திங்கள், 21 மே, 2018

1069. சங்கீத சங்கதிகள் - 153

தலைமுறைக்கும் போதும்!' 
உ.வே. சாமிநாதையர்


தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு  தனவந்தர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு மிக்க பணமும் பூஸ்திதியும் உண்டு.  பொருளை விருத்தி செய்வதிலும் அதனைக் காப்பாற்றுவதிலும் நல்ல திறமையுள்ளவர்; அவற்றிற்குரிய வழிகளையறிந்து அவ்வாறே பெருமுயற்சியுடன் ஒழுகிவந்தார்.  வயல்களுக்குத் தாமே நேரிற் சென்று
வேலைக்காரர்களிடமிருந்து வேலை வாங்குவார்; தாமும் செய்து காட்டுவார்.

பயிர்த் தொழிலில் மிக்க ஊக்கமும் பயிற்சியும் உடையவர்.  'தொழுதூண்
சுவையின் உழுதூணினிது' என்பதை நன்றாக அறிந்தவர்.  ஆனால், கல்வியில்  அவருக்கு ஒருவிதமான பழக்கமும் இல்லை; மற்ற ஜனங்களோடு அதிகமாக நெருங்கிப் பழகுவதுமில்லை.  யாவருக்கும் இன்பமளித்து மகிழ்விக்கும் சங்கீதத்திலோ சிறிதேனும் அவருக்கு விருப்பமில்லை.  வயல்களில் நிகழும் நிகழ்ச்சிகளும் உண்டாகும் ஓசைகளுமே அவருக்கு எல்லாவித இன்பத்தையும் அளித்தன.

இப்படியிருக்கையில் அந்தக் கனவானுடைய வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ்ந்தது.  உறவினர்களும் பிறரும் அவருக்கு ஊக்கமூட்டி அக்கல்யாணத்தை மிகவும் பிரபலமாக நடத்தவேண்டுமென்று சொன்னார்கள்.  அவர்களுடைய வசமாயிருந்த அவர் அக்கல்யாணத்தில் அவர்கள் விருப்பத்தின்படியே ஒரு சிறந்த சங்கீதக் கச்சேரி நடத்த உடன்பட்டார்.  பெரிய பணக்காரரானமையால் எவரை வேண்டுமானாலும் வரவழைக்கலாமல்லவா?  நண்பர்களுடன் கலந்து யோசித்து அக்காலத்தில் தஞ்சை சமஸ்தானத்தில் பிரபல சங்கீத வித்துவான்களாக இருந்த ஆனை, ஐயா என்பவர்களை வருவித்து அவர்களைக் கொண்டு சங்கீதக் கச்சேரியை நடத்த எண்ணினார்.

ஆனை, ஐயா என்பவர்கள் சகோதரர்கள்; இரட்டைப் பிள்ளைகளென்று
வழங்கப்படுவார்கள்.  வையைச்சேரி என்னும் ஊரில் அவர்கள் பிறந்தவர்கள். ஆனை என்பது ஒருவர் பெயர்; ஐயா என்பது மற்றொருவர் பெயர்.  இருவரும் சங்கீதத்தில் நல்ல பயிற்சியுடையவர்கள்; எக்காலத்திலும் பிரியாது சேர்ந்தே வசிப்பவர்கள்; சங்கீதத்தில் இணையற்ற வித்துவானாக விளங்கிய ஸ்ரீ மகாவைத்தியநாதையரவர்களுடைய தாய்வழியில் முன்னோர்கள்; வடமொழி தென்மொழி தெலுங்கு என்னும் மூன்று மொழிகளிலும் சிறந்த பழக்கமும் அவற்றில் கீர்த்தனம் இயற்றும் வன்மையும் உடையவர்கள்; அவர்கள் ஸ்வரம், பல்லவி
முதலியவற்றை எப்பொழுதும் சேர்ந்தே பாடுவார்கள்; சிவபக்திச் செல்வம்
வாய்ந்தவர்கள்; விபூதி ருத்ராக்ஷங்கள் அணிபவர்கள்; திருவையாற்றிலுள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தனியம்பிகை விஷயமாகவும் ஸ்ரீ பிரணதார்த்திஹரர்
விஷயமாகவும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்கள்.

ஒருசமயம் தஞ்சாவூர் ஸம்ஸ்தானத்திற்கு ஹைதராபாத்திலிருந்து பல விருதுகள் பெற்ற முகம்மதிய சங்கீத விற்பன்னரொருவர் வந்திருந்தார்.  அவர் இந்துஸ்தானி சங்கீதம் பாடி அரசரையும் பிறரையும் மகிழ்வித்தார்.  அரசர் மிக்க மகிழ்ச்சியை அடைந்து, "இந்த இந்துஸ்தானி சங்கீதத்தை யாரேனும் இங்கே கற்றுக்கொண்டு பாடமுடியுமா?" என்று சபையிலுள்ள சங்கீத வித்துவான்களையெல்லாம் கேட்டபோது அங்கு வீற்றிருந்த ஆனை, ஐயா இருவரும், "இரண்டு மாதம் அவகாசம் கொடுத்தால் நாங்கள் முயன்று பார்ப்போம்" என்றார்கள்.  அவ்வாறே இரண்டு மாதம் பயின்று அந்தச் சங்கீதத்தைத் தவறின்றி அரசருக்குப் பாடிக் காட்டினார்கள்.  அதுவரையில் தஞ்சையிலேயே இருந்த முகம்மதிய வித்துவான் கேட்டு வியப்புற்று, "நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தக்க ஆசிரியரிடம் பல வருஷங்கள் பயின்று கற்றுக்கொண்ட இந்த அருமையான வித்தையை இவர்கள் கேள்வியினாலேயே இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டார்களே! இவர்கள் எதையும் எளிதிற் கற்றுக்கொள்வார்களென்று தோற்றுகின்றது!" என்று சொல்லி மிகவும் பாராட்டினரென்று சொல்வார்கள்.

இத்தகைய வித்துவான்கள் மேற்கூறிய கனவான் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் வரவை அறிந்த ஜனங்கள் யாவரும் அவர்களுடைய பாட்டைக் கேட்க மிக்க ஆவல் கொண்டு வந்து கூடினார்கள். வெளியூர்களிலிருந்தும் பலர் வந்தனர்.  அவர்களுடைய பெருமை எங்கும் பரவியிருந்ததால் அவர்கள் பாட்டைக் கேளாவிடினும் அவர்களை நேரே பார்த்துவிட்டாவது போகலாமென்று பலர் வந்திருந்தனர்.  இவ்வளவு கூட்டத்தையும் கண்ட தனவந்தருக்கு உள்ளுக்குள்ளே மிக்க சந்தோஷம் உண்டாயிற்று.  எல்லோரும் தம்மை உத்தேசித்தே வந்துள்ளார்கள் என்பது அவருடைய நினைவு.

முகூர்த்த நாளின் மாலையில் சங்கீதவினிகை நடந்தது.  ஆனை, ஐயாவைச் சுற்றிலும் பிரபலர்களான வித்துவான்கள் பலர் அமர்ந்திருந்தார்கள்.
கூட்டம் அமைதியாகவிருந்து கேட்டு வந்தது.  வீட்டு எஜமான் அப்போதுதான் தமது கௌரவத்தைக் காட்டவேண்டுமென்று சுறுசுறுப்பாகப் பல காரியங்களையும் கவனித்துவந்தார்.  உணவுக்கு வேண்டியவற்றையும் பிற உபசாரங்களுக்கு உரியவற்றையும் செவ்வனே அமைக்குமாறு அங்கங்கே உள்ளவர்களை ஏவிக்கொண்டும்
அடிக்கொருதரம் சங்கீதக்கச்சேரி நடக்குமிடத்திற்கு வந்து கூட்டத்தையும்
பாடுபவர்களையும் சுற்றிப்பார்த்துக் கனைத்துக்கொண்டும் காற்றாடிபோல் சுழன்று வந்தார்.  உண்மையில் சங்கீதம் என்பது இன்னதென்று தெரியாமையால் அவருக்கு அதிலே புத்தி செல்லவில்லை.


ஆனை, ஐயா இருவரும் ஒரு பல்லவி பாட ஆரம்பித்தனர்.  பலபல சங்கதிகளையும் கற்பனை ஸ்வரங்களையும் அமைத்துப் பாடினர்.  அங்கிருந்தவர்கள், 'இதுவரையில் இவ்வாறு கேட்டதே இல்லை' என்று கூறி அதில் ஈடுபட்டனர்.  அதனால் ஊக்கம் மிக்க பாடகர்கள் இருவரும் தங்கள் மனோபாவ விரிவுக்கேற்றபடி பாடிக்கொண்டிருந்தார்கள்.  அங்கிருந்த யாவரும் ஒரே நோக்கமாக ஆனந்தக்கடலில் மூழ்கியிருந்தனர்.

அப்பொழுது ஒரு தூணின் அருகில் நின்றுகொண்டு எஜமான் கவனித்தார்.  அவர் தம் மூக்கின் மேல் விரலை வைப்பதும் அடிக்கடி முகத்தைச் சுளிப்பதும் வாயினால் வெறுப்புக்குரிய ஒலியை உண்டாக்குவதும் அவருக்கு ஏதோ மனத்தில் ஒருவித வருத்தம் இருப்பதை வெளிக்காட்டின.  வரவரக் கண்கள் சிவந்தன.  இரண்டுதடவை தூணில் தட்டினார்.  அவருக்குக் கோபம் வந்த காரணம் ஒருவருக்கும் தெரியவில்லை.  திடீரென்று பலத்த குரலில், "வித்துவான்களே, நிறுத்துங்கள்
உங்கள் சங்கீதத்தை.  இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாதென்று நினைத்துவிட்டீர்களோ!  நானும் ஒரு நாழிகையாக எல்லா வேலையையும் விட்டுவிட்டுக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே! அதற்கென்ன அர்த்தமென்று நான் கேட்கிறேன்" என்று கர்ஜனை செய்தார்.  யாவருக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊசியினால் குத்தினதுபோல் ஓர் உணர்ச்சி பிறந்தது.    "இவர்களைப் பெரிய சங்கீத வித்துவான்களென்று பொறுக்கியெடுத்தார்கள்!  இதற்குத்தான் முதலிலேயே கல்யாணத்துக்குப் பாட்டுக் கச்சேரி வேண்டாமென்று சொன்னேன்.  இருக்கிறவர்களெல்லாம் பிடுங்கி எடுத்துவிட்டார்கள்.  இவர்களுக்குக் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு விவசாயத்தை விருத்தி செய்யலாமே!" என்று மேலும் மேலும் கத்திக்கொண்டிருந்தார் பிரபு.

சங்கீதம் நின்றுவிட்டது.  அப்போது ஆனை, ஐயா அவர்களின் மனநிலையை யாரால் சொல்ல முடியும்?  அங்கிருந்தவர்களிற் பெரிய வித்துவான்களெல்லாம் கண்ணில் நீர்ததும்ப அவ்விருவருக்கும் சமாதானம் சொன்னார்கள்.  அவர்கள் உடனே கல்யாண வீட்டினின்றும் வெளியே போனார்கள்.  கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது.  அவ்விருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.  அளவற்ற வருத்தத்தை அடக்கிக் கொண்டவர்களென்பதை அவர்கள் முகங்கள் காட்டின.  அப்பால் நேராக
அவ்வூரிலுள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு வந்து பெருமாளைத்
தரிசித்தனர்; தரிசித்தபோதே ஓவென்று கதறிவிட்டார்கள்.  உடன்
வந்தவர்களெல்லோரும் அசைவற்று நின்றனர்.  ஆனை என்பவர் தம்முடைய வருத்த மிகுதியால் அடியிற்கண்ட கீர்த்தனத்தைப் பாடத் தொடங்கினார்.

இராகம்: புன்னாகவராளி; தாளம்: ஆதி

(பல்லவி)

போதும் போதும் ஐயா தலைமுறைக்கும்    (போதும்)

(அநுபல்லவி)

மாதுவளர்வர காபுரி தனில் விளங்கிய
மங்கை யலர்மேலுமிக மகிழ் வேங்கடாசலனே   (போதும்)

(சரணங்கள்)

1.

அரியென் றெழுத்தையறி யாதமூடன்றன்னை
...ஆதி சேஷ னென்றும்
ஆயுத மொன்றுமறி யாதவன்றனை
...அரிய விஜய னென்றும்
அறிந்து மரைக்காசுக் குதவா லோபியைத்
...தானக் கர்ண னென்றும்
அழகற்ற வெகுகோரத் தோனை யேமிக
...அங்கஜனே யென்றும் - புகழ்ந்தலைந்தது   (போதும்)

2.

காசுக் காசைகொண்டு லுத்தனைச் சபைதனில்
...கற்பக தருவென்றும்
கண்தெரி யாக்குருட னென்றறிந்துஞ் சிவந்த
...கமலக் கண்ண னென்றும்
பேசுத லெல்லாம் பொய்யா மொருவனைப்
...பிறங்கரிச் சந்த்ர னென்றும்
பெற்ற தாய்தனக்கு மன்ன மிடான் றன்னைப்
...பெரியதர்ம னென்றும் -- புகழ்ந்தலைந்தது  (போதும்)

3.

அறிவில் லாதபெரு மடையர்தம் அருகினை
...அல்லும் பகலும் நாடி
அன்னை *உமாதாச* னுரைக்கும் பதங்களை
...அவரிடத்திற் பாடி
அறிவரோ வறியா ரோவென் றேமிக
...அஞ்சி மனது வாடி
ஆசை யென்னும்பேய்க் காளா யுலகினில்
...அற்பரைக் கொண் டாடித்-திரிந்தலைந்தது   (போதும்)

(*உமாதாசனென்பது ஆனையென்பவர் முத்திரை.  அதனைத் தாம் இயற்றும் ஒவ்வொரு கீர்த்தனத்திலும் அமைத்துப் பாடுவது அவர் வழக்கம்.)

இந்தப் பாட்டைப் பாடி மேலும் சில தோத்திரங்களைச் செய்துவிட்டு
அவ்வூராரிடத்தில் விடைபெற்று அவ்வித்துவான்கள் இருவரும் தங்கள்
இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.  அதற்குப்பின் தெய்வ சந்நிதானத்திலன்றி வேறொருவரிடமும் அவர்கள் சென்று பாடியதில்லையென்பர்.

(இந்தக் கீர்த்தனத்தையும் வரலாற்றையும் எனக்குச் சொன்னவர்கள் ஸ்ரீ
மகாவைத்திய நாதையரவர்கள்.)

===

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்

உ.வே.சா 

4 கருத்துகள்: