா முகம்மது அலியும் இன்னும் சில முஸ்லிம் தலைவர்களும் இங்கிலாந்துக்குத் தூது சென்றார்கள். கிலாபத் சம்பந்தமாகவும் முஸ்லிம் புண்ணிய க்ஷேத்திரங்கள் சம்பந்தமாகவும் லாயிட் ஜார்ஜ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று பிரிட்டிஷ் மந்திரிகளிடம் அவர்கள் மன்றாடினார்கள். அவர்களுயை கோரிக்கை பலிக்கவில்லை. சமாதான ஏற்பாடுகள் இங்கிலாந்தின் கையில் மட்டுமில்லை யென்றும் ஜயித்த கட்சியைச் சேர்ந்த மற்ற தேசங்களின் அபிப்பிராயத்தைப் பொறுத்தே முடிவு செய்யவேண்டுமென்றும் பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் கூறினார்கள். லாயிட் ஜார்ஜின் வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கப் போவதில்லை என்பது ஒருவாறு நன்கு தெரிந்துவிட்டது.

இதையறிந்த இந்தியாவிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் 1920-மார்ச்சு மாதம் 19-ஆம் தேதியைத் துக்க தினமாகப் பாவித்துத் தேசமெங்கும் கூட்டங்கள் நடத்தவேண்டும் என்று தீர்மானித்தார்கள். அந்தத் துக்க தினக் கூட்டங்களில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று இந்திய சர்க்கார் எச்சரிக்கை செய்தார்கள். இப்படி முஸ்லிம்களின் மனது கொதித்துக்கொண்டிருந்த நிலையில் மகாத்மா காந்தி முன் வந்து ஓர் அறிக்கை விடுத்தார். இந்திய முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு இணங்கத் துருக்கி சம்பந்தமான சமாதான உடன்படிக்கை ஏற்படாவிடில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நடத்தத் தாம் சித்தமாயிருப்பதாக அந்த அறிக்கையில் மகாத்மா காந்தி தெரிவித்தார்.

அந்த நிலையில் இந்திய முஸ்லிம்கள் ஒருமுகமாக மகாத்மாவைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள முன்வந்தார்கள். முஸ்லிம்களுக்கு மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மகாத்மாவின் சொல்லுக்கிணங்க அஹிம்சையைக் கைக்கொள்ளவும் இசைந்தார்கள். மசூதிகளில் கூடிய மாபெரும் முஸ்லிம் கூட்டங்களில் 'வந்தே மாதரம்!' 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்ற கோஷங்கள் அந்த நாளில் எழுந்தன. மகாத்மாவிடம் நன்றி தெரிவித்துக்கொள்வதற்காகப் பல கிலாபத் கூட்டங்களில் பசுவதையை முஸ்லிம்கள் நிறுத்திவிடவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேறின!

இதற்கிடையில் பஞ்சாப் கொடுமைகளைப் பற்றி விசார்ப்பதற்குக் காங்கிரஸ் நியமித்திருந்த கமிட்டியின் அறிக்கை மார்ச் 25-ஆம் தேதி வெளியாயிற்று. அதில் ஸர் மைக்கேல் ஓட்வியரின் கொடுங்கோல் ஆட்சியில் பஞ்சாப்பில் நடந்த அக்கிரமங்களைப் பற்றித் திட்டமான சாட்சியங்களுடன் விவரங்கள் வெளியாயின. பஞ்சாப் கொடுமைகளைப் பற்றியெல்லாம் முதன் முதலில் அப்போதுதான் தேச மக்கள் திட்டமான விவரங்களை அறிந்தார்கள். மக்களின் உள்ளம் எப்படிக் கொதித்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

1919-ஆம் வருஷத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் நடந்த சம்பவங்களின் ஞாபகார்த்தமாக இந்த வருஷம் 1920 ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தேசீய வாரம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களில் நாடெங்கும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து ஈடுபட்டார்கள். "வந்தே மாதரம்" "அல்லாஹோ அக்பர்" "மகாத்மா காந்திக்கு ஜே!" என்ற மூன்று கோஷங்களும் சேர்ந்து வானளாவ ஒலித்தன. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்த சகோதரர்கள் என்று எண்ணி அந்தக் காலத்தில் நடந்து கொண்டார்கள்.

அடுத்த மே மாதத்தில் சமாதான உடன்படிக்கை விவரங்கள் வெளியாயின. அந்தச் செய்தியை வெளியிட்ட வைஸ்ராய் லார்ட் செம்ஸ்போர்டு "சமாதான உடன்படிக்கை நிபந்தனைகள் இந்திய முஸ்லிம்களுக்கு மனத்துன்பத்தை உண்டாக்கக்கூடியது இயற்கைதான். ஆயினும் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்!" என்று ஆறுதல் கூறவும் முன்வந்தார். ஆனால் முஸ்லிம்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை.

எரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல, அதே மாதத்தில் இன்னொரு சம்பவமும் கூடச் சேர்ந்தது. பஞ்சாப் கொடுமைகளைப்பற்றி விசாரிப்பதற்கு பிரிட்டிஷ் சர்க்கார் லார்ட் ஹண்டரின் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்திருந்தார்கள் அல்லவா? அந்தக் கமிட்டியின் அறிக்கையும் வெளியாயிற்று. எதிர் பார்த்தது போலவே ஹண்டர் கமிட்டி அறிக்கை பஞ்சாப் கொடுமைகளைப் பற்றிப் பூசி மெழுகிவிட முயற்சி செய்தது.

சில அதிகாரிகள் அவசியத்தைக் காட்டிலும் அதிகாரத்தைக் கொஞ்சம் அதிகமாக உபயோகித்து விட்டார்கள் என்று மட்டும் சொல்லி, வருங்காலத்துக்கு இராணுவச் சட்ட அமுல் நடத்தும் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஹண்டர் கமிட்டி சிபார்சு செய்தது. கொடுமை செய்த அதிகாரிகளில் ஜெனரல் டையர் மட்டும் வேலையிலிருந்து அனுப்பப்பட்டார். ஆனால் அவரைப் பற்றியும் மாண்டேகு "டையர் தாம் கடமை என்று கருதியதையே செய்தார்!" என்று முதுகிலே தட்டிக் கொடுத்தார். பஞ்சாபிலிருந்த ஐரோப்பியர்களோ தங்கத்தினாலே ஒரு பட்டாக் கத்தி செய்து ஜெனரல் டையருக்குப் பரிசு வழங்கினார்கள்.

இந்த நிலைமையில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் உருவாகிக்கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
(1) பிரிட்டிஷ் சர்க்கார் கொடுத்த ராவ் பகதூர், ஸர் முதலிய பட்டங்களை விட்டுவிட வேண்டும்.

(2) சர்க்கார் சட்டப்படி அமைத்துள்ள சட்டசபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும்.

(3) சர்க்கார் பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் படிக்கும் மாணவர்கள் அந்தக் கல்வி ஸ்தாபனங்களை விட்டு வெளியேறவேண்டும்.

(4) சர்க்கார் கோர்ட்டுகளைப் பொதுமக்களும் வக்கீல்களும் பகிஷ்கரித்து விடவேண்டும்.

(5) அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் உத்தியோகங்களை விட்டு வெளியேறவேண்டும்.

(6) பொது ஜனங்கள் சர்க்காருக்கு எந்தவிதமான வரியும் கொடாமல் நிறுத்திவிடவேண்டும்.

மேற்கூறிய திட்டங்களில் முதல் நான்கு படிகளை உடனே அனுசரிக்கவேண்டும். ஐந்தாவது ஆறாவது படிகளைக் கடைசியாக அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்.

மேற்கூறிய எல்லாத் திட்டங்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டியவை சத்தியமும் அஹிம்சையும்.

மே மாதக் கடைசியில் பம்பாயில் கிலாபத் கமிட்டி கூடி மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டது. மே மாதம் 30-ஆம் தேதி காசியில் கூடிய அகில இந்தியக் கமிட்டி கூட்டத்தில் அவ்வளவு ஒரு முகமான அபிப்பிராயம் வெளியாகவில்லை. ஏனெனில், சில காங்கிரஸ் தலைவர்கள் கிலாபத் இயக்கத்தைச் சுயராஜ்ய இயக்கத்தோடு சேர்க்க விரும்பவில்லை. காந்தி மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டத்தில் சில அம்சங்களையும் அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. எனவே, நீண்ட விவாதத்திற்குப் பிறகு, ஒத்துழையாமை இயக்கத்தைப்பற்றி தீர்மானிப்பதற்காக செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் விசே ஷ காங்கிரஸ் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் விசே ஷ காங்கிரஸ் கூடும் வரையில் காத்திருப்பதற்குத் தேச மக்கள் தயாராயில்லை. முக்கியமாக, முஸ்லிம்கள் உடனே இயக்கத்தை ஆரம்பித்துவிட விரும்பினார்கள். இந்த நிலைமையை அறிந்த மகாத்மா அலகாபாத்தில் ஜூன் மாதம் 2-ஆம் தேதி எல்லாக் கட்சித் தலைவர்களும் அடங்கிய மகாநாடு ஒன்றைக் கூட்டினார். இந்த மகாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் ஒப்புக்கொள்ளப்பட்டது

விசே ஷ காங்கிரஸ் கூடும் வரையில் காத்திராமல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று மகாத்மா காந்தியும் அவருடைய ஹிந்து முஸ்லிம் சகாக்களும் தீர்மானித்தார்கள். ஆகஸ்டு 1-ஆம் தேதி இயக்கத்தை ஆரம்பிப்பது என்று நாளும் குறிப்பிட்டார்கள்.
-----------------------------------------------------------


( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி

'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக