ஞாயிறு, 6 மே, 2018

1053. காந்தி - 25

19. சட்டசபை பகிஷ்காரம்
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ (பகுதி -2)  என்ற தொடரில் 48/49-இல் எழுதிய  19-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
பாரத தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு மாபெரும் தலைவர்களைச் சொல்லும்படி கேட்டால், (1) லோகமான்ய திலகர் (2) மகாத்மா காந்தி என்னும் இரு பெயர்களைத்தான் யாரும் சொல்லுவார்கள். 

1920-ஆம் வருஷத்துக்கு முன்னால் லோகமான்ய பால கங்காதர திலகர் இந்தியப் பொது மக்களின் இதய சிம்மாசனத்தில் முடிசூடா மன்னராக வீற்றிருந்தார். இந்திய சுதந்திரப் படையின் பிரதம சேனாதிபதியாகவும் ஸ்ரீ திலகர் விளங்கினார். "சுதந்திரம் நமது பிறப்புரிமை" என்னும் மந்திரத்தை அவர் மக்களுக்கு அளித்தார். பிரிட்டிஷ் சர்க்காரிடம் மக்கள் கொண்டிருந்த அச்சத்தை அவர் போக்கினார். தேச சுதந்திரத்துக்காக எத்தகைய தியாகமும் செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்று தம்முடைய சொந்த வாழ்க்கை உதாரணத்தினால் மக்களுக்குப் போதித்தார். 

காந்தி மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டத்தைப் பழைய தேசீயத் தலைவர்கள் பலர் ஒப்புக்கொள்ளவில்லையென்று சொன்னோம் அல்லவா? அப்படி ஒப்புக் கொள்ளாதவர்களில் திலகரும் ஒருவர். மகாத்மாவுடன் திலகர் மாறுபட்டதற்குச் சில முக்கிய காரணங்கள் இருந்தன. (1) இந்திய முஸ்லிம்களின் கிலாபத் கிளர்ச்சியுடன் சுயராஜ்ய இயக்கத்தைப் பிணைப்பதைத் திலகர் விரும்பவில்லை. (2) அமிருதஸரஸ் காங்கிரஸ் தீர்மானத்தின்படி புதிய சீர்திருத்தச் சட்டசபைகளைக் கைப் பற்றி அவற்றின் மூலம் சுதந்திரத்துக்கு மேலும் போராட வேண்டும் என்று திலகர் கருதினார். சட்டசபைகளைப் பகிஷ்கரிக்கும் யோசனையைத் திலகர் விரும்பவில்லை. (3) சுதந்திரப் போரைத் தனித்த அரசியல் போராகவே நடத்தவேண்டும் என்று திலகர் கருதினார். பிரிட்டிஷ் ஆட்சி தந்திரத்தினாலும் சூழ்ச்சியினாலும் ஸ்தாபிக்கப்பட்டதாகையால் அந்த ஆட்சியை ஒழிப்பதற்கு இராஜ தந்திரத்தையும் அரசியல் சூழ்ச்சியையும் கையாளவேண்டும் என்றும் கருதினார். காந்தி மகாத்மா அரசியல் போரில் அஹிம்சா தர்மத்தையும் சத்தியத்தையும் வற்புறுத்தியதைத் திலகர் விரும்பவில்லை. 

லோகமான்யரும் அவரைப்போல இன்னும் பல பழந்தலைவர்களும் இவ்வாறெல்லாம் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தது இயற்கைதான். கிலாபத் விஷயமாக அவர்கள் கொண்டிருந்த பயம் பின்னால் உண்மையாயிற்று. துருக்கியில் முஸ்தபா கமால் பாட்சா என்பவர் தோன்றி துருக்கி சுல்தான் பதவியையும் கிலாபத் பீடத்தையும் ஒழித்துவிட்டுத் துருக்கியில் குடியரசை ஸ்தாபித்தார். ஆகவே கிலாபத் கிளர்ச்சியின் அடிப் படையே போய்விட்டது. கிலாபத் கிளர்ச்சியில் முன்னணியில் நின்ற முஸ்லிம் தலைவர்கள் உற்சாகத்தை இழந்து தேசீய இயக்கத்திலிருந்து விலகிக்கொண்டார்கள். பலர் காங்கிரஸுக் கும் தேசத்தின் சுதந்திரத்துக்கும் விரோதிகள் ஆனார்கள். "வந்தேமாதரம்" என்று மசூதியில் கோஷம் இட்ட முஸ்லிம் தலைவர்கள் பின்னால் அந்தக் கீதத்தைச் சட்ட சபைகளிலே பாடக்கூடாது என்று ஆட்சேபிக்கவும் தொடங்கினார்கள். 

ஆகவே திலகர் பெருமான் காந்திஜி ஆரம்பித்த இயக்கத்தைப்பற்றித் தயக்கம் காட்டியதற்குக் காரணம் இல்லையென்று சொல்லமுடியாது. 

ஆனாலும் தேசீய இயக்கத்துக்குக் காந்திஜி கொண்டு வந்திருந்த புதிய சக்தியைத் திலகர் சரியாக மதிப்பிட்டார். தேசத்தில் ஏற்பட்டிருந்த உணர்ச்சி வேகத்தையும் அறிந் திருந்தார். ஆகையால் காந்திஜியின் இயக்கத்துக்கு அவர் குறுக்கே நிற்கவோ, எதிர்த்துத் தடை செய்யவோ சிறிதும் விரும்பவில்லை. கல்கத்தா விசே ஷ காங்கிரஸில் என்ன விதமாய்த் தீர்மானம் ஆகிறதோ, அதைத் தம் முழு மனதுடன் ஒப்புக்கொள்வதாக லோகமான்ய திலகர் பகிரங்கமாகத் தெரியப்படுத்தினார். 

ஆனால் அம்மாதிரி காந்தியும் திலகரும் சேர்ந்து போர் நடத்துவதற்குப் பாரத தேசம் கொடுத்துவைக்கவில்லை. கல்கத்தா விசே ஷ காங்கிரஸ் வரையில் திலகர் உயிரோடிருக்க வில்லை. 1920-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் முதல் தேதி காந்திமகான் பம்பாயில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட்டுத் தேசத்தில் சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திட்டம் போட்டிருந்தார் அல்லவா? 

அதற்கு முதல் நாள், ஜூலை மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவில் லோகமான்ய பாலகங்காதர திலகர் இந்தப் பூத உடலை நீத்து அமர வாழ்வு எய்தினார். 

பாரத தேசத்துக்கும் பாரத தேச மக்களுக்கும் இந்தச் சம்பவம் ஒரு சூசகம்போல் அமைந்தது. 

இந்திய சுதந்திரப் போரின் சரித்திரத்திலேயே ஒரு சகாப்தம் முடிந்து மற்றொரு சகாப்தம் ஆரம்பமாகிவிட்டது என்பதற்கு லோகமான்ய திலகருடைய மரணம் அறிகுறியாயிற்று. காந்திமகாத்மா தேசீயப் போருக்குத் தலைமை வகித்து அவருடைய புதிய வழியில் போரை நடத்தும்படி விட்டுவிட்டு லோகமான்ய திலகர் விடை பெற்று வீர சொர்க்கம் சென்றது போலவே யிருந்தது. 

1920-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் முதல் தேதி பம்பாயில் லட்சக்கணக்கான ஜனங்கள் கூடித் திலகருடைய பிரேத ஊர்வலத்துடன் சென்று தகனக்கிரியை நடத்திவிட்டுத் திரும்பினார்கள். அன்று மாலையே காந்திமகான் குறிப்பிட்ட தேதி தவறாமல் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஆரம்பித்து வைத்தார். பட்டதாரிகள் பட்டங்களை விடவேண்டும் என்றும், சட்டசபைகளுக்கு தேசீயவாதிகள் நிற்கக்கூடாதென்றும், வோட்டர்கள் வோட்டுக் கொடுக்கக் கூடாதென்றும், வக்கீல்கள் தங்கள் தொழிலை விடவேண்டும் என்றும், மாணவர்கள் சர்க்கார் கலாசாலைகள் - பள்ளிக்கூடங்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார். 

இந்தத் திட்டத்துக்கிணங்க ஆங்காங்கு சில பிரபல வக்கீல்கள் தங்கள் வக்கீல் தொழிலை விட்டார்கள். குஜராத்தில் ஸ்ரீயுத வல்லபாய் படேலும், பீஹாரில் பாபு ராஜேந்திர பிரஸாத்தும், சென்னையில் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் பெரும் வருமானம் அளித்து வந்த வக்கீல் தொழிலை விட்டொழித்தார்கள். இவர்களைப் பின்பற்றிச் சிற்சில வாலிப வக்கீல்களும் தொழிலை விட்டுத் தேசப்பணியில் இறங்கினார்கள். 

ஆனால் தேசத்தின் பெரும்பாலான தேசீய வாதிகள் கல்கத்தா விசே ஷ காங்கிரஸில் என்ன தீர்மானம் ஆகப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

ஆகஸ்டு மாதத்தில் காந்தி மகானும் அலி சகோதரர்களும் தேசத்தில் சுற்றுப்பிரயாணம் செய்தார்கள். அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் பதினாயிரக் கணக்கில் ஜனங்கள் கூடி ஆர்ப்பரித்தார்கள். தலைவர்களுடைய மனப்போக்கு எப்படி யிருந்தாலும் தேச மக்கள் காந்திஜியின் தலைமையையும் அவருடைய ஒத்துழையாமைத் திட்டத்தையும் வரவேற்கிறார்கள் என்பது நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வந்தது. 

இந்த நிலைமையில் கல்கத்தா விசே ஷ காங்கிரஸ் செப்டம்பர் 4-ஆம் தேதி கூடி 9-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த விசே ஷ காங்கிரஸுக்கு லாலா லஜபதிராய் தலைமை வகித்தார். இந்தியாவுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று பிரிட்டிஷ் சர்க்காரால் உத்திரவிடப் பட்டுப் பல வருஷகாலம் அமெரிக்காவில் வசித்தவர் லஜபதிராய். அந்த வருஷத்திலேதான் மேற்படி தடை உத்தரவு நீங்கி லஜபதிராய் இந்தியாவுக்குத் திரும்பி யிருந்தார். திலகருக்கு அடுத்தபடியாக அவர் தேச மக்களின் இதயத்தில் நீண்ட காலமாக இடம் பெற்றிருந்தார். அப்படிப் பட்டவர் விசே ஷ காங்கிரஸில் தலைமை வகித்துச் செய்த பிரசங்கத்தில் காந்திஜியின் ஒத்துழையாமைத் திட்டத்தை ஆதரிக்கவில்லை. அதற்கு எதிரான காரணங்களை விஸ்தரித்திருந்தார். வரவேற்புக் கமிட்டித் தலைவரான ஸ்ரீ பி. சக்கரவர்த்தியும் அப்படித்தான். 

இன்னும் அந்தக் காங்கிரஸுக்கு வந்திருந்த பிரபல தலைவர்கள் பலர் அத்திட்டத்துக்கு விரோதமாகவே இருந்தார்கள். திலகருடைய சீடர்களான ஸ்ரீ கேல்கர், கபார்தே, அப்யங்கர், ஆனே முதலியோரும், வங்காளத் தலைவர்களான ஸ்ரீ விபின சந்திரபால், ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் ஆகியவர்களும், ஐக்கிய மாகாணத்திலிருந்து வந்திருந்த பண்டித மாளவியா, பண்டித மோதிலால் நேரு ஆகியவர்களும், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார், ஸ்ரீ ஏ. ரங்கசாமி ஐயங்கார், ஸ்ரீ எஸ். சத்தியமூர்த்தி ஆகியவர்களும் மூவகைப் பகிஷ்காரத் திட்டத்தைப் பலமாக எதிர்த்தார்கள். 

சென்னையில் ஸ்ரீ எஸ். சீனிவாசய்யங்கார் அந்த வருஷத்திலே தான் அட்வகேட் ஜெனரல் பதவியை உதறி எறிந்து விட்டு அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். அவருடைய தலைமையில் திருநெல்வேலியில் மாகாண மகாநாடு மிகச் சிறப்பாக அவ்வருஷம் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் 'சட்ட வரம்புக்குப் புறம்பானது' (Unconstitutional) என்ற அபிப்பிராயத்தை ஸ்ரீ எஸ். சீனிவாச அய்யங்கார் தெரிவித்திருந்தார். இத்தகைய எதிர்ப்புகளைப் பார்த்தவர்கள் கல்கத்தா விசேஷ காங்கிரஸ் மகாத்மாவின் திட்டத்தை நிராகரித்து விடும் என்றேகருதினார்கள். 

எதிர்த்தவர்களில் காந்தி மகாத்மாவின் கட்சிக்குத் திரும்பிய முதல் பிரமுகர் பண்டித மோதிலால் நேரு. அப்போதுதான் அவருடைய அருமைப் புதல்வர் பண்டித ஜவாஹர்லால் நேரு தேசீய வாழ்க்கையில் பிரவேசித்திருந்தார். பஞ்சாப் கொடுமைகளைப் பற்றிய விசாரணையில் ஜவாஹர்லால்ஜி உதவி செய்த போது அங்கு நடந்த கொடுமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தார். அவருடைய உள்ளம் ஆத்திரத்தினால் பொங்கிக் கொண்டிருந்தது. காந்திஜியின் தலைமையிலே தான் பாரத நாடு விடுதலை யடையக்கூடும் என்ற நம்பிக்கையும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஜவாஹர்லால்ஜியின் தீவிரமும் நம்பிக்கையும் பண்டித மோதிலால் நேருவின் மனம் மாறுவதற்குக் காரணமாயிருந்தன. 

கலாசாலை பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம் - ஆகிய இரு திட்டங்களையும் 'கொஞ்சம் கொஞ்சமாக' நடத்தவேண்டும் என்ற திருத்தத்தை மகாத்மா ஒப்புக் கொண்டதின் பேரில் பண்டித மோதிலால் ஒத்துழையாமைத் திட்டத்தை ஆதரிக்க முன்வந்தார். 

வோட்டு எடுத்தபோது மகாத்மாவின் திட்டத்துக்குச் சாதகமாக 1856 வோட்டுக்களும் எதிராக 844 வோட்டுக்களும் பதிவாயின. ஆகவே மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டம் நிறை வேறியது. 

இது பழைய காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம் வியப்பையும் திகைப்பையும் அளித்தது. "இவர் யார், இந்த காந்தி? இவ்வளவு சக்தியுடனும் அதிகாரத்துடனும் இவர் பேசுவதின் இரகசியம் என்ன? தீர்க்காலோசனையுடனும் அநுபவ ஞானத்துடனும் நாம் சொல்லும் யோசனையைப் புறக்கணித்து இவருடைய பேச்சை மக்கள் கேட்பதின் காரணம் என்ன? இதே காந்தி அமிருதஸரஸில் 'புதிய சீர்திருத்தங்களை நிராகரிக்கக் கூடாது' என்று சொன்னார். ஜனங்கள் ஒப்புக்கொண்டார்கள். இவரே இப்போது 'புதிய சட்ட சபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும்' என்கிறார். இவ்விதம் இந்தக் காந்தி முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வதைக் கூடக் கவனியாமல் இவரை மக்கள் ஆதரிக்கும் அதிசயந்தான் என்ன?" - இவ்வாறு பழைய தேசத் தலைவர்கள் சிந்தனை செய்தார்கள். 

ஆனால் பொது மக்களுக்கு இத்தகைய சிந்தனை ஒன்றும் இல்லை. "பாரத நாட்டை விடுதலை செய்யவும் பாரத மக்களை மேலே உயர்த்தவும் இதோ ஒரு அவதார புருஷர் தோன்றி விட்டார்" என்று மக்கள் திடமாக நம்பினார்கள். ஆகையால் கல்கத்தா காங்கிரஸ் தீர்மானம் நாடெங்கும் அளவில்லாத உற்சாகத்தை உண்டாக்கியது. 

கல்கத்தா காங்கிரஸில் தீர்மானம் நிறைவேறி விட்டது. ஆனால் அதைக் காரியத்தில் நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு காந்திஜிக்கு ஏற்பட்டது. அது வரையில் தேசீயப் போரின் முன்னணியில் நின்ற காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும் உற்சாகக் குறைவு அடைந்திருந்தார்கள். சட்டசபை பகிஷ்காரத் திட்டம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் காங்கிரல் தீர்மானத்துக்கு விரோதமாகப் போகவும் அவர்கள் விரும்பவில்லை. ஆகையால் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்கப் போவதாக அறிவித்திருந்த தேசீயவாதிகள் பலர் தாங்கள் நிற்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டுச் சும்மா இருந்தார்கள். 

ஆனால் மிதவாதிகள் என்று சொல்லப் பட்டவர்களும் மற்றும் காங்கிரஸுக்கு எப்போதும் எதிராயிருந்தவர்களும் பட்டம் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களும், வகுப்புவாதிகளும் சட்டசபைத் தேரதலுக்கு நின்றார்கள். சென்னை மாகாணத்தில் அப்போதுதான் சர்க்கார் உத்தியோகங்களையும் பதவிகளையும் கைப்பற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டிருந்தது. இந்தக் கட்சியார் சட்டசபைத் தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டார்கள். ஆகவே நாட்டில் ஓரிடத்திலாவது எந்த சட்டசபை ஸ்தானத்துக்கும் அபேட்சகர் முன் வராமற் போகவில்லை. 

இந்த நிலைமை ஒருவாறு எதிர்பார்க்கப்பட்டது தான். அதனாலேயே ஸ்ரீ சி.ஆர். தாஸ் முதலியவர்கள் சட்டசபை பகிஷ்காரத்தை எதிர்த்தார்கள். ஆனால் காந்தி மகாத்மா மேற்படி நிலைமை குறித்துச் சிறிதும் கவலைப்படவில்லை. "காங்கிரஸ் திட்டம் நிறைவேறுவது லட்சக் கணக்கான வோட்டர்களைப் பொறுத்ததே தவிர, ஒரு சில பதவி வேட்டைக் காரர்களைப் பொறுத்ததல்ல" என்று மகாத்மா கருதினார். ஆகையால் நாடெங்கும் பிரசாரம் செய்து புதிய சட்டசபைத் தேர்தல்களில் வோட்டர்கள் வோட்டுக்கொடுக்காமல் செய்து விடவேண்டும் என்று சொன்னார். அதற்கு முயற்சியும் ஆரம்பித்தார். காந்திஜியின் ஆத்மசக்தி முறையில் நம்பிக்கை கொண்டு புதிதாக அரசியல் துறையில் இறங்கியிருந்த அவருடைய சீடர்கள் நாடெங்கும் அந்த முயற்சியை நடத்திவைத்தார்கள். 

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முதல் முதலாக அப்போதுதான் (மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டத்தின்படி) ஏராளமான இந்திய மக்கள் வோட்டுரிமையைப் பெற்றிருந்தனர். பத்து ரூபாய் நிலவரி செலுத்துவோருக்கெல்லாம் மாகாண சட்ட சபைக்கு வோட்டுரிமையும் ஐம்பது ரூபாய்க்கு மேல் நிலவரி செலுத்துவோருகேல்லாம் இந்திய சட்டசபைக்கு வோட்டுரிமையும் கிடைத்திருந்தது. நகரங்களிலும் பட்டணங்களிலும் வீட்டு வரி செலுத்துவோருக் கெல்லாம் வோட்டுரிமை கிடைத்திருந்தது. இதைத் தவிர எழுதப் படிக்கத் தெரிந்த ( அதாவது கையெழுத்துப் போடத்தெரிந்த ) எல்லாருக்கும் வோட்டுரிமை தரப்பட்டிருந்தது. ஆகவே ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான வோட்டர்கள் இருந்தார்கள். நீண்டகால அரசியல் போராட்டத்தின் பயனாக ஜனங்கள் முதன் முதலாக அடைந்திருந்த இந்த வோட்டுரிமையை "உபயோகிக்க வேண்டாம்" என்று இப்போது பிரசாரம் செய்ய வேண்டியதாயிற்று. "போலிங் ஸ்டே ஷனுக்கு போக வேண்டாம்; வோட்டு கொடுக்க வேண்டாம்!" என்று சொல்ல வேண்டியதாயிற்று. இந்த சங்கடமான காரியத்தை இந்திய தேசமெங்கும் காந்தி மகானின் சீடர்கள் மேற்கொண்டு நடத்தினார்கள். 

மகாத்மாவின் போர் முறையில் பிரதிக்ஞை செய்துகொள்வது ஒரு முக்கியமான அம்சம். எந்த நல்ல காரியமானாலும் அதைப்பற்றி வெறுமனே பேசுவதைக் காட்டிலும் பிரதிக்ஞை செய்து கொள்வது அதிக பலன் அளிக்கும் என்று காந்திஜி கருதினார். ' கூட்டத்தில் கோவிந்தா ' என்று பிரதிக்ஞை செய்வதைக் காட்டிலும் காகிதத்தில் எழுதிக் கையெழுத்துப் போடுவதில் இன்னும் அதிக பலந் உண்டு என்று நம்பினார். தென்னாப்ரிக்காவில் பல போராட்டங்களில் பூர்வாங்கமாக மகாத்மா இந்தியர்களிடம் கையெழுத்துக்கள் வங்கியதைப் பார்த்திருக்கிறோமல்லவா? 

அது போலவே இப்பொழுது இந்தியாவிலும் "சட்டசபைத் தேர்தல்களில் வோட்டுப் போடுவதில்லை" என்ற பிரதிக்ஞா பத்திரங்கள் ஏராளமாக அச்சிடப்பட்டன. அவற்றில் வோட்டர்களின் கையெழுத்து வாங்கப்பட்டது. காந்திஜியின் திட்டத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களும் தொண்டர்களும் கிராமம் கிராமமாகப் போய் வோட்டார்கள் யார் என்று கண்டுபிடித்துக் கையெழுத்து வாங்கினார்கள். அந்தச் சமயத்தில் காந்திஜியைப் பற்றியும் அவருடைய வாழ்கை-போர்முறை-ஒத்துழையாமைத் திட்டம் ஆகியவை பற்றியும் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதாயிருந்தது. செப்டம்பர், அக்டோபர் இந்த இரண்டு மாதத்தில் மேற்கூறிய முயற்சி நடைபெற்றது. இந்த இரண்டு மாதத்திலும் இந்தியாவின் கிராமங்களில் தேசீயப் பிரசாரம் நடந்தது போல் அதற்கு முன்னால் எப்போதும் நடந்தது கிடையாது. 

நவம்பர் மாதத்தில் இந்தியா சட்ட சபைகளுக்கும் தேர்தல்கள் நடந்தன. சட்டசபை பகிஷ்காரப் பிரசாரம் வோட்டர்களிடம் மகத்தான பலனை அளித்திருப்பது நன்றாகத் தெரிய வந்தது. ஆயிரமாயிரம் வோட்டுப் பெட்டிகள் காலியாக திரும்பின. இன்னும் பல வோட்டுப் பெட்டிகளில் கால்வாசிகூட நிரம்பவில்லை. 

தேசமெங்கும் கணக்குப் பார்த்தபோது 1௦௦-க்கு 15 வீதம் தான் வோட்டர்கள் வோட்டுக் கொடுத்திருந்தார்கள் என்று தெரிய வந்தது. காந்தி மகாத்மாவின் திட்டம் யாரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மகத்தான வெற்றி அடைந்ததாகவே கருதப்பட்டது. இதை இந்திய சர்க்கார் வெளியிடும் வருஷாந்தர நிர்வாக அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்கள். "காந்திஜியின் ஒத்துழியாமைத் திட்டம் சட்டசபை பகிஷ்காரத்தில் நல்ல செல்வாக்கைப் பெற்றது. காங்கிரஸ் சட்டசபை பகிஷ்காரம் செய்ததின் காரணமாக மிதவாதிகளுக்கு அரசியல் நிர்வாகத்தில் ஈடுபட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது" என்றும் சொல்லியிருந்தார்கள். 

ஆனால் அப்படிச் சட்டசபைக்கு சென்ற மிதவாதிகள் முதலியோர் பொதுஜன ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். 

மகாத்மா காந்திஜி இந்தியப் பொதுமக்களின் இதயத்தில் "காந்தி மகாராஜா" ஆகிவிட்டார் என்று தெரிந்தது. 
------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக